5680. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்கு (பசியைத் தணிக்கத்) தேவையான அளவு உணவை வழங்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 53
5681. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்கு (பசியைப் போக்கத்) தேவையான அளவு உணவை வழங்குவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.- இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது. அதில் "போதுமான (உணவை வழங்குவாயாக)" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5682. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும்வரை, அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5683. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதிப் பயணம் செல்லும்வரை (இறக்கும் வரை), கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5684. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறக்கும்வரை அவர்களின் குடும்பத்தார் (தொலி நீக்கப்படாத) கோதுமை உணவைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5685. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் கோதுமை ரொட்டியை (தொடர்ந்து) மூன்று நாட்களுக்கு மேல் வயிறு நிரம்ப உண்டதில்லை.
அத்தியாயம் : 53
5686. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதிப்பயணம் செல்லும்வரை (இறக்கும்வரை), அவர்களின் குடும்பத்தார் கோதுமை ரொட்டியை (தொடர்ந்து) மூன்று நாட்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
அத்தியாயம் : 53
5687. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் இரண்டு நாட்கள் வயிறு நிரம்ப உண்டிருந்தால், அதில் ஒரு நாள் (வெறும்) பேரீச்சம் பழமாக இருந்திருக்குமே அன்றி, (தொடர்ந்து இரு நாட்களும்) கோதுமை ரொட்டியாக இருந்திருக்காது.
அத்தியாயம் : 53
5688. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அடுப்பு பற்றவைக்காமல் ஒரு மாதத்தைக் கழித்திருக்கிறோம். அப்போது பேரீச்சம் பழமும் தண்ணீருமே எங்கள் உணவாக இருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நாங்கள் ஒரு மாதத்தைக் கழித்துவந்தோம்" என்று இடம்பெற்றுள்ளது. "முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்" எனும் குறிப்பு இல்லை.
இப்னு நுமைர் (ரஹ்) அவர்களிடமிருந்து அபூகுறைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "எங்களிடம் சிறிதளவு இறைச்சி (அன்பளிப்பாக) வந்தால் தவிர" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5689. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்(வீட்டு) நிலைப்பேழையிலிருந்த தொலி நீக்கப்படாத சிறிது (வாற்)கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப்பேழையில் இல்லாத நிலையில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்(து பார்த்)தேன். அதனால் (சிறிது காலத்திற்குள்) அது தீர்ந்துபோய்விட்டது.
அத்தியாயம் : 53
5690. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் பிறை பார்ப்போம். அடுத்த பிறையும் பார்ப்போம். அதற்கடுத்த பிறையும் பார்ப்போம். இரண்டு மாதங்கள் மூன்று பிறை பார்த்துவிட்டிருப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது" என்று கூறினார்கள்.
அதற்கு நான், "என் சிற்றன்னையே! (அப்படியானால்) நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இரு கறுப்பர்களான பேரீச்சம் பழமும் நீரும்தான் (அப்போது எங்கள் உணவு). இருப்பினும்,அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அண்டை வீட்டாராக இருந்தனர். அவர்களிடம் (இலவசமாகப் பால் கறந்துகொள்வதற்கான) இரவல் ஒட்டகங்கள் இருந்தன. (அவற்றிலிருந்து பால் கறந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்கள் (அன்பளிப்பாகக்) கொடுத்தனுப்புவார்கள். அந்தப் பாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 53
5691. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே நாளில் இரண்டு வேளை ரொட்டியும் ஆலிவ் எண்ணெயும் வயிறு நிரம்ப உண்ணாமலேயே இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5692. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இருகறுப்பர்களான பேரீச்சம் பழமும் தண்ணீரும் உட்கொண்டு மக்கள் வயிறு நிரம்பி இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5693. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரு கறுப்பர்களான பேரீச்சம்பழமும் தண்ணீரும் உட்கொண்டு நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இரு கறுப்பர்களான பேரீச்சம்பழமும் தண்ணீரும் உட்கொண்டு நாங்கள் வயிறு நிரம்பியிராத நிலையில் (இறந்தார்கள்)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5694. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள், "என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (அல்லது அபூஹுரைராவின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக!) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகைப் பிரியும்வரை கோதுமை ரொட்டியைத் தொடர்ந்து மூன்று நாட்கள் தம் குடும்பத்தாருக்கு வயிறு நிரம்ப அளிக்கவில்லை" என்று சொன்னார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5695. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் தம் விரலால் பல முறை சைகை செய்தபடி, "அபூஹுரைராவின் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகைப் பிரியும்வரை அவர்களும் அவர்கள்தம் குடும்பத்தாரும் கோதுமை ரொட்டியை மூன்று நாட்கள் தொடர்ந்து வயிறு நிரம்ப உண்டதில்லை" என்று கூறியதைக் கேட்டேன்.
அத்தியாயம் : 53
5696. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள், "(இன்று) நீங்கள் விரும்பும் உணவும் பானமும் உங்களிடம் இல்லையா? ஆனால்,உங்கள் நபி (ஸல்) அவர்களோ தமது வயிறு நிரம்பும் அளவுக்கு மட்டமான உலர்ந்த பேரீச்சம் பழம் கூட கிடைக்காத நிலையில் இருந்ததை நான் கண்டுள்ளேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5697. மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆனால், நீங்களோ (இன்று) பல வண்ண பேரீச்சம் பழங்களுக்கும், வெண்ணெய்க்கும் குறைவானதைக் கொண்டு திருப்தி அடைவதில்லை" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5698. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்கள்: உமர் (ரலி) அவர்கள் (தற்போது) மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்க்கை வளம் பற்றி நினைவு கூர்ந்தார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வயிறு நிரம்பும் அளவுக்கு மட்டமான பேரீச்சம் பழம்கூட கிடைக்காத நிலையில் ஒரு நாள் முழுவதும் சுருண்டு கிடப்பதை நான் கண்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5699. அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், "நாம் ஏழை முஹாஜிர்கள் இல்லையா?"என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "நீர் அமைதி காண உமக்கு மனைவி இல்லையா?"என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "ஆம் (இருக்கிறாள்)" என்றார்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "வசிப்பதற்கு உமக்கு வீடு இல்லையா?" என்று கேட்டார்கள். அந்த மனிதர் "ஆம் (இருக்கிறது)" என்றார். "அவ்வாறாயின், நீர் செல்வர்களில் ஒருவராவீர்" என்று கூறினார்கள். அந்த மனிதர் "இத்துடன் என்னிடம் பணியாளர் ஒரு வரும் இருக்கிறார்" என்றார். "அவ்வாறாயின், நீர் மன்னர்களில் ஒருவர் ஆவீர்" என்றார்கள்.
- அபூஅப்திர்ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் மூன்று பேர் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் நானும் இருந்தேன். அவர்கள் (மூவரும்), "அபூமுஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களுக்கு எந்தப் பொருள்மீதும் சக்தி இல்லை. எங்களிடம் செலவழிப்பதற்கு வசதியோ, வாகனமோ, தேவையான வீட்டுப்பொருட்களோ இல்லை" என்று கூறினர்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "நீங்கள் எதை நாடுகிறீர்கள் (உங்களுக்கு என்ன வேண்டும்)? நீங்கள் விரும்பினால், எம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு அல்லாஹ் எளிதாக்கியுள்ள செல்வத்தை வழங்குவோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பிரச்சினையை நாம் அரசரிடம் தெரிவிப்போம். நீங்கள் விரும்பினால், பொறுமையாக இருக்கலாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஏழை முஹாஜிர்கள் மறுமைநாளில் செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அதற்கு அவர்கள் (மூவரும்), "அப்படியானால், நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்; எதையும் கேட்கமாட்டோம்"என்று கூறினர்.
அத்தியாயம் : 53