5648. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆறு அடையாளங்கள் ஏற்படுவதற்கு முன் விரைந்து நற்செயல் புரியுங்கள். 1. தஜ்ஜால் 2. புகை. 3. பூமியிலிருந்து வெளிப்படும் (அதிசயப்)பிராணி 4. சூரியன் மேற்கிலிருந்து உதயமாதல் 5. ஒட்டுமொத்தமாக ஏற்படும் (யுகமுடிவு) விஷயம் 6. தனிப்பட்ட முறையில் உங்களில் ஒருவருக்கு ஏற்படும் இறப்பு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 26 கொந்தளிப்பான காலத்தில் (இறைவனை) வழிபடுவதன் சிறப்பு.
5649. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கொந்தளிப்பான காலத்தில் இறைவனை வழிபடுவது, (நற்பலனில்) என்னிடம் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வருவதைப் போன்றதாகும்.
இதை மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மஅகில் பின் யசார் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
பாடம் : 27 யுக முடிவு நாள் நெருங்குதல்.
5650. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் தீயவர்கள் மீதே யுக முடிவு நாள் ஏற்படும். (அதற்கு முன்பே நல்லவர்கள் அனைவரும் மறைந்துவிடுவர்.)
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5651. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தமது பெருவிரலுக்கு அடுத்த (சுட்டு) விரலையும் நடுவிரலையும் (இணைத்துக் காட்டி) சைகை செய்து, "நானும் யுக முடிவு நாளும் இதோ இதைப் போன்று (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்" என்று கூறியதைக் கேட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5652. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் யுக முடிவு நாளும் இதோ இந்த (சுட்டு விரல், நடு விரல் ஆகிய) இரு விரல்களைப் போன்று (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
கத்தாதா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை (எனக்கு) அறிவிக்கும்போது, "(உயரத்தில் அவ்விரல்களில்) ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்திருப்பதைப் போன்று" என்று கூறினார்கள். அதை அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்களா, அல்லது தாமாகவே கூறினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5653. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் யுக முடிவு நாளும் இவ்வாறு அனுப்பப் பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும் போது, தம் சுட்டு விரலையும் நடுவிரலையும் இணைத்து (இவ்வாறு என்று) சைகை செய்து காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5654. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் சுட்டு விரலையும் நடுவிரலையும் இணைத்தவாறு "நானும் யுக முடிவு நாளும் இவ்விரு விரல்களைப் போன்று அனுப்பப் பட்டுள்ளோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5655. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வரும்போது யுக முடிவு நாளைப் பற்றி, "அது எப்போது வரும்?" என்று கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அம்மக்களிலேயே வயதில் மிகச்சிறிய மனிதரைப் பார்த்து, "இதோ இவர் உயிருடன் வாழ்ந்தால் இவர் முதுமையை அடையாமல் இருக்கும்போதே உங்களின் யுக முடிவு (இறப்பு) நாள் சம்பவிக்கும்" என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 52
5656. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "யுக முடிவு நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் "முஹம்மத்" எனப்படும் அன்சாரி சிறுவர் ஒருவர் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தச் சிறுவரைக் காட்டி), "இந்தச் சிறுவர் உயிருடன் வாழ்ந்து, அவருக்கு முதுமைப்பருவம் ஏற்படாமலிருக்கும் நிலையில் யுக முடிவு நாள் வரலாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 52
5657. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "யுக முடிவு நாள் எப்போது வரும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு தமக்கு முன்னாலிருந்த "அஸ்த் ஷனூஆ" குலத்தைச் சேர்ந்த சிறுவர் ஒருவரைக் கூர்ந்து பார்த்துவிட்டு, "இவருக்கு வாழ்நாள் கிடைத்து, முதுமைப் பருவம் ஏற்படாமலிருக்கும்போது யுக முடிவு நாள் வரும்" என்று சொன்னார்கள்.
அந்தச் சிறுவர் அன்று என் வயதொத்தவர்களில் ஒருவராக இருந்தார்.
அத்தியாயம் : 52
5658. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் அடிமைகளில் ஒருவர் (எங்களைக்)கடந்து சென்றார். அவர் என் வயதொத்தவர்களில் ஒருவராக இருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவரது வாழ்நாள் தள்ளிப்போய் இவரை முதுமைப் பருவம் அடைவதற்கு முன்பே யுக முடிவு நாள் வந்துவிடும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5659. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தமது ஒட்டகத்தில் பால் கறந்து அந்தப் பாத்திரத்தைத் தமது வாயருகே கொண்டுசென்றிருக்கமாட்டார். அதற்குள் யுக முடிவு சம்பவித்துவிடும். இரு மனிதர்கள் துணியை விரித்துப்போட்டுப் பேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேரத்தை முடிப்பதற்கு முன்பே யுக முடிவு ஏற்பட்டுவிடும். ஒரு மனிதர் தமது தண்ணீர் தொட்டியைச் செப்பனிட்டுக்கொண்டிருப்பார். அவர் அதை முடிப்பதற்கு முன்பே யுக முடிவு ஏற்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
பாடம் : 28 இரு எக்காளங்களுக்கும் ("ஸூர்") இடைப்பட்ட காலம்.
5660. அபூஸாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த இரு எக்காளத்திற்கு (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பதாகும்" என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.
அப்போது மக்கள், "அபூஹுரைரா அவர்களே! நாட்களில் நாற்பதா?" என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(இதற்குப் பதில் சொல்வதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்" என்று கூறினார்கள். மக்கள், "மாதங்களில் நாற்பதா?"என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், "(மீண்டும் நான் விலகிக்கொள்கிறேன்" என்று சொன்னார்கள்.
மக்கள், "வருடங்களில் நாற்பதா?" என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் (மீண்டும்), "நான் விலகிக் கொள்கிறேன் (எனக்கு இது குறித்துத் தெரியாது)" என்று கூறிவிட்டு, "பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான். உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனது முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 52
5661. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும்; மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர! அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன் முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 52
5662. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மனிதனின் உடலில் எலும்பு ஒன்று உள்ளது. அதை பூமி ஒருபோதும் புசிக்காது. அதை வைத்தே (மீண்டும்) மறுமை நாளில் அவன் படைக்கப்படுவான்" என்று சொன்னார்கள்.
மக்கள், "அது எந்த எலும்பு அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "உள்வால் எலும்பின் நுனி" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 52

பாடம் : 1 உலகப் பற்றின்மையும் தத்துவங்களும்.
5663. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
5664. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) "ஆலியா"வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, "உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், "எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?" என்று கேட்டார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?" என்று கேட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல் வஹ்ஹாப் அஸ் ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இந்த ஆடு உயிருடனிருந்தால்கூட அதன் காதுகள் சிறுத்திருப்பதன் காரணமாகக் குறையுள்ளதாகவே இருக்கும்" என்று மக்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5665. அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது" என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன்.
அப்போது அவர்கள், "ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்" என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?" என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் "நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 53
5666. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடியான், "என் செல்வம்; என் செல்வம்" என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும். அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச்செல்லக் கூடியவையும் ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5667. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்:
இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று பொருட்கள் செல்கின்றன. அவற்றில் இரண்டு திரும்பிவிடுகின்றன; ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடுகின்றன.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53