பாடம் : 15 மாதவிடாய் நாட்களில் விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்பது (களாச் செய்வது) கட்டாயமாகும்; விடுபட்ட தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை.
558. முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம், எங்களில் ஒருத்தி மாதவிடாய் நாட்களில் தமக்கு விடுபட்டுப்போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ (கரிஜிய்யாக் கூட்டத்தாரின் கேந்திரமான) ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எங்களில் ஒருத்திக்கு மாதவிடாய் ஏற்படும். பின்னர் எதையும் மீண்டும் தொழுமாறு அவள் கட்டளையிடப்பட்டதில்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
559. முஆதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், மாதவிடாய் ஏற்பட்ட பெண் விடுபட்டத் தொழுகைகளை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா?அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு மாதவிடாய் ஏற்படும்போது (விடுபட்டத் தொழுகைகளை மீண்டும்) நிறைவேற்றுமாறு அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடவா செய்தார்கள்? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
அத்தியாயம் : 3
560. முஆதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணின் நிலை என்ன? (விடுபட்ட) நோன்பை மட்டும் அவள் மீண்டும் நோற்க வேண்டும். (விடுபட்டத்) தொழுகைகளை மீண்டும் தொழக் கூடாதா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா? என்று கேட்டார்கள். நான் ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவள் அல்லள். ஆயினும், (தெரிந்துகொள்வதற்காகவே) கேட்கிறேன் என்றேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், எங்களுக்கும் அது (மாதவிடாய்) ஏற்படத்தான் செய்தது. அப்போது விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்குமாறு நாங்கள் பணிக்கப்பட்டோம். விடுபட்டத் தொழுகையை மீண்டும் தொழுமாறு நாங்கள் பணிக்கப்படவில்லை என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 16 குளிப்பவர் துணி போன்றவற்றைத் திரையாக்கிக்கொள்வது.
561. உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஒரு துணியால் திரையிட்டு மறைத்துக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 3
562. உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்காவின் மேட்டுப் பகுதியில் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளியலுக்காக எழுந்தார்கள். அப்போது அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்கள் திரையிட்டு மறைத்தார்கள். (குளித்த) பிறகு தமது ஆடையை வாங்கிப் போர்த்திக்கொண்டார்கள். பின்னர் முற்பகல் தொழுகை (ளுஹா) எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அத்தியாயம் : 3
563. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் அவர்களது ஆடையினால் திரையிட்டு மறைத்துக்கொண்டார்கள். குளித்து முடிந்த பின் அந்த ஆடையை வாங்கிப் போர்த்திக்கொண்டார்கள். பின்னர் நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். அது முற்பகல் (ளுஹா) நேரமாகும் என்று உம்மு ஹானி (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
564. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுக்கு (குளிக்கத்) தண்ணீர் வைத்துவிட்டு அவர்களைத் திரையிட்டு மறைத்துக்கொண்டேன். அவர்கள் குளித்தார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 17 மறைக்க வேண்டிய பிறருடைய உறுப்புகளைப் பார்ப்பது தடை செய்யப் பட்டுள்ளது.
565. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம்;
ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்; ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மறைக்க வேண்டிய உறுப்பு (அவ்ரத்) எனும் வார்த்தைக்கு பதிலாக மற்றோர் ஆணின் நிர்வாணத்தை,மற்றொரு பெண்ணின் நிர்வாணத்தை(ப் பார்க்க வேண்டாம்) என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 18 தனிமையில் குளிக்கும்போது ஆடையின்றிக் குளிக்கலாம்.
566. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் பிறந்த மேனியுடன் ஒருவர் மற்றவரது மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்த்துக்கொண்டே குளிப்பார்கள். மூசா (அலை) அவர்கள் தனியாகவே குளிப்பார்கள். (அன்னாரைக் கொச்சைப்படுத்த விரும்பிய) அந்த மக்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா குடலிறக்க நோயாளியாய் இருப்பதனால்தான் அவர் நம்முடன் சேர்ந்து குளிப்பதில்லை என்று கூறினர். ஒரு முறை மூசா (அலை) அவர்கள் குளிக்கப் போனார்கள். அப்போது அவர்கள் தமது ஆடையை(க் களைந்து) ஒரு கல்லின் மீது வைத்தார்கள். அந்தக் கல் அவர்களது துணியுடன் ஓடியது. மூசா (அலை) அவர்கள் அதைப் பின்தொடர்ந்து கல்லே, எனது துணி! கல்லே, எனது துணி! என்று கூறியவாறு விரைந்து ஓடினார்கள். இறுதியாக (பனூ இஸ்ராயீல் மக்கள் பகுதிக்கு வந்தபோது அவர்கள்) மூசா (அலை) அவர்களின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்த்துவிட்டு,அல்லாஹ்வின் மீதாணையாக! மூசாவிற்கு எந்தக் குறையுமில்லை என்று கூறினர். மூசா (அலை) அவர்கள் (நன்கு) பார்க்கப்படும்வரை (ஓடிய) அந்தக் கல் (பின்பு) நின்றுவிட்டது. உடனே மூசா (அலை) அவர்கள் தமது ஆடையை எடுத்துக்கொண்டு அந்தக் கல்லை (தமது கைத்தடியால்) அடிக்கலானார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! மூசா (அலை) அவர்கள் (தமது கையிலிருந்த தடியால்) கல்லின் மீது அடித்த காரணத்தால் ஆறு அல்லது ஏழு தழும்புகள் அந்தக் கல்லில் பதிந்துவிட்டன.
அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்குப் பல ஹதீஸ்களை அறிவித்தார்கள். இந்த ஹதீஸும் அவற்றில் ஒன்றாகும்.
அத்தியாயம் : 3
பாடம் : 19 மறைக்க வேண்டிய உறுப்பை (மறைத்து)க் காப்பதில் கவனம் செலுத்துதல்.
567. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபியவர்களுக்கு நபித்துவம் வழங்கப்படுவதற்கு முன்பு) கஅபா புதுப்பித்துக் கட்டப்பட்ட போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களைச் சுமந்து எடுத்து வந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், (சிறுவராயிருந்த) நபி (ஸல்) அவர்களை நோக்கி கல் சுமப்பதற்கு (வசதியாக) உமது வேட்டியை அவிழ்த்துத் தோளில் (சும்மாடாக) வைத்துக் கொள்க! என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். உடனே மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அவர்களுடைய கண்கள் வானத்தை நோக்கி நிலைகுத்தி நின்றன. பிறகு எழுந்து என் வேட்டி, என் வேட்டி என்றார்கள். வேட்டியை (எடுத்துக் கொடுத்த உடனே அதை) இறுக்கமாகக் கட்டிக் கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மது பின் ராஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், உமது தோளில் என்பதற்கு பதிலாக உமது பிடரியில் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
568. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குறைஷிக் குலத்தார் கஅபாவைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களுடன் கஅபாவுக்காகக் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஒரு வேட்டி அணிந்திருந்தார்கள். அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தையான அப்பாஸ் (ரலி) அவர்கள், என் சகோதரரின் மகனே! நீங்கள் உங்கள் வேட்டியை அவிழ்த்து, தோள்மீது கல்லுக்குக் கீழே வைத்துக்கொள்ளலாமே!என்று கூறினார்கள். (சிறுவராயிருந்த) அல்லாஹ்வின் தூதரும் அவ்வாறே அதை அவிழ்த்துத் தமது தோள்மீது வைத்தார்கள். உடனே மயக்கம் ஏற்பட்டுக் கீழே விழுந்தார்கள். அந்த நாளுக்குப் பின் ஒருபோதும் அவர்கள் (ஆடையின்றி) பிறந்த மேனியுடன் காணப்பட்டதில்லை.
அத்தியாயம் : 3
569. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு கனமான கல்லைத் தூக்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தேன். அப்போது என் உடலில் ஒரு மெல்லிய வேட்டி இருந்தது. அது அவிழ்ந்துவிட்டது. என்னிடமோ பெரிய கல். எனவே, என்னால் அதை இறக்கி வை(த்துவிட்டு வேட்டியைப் பிடி)க்க முடியாமல் சேர வேண்டிய இடம்வரை போய்ச் சேர்ந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமது ஆடையை நோக்கிச் சென்று அதை எடுத்து (உடுத்தி)க்கொள்க! நிர்வாணமாக நடக்காதீர்! என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 20 இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்கான மறைவான இடங்கள்.
570. அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு சென்றார்கள். அப்போது என்னிடம் இரகசியமாக ஒரு செய்தியைச் சொன்னார்கள். அதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றச் செல்லும் மறைவிடங்களிலேயே மேடு அல்லது பேரீச்சந்தோட்டம் ஆகியனவே அவர்களுக்கு மிகவும் விருப்பமானவையாக இருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு அஸ்மா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ஹாயிஷு நக்ல் என்பதற்கு பேரீச்சந்தோட்டம் என்று பொருள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 21 நீர் (விந்து) வெளிப்பட்டால்தான் நீர் (குளியல்) கடமையாகும்.
571. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு திங்கள் கிழமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள) குபா எனும் இடத்திற்குச் சென்றேன். நாங்கள் பனூ சாலிம் கோத்திரத்தார் வசிக்குமிடத்திற்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களது வீட்டு வாசலில் நின்று அவர்களைச் சப்தமிட்டு அழைத்தார்கள். உடனே இத்பான் (ரலி) அவர்கள் தமது கீழங்கியை இழுத்தபடி (அவசர அவசரமாக) வெளியே வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் இம்மனிதரை அவசரப்படுத்திவிட்டோம் என்று கூறினார்கள்.
அப்போது இத்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் (தாம்பத்திய உறவுகொள்ளும்போது) விந்து வெளிவருவதற்கு முன்பே தம் மனைவியைவிட்டு அவசரப்படுத்தப்பட்டு (விலக்கப்பட்டு)விட்டார். இந்நிலையில் என்ன சட்டம், (அவர்மீது குளியல் கடமையாகுமா) கூறுங்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தண்ணீர் (விந்து) வெளிப்பட்டால்தான் தண்ணீர் (குளியல்) கடமையாகும் என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
572. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தண்ணீர் (விந்து) வெளிப்பட்டால்தான் தண்ணீர் (குளியல்) கடமையாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
573. அபுல்அலா யஸீத் பின் அப்தில்லாஹ் பின் ஷிக்கீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குர்ஆனின் ஒரு வசனம் மற்றொரு வசனத்(தின் சட்டத்)தை மாற்றுவதைப் போன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ் (பொன்மொழி)களில் ஒன்று மற்றொன்றை மாற்றி (காலாவதியாக்கி) வந்தது.
அத்தியாயம் : 3
574. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றபோது அவரை அழைத்து வருமாறு ஒருவரை அனுப்பினார்கள். உடனே அந்த அன்சாரி (அவசர அவசரமாகக் குளித்துவிட்டுத்) தமது தலையிலிருந்து தண்ணீர் வழியும் நிலையில் வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாம் உங்களை அவசரப்படுத்திவிட்டோம் போலும் என்றார்கள். அதற்கு அவர், ஆம், அல்லாஹ்வின் தூதரே! என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் (தாம்பத்திய உறவு கொள்ளும்போது) அவசரப்பட்டு எழ நேர்ந்தால் அல்லது விந்தை வெளியேற்றாமலிருந்தால் நீங்கள் குளிக்க வேண்டியதில்லை; அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் சொல் வித்தியாசம் காணப்படுகிறது.
அத்தியாயம் : 3
575. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஒருவர் தம் மனைவியுடன் சிறிது நேரம் தாம்பத்திய உறவு கொண்டு,விந்தை வெளியேற்ற முடியாமற்போவது பற்றிக் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,மனைவியிடமிருந்து தம்மீது பட்டதை அவர் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டு தொழலாம் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
576. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். ஆனால் விந்தை வெளியேற்றவில்லை (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் தமது பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 3
577. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், ஒருவர் தம் துணைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டார். ஆனால், விந்தை வெளியேற்றவில்லை. (இந்நிலையில் அவர்மீது குளியல் கடமையாகுமா?) என்று கேட்டேன். அதற்கு உஸ்மான் (ரலி) அவர்கள், அவர் பிறவி உறுப்பைக் கழுவிவிட்டுத் தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்ள வேண்டும். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்களும் செவியேற்றதாக அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 3