5453. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். எச்சில் துப்பமாட்டார்கள். மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள்" என்று கூறினார்கள்.
மக்கள், "(அவர்கள் உண்ணும்) உணவின் நிலை என்ன? (அது எப்படி கழிவாக வெளியேறும்?)" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நறுமணமுள்ள) ஏப்பமாகவும் கஸ்தூரி மணம் கமழும் வியர்வையாகவும் வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "கஸ்தூரி மணம் கமழும் வியர்வையாகவும் வெளியேறும்" என்பதுவரையே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5454. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள்; பருகுவார்கள். மலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். சிறுநீர் கழிக்கவுமாட்டார்கள். அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று, ஏப்பமாக வெளியேறும். மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அவற்றில் ஹஜ்ஜாஜ் பின் அஷ்ஷாஇர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் உண்ணும் அந்த உணவு" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5455. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மூச்சு விடுமாறு அகத்தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் இறைவனைப் பெருமைப்படுத்திக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 51
பாடம் : 9 சொர்க்கவாசிகள் அனுபவிக்கும் இன்பங்கள் நிலையானவை என்பதும், "இது தான் சொர்க்கம்; நீங்கள் நற்செயல் புரிந்துகொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப் பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச்சொல்லப்படும்" (7:43) எனும் இறைவசனமும்.
5456. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் நுழைபவர் இன்பத்திலேயே இருப்பார்; துன்பம் காணமாட்டார். அவரது ஆடை இற்றுப்போகாது. அவரது இளமை அழிந்துபோகாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5457. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், "(இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள்; ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள். நீங்கள் உயிருடன் தான் இருப்பீர்கள்;ஒருபோதும் இறக்கமாட்டீர்கள். இளமையோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் முதுமையடையமாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள்; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள்" என்று அறிவிப்புச் செய்வார்.
இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "இதுதான் சொர்க்கம்; நீங்கள் (உலகில்) நற்செயல் புரிந்துகொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும்" (7:43) என்று கூறுகின்றான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 10 சொர்க்கக் கூடாரங்களின் நிலையும் அவற்றில் இறைநம்பிக்கையாளர்களுக்குத் துணைவியர் பலர் இருப்பதும்.
5458. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளருக்குச் சொர்க்கத்தில் ஒரு கூடாரம் உண்டு. அது நடுவில் துளையுள்ள (பிரமாண்டமான) முத்தால் ஆனதாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதில் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் பலர் இருப்பர். அவர்களிடம் இறைநம்பிக்கையாளர் சுற்றி வருவார். அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்க்க முடியாது.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5459. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நடுவில் துளையுள்ள முத்தாலான (பிரமாண்டமான) கூடாரம் ஒன்று சொர்க்கத்தில் உண்டு. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் இருப்பர். அவர்கள் மற்றவர்களைப் பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர் அவர்களைச் சுற்றிவருவார்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5460. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது, ஒரு (பிரமாண்டமான) முத்தாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறைநம்பிக்கையாளருக்குத் துணைவியர் இருப்பர். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
பாடம் : 11 இவ்வுலகிலுள்ள சொர்க்க நதிகள்.
5461. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சைஹான், ஜைஹான், ஃபுராத், நீல் ஆகியவை சொர்க்க நதிகளில் உள்ளவையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 12 சொர்க்கத்தில் நுழையும் மக்கள் சிலருடைய உள்ளங்கள் பறவைகளின் உள்ளத்தைப் போன்றிருக்கும்.
5462. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள். அவர்களுடைய உள்ளங்கள் பறவைகளின் உள்ளத்தைப் போன்றிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5463. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஆதிமனிதர்) ஆதமை அவரது (அழகான) உருவத்தில் படைத்தான்.அவரது உயரம் அறுபது முழங்களாகும். அவரைப் படைத்தபோது, "நீர் சென்று, அங்கு அமர்ந்திருக்கும் வானவர்கள் குழுவுக்கு முகமன் (சலாம்) கூறுவீராக; அவர்கள் உமக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்வீராக. ஏனெனில், அதுதான் உங்களது முகமனும் உங்களுடைய சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று இறைவன் சொன்னான்.
அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம்) சென்று, "அஸ்ஸலாமு அலைக்கும்" (உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள்.
அதற்கு வானவர்கள், "அஸ்ஸலாமு அலைக்க வ ரஹ்மத்துல்லாஹ்" (சாந்தியும் இறைவனின் பேரருளும் உங்கள்மீதும் பொழியட்டும்) என்று பதில் (முகமன்) கூறினர். அவர்கள் (தமது பதிலில்) "இறைவனின் பேரருளும்" (வ ரஹ்மத்துல்லாஹ்) என்பதைக் கூடுதலாகச் சொன்னார்கள்.
ஆகவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் அறுபது முழம் உயரம் கொண்ட ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். அவருக்குப் பிறகு இன்று வரை அவருடைய சந்ததிகள் (உயரத்தில்) குறைந்துகொண்டே வருகின்றனர்.
அத்தியாயம் : 51
பாடம் : 13 நரக நெருப்பின் கடுமையான வெப்பமும் அதன் ஆழத்தின் அளவும் அது நரகவாசிகளைத் தீண்டும் அளவும்.
5464. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள்.இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5465. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "ஆதமின் மகன் (மனிதன்) பற்றவைக்கும் (பூமியிலுள்ள) இந்த நெருப்பானது, நரக நெருப்பிலுள்ள வெப்பத்தின் எழுபது பாகங்களில் ஒரு பாகமாகும்" என்று சொன்னார்கள்.
அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! (நரகவாசிகளைத் தண்டிக்க பூமியிலுள்ள) இந்த நெருப்பே போதுமானதாய் இருக்கிறதே?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்த நெருப்பு (பூமியிலுள்ள) இந்த நெருப்பைவிட அறுபத்தொன்பது பாகம் கூடுதலாக வெப்பமேற்றப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு பாகமும் (பூமியிலுள்ள) இந்த நெருப்பின் வெப்பம் கொண்டதாயிருக்கும்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5466. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது, ஏதோ விழுந்த சப்தத்தை அவர்கள் கேட்டார்கள். (நாங்களும் கேட்டோம்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது என்ன (சப்தம்) என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள்.
நாங்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்" என்று சொன்னோம். நபி (ஸல்) அவர்கள், "இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும். அது இந்த நேரம்வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அது கீழே விழுந்துவிட்டது. அது விழுந்த சப்தத்தைத்தான் (இப்போது) நீங்கள் செவியுற்றீர்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
5467. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகம், நரகவாசிகளில் சிலரை அவர்களின் கணுக்கால்கள்வரை தீண்டும். வேறு சிலரை அவர்களது இடுப்புவரை தீண்டும். இன்னும் சிலரை அவர்களது கழுத்துவரை தீண்டும்.
இதை சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5468. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகம், நரகவாசிகளில் சிலரை அவர்களின் கணுக்கால்கள் வரை தீண்டும். வேறு சிலரை முழங்கால்கள்வரை தீண்டும். மற்றச் சிலரை இடுப்புவரை தீண்டும். இன்னும் சிலரைக் கழுத்துவரை தீண்டும்.- இதை சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ("அவர்களது இடுப்புவரை" என்பதைக் குறிக்கும்) "ஹுஜ்ஸத்திஹி" என்பதற்குப் பதிலாக "ஹிக்வைஹி"என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51
பாடம் : 14 நரகத்தில் அக்கிரமக்காரர்கள் நுழைவர். சொர்க்கத்தில் அப்பாவிகள் நுழைவர்.
5469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், "அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்" என்று சொன்னது. சொர்க்கம், "பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்" என்று சொன்னது.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நரகத்திடம், "நீ எனது வேதனை. உன் மூலம் நான் நாடியவர்களுக்கு வேதனை கொடுக்கிறேன்" என்றும், சொர்க்கத்திடம், "நீ எனது பேரருள். உன் மூலம் நான் நாடியவர்களுக்கு அருள் புரிகிறேன்" என்றும் கூறினான். பிறகு (இரண்டையும் நோக்கி), "உங்களில் ஒவ்வொன்றையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே) உள்ளனர்" என்று சொன்னான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5470. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், "பெருமையடிப்பவர் களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்" என்று சொன்னது. சொர்க்கம், "எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினரும் இயலாதவர்களுமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்" என்று கூறியது.
அப்போது அல்லாஹ் சொர்க்கத்திடம், "நீ எனது பேரருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்" என்று கூறினான். நரகத்திடம், "நீ எனது வேதனை. உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்" என்று கூறினான். பிறகு (அவ்விரண்டையும் நோக்கி), "உங்களில் ஒவ்வொருவருக்கும் நிரம்பத் தரப்படும்" என்று சொன்னான்.
ஆனால், நரகமோ இறைவன் தனது பாதத்தை அதன் மீது வைக்காத வரை (வயிறு) நிரம்பாது. இறைவன் தனது பாதத்தை வைக்கும்போது, நரகம் "போதும்; போதும்" என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், நரகத்தின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், ("வாக்குவாதம் செய்துகொண்டன" என்பதைக் குறிக்க "தஹாஜ்ஜத்" என்பதற்குப் பகரமாக) "இஹ்தஜ்ஜத்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 51
5471. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், "பெருமையடிப்பவர் களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்" என்று சொன்னது. சொர்க்கம், "எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ் நிலையினரும் அப்பாவிகளுமே (அதிகமாக) எனக்குள் நுழைவார்கள்" என்று கூறியது.
அல்லாஹ் சொர்க்கத்திடம், "நீயே எனது பேரருள். உன் மூலம் என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள்புரிகிறேன்" என்றும் நரகத்திடம், "நீ எனது வேதனை(க்காகத்)தான். உன் மூலம் என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன். உங்களில் ஒவ்வொருவருக்கும் (வயிறு) நிரம்பத் தரப்படும்" என்றும் கூறினான்.
ஆனால், நரகமோ வளமும் உயர்வும் மிக்க இறைவன் தனது காலை அதன் மீது வைக்காத வரை (வயிறு) நிரம்பாது. (இறைவன் காலை வைக்கும்போது,) நரகம் "போதும்; போதும்" என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்துக்கென அல்லாஹ் புதிதாக யாரையும் படைப்பதில்லை. மாறாக,) நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான். ஆனால், சொர்க்கத்தி(ல் மீதியிருக்கும் இடத்தி)ற்கென்றே புதிதாகச் சிலரைப் படை(த்து அதை நிறைப்)பான்.
- மேற்கண்ட ஹதீஸ், அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன" என்று தொடங்கி, "உங்களில் ஒவ்வொருவருக்கும் (வயிறு) நிரம்பத் தருவது என் பொறுப்பாகும்" என்பதுவரை இடம் பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள கூடுதல் தகவல்கள் இல்லை.
அத்தியாயம் : 51
5472. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகவாசிகள் அனைவரும் நரகத்தில் போடப்பட்ட பின்னரும் நரகம் (வயிறு) நிரம்பாத காரணத்தால்) "இன்னும் அதிகம் இருக்கிறதா?" என்று கேட்டுக்கொண்டேயிருக்கும். இறுதியில் கண்ணியத்தின் அதிபதி(யான இறைவன்) தனது பாதத்தை அதில் வைப்பான். அப்போது அது "போதும்; போதும், உன் கண்ணியத்தின் மீதாணையாக!" என்று கூறும். நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர் களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51