பாடம் : 17 எவரும் தமது நற்செயலால் (மட்டும்) சொர்க்கத்தில் நுழைந்துவிடுவதில்லை. மாறாக, அல்லாஹ்வின் கருணையால்தான் நுழைவார்.
5423. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யாரையும் அவரது நற்செயல் காப்பாற்றாது (மாறாக,அல்லாஹ்வின் தனிப்பெருங்கருணையே காப்பாற்றும்)" என்று சொன்னார்கள். ஒரு மனிதர், "தங்களையுமா காப்பாற்றாது, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னையும்தான் காப்பாற்றாது; அல்லாஹ் (தன்) பேரருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறிவிட்டு, "எனவே (வழிபாடுகள், நல்லறங்கள் ஆகியவற்றில் எல்லை மீறிவிடாமல்) நடுநிலையோடு செயல்படுங்கள்"என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ் தனது பேரருளாலும் தனிக்கருணையாலும் (அரவணைத்துக் கொண்டால் தவிர)" என்று காணப்படுகிறது. அதில், "எனவே, நடுநிலையோடு செயல்படுங்கள்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 50
5424. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்திற்குள் நுழைவிக்காது" என்று சொன்னார்கள். அப்போது, "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(ஆம்) என்னையும்தான்;என் இறைவன் (தனது) பேரருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 50
5425. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாரையும் அவரது நற்செயல் காப்பாற்றப் போவதில்லை" என்று சொன்னார்கள். "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் "என்னையும்தான்;அல்லாஹ் தனது மன்னிப்பாலும் பேரருளாலும் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள், "என்னையும் தான்; அல்லாஹ் தனது மன்னிப்பாலும் பேரருளாலும் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறியபோது தமது கையைத் தமது தலையை நோக்கிச் சுட்டிக்காட்டி சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 50
5426. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யாரையும் அவரது நற்செயல் காப்பாற்றப் போவதில்லை" என்று சொன்னார்கள். "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், "என்னையும்தான்; அல்லாஹ் தனது பேரருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 50
5427. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது" என்று கூறினார்கள். மக்கள், "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஆம்) என்னையும்தான்; அல்லாஹ் தனது தனிக்கருணையாலும் பேரருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 50
5428. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நடுநிலையோடு (நற்)செயல் புரியுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாக (நற்)செயல் புரியுங்கள். அறிந்துகொள்ளுங்கள்: உங்களில் யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது"என்று சொன்னார்கள். மக்கள், "தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றுவதில்லை), அல்லாஹ்வின் தூதரே?"என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னையும்தான்; அல்லாஹ் தனது தனிக் கருணையாலும் பேரருளாலும் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர" என்று சொன்னார்கள்.
- ஜாபிர் (ரலி) அவர்கள் வாயிலாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
- மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நற்செய்தி பெறுங்கள்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5429. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்திலும் நுழைவிக்காது; நரகத்திலிருந்தும் காப்பாற்றாது. என்னையும் சேர்த்துத் தான்; அல்லாஹ்வின் பேரருள் (எனக்குக்) கிடைத்தால் தவிர.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
அத்தியாயம் : 50
5430. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறிவந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நடுநிலையாக (நற்)செயலாற்றுங்கள். (அல்லது) அதற்கு நெருக்கமாகச் செயலாற்றுங்கள். நற்செய்தி பெற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், யாரையும் அவரது நற்செயல் ஒருபோதும் சொர்க்கத்தில் நுழைவிக்காது" என்று கூறினார்கள்.
மக்கள், "தங்களையுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னையும்தான்; அல்லாஹ் தனது பேரருளால் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர. அறிந்துகொள்ளுங்கள்! நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நற்செய்தி பெறுங்கள்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 50
பாடம் : 18 நற்செயல்களை அதிகமாகச் செய்வதும் வழிபாடுகளில் கூடுதல் ஈடுபாடு காட்டுவதும்.
5431. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். அவர்களிடம், "இந்த அளவுக்கு நீங்கள் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டுமா? தங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நான் நன்றியுள்ள அடியானாக இருக்கவேண்டாமா?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 50
5432. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுதார்கள். மக்கள், "தங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்துவிட்டானே (பிறகு ஏன் தாங்கள் இந்த அளவுக்குச் சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டும்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5433. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது தம் கால்களில் வெடிப்பு ஏற்படும் அளவுக்குத் தொழுவார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்படிச் செய்கிறீர்களே! தங்களின் முந்தைய மற்றும் பிந்தைய தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்டனவே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
பாடம் : 19 அறிவுரை வழங்குவதில் நடுநிலைப் போக்கு.
5434. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் வீட்டுவாசலில் அவர்களை எதிர் பார்த்துக் காத்திருந்தோம். அப்போது யஸீத் பின் முஆவியா அந்நகஈ (ரஹ்) எங்களைக் கடந்து சென்றார். அவரிடம், "நாங்கள் இங்கிருப்பதைப் பற்றி அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அறிவியுங்கள்" என்று சொன்னோம்.
அவர் உள்ளே நுழைந்த சிறிது நேரத்திற்குள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் வெளியே வந்து, "நீங்கள் இங்கு இருக்கும் விஷயம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. (இருந்தாலும்,) நான் உங்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடுவேனோ எனும் அச்சம்தான் உங்களிடையே வரவிடாமல் என்னைத் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் சடைவு அடைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) விட்டு விட்டு எங்களுக்கு அறிவுரை வழங்கிவந்தார்கள். (இதுவே உங்களிடையே அறிவுரை வழங்க வரவிடாமல் என்னைத் தடுக்கிறது") என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5435. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்களுக்கு (ஹதீஸ் அறிவித்து) அறிவுரை வழங்கிவந்தார்கள். இந்நிலையில் அவர்களிடம் ஒரு மனிதர், "அபூஅப்திர் ரஹ்மானே! தங்களின் ஹதீஸ் அறிவிப்பை நாங்கள் நேசிக்கிறோம்; ஆசிக்கிறோம். தாங்கள் ஒவ்வொரு தினமும் எங்களுக்கு ஹதீஸ் அறிவிப்பதை நாங்கள் பெரிதும் விரும்புகிறோம்" என்று கூறினார்.
அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நான் உங்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடுவேனோ எனும் அச்சம்தான் உங்களுக்கு (நாள்தோறும்) ஹதீஸ் அறிவிக்க விடாமல் என்னைத் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாங்கள் சடைவு அடைவதை விரும்பாமல் (சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனித்து) விட்டு விட்டு எங்களுக்கு அறிவுரை வழங்கிவந்தார்கள். (இதுவே உங்களிடையே அறிவுரை வழங்க வரவிடாமல் என்னைத் தடுக்கிறது") என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50

பாடம் : 1 சொர்க்கமும் அதிலுள்ள இன்பங்களின் தன்மையும் சொர்க்கவாசிகளின் நிலையும்.
5436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5437. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) நான் தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று கூறினான்.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இதைக் குர்ஆனிலுள்ள "அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்" (32:17) எனும் வசனம் உறுதிப்படுத்துகிறது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5438. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்" என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துள்ளது சொற்பமே! - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5439. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "நான் என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்"என்று கூறினான். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அல்லாஹ் அறிவித்திருப்பது சொற்பமே!
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, "அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்" (32:17) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 51
5440. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தேன். அப்போது அவர்கள் சொர்க்கத்தின் நிலை குறித்து பேசினார்கள்" என்று முழுமையாக ஹதீஸை அறிவித்தார்கள்.
பிறகு இறுதியில் "அதில் எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்கள் உள்ளன" என்றும் கூறிவிட்டு, "அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தம் இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப் புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்; நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்" (32:16,17) எனும் வசனங்களை ஓதினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 51
பாடம் : 2 சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது.
5441. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் ஒரு பயணி நூறு வருடங்கள் பயணிப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 51
5442. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்லமாட்டார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 51