541. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஐந்து முத்து அளவுத் தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
542. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள். ஒரு ஸாஉ அளவு முதல் ஐந்து முத்து வரைத் தண்ணீரில் குளிப்பார்கள்.
அத்தியாயம் : 3
543. (நபித்தோழர் அபூஅப்திர் ரஹ்மான்) சஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉத் தண்ணீரில் பெருந்துடக்கிற்காகக் குளித்து விடுவார்கள்; ஒரு முத்துத் தண்ணீரில் உளூச் செய்துவிடுவார்கள்.
இதை அபூரைஹானா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
544. நபித்தோழர் சஃபீனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉ அளவுத் தண்ணீரில் குளிப்பார்கள்; ஒரு முத் அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அலீ பின் ஹுஜ்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஒரு முத்து அளவுத் தண்ணீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிடுவார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளரான அபூரைஹானா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
சஃபீனா (ரலி) அவர்கள் (நினைவாற்றல் குறைந்த) முதுமைப் பருவத்தை அடைந்திருந்தார்கள். எனவே, அன்னாரது அறிவிப்பின் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
அத்தியாயம் : 3
பாடம் : 11 (குளியலின்போது) தலை உள்ளிட்ட உறுப்புகள்மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றுவது விரும்பத் தக்கதாகும்.
545. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (குளியல் முறை தொடர்பாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் விவாதித்துக் கொண்டனர். அப்போது மக்களில் ஒருவர், நானோ என் தலையை இப்படி இப்படிக் கழுவுகிறேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நானோ என் தலையில் மூன்று முறை இரு கைகள் நிரம்பத் தண்ணீரை ஊற்றுகிறேன் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
546. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், நானோ என் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுகிறேன் என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 3
547. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸகீஃப் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம், எங்கள் நாடு குளிர் பிரதேசமாகும்; (நாங்கள்) எப்படிக் குளிப்பது? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நானோ என் தலையின் மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றுகிறேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இஸ்மாயீல் பின் சாலிம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ஸகீஃப் குலத்தாரின் தூதுக் குழுவினர், அல்லாஹ்வின் தூதரே! என்று (அழைத்து மேற்கண்டவாறு) வினவினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
548. முஹம்மத் பின் அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது இரு கைகள் நிரம்பத் தண்ணீர் அள்ளித் தமது தலையில் மூன்று முறை ஊற்றுவார்கள் என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம் ஹசன் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள், எனக்குத் தலைமுடி அதிகமாக இருக்கிறதே? (மூன்று முறை ஊற்றினால் போதாதே!) என்று கேட்டார்கள். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், என் சகோதரர் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி உமது முடியைவிட அதிகமாகவும் சிறந்ததாகவும் இருந்தது (அவர்களே மூன்று முறைதான் தலைக்குத் தண்ணீர் ஊற்றினார்கள்) என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 12 குளிக்கும் பெண்களின் பின்னல்முடி பற்றிய சட்டம்.
549. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், அல்லாஹ்வின் தூதரே! நான் தலைமுடியை இறுக்கமாகப் பின்னிக்கொள்ளும் பெண் ஆவேன். பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது பின்னலை நான் அவிழ்த்துவிட வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை; நீ இரு கையளவுத் தண்ணீரை உன் தலைமீது மூன்று முறை ஊற்றினால் போதும். பிறகு உன் (உடல்)மீது தண்ணீர் ஊற்றிக்கொள்; துப்பரவாகி விடுவாய் என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், மாதவிடாய் மற்றும் பெருந்துடக்கிற்காக (குளிக்கும்போது) பின்னலை அவிழ்த்துவிட வேண்டுமா? என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் வினவியதாகவும், அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இல்லை என்று கூறியதாகவும், பிறகு மேற்கண்ட ஹதீஸின் கருத்துப்படி கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் போது அந்தப் பின்னலை நான் அவிழ்த்துக் கழுவ வேண்டுமா? என்று உம்மு சலமா (ரலி) அவர்கள் வினவியதாக இடம்பெற்றுள்ளது. மாதவிடாய் பற்றியக் குறிப்பு அதில் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 3
550. உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் பெண்கள் குளிக்கும்போது தம் பின்னலை அவிழ்த்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், இந்த இப்னு அம்ரைப் பார்த்து நான் வியப்படைகிறேன். பெண்கள் குளிக்கும்போது தம் பின்னலை அவிழ்த்துவிடுமாறு பணிக்கிறாரே! ஏன் தலையை மழித்துக்கொள்ளுமாறு பெண்களுக்கு அவர் கட்டளையிட வேண்டியதுதானே! நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். என் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுவதைவிடக் கூடுதாலாக வேறொன்றும் நான் செய்யவில்லை என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 13 பெண்கள் மாதவிடாய்க் குளியலின் போது கஸ்தூரி தோய்த்த (நறுமணப்) பஞ்சைக் குருதி வந்த இடத்தில் உபயோகிப்பது விரும்பத் தக்கதாகும்.
551. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாயிலிருந்து (நீங்கிக்கொள்ள) தாம் எவ்வாறு குளிக்க வேண்டும் என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் குளிக்கும் முறையை விளக்கினார்கள். பிறகு கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதனால் தூய்மைப்படுத்திக்கொள் என்று சென்னார்கள்.
அந்தப் பெண்மணி, அதை வைத்து நான் எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், (வெட்கப்பட்டவாறு) அல்லாஹ் தூயவன்; அதனால் தூய்மைப்படுத்திக்கொள் என்று (மறுபடியும்) சொன்னார்கள். -அப்போது நபி (ஸல்) அவர்கள் (தமது முகத்தை) மூடிக்கொண்டார்கள் என்பதை அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தமது முகத்தின் மீது கையை வைத்து (மூடி) சைகை செய்து காட்டினார்கள்.
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு, அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்தேன். இரத்தம் படிந்த இடத்தை அந்த (நறுமணப் பொருள் தடவப்பட்ட) பஞ்சினால் துடைப்பாயாக! என்று கூறினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இரத்தம் படிந்த இடங்களை என்று (பன்மையில்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, (மாதவிடாயிலிருந்து) துப்புரவு செய்துகொள்ளும் போது நான் எவ்வாறு குளிக்க வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து அதன் மூலம் துப்புரவு செய்து கொள்வாயாக! என்று சொன்னார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 3
552. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியலின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று சொன்னார்கள்.
அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று (மீண்டும்) சொன்னார்கள்.
உடனே நான், இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள் என்று -பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச்- சொன்னேன்.
மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள்,தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று! என்றார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
பெண்களிலேயே மிகச் சிறந்தவர்கள் அன்சாரிப் பெண்களாவர். மார்க்கத்தை விளங்கிக் கொள்வதில் வெட்கம் அவர்களுக்குத் தடையாக இருந்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்லாஹ் தூயவன்! அதனால் துப்புரவு செய்துகொள் என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தை (வெட்கப்பட்டு) மறைத்துக்கொண்டார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் (பின்வருமாறு) இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அஸ்மா பின்த் ஷகல் எனும் பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே, எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் நின்று விட்டால் அவர் எவ்வாறு குளிக்க வேண்டும்? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸிலுள்ளபடி பதிலளித்தார்கள். இந்த அறிவிப்பில் பெருந்துடக்கிற்கான குளியலைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 3
பாடம் : 14 உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் பெண்களும், அவர்களது குளியல் மற்றும் தொழுகை முறையும்.
553. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் உயர் இரத்தப் போக்கு (இஸ்திஹாளா) ஏற்படுபவளாக இருக்கிறேன்; (மாதம் முழுதும்) நான் சுத்தமாவதில்லை. எனவே,நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை (தொழுகையை விட்டுவிடாதே!) ஏனெனில், இது(இஸ்திஹாளா), இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; (கர்ப்பப் பையிலிருந்து வெளிவரும்) மாதவிடாயன்று. (மாதத்தில் வழக்கமாக) மாதவிடாய் ஏற்படும் நாட்களில் தொழுகையை விட்டுவிடு! மாதவிடாய்க் காலம் முடிந்துவிட்டால் இரத்தத்தைக் கழுவிவிட்டுத் தொழுது கொள்! என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஜரீர் (ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் பின் அப்தில் முத்தலிப் பின் அசத் (ரலி) அவர்கள் (நபியவர்களிடம்) வந்தார்கள். அவர் எங்கள் குலத்தைச் சேர்ந்த பெண்மணியாவார் எனும் குறிப்பு (கூடுதலாக) இடம்பெற்றுள்ளது.
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஒரு கூடுதலான தகவல் காணப்படுகிறது. (இரத்தத்தைக் கழுவிக்கொள்; உளூச் செய்துகொள் என்பதே அந்தத் தகவலாகும்.) ஆயினும், அதை நாம் குறிப்பிடவில்லை. (ஹம்மாத் ஒருவர் மட்டுமே இதை அறிவித்திருப்பதே அதற்குக் காரணம்.)
அத்தியாயம் : 3
554. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் உயர் இரத்தப்போக்கு ஏற்படுபவளாக இருக்கிறேன் என்று கூறி தீர்ப்புக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். எனவே (மாதவிடாய் காலம் முடிந்தவுடன்) குளித்துவிட்டுத் தொழுது கொள்! என்றார்கள். எனவே உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளித்துவந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், உம்மு ஹபீபா (ரலி) அவர்களை ஒவ்வொரு தொழுகைக்கும் குளிக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள் என்று கூறவில்லை. மாறாக (தனிப்பட்ட விருப்பில்) உம்மு ஹபீபா அவர்கள் தாமாகவே அவ்வாறு செய்துவந்தார்கள்.
இப்னு ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இப்னத்து ஜஹ்ஷ் என்று இடம்பெற்றுள்ளது. உம்மு ஹபீபா எனும் பெயர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 3
555. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மைத்துனியும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவியாருமான உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழு வருட காலமாக உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) இருந்துவந்தது. எனவே, அவர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இது மாதவிடாயன்று; இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். எனவே நீ (மாதவிடாய்க் காலம் முடிந்ததும்) குளித்துவிட்டுத் தொழுதுகொள்! என்று கூறினார்கள்.
தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் தம் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியாருமான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களது இல்லத்திலிருந்த துணி அலசும் பாத்திரத்தில் (நின்று) குளிப்பார்கள். (அவ்வாறு அவர்கள் குளிக்கும்போது அந்தப் பாத்திரத்தில்) அவர்களது இரத்தத்தின் நிறம் தண்ணீரை மிகைத்திருக்கும்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் இந்த ஹதீஸை அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அபூபக்ர் (ரஹ்) அவர்கள், ஹிந்தாவுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! (நபி (ஸல்) அவர்கள் அளித்த) இந்தத் தீர்ப்பை அவர் செவியுற்றிருந்தால் அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் அழுதுவிடுவார். ஏனெனில், ஹிந்தா (உயர் இரத்தப்போக்கின் காரணமாக) தொழாமல் இருந்துவந்தார் என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்களது கூற்று இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கு ஏழாண்டுகளாக உயர் இரத்தப்போக்கு இருந்து வந்தது என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 3
556. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உயர்) இரத்தப் போக்கு பற்றிக் கேட்டார். நான் அவர் (நின்று) குளித்துவந்த துணி அலசும் பாத்திரத்தில் இரத்தம் நிரம்பியிருக்கக் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (வழக்கமாக) மாதவிடாய் நிற்கும் நாட்கள்வரை நீ காத்திரு! அதற்குப் பின்னர் குளித்துவிட்டுத் தொழுது கொள்! என்று அவரிடம் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
557. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் தமக்கு (உயர்) இரத்தப்போக்கு ஏற்படுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மாதவிடாய் நிற்கும் நாட்கள்வரை நீ காத்திரு! பின்னர் குளித்துக்கொள்! என்று அவரிடம் கூறினார்கள். உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் குளிப்பவராய் இருந்தார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 15 மாதவிடாய் நாட்களில் விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்பது (களாச் செய்வது) கட்டாயமாகும்; விடுபட்ட தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை.
558. முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம், எங்களில் ஒருத்தி மாதவிடாய் நாட்களில் தமக்கு விடுபட்டுப்போன தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ (கரிஜிய்யாக் கூட்டத்தாரின் கேந்திரமான) ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் எங்களில் ஒருத்திக்கு மாதவிடாய் ஏற்படும். பின்னர் எதையும் மீண்டும் தொழுமாறு அவள் கட்டளையிடப்பட்டதில்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
559. முஆதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், மாதவிடாய் ஏற்பட்ட பெண் விடுபட்டத் தொழுகைகளை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா?அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு மாதவிடாய் ஏற்படும்போது (விடுபட்டத் தொழுகைகளை மீண்டும்) நிறைவேற்றுமாறு அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடவா செய்தார்கள்? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
அத்தியாயம் : 3
560. முஆதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணின் நிலை என்ன? (விடுபட்ட) நோன்பை மட்டும் அவள் மீண்டும் நோற்க வேண்டும். (விடுபட்டத்) தொழுகைகளை மீண்டும் தொழக் கூடாதா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீ ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவளா? என்று கேட்டார்கள். நான் ஹரூரா எனும் இடத்தைச் சேர்ந்தவள் அல்லள். ஆயினும், (தெரிந்துகொள்வதற்காகவே) கேட்கிறேன் என்றேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், எங்களுக்கும் அது (மாதவிடாய்) ஏற்படத்தான் செய்தது. அப்போது விடுபட்ட நோன்பை மீண்டும் நோற்குமாறு நாங்கள் பணிக்கப்பட்டோம். விடுபட்டத் தொழுகையை மீண்டும் தொழுமாறு நாங்கள் பணிக்கப்படவில்லை என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 3