5348. மேற்கண்ட ஹதீஸ், உபைதில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் தம் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இந்த அறிவிப்பிலும் உபைதுல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்களே தம் தந்தை கஅப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்ததாகவும், அவரே தம் தந்தை கஅப் (ரலி) அவர்கள் கண்பார்வை இழந்துவிட்ட சமயம் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராகவும், அவருடைய குலத்தாரிலேயே நன்கறிந்தவராகவும், நபித்தோழர்கள் அறிவித்த ஹதீஸ்களை நன்கு மனனம் செய்தவராகவும் இருந்தார் என்று காணப்படுகிறது.
மேலும், அதில் "உபைதில்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள், பாவமன்னிப்பு ஏற்கப்பட்ட மூவரில் ஒருவரான என் தந்தை கஅப் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இரு போர்களைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட எந்தப் போரிலும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை" என்று கூறினார்கள்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
மேலும், இந்த அறிவிப்பில், "பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக்) போருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். பதிவு செய்து பாதுகாக்கப்படும் எந்த ஏடும் அத்தனைப் பேருக்கு இடமளிக்காது (அந்த அளவுக்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள் இருந்தார்கள்)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 49
பாடம் : 10 அவதூறு சம்பவமும் அவதூறு கூறியோரின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்கப்பட்டதும்.
5349. இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், அல்கமா பின் வக்காஸ், உபை துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்களென்று அல்லாஹ் (குர்ஆனில்) அறிவிப்புச் செய்ததைப் பற்றியும் தெரிவித்தனர்.
மேற்கண்ட நால்வரில் ஒவ்வொருவரும் இந்தச் சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியினை எனக்கு அறிவித்தனர். அவர்களில் சிலர் வேறுசிலரைவிட ஹதீஸை நன்கு மனனமிட்டு வைத்திருந்தாலும், ஒருவரது அறிவிப்பு மற்றவரது அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் அறிவித்ததை நான் மனனமிட்டுள்ளேன். ஒருவரது அறிவிப்பு மற்றவரது அறிவிப்பை உறுதிப்படுத்துகிறது. அவர்கள் (நால்வரும்) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்கேனும் பயணம்) புறப்பட விரும்பினால், தம் துணைவியரிடையே (எவரைத் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வார்கள்.
இவ்வாறே அவர்கள் தாம் மேற்கொண்ட (பனுல் முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது, எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது.
ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய "ஹிஜாப்" எனும்) "பர்தா" சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும்.
(அப்பயணத்தின்போது) நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்துத் தூக்கிச் செல்லப் படுவேன். பயணத்தினிடையே அதனுள் நான் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கிவைக்கவும் படுவேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்தபோது, நாங்கள் மதீனாவை நெருங்கியதும் இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.
அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். எனது இயற்கைத் தேவையை நான் முடித்துக்கொண்டபின் முகாமை நோக்கி வந்தேன்.
அப்போது (என் கழுத்திலிருந்து யமன் நாட்டு) "ழஃபாரீ" நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து)விட்டது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன். அதைத் துழாவிக் கொண்டிருந்தது, (நான் சீக்கிரம் திரும்பிவந்து படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.
எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் (ஏற்றிக்) கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கி, நான் பயணம் செய்துவந்த ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர்.
அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்கும் அளவுக்கு அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. (அப்போதைய) பெண்கள் சிறிதளவு உணவையே உண்பார்கள். ஆகவே, அந்தச் சிவிகையைத் தூக்கியபோதும் அதை ஒட்டகத்தில் வைத்துக் கட்டியபோதும் அது கனமில்லாமல் இருந்ததை அம்மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம்பெண்ணாகவேறு இருந்தேன்.
எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்து)க்கொண்டு சென்றுவிட்டனர். படை கடந்து சென்ற பிறகு, (காணாமற்போன) கழுத்து மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அங்கு அழைப்பதற்கு யாருமில்லை; பதிலளிப்பதற்கும் எவருமில்லை. எனவே, நான் (ஏற்கெனவே) தங்கியிருந்த இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மேலிட்டது. நான் தூங்கிவிட்டேன்.
படை சென்றதற்குப் பின்னர் (படையினர் முகாமிட்டிருந்த இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருட்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத்தக்வானீ என்பார் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு, நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் வந்துசேர்ந்தார்.
அங்கே தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனின் உருவத்தைப் பார்க்கவே அவர் என்னிடம் வந்தார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். அவர் என்னை அறிந்துகொண்டு, "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று அவர் கூறிய சப்தத்தைக் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே எனது மேலங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டேன்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர் "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்" என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியுறவுமில்லை. பிறகு அவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக்கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங்காலை (தமது காலால்) மிதித்துக்கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் நானிருந்த ஒட்டகத்தை இழுத்துச் செல்லலானார்.
இறுதியில் படையினர் (மதிய ஓய்வுக்காக) நண்பகல் வெயில் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்ட பின்னர் நாங்கள் அவர்களைச் சென்றடைந்தோம். அப்போது (எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி) என் விஷயத்தில் அழிந்தவர்கள் அழிந்துபோனார்கள். என்மீது அவதூறு (பிரசாரம்) செய்ததில் பெரும் பங்கு எடுத்துக்கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.
பிறகு நாங்கள் (அனைவரும்) மதீனா வந்தடைந்தோம். நாங்கள் மதீனா வந்தபின் ஒரு மாத காலம் நான் நோயுற்றுவிட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லில் மூழ்கிப்போயிருந்தார்கள். இந்த அவதூறு எதுவுமே எனக்குத் தெரியாது.
நான் நோயுறும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இம்முறை நான் நோயுற்றிருந்தபோது) அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்பார்கள். அவ்வளவுதான். இதுவே எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைப் பற்றி வெளியே பேசப்பட்டுவந்த) அந்தத் தீயசொல் பற்றி ஒரு சிறிதும் (உடல் நலம் தேறுவதற்குமுன்) எனக்குத் தெரியாது.
நோயிலிருந்து குணமடைந்தபின் நானும் மிஸ்தஹின் தாயாரும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திவந்த "மனாஸிஉ" (எனப்படும் புறநகர்ப் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டுமே இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கு முன்னால் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். கழிப்பிடம் நோக்கி வெளியே செல்லும் எங்களது இந்தப் பழக்கம் பண்டைய அரபுகளின் பழக்கத்தை ஒத்ததாயிருந்தது. அன்று நாங்கள் எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதைத் தொந்தரவாகக் கருதிவந்தோம்.
நானும் உம்மு மிஸ்தஹும் நடந்தோம். அவர் அபூருஹ்ம் பின் அப்தில் முத்தலிப் பின் அப்தி மனாஃப் அவர்களின் புதல்வியாவார். (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான "(ராயித்தா) பின்த் ஸக்ர் பின் ஆமிர்"தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்தஹின் புதல்வரே மிஸ்தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் முத்தலிப் ஆவார்.
ஆக, (என் உறவினரான) அபூருஹ்மின் மகள் உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் இயற்கைக் கடனை முடித்துக்கொண்டு எனது வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தமது ஆடையில் இடறிக்கொண்டார். உடனே அவர், "மிஸ்தஹ் நாசமாகட்டும்" என்று (தம் புதல்வரைச் சபித்தவராகக்) கூறினார். நான் அவரிடம், "மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர்கள்?" என்று கேட்டேன்.
அதற்கு அவர், "அம்மா! அவர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?" என்று கேட்டார். "என்ன சொன்னார்?" என நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அப்போது அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு எனது உடல்நிலை இன்னும் மோசமாகிவிட்டது.
நான் எனது வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எனக்கு சலாம் சொல்லிவிட்டு, "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டார்கள். அப்போது நான், "என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?" என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதா என்று விசாரித்து என்மீதான அவதூறு) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ளவே அப்போது நான் விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். உடனே நான் என் பெற்றோரிடம் வந்(து சேர்ந்)தேன்.
நான் என் தாயாரிடம், "அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக்கொள்கிறார்கள்?" என்று கேட்டேன். என் தாயார், "அன்பு மகளே! உன்மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தம் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்" என்று கூறினார்.
நான் "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) இப்படியா மக்கள் பேசிவிட்டார்கள்!" என்று (வியப்புடன்) சொன்னேன். அன்றிரவு விடிய விடிய நான் அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்தபோதும் அழுதேன்.
(இதற்கிடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (அதாவது என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அத்தருணத்தில் வேதஅறிவிப்பு (வஹீ) தாமதமாயிருந்தது.
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களோ, நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் (குடும்பத்தார்மீது) இருந்த பாசத்தில் தாம் அறிந்துள்ளதையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் உங்கள் துணைவியர். அவர்களிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை" என்று உசாமா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
அலீ பின் அபீதாலிப் அவர்களோ (நபியவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக), "அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றி மனைவியர் பலர் இருக்கின்றனரே! பணிப்பெண் (பரீரா) இடம் கேட்டால், அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்" என்று கூறினார்கள்.
ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப்பெண்) பரீராவை அழைத்து, "பரீரா! ஆயிஷாவிடம் உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது நீ பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, "தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர், தம் வீட்டாரின் குழைத்த மாவை அப்படியே விட்டுவிட்டு உறங்கிப்போய்விடுவார். வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (விவரமும்) வயது(ம்) குறைந்த இளம் பெண் என்பதைத் தவிர, அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை" என்று பதில் கூறினார்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலுக்கு எதிராக உதவி கோரியபடி சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை மீதிருந்தபடி, "முஸ்லிம் சமுதாயமே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி எனக்கு) மனவேதனையை அளித்த ஒரு மனிதனுக்கெதிராக எனக்கு உதவி புரிபவர் யார்? ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நான் நல்லதையே அறிவேன். அவர்கள் (அவதூறு கிளப்பியோர்) ஒரு மனிதரை (என் வீட்டாருடன் இணைத்து) அவதூறு கூறியுள்ளனர். அந்த மனிதரைப் பற்றியும் நான் நல்லதையே அறிவேன். நான் இருக்கும்போதுதான் அவர் என் வீட்டிற்கு வந்திருக்கிறார் (தனியாக வந்ததில்லை)" என்று கூறினார்கள்.
உடனே (அவ்ஸ் கூட்டத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவனுக்கெதிராகத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால்,அவனது கழுத்தை நாங்கள் துண்டித்துவிடுகிறோம். அவன் எங்கள் சகோதரர்களான "கஸ்ரஜ்" குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால், (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் செய்து முடிக்கிறோம்" என்று கூறினார்கள்.
உடனே கஸ்ரஜ் குலத்தின் தலைவரான சஅத் பின் உபாதா எழுந்தார். இவர் (அதற்குமுன்) நல்ல மனிதராகத்தான் இருந்தார். குல மாச்சரியம் அவரை விவரமில்லாமல் பேச வைத்துவிட்டது. அவர் (அவ்ஸ் குலத்தவரான) சஅத் பின் முஆதை நோக்கி, "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தவறாகச் சொல்லிவிட்டீர். அவனை நீர் கொல்லமாட்டீர். அவனைக் கொல்ல உம்மால் முடியவும் செய்யாது" என்று சொன்னார்.
உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்றார். இவர் (அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தந்தையின் சகோதரர் புதல்வர் ஆவார். உசைத் (ரலி) அவர்கள் சஅத் பின் உபாதா அவர்களிடம் "நீர்தான் தவறாகப் பேசினீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். அதனால்தான் நயவஞ்சகர்களுக்காக வாதாடுகின்றீர்" என்று சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடைமீது நின்றுகொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட்டுக் கொள்ளத் தயாராகிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் அனைவரும் மௌனமாகும்வரை அவர்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பிறகு தாமும் அமைதியாகிவிட்டார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அன்றைய நாள் முழுவதும் நான் அழுது கொண்டேயிருந்தேன். என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. அடுத்த நாள் இரவும் அழுதுகொண்டிருந்தேன். அப்போதும் என் கண்ணீரும் ஓயவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. அழுகை என் ஈரலைப் பிளந்துவிடுமோ என என் பெற்றோர் எண்ணி (கலங்கி)க்கொண்டிருந்தனர்.
நான் அழுதுகொண்டிருக்க, என்னருகில் என் தாய் தந்தையர் அமர்ந்துகொண்டிருந்த போது, அன்சாரிப்பெண் ஒருவர் வந்து என்னிடம் (உள்ளேவர) அனுமதி கோரினார். நான் அவருக்கு அனுமதியளித்தவுடன் அவரும் அழுதபடி அமர்ந்துகொண்டார்.
நாங்கள் இவ்வாறு இருக்கையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு அமர்ந்தார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாதகாலம்வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு "வஹீ"யாக அருளப்படாமலேயே இருந்தது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்தபின், ஏகத்துவ உறுதிமொழி கூறி (இறைவனைப் புகழ்ந்துவிட்டு), "ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்தது. நீ நிரபராதியாக இருந்தால், அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று (வஹீயின் மூலம்) அறிவித்துவிடுவான். (ஒருகால்) நீ குற்றமேதும் செய்திருந்தால், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு. ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக்கொண்டு, (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால், அவனது கோரிக்கையை ஏற்று அவனை அல்லாஹ் மன்னிக்கின்றான்" என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்தபோது, எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்றுபோய்விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை. அப்போது நான் என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதற்குப் பதில் சொல்லுங்கள்" என்றேன். அதற்கு என் தந்தை, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்ன (பதில்) சொல்வது என்பதே எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள்.
பிறகு நான் என் தாயார் (உம்மு ரூமான்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தாயார், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்பதே எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். அதற்கு நான், "நானோ வயது குறைந்த இளம்பெண். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவள். இந்நிலையில் (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்ட) இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனங்களில் பதிந்துபோய், அதை உண்மை என்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதை அல்லாஹ்வின் மீதாணையாக நான் அறிவேன்.
ஆகவே, உங்களிடம் நான் குற்றமற்றவள் என்று கூறினால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- அதை நீங்கள் நம்பப்போவதில்லை. நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக்கொண்டால், -நான் குற்றமற்றவள் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- நான் சொல்வதை அப்படியே (உண்மை என்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (எனக்கும்) உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி யஅகூப் - அலை) அவர்களையே உவமானமாகக் காண்கிறேன் (அதாவது:) "(இதைச்) சகித்துக்கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம்தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும்" (12:18) என்று (யஅகூப் (அலை) அவர்கள் கூறியதைச்) சொன்னேன்.
பிறகு படுக்கையில் திரும்பிப் படுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அப்போது நான் குற்றமற்றவள் என்பதையும், நான் குற்றமற்றவள் என நிச்சயம் அல்லாஹ் அறிவிப்பான் என்பதையும் நன்கறிவேன். ஆயினும்,அல்லாஹ்வின் மீதாணையாக! ஓதப்படுகின்ற வஹீயை (வேதஅறிவிப்பை) என் விஷயத்தில் அல்லாஹ் அருள்வான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் ஓதப்படுகின்ற ஒன்றைச் சொல்கின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என அறிவிக்கும் ஒரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (எங்கள் வீட்டில் அமர்ந்திருந்த இடத்திலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்திருக்கவுமில்லை; வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) அருளத் தொடங்கிவிட்டான்.
உடனே அவர்களுக்கு (வேதஅறிவிப்பு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை அவர்களைப் பற்றிக்கொண்டது. அது கடுங்குளிர் காலமாயிருந்தும், அவர்களின் மேனியிலிருந்து வியர்வைத் துளிகள் முத்துகளைப் போன்று வழியத் தொடங்கிவிட்டன. அவர்களுக்கு அருளப்பெற்ற இறைவசனத்தின் பாரத்தினால்தான் (அவர்களுக்கு வியர்வை அரும்பி வழியுமளவுக்கு) இந்தச் சிரமநிலை ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் (மகிழ்ச்சியோடு) சிரித்தவாறே அவர்கள் பேசிய முதல் வார்த்தை, "ஆயிஷா! நற்செய்தி பெற்றுக்கொள். அல்லாஹ் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்துவிட்டான்" என்பதாகவே இருந்தது.
உடனே என் தாயார் என்னிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுந்துசெல்" என்று கூறினார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் எழுந்து செல்லமாட்டேன். என்னைக் குற்றமற்றவள் என அறிவித்த அல்லாஹ்வையே புகழ்(ந்து அவனுக்கு நன்றி செலுத்து)வேன்" என்று சொன்னேன். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தான்" என்று தொடங்கும் பத்து வசனங்களை (24:11-20) அருளினான்.
என் குற்றமற்ற நிலை தொடர்பாக வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் இந்த வசனங்களை அருளியபோது, (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து "மிஸ்தஹ்" அவதூறு கூறிய பின்பு ஒருபோதும் அவருக்காக நான் சிறிதும் செலவிடமாட்டேன்" என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா (தாய் வழியில்) தமக்கு உறவினர் என்பதாலும், அவர் ஏழை என்பதாலும் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் உதவித் தொகை வழங்கிவந்தார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "உங்களில் செல்வமும் தயாள குணமும் படைத்தோர் (தம்) உறவினர்களுக்கோ ஏழைகளுக்கோ அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ எதுவும் வழங்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்" என்று தொடங்கி, "அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பு வழங்குவதை நீங்கள் விரும்பமாட்டீர்களா..." (24:22) என்பது வரையிலான வசனத்தை அருளினான்.
-"அல்லாஹ்வின் வேதத்திலுள்ள வசனங்களிலேயே (இறைமன்னிப்பை) மிகவும் எதிர் பார்க்கவைக்கும் வசனம் இதுதான்" என்று அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹிப்பான் பின் மூசா (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.
உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென்றே நான் விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு, மிஸ்தஹுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். "அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்தமாட்டேன்" என்றும் சொன்னார்கள்.
(குர்ஆனில் எனது கற்பொழுக்கம் குறித்த வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பற்றித் தம்முடைய (இன்னொரு) துணைவியான ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் விசாரித்திருந்தார்கள். "(ஸைனபே!) நீ (ஆயிஷா குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்? அல்லது பார்த்திருக்கிறாய்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே! என் காதையும் என் கண்ணையும் (அவற்றின்மேல் பழி போடாமல்) நான் பாதுகாத்துக்கொள்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன்" என்று கூறினார்கள்.
ஸைனப் அவர்கள்தான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபியின் அன்பிலும்) போட்டியாக இருந்தவர். ஆயினும், அல்லாஹ் அவரை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பைக் கொடுத்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (என்னுடன்) மோதிக்கொள்ளலானார். (என் விஷயத்தில்) அவதூறு பேசி அழிந்துபோனவர்களுடன் அவரும் அழிந்துபோனார்.
அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "இதுதான் அந்த (நால்வர்) குழுவிடமிருந்து எனக்குக் கிடைத்த அறிவிப்பாகும்"என்று கூறுகிறார்கள்.
யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("சஅத் பின் உபாதா அவர்களைக் குலமாச்சரியம் விவரமில்லாமல் பேசவைத்துவிட்டது" என்பதற்குப் பகரமாக) "குலமாச்சரியம் அவரை உசுப்பிவிட்டது" என்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 49
5350. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஃபுலைஹ் பின் சுலைமான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "சஅத் பின் உபாதா அவர்களைக் குலமாச்சரியம் விவரமில்லாமல் பேசவைத்துவிட்டது" என்று இடம் பெற்றுள்ளது.
சாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "குலமாச்சரியம் அவரை உசுப்பி விட்டது" என்றும், உர்வா பின் அஸ்ஸுபைர் பின்வருமாறு கூறியதாகக் கூடுதலாகவும் இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் தமக்கு முன்னால் (அவதூறு கூறியவர்களில் ஒருவரான) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் ஏசப்படுவதை விரும்பாதவர்களாக இருந்தார்கள். மேலும், "அந்த ஹஸ்ஸான் (ரலி) அவர்கள்தான், "(பகைவர்களே!) என் தந்தையும், என் தந்தையின் தந்தையும், எனது மானமும் உங்களிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களின் மானத்தைக் காக்கும் கேடயமாகும்" எனும் கவிதையைச் சொன்னவர்" என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! எவரைக் குறித்து (அந்தப் பழிச்சொல்) சொல்லப்பட்டதோ அந்த மனிதர் (ஸஃப்வான், தம் அன்னையான என்னுடன் தம்மை இணைத்து அவதூறு பேசுவதைக் கேட்டு), "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்); எனது உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் ஒருபோதும் எந்த (அந்நியப்) பெண்ணின் ஆடையையும் அகற்றியதில்லை" என்று கூறினார். அதன் பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார்" என்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
யஅகூப் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "படையினர் கடுமையான வெயிலுள்ள நண்பகல் நேரத்தில் (மதிய ஓய்வுக்காக) இறங்கித் தங்கியிருந்தனர் ("மூஇரீன ஃபீ நஹ்ரிழ் ழஹீரா")" என்று இடம் பெற்றுள்ளது. அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மூஃகிரீன" என்று இடம்பெற்றுள்ளது.
அப்து பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்களிடம் "மூஃகிரீன் என்பதற்குப் பொருள் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(அதன் வேர்ச்சொல்லான) "வஃக்ரத்" என்பது "கடுமையான வெயிலைக் குறிக்கும்" என்றார்கள்.
அத்தியாயம் : 49
5351. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது, எனக்கு இன்னும் அதைப் பற்றி தெரிந்திராத நிலையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னைப் பற்றி உரையாற்ற மக்களிடையே) எழுந்து நின்றார்கள்.
ஏகத்துவ உறுதிமொழி கூறி, அல்லாஹ்வை அவன் தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டு, "என் வீட்டார்மீது அபாண்டமாகப் பழி சுமத்தியவர்கள் விஷயத்தில் (அவர்களை என்ன செய்வதென்று) எனக்கு ஆலோசனை கூறுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என் வீட்டாரிடம் எந்தக் கெட்டப்பழக்கத்தையும் நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! எவரிடம் எந்தத் தீய நடத்தையையும் நான் காணவில்லையோ அத்தகைய ஒருவருடன் என் வீட்டாரை இணைத்து அவர்கள் பழி சுமத்தியுள்ளார்கள். நான் இருக்கும்போதே தவிர வேறெப்போதும் அவர் என் வீட்டினுள் நுழைந்ததில்லை. நான் பயணத்தில் வெளியே செல்லும்போதெல்லாம், அவரும் என்னுடனேயே இருப்பார்" என்று சொன்னார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகி மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும், இந்த அறிவிப்புகளில், "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்திருந்து என் பணிப்பெண்ணிடம் என்னைப் பற்றிக் கேட்டிருந்தார்கள். அவள், "அல்லாஹ்வின் மீதாணையாக! ஆடு நுழைந்து அவர் "குழைத்துவைத்த மாவை" அல்லது "அவர் பிசைந்துவைத்த மாவை"த் தின்றுவிட்டுச் செல்லும் அளவுக்கு (மெய்மறந்து) உறங்கி விடுவார் என்பதைத் தவிர வேறு எந்தக் குறையையும் நான் (ஆயிஷாவிடம்) அறிய வில்லை" என்று சொல்லியிருந்தாள்.
அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் அவளை அதட்டி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்" என்று அவளிடம் வெளிப்படையாக விஷயத்தை விளக்கினார்.
அப்போது அவள், "அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் மீதாணையாக! பொற்கொல்லன், (தூய்மையான) சிவப்புத் தங்கக்கட்டியை எப்படி மாசு மருவற்றதாகக் கருதுவானோ அவ்வாறே நான் அவரைக் கருதுகிறேன்" என்று சொன்னாள்.
எந்த மனிதருடன் (என்னை இணைத்து) அவதூறு பேசப்பட்டதோ அந்த மனிதருக்கும் இந்த விஷயம் எட்டியது. அவர் "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்). நான் ஒருபோதும் எந்த (அந்நியப்) பெண்ணின் ஆடையையும் அகற்றியதில்லையே!" என்று சொன்னார். பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் (ஓர் அறப்போரில்) வீரமரணம் அடைந்தார்.
மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது: (முஸ்லிம்களில்) அதைப் பற்றிப் பேசியவர்கள் மிஸ்தஹும் ஹம்னாவும் ஹஸ்ஸானும் ஆவர். நயவஞ்சகன் "அப்துல்லாஹ் பின் உபை"தான் (நடக்காத ஒன்றை நடந்ததாக) ஜோடித்து, அதைப் பரப்பிவந்தவன் ஆவான். அவதூறு பரப்பியவர்களில் பெரும்பங்கு வகித்தவனும் அவன்தான்; ஹம்னாவும்கூட.
அத்தியாயம் : 49
பாடம் : 11 நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்மீது சுமத்தப்பட்ட அவதூறுக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதாகும்.
5352. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணுடன் இணைத்து ஒரு மனிதர் அவதூறு சொல்லப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம், "நீங்கள் சென்று அவருடைய கழுத்தை வெட்டிவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே அலீ (ரலி) அவர்கள் சென்ற போது, அவர் (சுற்றுச்சுவர் இல்லாத) ஒரு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தார். அவரிடம் அலீ (ரலி) அவர்கள், "மேலே வா" என்று தமது கையைக் கொடுத்து அவரை வெளியேற்றினார்கள்.
அப்போது அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவராக, இன உறுப்பே அற்றவராக இருந்தார். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் அவரை(க் கொல்லாமல்) விட்டுவிட்டார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அவர் இன உறுப்பு துண்டிக்கப்பட்டவர்; இன உறுப்பே அற்றவர் ஆவார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 49

5353. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அப்பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் தம் நண்பர்களிடம், "அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்யாதீர்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்" என்றும், "நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், (எம்முடைய இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்" என்றும் சொன்னான்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அ(வர் சொன்ன)தை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உபையிடம் ஆளனுப்பினார்கள். (அவர் வந்தவுடன்) அவரிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தாம் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தார்.
அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார்" என்று (என்னைப் பற்றிக்) கூறினார். (அவருடன் சேர்ந்து) மக்களில் சிலரும் அப்படிச் சொன்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான வேதனை) ஏற்பட்டது. அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் "(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது..." (63:1) என்று தொடங்கும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தமது தலையைத் திருப்பிக் கொண்டார்கள்.
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) "குஷுபும் முசன்னதா" (சாய்த்துவைக்கப்பட்ட மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட சாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.
அத்தியாயம் : 50
5354. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் (பிரேதம் சவக்குழிக்குள் வைக்கப்பட்ட பிறகு அந்த) சவக்குழிக்கு வந்து, அந்தப் பிரேதத்தை வெளியே எடுத்துத் தமது மடியில் வைத்து, அதன் மீது தமது உமிழ்நீரை உமிழ்ந்து, தமது அங்கியையும் அதற்கு அணிவித்தார்கள். (இதற்குக் காரணம் என்னவோ) அல்லாஹ்வே அறிந்தவன்!
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபையின் பிரேதம் சவக்குழிக்குள் வைக்கப்பட்ட பிறகு அங்கு வந்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 50
5355. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இறந்தபோது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தம் தந்தைக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அங்கியைத் தருமாறு கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் தமது அங்கியைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு இறுதித் தொழுகை நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.
அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, "அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு(ப் பாவமன்னிப்புக் கோரி) பிரார்த்தனை செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான். "(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது கோராமலிருப்பீராக. (இரண்டும் சமம்தான்.) அவர்களுக்காக நீர் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்" (9:80) என்றே அல்லாஹ் கூறுகின்றான். நான் எழுபது முறையைவிட அதிகமாக இவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்" என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இவன் நயவஞ்சகனாயிற்றே!" என்று சொன்னார்கள். இருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நிற்க வேண்டாம்" எனும் (9:84ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 50
5356. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(9:84ஆவது வசனம் அருளப்பெற்ற) பிறகு அவர்களுக்குத் தொழுவிப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5357. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறையில்லம் கஅபா அருகே மூன்றுபேர் ஒன்றுகூடினர். அவர்களில் "குறைஷியர் இருவரும் ஸகஃபீ குலத்தார் ஒருவரும்" அல்லது "ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்" இருந்தனர். அவர்களது உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாகவே இருந்தது. (ஆனால்,) வயிற்றுச் சதை (தொந்தி) அதிகமாகத்தான் இருந்தது. அவர்களில் ஒருவர், "அல்லாஹ், நாம் சொல்வதைக் கேட்கின்றான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்க, மற்றொருவர், "நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்" என்று சொன்னார். இன்னொருவர், "நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கிறான் என்றால், நாம் மெதுவாகப் பேசும் போதும் அவன் நிச்சயம் கேட்கவே செய்வான்" என்று சொன்னார்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்துகொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை" (41:22) எனும் வசனத்தை அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5358. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உஹுது(ப் போரு)க்காகப் புறப்பட்டுச் சென்றபோது, அவர்களுடனிருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்துவிட்டனர். (இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக) நபித்தோழர்கள் இரு பிரிவினராகப் பிரிந்துவிட்டார்கள்.
அவர்களில் சிலர், "அ(வ்வாறு திரும்பிச் சென்ற)வர்களைக் கொன்றுவிடுவோம்" என்று கூறினர். வேறுசிலர், "இல்லை (அவர்களைக் கொல்லவேண்டாம்)" என்று கூறினர். அப்போதுதான் "உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் நீங்கள் இரு பிரிவினர்களாக உள்ளீர்கள்" (4:88) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5359. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நயவஞ்சகர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறப்போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது, அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தங்கிவிட்டதைப் பற்றி அவர்கள் பூரிப்பும் அடைந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து திரும்பி)வந்தால், அவர்களிடம் (போய்,தாம் கலந்துகொள்ளாமல் போனதற்குச்) சாக்குப்போக்குகளைக் கூறி (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள்.
அப்போதுதான், "தாம் செய்த (தீய)வை குறித்துப் பூரித்துக்கொண்டும், தாம் செய்யாதவற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பித்தவர்கள் என்று ஒருபோதும் (நபியே!) நீர் எண்ண வேண்டாம்; வதைக்கும் வேதனை தான் அவர்களுக்கு உண்டு" (3:188) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5360. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மதீனா ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம் தம் காவலரிடம், "ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, "தாம் செய்தவை குறித்து மகிழ்ச்சியடைகின்ற, தாம் செய்யாத (நற்)செயல்களுக்காக (சாதனைகளுக்காக)ப் புகழப்பட வேண்டுமென்று விரும்புகின்ற ஒவ்வொரு மனிதரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின், நாம் அனைவருமே நிச்சயமாக வேதனை செய்யப்பட வேண்டிவருமே!" என்று (நான் வினவியதாகக்) கேள்" என்று சொன்னார்.
(அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) "உங்களுக்கு இந்த வசனம் தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? இந்த வசனம் வேதக்காரர்கள் தொடர்பாகவே அருளப்பெற்றது" என்று கூறிவிட்டு, "வேதம் வழங்கப்பெற்றோரிடம் நீங்கள் மக்களுக்கு அ(ந்த வேதத்)தை நிச்சயமாகத் தெளிவுபடுத்தி விடவேண்டும்; அதை நீங்கள் மறைக்கக் கூடாது என அல்லாஹ் உறுதிமொழி பெற்றதை (நபியே!) எண்ணிப்பார்ப்பீராக" (3:187) எனும் வசனத்தை ஓதினார்கள்.
பிறகு "தாம் செய்த (தீய)வை குறித்துப் பூரித்துக்கொண்டும் தாம் செய்யாதவற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பித்தவர்கள் என்று (நபியே!) ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்" (3:188) எனும் வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.
மேலும், "நபி (ஸல்) அவர்கள் (யூதர்களை அழைத்து) அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதை மறைத்துவிட்டு, (உண்மைக்குப் புறம்பான) வேறொன்றை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்குச் சரியான தகவலைத் தந்துவிட்டதைப் போன்று காட்டிக்கொண்டும், அதற்காக நபி (ஸல்) அவர்களிடம் பாராட்டை எதிர்பார்ப்பதைப் போன்றும், நபி (ஸல்) அவர்கள் கேட்டதைப் பற்றிச் சொல்லாமல் தாம் மறைத்துவிட்டதைக் குறித்து மகிழ்ச்சியடைந்துகொண்டும் புறப்பட்டுச் சென்றனர்.
(அப்போதுதான் மேற்கண்ட (3:188ஆவது) வசனம் அருளப்பெற்றது)" என்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 50
5361. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் அலீ (ரலி) அவர்கள் விஷயத்தில் செய்துவிட்ட இந்தச் செயலை நீங்களாக உங்கள் யோசனைப்படி செய்தீர்களா? அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் கூறிய ஏதேனும் அறிவுரைப்படி செய்தீர்களா?" என்று கேட்டேன்.
அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் அனைவரிடமும் கூறாத ஓர் அறிவுரையை எங்களிடம் மட்டும் கூறவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் "என் தோழர்களிடையே பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எட்டுப்பேர், ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை சொர்க்கத்திற்குள் நுழையமாட்டார்கள். நரக நெருப்பின் ஒரு தீப்பந்தமே அவர்கள் எட்டுப் பேருக்கும் போதுமானதாகும்" என்று கூறினார்கள் என ஹுதைஃபா (ரலி) அவர்கள் சொன்னார்கள்" என்றார்கள்.
மற்ற நால்வர் குறித்து அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியது என் நினைவில் இல்லை என அறிவிப்பாளர் அஸ்வத் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அத்தியாயம் : 50
5362. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் (அலீ (ரலி) அவர்களுடன் சேர்ந்து) போரிட்டுவருவதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? அதை நீங்கள் சுயமான முடிவுப்படி மேற்கொள்கிறீர்களா? ஏனெனில், உங்களின் சுயமுடிவு தவறானதாகவும் இருக்கலாம்; சரியானதாகவும் இருக்கலாம்.அல்லது உங்களிடம் (அவ்வாறு போரிடுமாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்களா?" என்று கேட்டோம்.
அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், "மக்கள் அனைவரிடமும் கூறாத அறிவுரை எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறவில்லை. (ஆனால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தாரிடையே பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள்..." என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அம்மார் (ரலி) அவர்கள் இதை ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள் என்றே நான் கருதுகிறேன்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
ஃகுன்தர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "என் சமுதாயத்தாரிடையே பன்னிரெண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை அவர்கள் சொர்க்கத்திற்குள் நுழையவுமாட்டார்கள்; அதன் வாடையைக்கூட நுகரவுமாட்டார்கள். நரக நெருப்பின் விளக்கே ("துபைலா") அந்த எட்டுப் பேருக்கும் போதுமானதாகும். அது அவர்களது தோள்களிடையே வெளிப்பட்டு அவர்களது நெஞ்சுகளுக்கு மேலே வந்துவிடும்" என்று கூறியதாக நான் கருதுகிறேன் என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 50
5363. அபுத்துஃபைல் (ஆமிர் பின் வாஸிலா-ரலி) அவர்கள் கூறியதாவது:
கணவாய்வாசிகளில் ஒருவருக்கும் ஹுதைஃபா (ரலி) அவர்களுக்கும் இடையே மக்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சினை ஒன்று ஏற்பட்டது. அப்போது, (அந்த மனிதரிடம்) ஹுதைஃபா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் கேட்கிறேன். அந்தக் கணவாய்வாசிகள் எத்தனை பேர் இருந்தனர்?" என்று கேட்டார்கள். (அந்த மனிதர் மௌனமாக இருக்கவே,) அவரிடம் அங்கிருந்த மக்கள், "அவர் கேட்டதற்குப் பதில் சொல்" என்று கூறினர். அந்த மனிதர், "அவர்கள் பதினான்கு பேர் இருந்தார்கள் என எங்களிடம் தெரிவிக்கப்பட்டது" என்றார்.
(ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) அவர்களில் நீரும் ஒருவராக இருந்தால், (கணவாயிலிருந்த) மக்களின் எண்ணிக்கை பதினைந்தாக உயரும். நான் அல்லாஹ்வை சாட்சியாக்கிக் கூறுகிறேன்: அவர்களில் பன்னிரெண்டு பேர் இவ்வுலகிலும் சாட்சிகள் நிற்கும் (மறுமை) நாளிலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிரிகளாவர். மற்ற மூன்று பேரை நபியவர்கள் மன்னித்துவிட்டார்கள்.
(காரணம்) அவர்கள் மூவரும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பொது அறிவிப்பாளரின் அறிவிப்பை நாங்கள் செவியுறவுமில்லை; அந்த மக்கள் தீட்டியிருந்த திட்டத்தை நாங்கள் அறிந்திருக்கவுமில்லை" என்று கூறி (மன்னிப்புக் கோரி)னர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருங்கற்கள் நிறைந்த ("ஹர்ரா"ப்) பகுதியில் இருந்தார்கள். பிறகு (தபூக் நோக்கி) நடந்தார்கள். அப்போது "(நீங்கள் தங்கப்போகுமிடத்திலுள்ள) நீர்நிலையில் தண்ணீர் மிகக் குறைவாகவே இருக்கும். என்னை முந்திக்கொண்டு யாரும் அங்கு செல்ல வேண்டாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆனால், அவர்களை முந்திக்கொண்டு சிலர் அங்கு சென்றுவிட்டிருப்பதைக் கண்டார்கள். அன்றைய தினத்தில் அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அத்தியாயம் : 50
5364. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் (குறைஷியரின் குதிரைப்படையை நோட்டமிடுவதற்காக ஹுதைபிய்யா அருகிலுள்ள) "ஸனிய்யத்துல் முரார்" கணவாயில் (முதலில்) ஏறுகிறாரோ அவருக்கு பனூ இஸ்ராயீல் சமுதாயத்துக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதைப் போன்று மன்னிப்பு வழங்கப்படும்" என்று கூறினார்கள்.
"கஸ்ரஜ்" குலத்தைச் சேர்ந்த எங்களது குதிரைப் படையினரே அதன் மீது முதலில் ஏறினர். பிறகு மற்றவர்கள் ஏறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சிவப்பு ஒட்டகத்தில் வரும் மனிதரைத் தவிர மற்ற அனைவரும் பாவமன்னிப்பு அளிக்கப் பட்டுவிட்டனர்" என்று கூறினார்கள்.
உடனே நாங்கள் அந்த மனிதரிடம் சென்று, "நீ வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்காகப் பாவமன்னிப்புக் கோரச் சொல்" என்று கூறினோம்.
அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் எனக்குப் பாவமன்னிப்புக் கோருவதைவிட காணாமற்போன எனது ஒட்டகம் எனக்கு (திரும்பக்) கிடைப்பதே எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று சொன்னார். அப்போது அந்த மனிதர் காணாமற்போன தனது ஒட்டகத்தைத் தேடிக்கொண்டிருந்தார்.
அத்தியாயம் : 50
5365. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "யார் "ஸனிய்யத்துல் முரார்" அல்லது "ஸனிய்யத்துல் மரார்" கணவாயில் முதலில் ஏறுகிறாரோ..." என்று ஹதீஸ் ஆரம்பமாகி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில், "அப்போது கிராமவாசியொருவர் தமது காணாமற்போன ஒட்டகத்தைத் தேடிக்கொண்டு வந்தார்"என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 50
5366. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் பனுந் நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இருந்தார். அவர் (இஸ்லாத்தைத் தழுவி) "அல்பகரா", "ஆலு இம்ரான்" ஆகிய (குர்ஆன்) அத்தியாயங்களை ஓதி முடித்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக (வேதஅறிவிப்பை) எழுதுபவராக இருந்தார். பிறகு அவர் (தமது பழைய கிறித்தவ மதத்துக்கே) ஓடிப்போய்,வேதக்காரர்களுடன் சேர்ந்துகொண்டார். வேதக்காரர்கள் அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடினர். "இவர் முஹம்மதுக்காக (வேத அறிவிப்பை) எழுதிவந்தார்" என்று கூறி, அவரால் பெருமைப்பட்டுக் கொண்டனர்.
இதே நிலையில், (ஒரு நாள்) அவர்களுக்கு மத்தியில் வைத்து அவரது கழுத்தை அல்லாஹ் முறித்துவிட்டான். (அவர் இறந்து விட்டார்.) ஆகவே, அவருக்காகச் சவக்குழி தோண்டி அவரைப் புதைத்துவிட்டனர். காலை நேரமானபோது அவரைப் பூமி (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மீண்டும் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர்.
மறுநாள் காலையிலும் பூமி (குழிக்கு வெளியில்) அவரைத் தூக்கியெறிந்துவிட்டிருந்தது. பிறகு மறுபடியும் அவர்கள் அவருக்காகக் குழி தோண்டி அவரைப் புதைத்தனர். மறுநாள் காலையிலும் பூமி அவரை (குழிக்கு வெளியில்) தூக்கியெறிந்துவிட்டிருந்தது. ஆகவே, அவர்கள் அவரை (புதைக்காமல்) அப்படியே போட்டுவிட்டார்கள்.
அத்தியாயம் : 50
5367. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தை முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். மதீனாவுக்கு அருகில் அவர்கள் வந்தபோது, கடுமையான (சூறாவளிக்) காற்று வீசியது.அது பயணிகளை மண்ணுக்குள் புதைத்துவிடப் பார்த்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தக் காற்று ஒரு நயவஞ்சகனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். மதீனாவுக்குள் வந்தபோது, நயவஞ்சகர்களின் பெருந்தலைவன் ஒருவன் இறந்துவிட்டிருந்தான்.
அத்தியாயம் : 50