4999. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5000. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக் கொள்கிறேன். (ஆனாலும்,) அவர்கள் என்னிடம் அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சொன்னதைப் போன்று நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்துகொண்டேயிருப்பார்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 7 ஒருவருக்கொருவர் பொறாமை கொள்வது, கோபப்படுவது, பிணங்கிக்கொள்வது ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
5001. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) செயலன்று.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உறவை முறித்துக்கொள்ளாதீர்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களிடமிருந்து யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் மேற்கண்ட (கோபம், பொறாமை, பிணக்கு, உறவை முறித்தல் ஆகிய) நான்கு குணங்கள் குறித்தும் இடம்பெற்றுள்ளன.
அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் (மஅமர் (ரஹ்) அவர்களிடமிருந்து) அறிவிக்கும் அறிவிப்பில், "ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக் கொள்ளாதீர்கள்; பிணங்கிக்கொள்ளாதீர்கள்" என்று (மூன்று குணங்கள் மட்டுமே) இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 45
5002. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு செலுத்துவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளதைப் போன்று (சகோதரர்களாய் இருங்கள்)" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 8 மார்க்க ரீதியான எந்தக் காரணமுமின்றி (ஒருவரிடம்) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது தடை செய்யப்பட்டதாகும்.
5003. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்திக்கும் போது (இவரைவிட்டு) அவரும், (அவரை விட்டு) இவரும் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவ்விருவரில் சிறந்தவர் யாரெனில், யார் முகமனை (சலாமை) முதலில் தொடங்குகிறாரோ அவர்தான்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அனைத்து அறிவிப்புகளிலும் ("அவரும் இவரும் முகத்தைத் திருப்பிக்கொள்வர்" என்பதைக் குறிக்க) "ஃப யுஅரிளு ஹாதா வ யுஅரிளு ஹாதா" என்றே இடம்பெற்றுள்ளது. மாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் "ஃப யஸுத்து ஹாதா வ யஸுத்து ஹாதா" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5004. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளர் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5005. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று நாட்களுக்குப்பின் பேசாமலிருத்தல் கூடாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 9 (ஆதாரமின்றிப் பிறரைச்) சந்தேகிப்பது, துருவித்துருவி ஆராய்வது, போட்டி பொறாமை கொள்வது, (வாங்கும் எண்ணமின்றி) பொருளின் விலையை ஏற்றிக் கேட்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டவையாகும்.
5006. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது,பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள்; (அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5007. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒருவருக்கொருவர் மனஸ்தாபம் கொண்டு) பேசாமல் இருக்காதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (பிறரைப் பற்றித்) துருவித் துருவிக் கேட்காதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்யவேண்டாம். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5008. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (பிறர் அந்தரங்கம் பற்றித்) துருவித் துருவி ஆராயாதீர்கள்;துருவித்துருவிக் கேட்காதீர்கள். (பிறரை அதிகவிலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளை) ஏற்றிக் கேட்காதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "உறவை முறித்துக்கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளதைப் போன்று சகோதரர்களாய் இருங்கள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 45
5009. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (நீங்கள் வாழ பிறர் வீழவேண்டுமெனப்) போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 10 ஒரு முஸ்லிமுக்கு அநீதியிழைப்பது, துரோகம் செய்வது, அவரைக் கேவலப்படுத்துவது, அவரது உயிர், மானம்,பொருள் ஆகியவற்றைப் பறிப்பது ஆகியன தடை செய்யப்பட்டவையாகும்.
5010. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்யவேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ,அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5011. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகச் சற்று கூடுதல் குறைவுடன் இடம்பெற்றுள்ளது.
அதில், "அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தம் விரல்களால் தமது நெஞ்சை நோக்கி சைகை செய்தார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5012. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 11 ஒருவருக்கொருவர் பகைமை கொள்வதற்கும் பேசாமல் இருப்பதற்கும் வந்துள்ள தடை.
5013. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் திறக்கப்படுகின்றன. அப்போது அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.
அப்போது "இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்;இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்; இவ்விருவரும் சமாதானம் செய்துகொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்" என்று கூறப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துல் அஸீஸ் அத்தாரவர்தீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பேசிக்கொள்ளாத இருவரைத் தவிர” (இல்லல் முத்தஹாஜிரைனி) என்று இடம்பெற்றுள்ளது. குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அதே பொருள் கொண்ட மற்றொரு சொற்றொடரில் "இல்லல் முஹ்தஜி ரைனி” என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 45
5014. ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அன்றைய தினத்தில் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், தனக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொரு மனிதருக்கும் மன்னிப்பு அளிக்கின்றான்; தமக்கும் தம் சகோதரருக்குமிடையே பகைமை உள்ள ஒரு மனிதரைத் தவிர.
அப்போது இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள். இவ்விருவரும் சமாதானமாகிக்கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்" என்று கூறப்படுகிறது.
- மனிதர்களின் செயல்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்போது, "இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது;தமக்கும் தம் சகோதரருக்குமிடையில் பகைமையுள்ள அடியாரைத் தவிர. அப்போது, "இவ்விருவரும் (சமாதானத்தின்பால்) திரும்பும்வரை இவ்விருவரையும் விட்டுவையுங்கள். அல்லது தாமதப்படுத்துங்கள்" என்று கூறப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 12 அல்லாஹ்வுக்காக நேசிப்பதன் சிறப்பு.
5015. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில், "என்னைக் கண்ணியப்படுத்துவதற்காக ஒருவரையொருவர் நேசித்துக்கொண்டவர்கள் எங்கே? எனது நிழலைத் தவிர வேறு நிழலில்லாத இன்றைய தினத்தில் அவர்களுக்கு நான் எனது நிழலில் நிழலளிக்கிறேன்" என்று கூறுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5016. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?" என்று அந்த வானவர் கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்" என்று கூறினார்.
அதற்கு அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?" என்று கேட்டார்.அதற்கு அம்மனிதர், "இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்" என்று கூறினார்.
அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்" என்று சொன்னார்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 13 நோயாளிகளை நலம் விசாரிப்பதன் சிறப்பு.
5017. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோயாளியை நலம் விசாரித்துக்கொண்டிருப்பவர், திரும்பிவரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டிருக்கிறார்.
இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
5018. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றவர் திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக்கொண்டேயிருக்கிறார்.
இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45