பாடம்: 3 முதுமைப் பருவத்தில் பெற்றோர் இருவரையுமோ, அல்லது அவர்களில் ஒருவரையோ அடைந்தும் (அவர்களுக்கு நன்மை செய்து) சொர்க்கம் செல்லத் தவறியவரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்.
4987. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று கூறினார்கள். "யார் (மூக்கு), அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தம் பெற்றோரில் ஒருவரையோ அல்லது அவர்கள் இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவர்களுக்கு உடலாலும் பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவரின் (மூக்குத் தான்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 45
4988. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று சொன்னார்கள். "அல்லாஹ்வின் தூதரே! யார்?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், "தம் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது அவ்விருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்த பிறகும் (அவர்களுக்கு நன்மை செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவன்தான்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று மூன்று தடவை சொன்னார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 45
பாடம் : 4 தாய், தந்தை உள்ளிட்ட நெருங்கிய உறவினரின் நண்பர்களுடன் நல்லுறவு பாராட்டுவதன் சிறப்பு.
4989. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களை, கிராமவாசிகளில் ஒருவர் மக்கா செல்லும் சாலையில் சந்தித்தபோது,அவருக்கு அப்துல்லாஹ் முகமன் (சலாம்) கூறி, அவரைத் தாம் பயணம் செய்துவந்த கழுதையில் ஏற்றிக் கொண்டார்கள். மேலும், அவருக்குத் தமது தலைமீதிருந்த தலைப்பாகையை (கழற்றி)க் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் அவர்களிடம், "அல்லாஹ் உங்களைச் சீராக்கட்டும்! இவர்கள் கிராமவாசிகள். இவர்களுக்குச் சொற்ப அளவு கொடுத்தாலே திருப்தியடைந்து விடுவார்கள்" என்று கூறினோம்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "இவருடைய தந்தை (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் அன்புக்குரியவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" எனக் கூறினார்கள்.
அத்தியாயம் : 45
4990. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு மனிதர் தம் தந்தையின் அன்பர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
4991. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்காவுக்குப் பயணம் மேற்கொண்டால், அவர்களுடன் கழுதையொன்று இருக்கும். ஒட்டக வாகனத்தில் பயணம் செய்து களைத்து விட்டால், அக்கழுதைமீது ஓய்வெடுத்துக்கொள்வார்கள். மேலும், தலைப்பாகையொன்றும் அவர்களிடம் இருந்தது. அதை அவர்கள் தமது தலையில் கட்டிக்கொள்வார்கள். இந்நிலையில் ஒரு நாள் அவர்கள் அந்தக் கழுதையில் (பயணம் செய்துகொண்டு) இருந்தபோது, கிராமவாசி ஒருவர் அவர்களைக் கடந்துசென்றார்.
உடனே அவரிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இன்ன மனிதரின் புதல்வரான இன்ன மனிதரல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘ஆம்" என்றார். உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், தமது கழுதையை அக்கிராமவாசியிடம் கொடுத்து "இதில் ஏறிக்கொள்ளுங்கள்" என்றார்கள்; தலைப்பாகையைக் கொடுத்து, "இதைத் தலையில் கட்டிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய தோழர்களில் சிலர், "அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! தாங்கள் ஓய்வெடுப்பதற்காக (மாற்று வாகனமாகப்) பயன்படுத்திவந்த கழுதையை இந்தக் கிராமவாசிக்குக் கொடுத்துவிட்டீர்களே? (பயணத்தின்போது) தாங்கள் தலையில் கட்டிக்கொண்டிருந்த தலைப்பாகையையும் கொடுத்துவிட்டீர்களே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு மனிதர் தம் தந்தை மறைந்தபின் அவருடைய அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இந்தக் கிராமவாசியின் தந்தை (என் தந்தை) உமர் (ரலி) அவர்களின் நண்பராக இருந்தார்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம்: 5 நன்மை (அல்பிர்ரு), தீமை (அல்இஸ்மு) ஆகியவற்றின் விளக்கம்.
4992. நவ்வாஸ் பின் சம்ஆன் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை ("அல்பிர்ரு") மற்றும் தீமை ("அல்இஸ்மு") பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 45
4993. நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவில் ஓராண்டு காலம் தங்கியிருந்தேன். அவர்களிடம் கேள்வி கேட்டு விடை தெரிந்துகொள்வ(து இயலாமல் போய் விடுமோ என்ப)தே ஹிஜ்ரத் செய்(து மதீனாவில் வந்து குடியேறு)வதற்கு எனக்குத் தடையாக இருந்தது. எங்களில் ஒருவர் ஹிஜ்ரத் செய்து (மதீனாவுக்கு வந்து குடியேறி)விட்டால், அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எதைப் பற்றியும் கேள்வி கேட்காமலிருந்தார். (வெளியூர்காரர்கள் கேட்கட்டும். அதன் மூலம் நாம் அறிந்து கொள்வோம் என்று இருந்துவிடுவார்.) (இந்த வகையில்,)நான் அவர்களிடம் நன்மையைப் பற்றியும் தீமையைப் பற்றியும் கேட்டேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மை என்பது, நற்பண்பாகும். தீமை என்பது, எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதைப் பற்றி மக்கள் அறிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 6 உறவைப் பேணுவதும், உறவை முறிப்பது தடை செய்யப்பட்டதாகும் என்பதும்.
4994. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது "உறவு” எழுந்து, (இறைஅரியணையின் கால்களைப் பற்றிக்கொண்டு) "(மனிதர்கள் தம்) உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்" என்று கூறி (மன்றாடி)யது.
அல்லாஹ், "ஆம்; உன்னை (அதாவது உறவை)ப் பேணி நடந்துகொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்துவிடுபவனை நானும் துண்டித்துவிடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?" என்று கேட்டான். அதற்கு உறவு, "ஆம் (திருப்தியே) என் இறைவா!" என்று கூறியது. அல்லாஹ், "அது உனக்காக நடக்கும்" என்று சொன்னான் என்றார்கள்.
பிறகு, "நீங்கள் விரும்பினால் "நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?" (47:22-24) ஆகிய இறைவசனங்களை ஓதிக்கொள்ளுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
4995. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவன் படைப்பினங்களைப் படைத்து முடித்தபோது) உறவானது, இறை அரியணையைப் பிடித்துக்கொண்டு, "என்னோடு ஒட்டி வாழ்பவனுடன் இறைவனும் உறவாடுவான். என்னை முறித்துக்கொள்பவனை இறைவனும் முறித்துக்கொள்வான்" என்று கூறியது.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
4996. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முறித்து வாழ்பவன் -அதாவது உறவைத் துண்டித்து வாழ்பவன்- சொர்க்கத்தில் நுழைய மாட்டான். - இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
4997. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 45
4998. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதை, அல்லது வாழ்நாள் நீட்டிக்கப்படுவதை விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
4999. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5000. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக் கொள்கிறேன். (ஆனாலும்,) அவர்கள் என்னிடம் அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்" என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சொன்னதைப் போன்று நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்துகொண்டேயிருப்பார்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 7 ஒருவருக்கொருவர் பொறாமை கொள்வது, கோபப்படுவது, பிணங்கிக்கொள்வது ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
5001. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்ட (ஹலாலான) செயலன்று.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "உறவை முறித்துக்கொள்ளாதீர்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களிடமிருந்து யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் மேற்கண்ட (கோபம், பொறாமை, பிணக்கு, உறவை முறித்தல் ஆகிய) நான்கு குணங்கள் குறித்தும் இடம்பெற்றுள்ளன.
அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் (மஅமர் (ரஹ்) அவர்களிடமிருந்து) அறிவிக்கும் அறிவிப்பில், "ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக் கொள்ளாதீர்கள்; பிணங்கிக்கொள்ளாதீர்கள்" என்று (மூன்று குணங்கள் மட்டுமே) இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 45
5002. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள்; உறவை முறித்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு செலுத்துவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளதைப் போன்று (சகோதரர்களாய் இருங்கள்)" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
பாடம் : 8 மார்க்க ரீதியான எந்தக் காரணமுமின்றி (ஒருவரிடம்) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது தடை செய்யப்பட்டதாகும்.
5003. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்திக்கும் போது (இவரைவிட்டு) அவரும், (அவரை விட்டு) இவரும் முகத்தைத் திருப்பிக்கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவ்விருவரில் சிறந்தவர் யாரெனில், யார் முகமனை (சலாமை) முதலில் தொடங்குகிறாரோ அவர்தான்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அனைத்து அறிவிப்புகளிலும் ("அவரும் இவரும் முகத்தைத் திருப்பிக்கொள்வர்" என்பதைக் குறிக்க) "ஃப யுஅரிளு ஹாதா வ யுஅரிளு ஹாதா" என்றே இடம்பெற்றுள்ளது. மாலிக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மட்டும் "ஃப யஸுத்து ஹாதா வ யஸுத்து ஹாதா" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 45
5004. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளர் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்குமேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
5005. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று நாட்களுக்குப்பின் பேசாமலிருத்தல் கூடாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45
பாடம் : 9 (ஆதாரமின்றிப் பிறரைச்) சந்தேகிப்பது, துருவித்துருவி ஆராய்வது, போட்டி பொறாமை கொள்வது, (வாங்கும் எண்ணமின்றி) பொருளின் விலையை ஏற்றிக் கேட்பது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டவையாகும்.
5006. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஆதாரமில்லாமல் பிறரைச்) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது,பெரும் பொய்யாகும். (பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள்; (அவர்களின் அந்தரங்கம் பற்றி) ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள்; கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 45