பாடம் : 1 மாதவிடாயில் உள்ள மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது.
492. (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரான) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது கீழாடை கட்டிக்கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (ஆடை கட்டிக்கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்.
இதை அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
493. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் நிலையிலேயே கீழாடை கட்டிக்கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். பிறகு அணைத்துக்கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆசையைக் கட்டுப்படுத்திக்கொண்டதைப் போன்று உஙகளில் எவரால் தமது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்? (அவ்வாறிருந்தும் ஆடைக்கு மேல்தான் அணைத்தார்கள்.)
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
494. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள தம் துணைவியரை கீழாடைக்கு மேலாக அணைத்துக்கொள்வார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 2 மாதவிடாய் உள்ள மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுப்பது.
495. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுத்திருப்பார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் ஆடையே (தடையாக) இருக்கும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை குறைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
496. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் குஞ்சம் வைத்த ஒரு போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. உடனே நான் (போர்வைக்குள்ளிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று) மாதவிடாய் (கால)த் துணியை எடுத்து (அணிந்து)கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். (ஆயினும்) அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தப் போர்வைக்குள் படுத்துக்கொண்டேன். பெருந்துடக்குடன் இருந்த நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் நீராடுவோம்.
அத்தியாயம் : 3
பாடம் : 3 மாதவிடாய் உள்ள பெண் தன் கணவனின் தலையைக் கழுவிவிடுவதும் தலைவாரி விடுவதும் செல்லும்; அவளது உமிழ்நீர் தூய்மையானதுதான்; அவளது மடியில் தலை வைத்துப் படுக்கலாம்; அவ்வாறு படுத்துக்கொண்டு குர்ஆன் ஓதவும் செய்யலாம்.
497. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துகொண்டிருக்கும் போது (அருகிலிருக்கும் வீட்டிலிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன். இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவார்கள்.
அத்தியாயம் : 3
498. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும் போது) இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவேன். வீட்டில் யாரேனும் உடல் நலமில்லாமல் இருந்தால் போகிற போக்கில் அப்படியே (உடல்நலம்) விசாரித்துக் கொள்வேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஃதிகாஃபில் இருந்தால்) பள்ளிவாசலில் இருந்துகொண்டு தமது தலையை என் பக்கம் நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன். அவர்கள் இஃதிகாஃபில் இருக்கும்போது இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (மக்கள்) இஃதிகாஃபில் இருக்கும் போது... என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
499. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஃதிகாஃபில் இருக்கும்போது பள்ளிவாசலிலிருந்து தமது தலையை என் பக்கம் நீட்டுவார்கள். மாதவிடாய் எற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவிவிடுவேன்.
அத்தியாயம் : 3
500. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருக்கும்போது) அறையிலிருக்கும் என் பக்கம் தமது தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் எற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன்.
அத்தியாயம் : 3
501. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலையைக் கழுவிவிடுவதுண்டு.
அத்தியாயம் : 3
502. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது அவர்கள் மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
503. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது அவர்கள் அதை எடுத்துவா! மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
504. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்து கொண்டிருக்கும்போது (தம் துணைவியாரிடம்), ஆயிஷா! அந்தத் துணியை எடுத்துத் தா! என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மாதவிடாய் உனது கையிலில்லை என்று சொன்னார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 3
505. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அவர்கள் அருந்துவார்கள் எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 3
506. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டு குர்ஆன் ஒதுவார்கள்.
அத்தியாயம் : 3
507. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிடமாட்டார்கள்; வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, (நபியே!) அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே, மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்... என்று தொடங்கும் (2:222ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
இந்தச் செய்தி யூதர்களுக்கு எட்டியபோது, நம்முடைய காரியங்களில் எந்த ஒன்றுக்கும் மாறு செய்யாமல் விடக்கூடாது என்பதே இந்த மனிதரது விருப்பம் என்று கூறினர். எனவே உசைத் பின் ஹுளைர் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! யூதர்கள் இன்னின்னவாறு கூறுகின்றனர். எனவே, (மாதவிடாய் ஏற்பட்டுள்ள) பெண்களுடன் நாமும் ஒட்டி உறவாடாமல் இருந்தாலென்ன? என்று கேட்டனர்.
(இதைக் கேட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறமாறிவிட்டது. ஆகவே, (கேள்வி கேட்ட) அவர்கள் இருவர்மீதும் நபியவர்களுக்குக் கோபம் ஏற்பட்டுவிட்டதோ என்று நாங்கள் எண்ணினோம். அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றதும் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்பட்ட பால் அவ்விருவரையும் எதிர்கொண்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் பின்தொடர்ந்து ஆளனுப்பி அவர்களை அழைத்துவரச் சொன்னார்கள். (அவர்கள் வந்ததும்) அவர்கள் இருவருக்கும் (அந்தப் பாலை) பருகக் கொடுத்தார்கள். தங்கள் மீது நபியவர்களுக்குக் கோபமில்லை என்று அவர்கள் இருவரும் புரிந்துகொண்டனர்.
அத்தியாயம் : 3
பாடம் : 4 பாலுணர்வு கிளர்ச்சி நீர்.
508. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பாலுணர்வு கிளர்ச்சி நீர் (மதீ) அதிகமாக வெளிப்படும் ஆடவனாக இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டிருந்தேன். நபியவர்களின் புதல்வியார் (ஃபாத்திமா) என் துணைவியாராக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களிடம் (இது குறித்து நபியவர்களிடம் கேட்குமாறு) கூறினேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பிறவி உறுப்பைக் கழுவிக்கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ள வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை) என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
509. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் பாலுணர்வு கிளர்ச்சி நீர் (மதீ) பற்றிக் கேட்க வெட்கப்பட்டேன். (நபி (ஸல்) அவர்களின் புதல்வி) ஃபாத்திமா என் துணைவியாராக இருந்ததே இதற்குக் காரணம். எனவே, நான் மிக்தாத் (ரலி) அவர்களிடம் (இது பற்றிக் கேட்கச்) சொன்னேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், அதற்காக அங்கத் தூய்மை (உளூ) செய்தல் வேண்டும் (குளிக்க வேண்டியதில்லை) என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 3
510. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மனிதனிலிருந்து வெளியாகும் பாலுணர்வு கிளர்ச்சி நீர் குறித்து, அது கசிந்தால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்பதற்காக மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாம் அனுப்பிவைத்தோம். அ(வர் கேட்ட)தற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அங்கத் தூய்மை (உளூ) செய்துகொள்ளுங்கள்: பிறவி உறுப்பில் தண்ணீர் ஊற்றி(க் கழுவி)விடுங்கள் என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 5 உறங்கியெழுந்ததும் முகத்தையும் கைகளையும் அலம்பிக்கொள்வது.
511. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் என் சிறிய தாயாரும் நபியவர்களின் துணைவியாருமான மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் ஓரிரவு தங்கியிருந்தேன்.) நபி (ஸல்) அவர்கள் இரவில் விழித்தெழுந்து இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். பிறகு முகத்தையும் கைகளையும் அலம்பிவிட்டு வந்து பின்னர் (மீண்டும்) உறங்கினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 3