பாடம் : 32 விந்து பற்றிய சட்டம்.
485. அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
ஒரு மனிதர் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (விருந்தினராகத்) தங்கினார். அவர் காலையில் தமது ஆடையைக் கழுவினார். (இதைக் கண்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், அது உமது ஆடையில் தென்பட்டால் அந்த இடத்தைக் கழுவினால் போதும். அவ்வாறு அது தென்படாவிட்டால் அந்த இடத்தைச் சுற்றிலும் தண்ணீர் தெளித்துவிடுவீராக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில்பட்ட இந்திரியத்தை நன்கு சுரண்டிவிடுவேன். அந்த ஆடையை அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
486. அஸ்வத் (ரஹ்) மற்றும் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
இந்திரியம் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகையில், அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து சுரண்டிவிடுவேன் என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 2
487. மேற்கண்ட (485ஆவது) ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
488. அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்களிடம் ஒருவரது ஆடையில் இந்திரியம் பட்டு விட்டால் அ(து பட்ட இடத்)தை (மட்டும்) கழுவ வேண்டுமா? அல்லது அந்த ஆடையையே கழுவ வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஆடையில் பட்ட) இந்திரியத்தை (மட்டும்) கழுவிவிட்டு அதே ஆடையில் தொழுகைக்காகப் புறப்பட்டுச் செல்வார்கள். அந்த ஆடையில் கழுவியதற்குரிய அடையாளத்தை (ஈரத்தை) நான் காண்பேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஸாயிதா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இந்திரிய(ம் பட்ட இட)த்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுவுவார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
இப்னுல் முபாரக் (ரஹ்) மற்றும் அப்துல் வாஹித் பின் ஸியாத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையிலிருந்து அதை நான் கழுவுவேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
489. அப்துல்லாஹ் பின் ஷிஹாப் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஒரு நாள் விருந்தினராகத்) தங்கியிருந்தேன். இரு ஆடைகளில் (உறங்கிய) எனக்கு உறக்கத்தில் ஸ்கலிதம் ஏற்பட்டது. எனவே, அவ்விரு ஆடைகளையும் (கழுவுவதற்காகத்) தண்ணீரில் முக்கி வைத்தேன். இதை ஆயிஷா (ரலி) அவர்களின் பணிப்பெண் பார்த்துவிட்டு(ப் போய்) ஆயிஷாவிடம் தெரிவித்துவிட்டார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் என்னை வரச்சொல்லி ஆளனுப்பினார்கள். (நான் சென்றேன்.) அப்போது அவர்கள், உங்கள் ஆடைகளை இவ்வாறு நீங்கள் செய்யக் காரணமென்ன? என்று கேட்டார்கள். நான்,தூங்கக்கூடியவர் கனவில் எதைக் காண்பாரோ அதை நான் கண்டேன் என்று கூறினேன். அந்த ஆடைகளில் ஏதேனும் (இந்திரியம் பட்டிருக்கக்) கண்டீர்களா? என்று கேட்டார்கள். நான் இல்லை என்றேன். அப்படியே எதையேனும் நீங்கள் பார்த்திருந்தாலும்கூட அதைக் கழுவத்தான் வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில் பட்டுக் காய்ந்துவிட்டிருந்த இந்திரியத்தை நான் என் நகத்தால் சுரண்டித் தான்விடுவேன் (கழுவமாட்டேன்) என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 33 இரத்தம் அசுத்தமாகும் என்பது பற்றியும் அதைக் கழுவும் முறை பற்றியும்.
490. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டுவிட்டால் அவள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (அவ்வாறு பட்டுவிட்டால்) அவள் அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றித் தேய்த்துக் கழுவட்டும். பின்னர் அந்த ஆடையிலேயே தொழுதுகொள்ளலாம் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 34 சிறுநீர் அசுத்தமாகும்; அதைத் துப்புரவு செய்வது கட்டாயமாகும் என்பதற்கான சான்று.
491. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு அடக்கத்தலங்களைக் கடந்துசென்றார்கள். அப்போது அறிந்துகொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (சவக் குழிக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெரிய (பாவச்) செயலுக்காக இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவரோ (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும்போது (தமது உடலை) மறைக்கமாட்டார் என்று கூறினார்கள்.
பிறகு பச்சை பேரீச்சமட்டை ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (சவக் குழி)மீது ஒரு துண்டையும் இவர் (சவக் குழி)மீது மற்றொரு துண்டையும் ஊன்றிவைத்தார்கள். பிறகு இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் மற்றொருவரோ சிறுநீர் கழித்துவிட்டுத் துப்புரவு செய்யமாட்டார் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2

பாடம் : 1 மாதவிடாயில் உள்ள மனைவியைக் கீழாடைக்கு மேல் அணைத்துக் கொள்வது.
492. (நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரான) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது கீழாடை கட்டிக்கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (ஆடை கட்டிக்கொண்ட) பின்னர் அணைத்துக்கொள்வார்கள்.
இதை அஸ்வத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
493. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் நிலையிலேயே கீழாடை கட்டிக்கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். பிறகு அணைத்துக்கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆசையைக் கட்டுப்படுத்திக்கொண்டதைப் போன்று உஙகளில் எவரால் தமது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்? (அவ்வாறிருந்தும் ஆடைக்கு மேல்தான் அணைத்தார்கள்.)
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
494. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள தம் துணைவியரை கீழாடைக்கு மேலாக அணைத்துக்கொள்வார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 3
பாடம் : 2 மாதவிடாய் உள்ள மனைவியுடன் ஒரே போர்வைக்குள் படுப்பது.
495. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுத்திருப்பார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே ஓர் ஆடையே (தடையாக) இருக்கும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை குறைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
496. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் குஞ்சம் வைத்த ஒரு போர்வைக்குள் படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. உடனே நான் (போர்வைக்குள்ளிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று) மாதவிடாய் (கால)த் துணியை எடுத்து (அணிந்து)கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். (ஆயினும்) அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தப் போர்வைக்குள் படுத்துக்கொண்டேன். பெருந்துடக்குடன் இருந்த நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் நீராடுவோம்.
அத்தியாயம் : 3
பாடம் : 3 மாதவிடாய் உள்ள பெண் தன் கணவனின் தலையைக் கழுவிவிடுவதும் தலைவாரி விடுவதும் செல்லும்; அவளது உமிழ்நீர் தூய்மையானதுதான்; அவளது மடியில் தலை வைத்துப் படுக்கலாம்; அவ்வாறு படுத்துக்கொண்டு குர்ஆன் ஓதவும் செய்யலாம்.
497. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துகொண்டிருக்கும் போது (அருகிலிருக்கும் வீட்டிலிருந்த) என் பக்கம் தலையை நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன். இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவார்கள்.
அத்தியாயம் : 3
498. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும் போது) இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவேன். வீட்டில் யாரேனும் உடல் நலமில்லாமல் இருந்தால் போகிற போக்கில் அப்படியே (உடல்நலம்) விசாரித்துக் கொள்வேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஃதிகாஃபில் இருந்தால்) பள்ளிவாசலில் இருந்துகொண்டு தமது தலையை என் பக்கம் நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன். அவர்கள் இஃதிகாஃபில் இருக்கும்போது இயற்கைத் தேவைக்காக மட்டுமே வீட்டுக்குள் நுழைவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (மக்கள்) இஃதிகாஃபில் இருக்கும் போது... என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
499. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஃதிகாஃபில் இருக்கும்போது பள்ளிவாசலிலிருந்து தமது தலையை என் பக்கம் நீட்டுவார்கள். மாதவிடாய் எற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களது தலையைக் கழுவிவிடுவேன்.
அத்தியாயம் : 3
500. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருக்கும்போது) அறையிலிருக்கும் என் பக்கம் தமது தலையை நீட்டுவார்கள். மாதவிடாய் எற்பட்டுள்ள நிலையிலும் நான் அவர்களுக்குத் தலை வாரிவிடுவேன்.
அத்தியாயம் : 3
501. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலையைக் கழுவிவிடுவதுண்டு.
அத்தியாயம் : 3
502. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு, (அறையிலுள்ள) தொழுகை விரிப்பை எடு என்று என்னிடம் சொன்னார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது அவர்கள் மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
503. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃபில்) இருந்துகொண்டு (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அப்போது அவர்கள் அதை எடுத்துவா! மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக்கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
504. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்து கொண்டிருக்கும்போது (தம் துணைவியாரிடம்), ஆயிஷா! அந்தத் துணியை எடுத்துத் தா! என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மாதவிடாய் உனது கையிலில்லை என்று சொன்னார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 3