பாடம் : 22 காலுறைகள் (மோஸா)மீது ஈரக் கையால் தடவி (மஸ்ஹு செய்து)கொள்வது.
452. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (அப்போது கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். அவர்களிடம் (இது குறித்து), இவ்வாறு செய்யலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்,ஆம் (செய்யலாம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்வதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்கள் தம் (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள் என்று பதிலளித்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(காலுறைகள் மீது மஸ்ஹு செய்து தொழலாம் எனும்) இந்த ஹதீஸ் மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே அமைந்தது. ஏனெனில், ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் (குர்ஆனில்) 5:6 ஆவது வசனம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஈசா பின் யூனுஸ் (ரஹ்) மற்றும் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய தோழர்களுக்கு இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளித்து வந்தது. ஏனெனில், ஜரீர் (ரலி) அவர்கள் அல்மாயிதா எனும் (5ஆவது) அத்தியாயம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
453. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் (சென்றுகொண்டு) இருந்தேன். அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்குச் சென்று (அங்கு) நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களை விட்டும் சற்று ஒதுங்கிச்சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அருகில் வா! என்று கூறினார்கள். நான் அருகில் சென்று அவர்களுக்குப் பின்பக்கம் நின்று(அவர்களை மறைத்துக்)கொண்டேன். பிறகு நபியவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது தம் (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.
அத்தியாயம் : 2
454. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிக்கும்) விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார்கள். (மேனியில் சிறுநீர் தெறித்துவிடக் கூடாது என்பதற்காக) அவர்கள் கண்ணாடிக் குடுவையில் சிறுநீர் கழிப்பார்கள். மேலும், இஸ்ரவேலர்களில் ஒருவரது சருமத்தில் சிறுநீர் பட்டுவிட்டால் அந்த இடத்தைக் கத்தரிக்கோலால் கத்தரித்து விடக் கூடியவராக அவர் இருந்தார் என்று கூறுவார்கள்.
(இதை அறிந்த) ஹுதைஃபா பின் அல் யமான் (ரலி) அவர்கள், உங்கள் தோழர் (அபூ மூசா) இந்த அளவு கண்டிப்பானவராய் இருக்க வேண்டியதில்லை என்றே நான் விரும்புகிறேன். (ஒரு முறை) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த குப்பைக் குழிக்குச் சென்று உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று (சாதாரணமாக) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களைவிட்டும் சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது அவர்கள் என்னை நோக்கி (தம் அருகில் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்கள் தமது தேவையை முடித்துக் கொள்ளும்வரை அவர்களுக்குப் பின்பக்கம் நின்று (மறைத்துக்) கொண்டிருந்தேன்.
அத்தியாயம் : 2
455. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். உடனே நான் தண்ணீர் குவளையுடன் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்து (துப்புரவு செய்து),திரும்பியபோது அவர்களின் (கை கால்கள்)மீது நான் தண்ணீரை ஊற்ற, அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (தமது கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். மேலும், (ஈரக் கையால்) தமது தலையில் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு தம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
456. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் இரவில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அப்போது அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள். பிறகு (திரும்பி) வந்தார்கள். அப்போது நான் என்னிடமிருந்த குவளையிலிருந்து தண்ணீரை அவர்களின் (கை கால்கள்) மீது ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.
அத்தியாயம் : 2
457. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்) பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள், முஃகீரா! தண்ணீர் குவளையை எடுங்கள்! என்று கூறினார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்து (என் கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச்) சென்று என்னைவிட்டு மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றி விட்டு (திரும்பி) வந்தார்கள். அப்போது அவர்கள், கைப் பகுதி குறுகலான ஷாம் நாட்டு நீளங்கி அணிந்திருந்தார்கள். எனவே, தமது கையைச் சட்டைக் கைகளிலிருந்து வெளியே எடுக்கப்போனார்கள். ஆனால்,சட்டைக் கைகள் குறுகலாக இருக்கவே, தமது கையை அதன் கீழிருந்து வெளியே எடுத்தார்கள். நான் அவர்களின் (கை, கால்கள்)மீது தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)விட்டுப் பின்னர் தொழுதார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
458. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அவர்கள் திரும்பி வந்தபோது தண்ணீர் குவளையுடன் அவர்களைச் சந்தித்தேன். அவர்களின் (கை கால்கள்)மீது நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தம் (முன்) கைகளைக் கழுவிவிட்டுப் பிறகு முகத்தைக் கழுவினார்கள். பிறகு தம் முழங்கைகளைக் கழுவப்போனபோது அவர்கள் அணிந்திருந்த நீளங்கி குறுகலானதாக இருந்தது. எனவே, தம் கைகளை நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள். மேலும், (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்; தம் காலுறைகள் மீதும் (அவ்வாறே ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு எங்களுக்கு (இமாமாக நின்று) தொழுவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
459. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா? என்று கேட்டார்கள். நான், ஆம்! (இருக்கிறது) என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளையிலிருந்த நீரை அவர்கள்மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந்தார்கள். ஆதலால், அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. ஆகவே, முழங்கைகளை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அப்போது அவர்கள், அவற்றை விட்டுவிடுவீராக! ஏனெனில், நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன் என்று சொல்லி, (ஈரக் கையால்) அவற்றைத் தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள்.
அத்தியாயம் : 2
460. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். (ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள். அப்போது நான் (காலுறைகளைக் கழற்ற வேண்டுமல்லவா என்பது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன் என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 23 (ஈரக் கையால்) முன்தலையின் மீதும் தலைப்பாகையின் மீதும் தடவி (மஸ்ஹு செய்து) கொள்வது.
461. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னால் (தாமதமாக) வந்து கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் வந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (வாகனத்திலிருந்து இறங்கி) இயற்கைக் கடனை முடித்துக் கொண்டு வந்து, உம்மிடம் தண்ணீர் உள்ளதா? என்று கேட்டார்கள். நான் தண்ணீர் குவளையை அவர்களிடம் எடுத்துச்சென்றேன். அவர்கள் தம்முடைய முன் கைகளையும் முகத்தையும் கழுவினார்கள். பிறகு தமது முழங்கையை வெளியே எடுக்கப்போனபோது சட்டைக் கை குறுகலாக இருந்தது. எனவே, தமது கையை (அவர்கள் அணிந்திருந்த) நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்தார்கள். நீளங்கியைத் தோளில் போட்டுக்கொண்டார்கள். பிறகு தமது முழங்கை வரைக் கழுவினார்கள். பின்னர் (ஈரக் கையால்) தமது முன்தலையின் மீதும் தலைப்பாகை மீதும் காலுறைகள்மீதும் தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள். பிறகு வாகனத்தில் ஏறினார்கள். நானும் ஏறிக்கொண்டேன். நாங்கள் (எங்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த) மக்களிடம் வந்துசேர்ந்தோம். அவர்கள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (இமாமாக இருந்து) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு ரக்அத் தொழுது முடித்திருந்தார்கள். (இதற்கிடையே) நபி (ஸல்) அவர்கள் வந்துவிட்டதை உணர்ந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் பின்வாங்கப் பார்த்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அங்கேயே நின்று தொழுமாறு) சைகை செய்தார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (எஞ்சிய ரக்அத்தையும்) மக்களுக்குத் தொழுவித்தார்கள். அவர் (தொழுகையின் இறுதியில்) சலாம் கொடுத்ததும் நபி (ஸல்) அவர்களும் நானும் எழுந்து எங்களுக்கு விடுபட்டுப்போயிருந்த ஒரு ரக்அத்தைத் தொழுதோம்.
அத்தியாயம் : 2
462. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ஈரக் கையால்) தம் காலுறைகள், முன்தலை மற்றும் தலைப்பாகை ஆகியவற்றின் மீது தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
463. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தபோது (ஈரக் கையால்) தமது முன் தலையின் மீதும் தலைப்பாகைமீதும் காலுறைகள் மீதும் தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான பக்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸை நான் முஃகீரா (ரலி) அவர்களுடைய புதல்வர் உர்வா (ரஹ்) அவர்களிடம் செவியேற்றேன்.
அத்தியாயம் : 2
464. பிலால் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஈரக் கையால்) தம்முடைய காலுறைகள் மற்றும் தலைப்பாகையின் மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (மேற்கண்டவாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன் என்று பிலால் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 24 காலுறைகள்மீது மஸ்ஹு செய்வதற்கான காலவரம்பு.
465. ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள்மீது மஸ்ஹு செய்வது குறித்துக் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள், நீங்கள் அலீ பின் அபீதாலிப் அவர்களை அணுகிக் கேளுங்கள். அவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராய் இருந்தார்கள் என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) அவர்களிடம் (சென்று) அதைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள், பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும்,உள்ளூரிலிருப்பவருக்கு ஒரு பகல் ஓர் இரவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள், தமக்கு இந்த ஹதீஸை அறிவித்த அம்ர் பின் கைஸ் (ரஹ்) அவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அன்னாரைப் பாராட்டுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஷுரைஹ் பின் ஹானீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு காணப்படுகிறது:
ஷுரைஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: காலுறைகள்மீது மஸ்ஹு செய்வதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அவர்கள், அலீ அவர்களிடம் செல்லுங்கள். ஏனெனில், என்னைவிட அவர்தாம் இதுகுறித்து நன்கறிந்தவர் என்று கூறினார்கள். ஆகவே, நான் அலீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது மேற்கண்டவாறு அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 25 ஒரே உளூவினால் பல (நேரத்) தொழுகைகளைத் தொழலாம்.
466. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தன்று ஒரு முறை செய்த உளூவினால் பல நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது (கால்களைக் கழுவாமல் ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், முன்னெப்போதும் செய்யாத ஒன்றை இன்றைக்குத் தாங்கள் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், செய்ய வேண்டுமென்றுதான் செய்தேன், உமரே! என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 26 அங்கத் தூய்மை (உளூ) செய்பவரும் மற்றவர்களும் தமது கை அசுத்தம் அடைந்திருக்குமோ என்று சந்தேகப்படும் போது, மும்முறை கையைக் கழுவாமல் பாத்திரத்திற்குள் நுழைப்பது விரும்பத்தக்க செயலன்று.
467. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தமது கையை மூன்று முறை கழுவாமல் பாத்திரத்திற்குள் இட வேண்டாம். ஏனெனில், இரவில் அவரது கை எங்கே இருந்தது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று (வெளிப்படை யாகவு)ம், வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஹதீஸை மர்ஃபூஉ (நபியவர்கள் கூறியது) எனக் குறிப்பிட்டார்கள் என்றும் காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாகவே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
468. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கியெழுந்ததும் பாத்திரத்திற்குள் கையை இடுவதற்கு முன் மூன்று முறை தண்ணீர் ஊற்றிக் கையைக் கழுவிக்கொள்ளட்டும். ஏனெனில், இரவில் அவரது கை எதில் கிடந்தது என்பதை அவர் அறியமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே வேறு ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அந்த அனைத்து அறிவிப்புகளிலும் கைகளைக் கழுவுவதற்கு முன் (பாத்திரத்தினுள் இட வேண்டாம்) என்றே (பொதுவாக) வந்துள்ளது.
ஜாபிர் (ரலி), சயீத் பின் முஸய்யப் (ரஹ்), அபூசலமா (ரஹ்), அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்), அபூசாலிஹ் (ரஹ்),அபூரஸீன் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புக்களில்தான் மூன்று முறை கைகளைக் கழுவுவதற்கு முன் (பாத்திரத்தினுள் இடவேண்டாம்) எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 27 (பாத்திரத்தில்) நாய் வாய்வைப்பது தொடர்பான சட்டம்.
469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் வாய் வைத்துவிட்டால் அவர் அதைக் கொட்டி விட்டு ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவிக்கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அதை அவர் கொட்டிவிடட்டும் எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 2
470. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது பாத்திரத்தில் நாய் (வாய்வைத்துக்) குடித்துவிடுமானால் அந்தப் பாத்திரத்தை அவர் ஏழு முறை கழுவிக்கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
471. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாய் வாய்வைத்துவிட்ட உங்களது பாத்திரத்தைச் சுத்தம் செய்யும் முறை யாதெனில், அதை ஏழு தடவை தண்ணீரால் கழுவுவதாகும். முதல் தடவை மண்ணிட்டுக் கழுவ வேண்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2