4439. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (நாவிதர் ஒருவர் மூலம்) குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். நாவிதருக்கு அதற்குரிய கூலியைக் கொடுத்தார்கள். மேலும், மூக்கில் சொட்டு மருந்து இட்டுக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 39
4440. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். எவரது கூலியிலும் அவர்கள் அநீதி இழைத்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4441. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணித்துக்கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கடுமையான காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணித்துக்கொள்ளுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4442. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் அணைத்து விடுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் அணைத்து விடுங்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4445. ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடம் காய்ச்சல் ஏற்பட்ட பெண் கொண்டுவரப்பட்டால், தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, அவளது சட்டையின் கழுத்துப் பகுதியில் ஊற்றி விடுவார்கள். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "காய்ச்சலைத் தண்ணீரால் தணியுங்கள். (ஏனெனில்) காய்ச்சல் நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது" என்று கூறினார்கள்" என்றும் சொல்வார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தண்ணீரை எடுத்து அவளது ஆடையின் உட்பகுதியில் ஊற்றினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "காய்ச்சல், நரகத்தின் கடும் வெப்பத்தால் உண்டாகிறது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
4446. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல், நரகத்தின் கடுமையான கொதிப்பால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணித்துக்கொள்ளுங்கள்.
இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4447. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காய்ச்சல் நரகத்தின் கடுமையான கொதிப்பால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் உங்களைவிட்டுத் தணித்துக் கொள்ளுங்கள்.
இதை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களைவிட்டு" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
பாடம் : 27 (நோயாளியை வற்புறுத்தி, அல்லது அவர் மயக்கத்திலிருக்கும்போது) வாய் ஓரத்தில் மருந்தூற்றி சிகிச்சையளிப்பது வெறுக்கத் தக்கதாகும்.
4448. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோயுற்று (அரை மயக்கத்தில்) இருந்தபோது, அவர்களது வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். உடனே அவர்கள் "மருந்து ஊற்ற வேண்டாம்" என்று எங்களுக்குச் சைகை செய்தார்கள். "நோயாளி மருந்தை வெறுப்பது போன்று தான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் வெறுக்கிறார்கள்; ஊற்ற வேண்டாமெனத் தடை செய்யவில்லை)" என்று நாங்கள் சொல்லிக்கொண்டோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது, "ஒருவரும் விடுபடாமல் (வீட்டிலுள்ள) அனைவரது வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும்; அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், (என் வாயில் மருந்து ஊற்றும்போது) உங்களுடன் அவர் இருக்கவில்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 28 இந்தியக் குச்சியால் சிகிச்சையளிப்பது; அதுவே கோஷ்டக் குச்சி (அல்லது அகில்) ஆகும்.
4449. உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் சகோதரி உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (பாலைத் தவிர வேறு திட) உணவு சாப்பிடாத என்னுடைய ஆண் குழந்தையுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் குழந்தையைத் தமது மடியில் உட்காரவைத்தார்கள்.) அப்போது குழந்தை அவர்கள்மீது சிறுநீர் கழித்துவிட்டது. உடனே அவர்கள் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர் பட்ட) அந்த இடத்தில் தெளித்தார்கள்.
உம்முகைஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னுடைய ஆண் குழந்தையுடன் சென்றேன். அப்போது (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன்.
(இதைக் கண்ணுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தச் சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடிநாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியைப் பயன்படுத்துங்கள். அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியாகும். அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஓரத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
4450. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் கட்ட ஹிஜ்ரத் மேற்கொண்டவர்களில் ஒருவரும் பனூ அசத் பின் குஸைமா குலத்தாரில் ஒருவரும் உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் சகோதரியுமான உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:
நான் (பாலைத் தவிர வேறு திட) உணவு சாப்பிடும் பருவத்தை அடையாத என்னுடைய ஆண் குழந்தையுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டிருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந்தேன்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: குழந்தைக்கு அடிநாக்கு அழற்சி ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சி தொண்டையில் திரியை அழுத்திவைத்திருந்தார்).
(இதைக் கண்ணுற்ற) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தச் சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்தியக் குச்சியை (அதாவது கோஷ்டக் குச்சியை)ப் பயன்படுத்துங்கள். அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வலியும் ஒன்றாகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
உம்மு கைஸ் (ரலி) அவர்கள், "அந்த ஆண் குழந்தைதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் சிறுநீர் கழித்தது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, அந்தச் சிறுநீர் மீது தெளித்துவிட்டார்கள். நன்கு (தண்ணீர் ஊற்றிக்) கழுவவில்லை" என்றும் என்னிடம் தெரிவித்தார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 29 கருஞ்சீரகத்தால் சிகிச்சையளிப்பது.
4451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கருஞ்சீரகத்தில் "சாமை"த் தவிர, அதாவது மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் பின் உயைனா, யூனுஸ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் கருஞ்சீரகத்துக்கு (பாரசீக மொழியில் அளிக்கப்பட்டுள்ள) "ஷூனீஸ்" எனும் விளக்கம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 39
4452. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த நோயானாலும் அதற்குக் கருஞ்சீரகத்தில் நிவாரணம் இருந்தே தீரும்; மரணத்தைத் தவிர! - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 39
பாடம் : 30 "தல்பீனா" (எனும் பால் பாயசம்) நோயாளியின் மனதுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாகும்.
4453. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களுடைய குடும்பத்தாரில் யாரேனும் இறந்துவிட்டால்,அதற்காகப் பெண்கள் ஒன்றுகூடுவர். பிறகு ஆயிஷா (ரலி) அவர்களின் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்களும் தவிர மற்றப் பெண்கள் அனைவரும் கலைந்து சென்றுவிடுவார்கள்.
அப்போது ஒரு பாத்திரத்தில் "தல்பீனா" (எனும் பால் பாயசம்) தாயரிக்கும்படி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவார்கள். அவ்வாறே அது தயாரிக்கப்படும். பிறகு "ஸரீத்" எனும் (ரொட்டித் துண்டுகளைக் கறிக்குழம்பில் இட்டுத் தயாரிக்கப்படும் "தக்கடி" எனும்) உணவு தயாரிக்கப்படும். அதில் "தல்பீனா" ஊற்றப்படும்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "இதைச் சாப்பிடுங்கள்; ஏனெனில், தல்பீனா (எனும் பாயசம்) நோயாளியின் மனதுக்கு ஆறுதல் அளிக்கும்; கவலைகளில் சிலவற்றைப் போக்கும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்" என்று சொல்வார்கள்.
அத்தியாயம் : 39
பாடம் : 31 தேனூட்டி சிகிச்சையளிப்பது.
4454. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "என் சகோதரருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருக்கிறது" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "அவருக்குத் தேன் ஊட்டுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே அவர் தேனூட்டிவிட்டுப் பிறகு (மீண்டும்) வந்து, "அவருக்கு நான் தேனூட்டினேன். ஆனால், வயிற்றுப்போக்கு அதிகரிக்கவே செய்தது" என்று சொன்னார். இவ்வாறே (தேனூட்டுமாறு) மூன்று தடவை அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான்காவது தடவை அவர் வந்தபோது "அவருக்குத் தேன் ஊட்டுங்கள்" என்று கூறினார்கள். அப்போதும் அவர், "அவருக்கு நான் தேனூட்டவே செய்தேன்; வயிற்றுப்போக்கு அதிகரிக்கவே செய்தது" என்றார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது. (அவருக்குத் தேன் ஊட்டுங்கள்)"என்று சொன்னார்கள். அம்மனிதர் மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "என் சகோதரரின் இரைப்பை கெட்டுவிட்டது" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தேன் ஊட்டுங்கள்" என்று கூறினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 39
பாடம் : 32 கொள்ளைநோய், பறவை சகுனம், சோதிடம் போன்றவை.
4455. ஆமிர் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கொள்ளைநோயைப் பற்றி நீங்கள் என்ன செவியுற்றுள்ளீர்கள்?" என்று கேட்டார்கள்.
அதற்கு உசாமா (ரலி) அவர்கள், "கொள்ளைநோய் என்பது "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தி(ல் ஒரு பிரிவினரி)ன் மீது"அல்லது "உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது" (அவர்களின் குற்றங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு (வகை) "தண்டனை" அல்லது "வேதனை" ஆகும். அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற பகுதியில் வந்துவிட்டால் அதிலிருந்து தப்புவதற்காக அங்கிருந்து வெளியேறிச் செல்லாதீர்கள்" என்று சொன்னார்கள்" எனப் பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுந்நள்ர் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:
அதிலிருந்து தப்பியோடும் நோக்கத்துடன் மட்டுமே நீங்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது. (வேறு ஏதாவது காரணத்திற்காக அங்கிருந்து நீங்கள் வெளியேறினால் அதற்குத் தடையில்லை.)
அத்தியாயம் : 39
4456. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கொள்ளைநோய் என்பது தண்டனையின் அடையாளமாகும். அதன் மூலம் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தன் அடியார்களில் (தான் நாடிய) சிலரைச் சோதிக்கின்றான். அது (ஓர் ஊரில் இருப்பது) குறித்து நீங்கள் கேள்விப்பட்டால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற பகுதியில் அது ஏற்பட்டுவிட்டால், அங்கிருந்து வெருண்டோடாதீர்கள்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இது அப்துல்லாஹ் பின் மஸ்லமா பின் கஅனப் (ரஹ்), குதைபா (ரஹ்) உள்ளிட்டோரின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள வாசகமாகும்.
அத்தியாயம் : 39
4457. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்தக் கொள்ளைநோய் "உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது" அல்லது "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தி(ல் ஒரு பிரிவினரி)ன் மீது" சாட்டப்பட்ட தண்டனையாகும். (நீங்கள் வசிக்கும்) ஓர் ஊரில் அது ஏற்பட்டிருந்தால், அதிலிருந்து தப்பிப்பதற்காக அங்கிருந்து வெளியேறாதீர்கள். ஓர் ஊரில் அது ஏற்பட்டிருந்தால் அங்கு நீங்கள் செல்லாதீர்கள்.
இதை உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 39
4458. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் கொள்ளைநோய் பற்றிக் கேட்டார்.
அப்போது (அங்கிருந்த) உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அதைப் பற்றி உமக்கு நான் தெரிவிக்கிறேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் ஒரு கூட்டத்தார்மீது" அல்லது "உங்களுக்கு முன்னர் இருந்த சிலர்மீது" அல்லாஹ் அனுப்பிய "வேதனை"அல்லது "தண்டனை" ஆகும். அது ஓர் ஊரில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அங்கு நீங்கள் செல்லாதீர்கள். அது உங்களிடம் (உங்கள் ஊருக்குள்) வந்துவிட்டால் (அதிலிருந்து) தப்பிப்பதற்காக அங்கிருந்து வெளியேறாதீர்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 39