4289. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திண்ணமாக மறுமை நாளில் (இறைவனிடம்) மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூசயீத் அல்அஷஜ்ஜு (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "திண்ணமாக" எனும் சொல் இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) மற்றும் அபூகுறைப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் நரகவாசிகளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோரில் அடங்குவர்" என இடம்பெற்றுள்ளது. சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது.- முஸ்லிம் பின் ஸுபைஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒருமுறை) மஸ்ரூக் (ரஹ்) அவர்களுடன் ஓர் இல்லத்தில் இருந்தேன். அங்கு மர்யம் (அலை) அவர்களின் உருவச்சிலைகள் இருந்தன. அப்போது மஸ்ரூக் (ரஹ்) அவர்கள், "இவை (ரோமப் பேரரசர்) சீசரின் உருவச்சிலைகள்" என்றார்கள். "நான் இல்லை, இவை மர்யம் (அலை) அவர்களின் உருவச்சிலைகள்" என்றேன்.
அப்போது மஸ்ரூக் (ரஹ்) அவர்கள், "கவனி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போரே" என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 37
4290. சயீத் பின் அபில்ஹசன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் இந்த உருவங்களை வரை(யும் தொழில் செய்துவரு)கிறேன். இதைப் பற்றி எனக்கு மார்க்கத் தீர்ப்பு அளியுங்கள்" என்று கேட்டார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எனக்கு அருகில் வா" என்றார்கள். அவர் அருகில் வந்தார்.
பிறகு (மீண்டும்) "இன்னும் அருகில் வா" என்றார்கள். அவர் இன்னும் அருகில் வந்தபோது, அவரது தலைமீது கையை வைத்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியை உமக்குச் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உருவங்களைப் படைக்கும் ஒவ்வொருவரும் நரகத்திற்கே செல்வர். அவர் படைத்த ஒவ்வோர் உருவத்திற்கும் அல்லாஹ் உயிர் கொடுப்பான். அதுவே அவரை நரகத்தில் வேதனை செய்யும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
மேலும் "நீர் வரைந்துதான் ஆக வேண்டும் என்றால் மரங்கள், உயிரற்ற (இயற்கைக் காட்சிகள் உள்ளிட்ட)வற்றின் படங்களை வரைந்துகொள்" என்று கூறினார்கள்.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
நான் (இந்த அறிவிப்பாளர்தொடரில் கிடைத்த இந்த ஹதீஸை) நஸ்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள் (முன்னிலையில் வாசித்துக் காட்டியபோது அவர்கள்) அதை (உண்மையான ஹதீஸ் என) ஏற்றுக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 37
4291. நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (மக்களுக்கு) மார்க்கத் தீர்ப்புகள் வழங்கலானார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (எதைப் பற்றியும்) குறிப்பிட வில்லை. இந்நிலையில் இறுதியாக ஒரு மனிதர் வந்து, அவர்களிடம், "நான் இந்த உருவங்களைப் படைக்கும் (தொழில் புரிகின்ற) ஒரு மனிதன் ஆவேன்" என்று கூறி (அது குறித்துத் தீர்ப்புக் கோரி)னார்.
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அருகில் வா" என்று கூற, அந்த மனிதர் அருகில் வந்ததும் "உலகில் ஓர் உருவப்படத்தை வரைந்தவர், மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால்,அவரால் ஊதமுடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" எனக் கூறினார்கள்.
- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள மேற்கண்ட ஹதீஸ் நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் வாயிலாகவே வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4292. அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகமின் வீட்டுக்குச் சென்றேன். அங்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் உருவப்படங்கள் சிலவற்றைக் கண்டார்கள்.
அப்போது "எனது படைப்பைப் போன்று படைக்கத் தயாராகிவிட்டவனை விட அக்கிர மக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவ்வாறாயின் அவர்கள் ஓர் உயிரணுவைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது ஒரு தானிய வித்தைப் படைத்துக் காட்டட்டும்! அல்லது கோதுமை வித்தைப் படைத்துக் காட்டட்டும் என்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறினான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த மர்வான் அல்லது சயீத் பின் அல்ஆஸுக்கு உரிய புது மனையொன்றுக்கு நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் சென்றோம். அந்த மனையில் ஓவியர் ஒருவர் உருவப்படங்களை வரைந்துகொண்டிருந்தார்.
அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் மேற்கண்ட நபிமொழியை அறிவித்தார்கள். அதில் "அல்லது கோதுமை வித்தைப் படைத்துக் காட்டட்டும்!" எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
4293. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உருவச் சிலைகளோ உருவப்படங்களோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 27 பயணத்தில் நாயும் (ஒலியெழுப்பும்) மணியும் வெறுக்கத்தக்கவை ஆகும்.
4294. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயும் மணியோசையும் உள்ள பயணிகளுடன் (அருள்) வானவர்கள் வரமாட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4295. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின் இசைக் கருவியாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 28 ஒட்டகத்தின் கழுத்தில் (திருஷ்டிக்காக) கயிற்று மாலை அணிவிப்பது வெறுக்கத் தக்கதாகும்.
4296. அபூபஷீர் கைஸ் பின் உபைத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட பயணமொன்றில் அவர்களுடன் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவிப்பாளர் ஒருவரை அனுப்பி, "எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (கண்ணேறு கழிவதற்காகக் கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது வேறெந்த மாலையோ இருக்கக்கூடாது. இருந்தால் அவை துண்டிக்கப்பட வேண்டும்" என்று அறிவிக்கச் செய்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள், "அப்போது நபித்தோழர்கள் இரவில் ஓய்வெடுக்கும் இடங்களில் இருந்தார்கள்" என்று அபூபஷீர் (ரலி) அவர்கள் (கூறியதாக அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்கள் என்னிடம்) சொன்னதாகவே நான் கருதுகிறேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
கண் திருஷ்டிக்காக இவ்வாறு கட்டப்படுவதையே (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என) நான் கருதுகிறேன்.
அத்தியாயம் : 37
பாடம் : 29 உயிரினங்களின் முகத்தில் அடிப்பதும் முகத்தில் அடையாளச் சூடிடுவதும் தடை செய்யப்பட்டவை ஆகும்.
4297. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முகத்தில் அடிக்கவேண்டாம் என்றும், முகத்தில் அடையாளச் சூடிட வேண்டாம் என்றும் தடை செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4298. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களை, முகத்தில் அடையாளச் சூடிடப்பட்ட கழுதையொன்று கடந்து சென்றது. அப்போது அவர்கள், "இதற்கு அடையாளச் சூடிட்டவனை அல்லாஹ் சபிப்பானாக!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 37
4299. உம்மு சலமா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அபூஅப்தில்லாஹ் நாஇம் பின் உஜைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முகத்தில் சூடு போட்டு அடையாளமிடப்பட்டிருந்த கழுதையொன்றைக் கண்டு அதைக் கண்டித்தார்கள்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
மேலும், (அவர்களின் தந்தை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் - ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் முகத்திலிருந்து தள்ளியுள்ள (உடம்பின்) ஒரு பகுதியிலேயே நான் அடையாளமிடுவேன்" என்று கூறிவிட்டு, தமது கழுதைக்கு அதன் பின்கால் சப்பையின் ஓர் ஓரத்தில் அடையாளமிடுமாறு கட்டளையிட்டார்கள். அவர்கள்தாம் பின்கால் சப்பையின் ஓரத்தில் சூடு போட்டு அடையாளமிட்ட முதல் ஆள் ஆவார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 30 மனிதனல்லா பிற உயிரினங்களில் முகமல்லா மற்ற உறுப்புகளில் சூடிட்டு அடையாளமிடலாம் என்பதும், ஸகாத் மற்றும் ஜிஸ்யா கால்நடைகளில் அவ்வாறு செய்யுமாறு வந்துள்ள தூண்டலும்.
4300. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது என்னிடம் அவர்கள், "அனஸே! இந்தக் குழந்தையை நன்கு கவனித்துக்கொள். நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சம் பழத்தை) மென்று இவன் வாயிலிடுவதற்காக இவனை அவர்களிடம் நீ எடுத்துச் செல்லாத வரை இவன் எதையும் உட்கொண்டுவிட வேண்டாம்" என்று சொன்னார்கள்.
அவ்வாறே, நான் அவனை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்தில் "ஹுவைத்" (அல்லது ஜவ்ன்) குலத் தயாரிப்பான கோடு போட்ட கம்பளியாடை அணிந்து, மக்கா வெற்றியின்போது தம்மிடம் வந்த வாகன ஒட்டகத்துக்குச் சூடிட்டு அடையாளமிட்டுக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 37
4301. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது, நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சம் பழத்தை) மென்று அச்சிறுவனின் வாயிலிடுவதற்காக நபியவர்களிடம் அவனை (எங்கள் குடும்பத்தார்) கொண்டுசென்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தொழுவமொன்றில் ஓர் ஆட்டிற்குச் சூடிட்டு அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இதை எனக்கு அறிவித்த) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் "அதன் காதுகளில் (அடையாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்)" என்று கூறியதாகவே நான் பெரும்பாலும் கருதுகிறேன்.
அத்தியாயம் : 37
4302. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தொழுவமொன்றில் ஓர் ஆட்டிற்குச் சூடிட்டு அடையாளமிட்டுக்கொண்டிருந்தபோது நாங்கள் அவர்களிடம் சென்றோம்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அதன் காதுகளில் (அடையாளமிட்டுக்கொண்டிருந்தார்கள்)" என்று ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாகவே நான் கருதுகிறேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4303. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கரத்தில் சூடிடும் கருவி இருந்தது. (அதன் மூலம்) அவர்கள் "ஸதக்கா" (ஸகாத்) ஒட்டகங்களுக்கு அடையாளமிட்டுக்கொண்டிருந்ததை நான் கண்டேன்.
அத்தியாயம் : 37
பாடம் : 31 குழந்தையின் தலை முடியில் சிறிதளவு மழித்துவிட்டு, சிறிதளவு மழிக்காமல் விட்டுவிடுவது (குடுமி வைப்பது) வெறுக்கத்தக்கதாகும்.
4304. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "கஸஉ" வைத்துக் கொள்ளக் கூடாதெனத் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான உமர் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (என் தந்தை) நாஃபிஉ (ரஹ்) அவர்களிடம் "கஸஉ என்றால் என்ன?" என்று கேட்டேள். "சிறுவனின் தலைமுடியில் சில பகுதியை மழித்துவிட்டு, வேறுசில பகுதிகளை மழிக்காமல் விட்டுவிடுவதாகும்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "கஸஉ" பற்றி அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் உமர் பின் ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் விளக்கம் அளித்ததாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இவ்விரு அறிவிப்புகளிலும் (கஸஉ தொடர்பான) விளக்கக் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 32 சாலைகளில் அமர்வதற்கு வந்துள்ள தடையும் (அவ்வாறு அமர்ந்தால்) சாலைக்குரிய உரிமைகளைப் பேணுவதும்.
4305. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்து விடுங்கள்" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்து தான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக் கொள்கிறோம்" என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அங்கு) நீங்கள் அமர்ந்துதான் ஆக வேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்" என்று கூறினார்கள்.
மக்கள், "சாலையின் உரிமை என்ன?" என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும்,முகமனுக்கு (சலாம்) பதிலுரைப்பதும், நன்மை புரியும் படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமை) ஆகும்" என்று பதிலளித்தார்கள்.-
மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 33 பெண்கள் ஒட்டுமுடி வைத்துவிடுவது, வைத்துக்கொள்வது; பச்சை குத்திவிடுவது, குத்திக்கொள்வது; (அழகிற்காக) முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்கிவிடுவது, நீக்கிக்கொள்வது; (அழகிற்காக) பல் வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்வது, (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பு முறையை மாற்றுவது தடை செய்யப்பட்டதாகும்.
4306. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் மகள் (தாம்பத்திய உறவுக்குச் செல்லவிருக்கும்) மணப்பெண்ணாக இருக்கிறாள். அவளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத்தால் அவளது தலைமுடி கொட்டிவிட்டது. அவளது தலையில் நான் ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா?" என்று கேட்டார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான் (தன் கருணையிலிருந்து அப்புறப் படுத்துகின்றான்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், வகீஉ மற்றும் ஷுஅபா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் ("அதனால் அவளது தலைமுடி கொட்டிவிட்டது" என்பதைக் குறிக்க "ஃப தமர்ரக ஷஅருஹா" என்பதற்குப் பகரமாக) "ஃப தமர்ரத்த ஷஅருஹா" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4307. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் என் மகளுக்கு மணமுடித்து வைத்தேன். பிறகு (அவளுக்கு ஏற்பட்ட நோயால்) அவளது தலைமுடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ அவளை அழகுபடுத்தி (அனுப்பி)விடுமாறு கூறுகிறார். ஆகவே, அவளுக்கு ஒட்டுமுடி வைத்துவிடட்டுமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேண்டாமென அவளைத் தடுத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 37
4308. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு பெண் மணமுடித்தார். பின்னர் அவர் உடல் நலிவுற்றுவிடவே அவரது தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே, (அவருடைய குடும்பத்தார்) அவருக்கு ஒட்டுமுடி வைத்துவிட விரும்பினர். எனவே, இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் சபித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37