பாடம் : 15 அபிசீனியக் குமிழ் உள்ள வெள்ளி மோதிரம்.
4252. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வெள்ளி மோதிரம் அபிசீனியக் குமிழ் (அல்லது கறுப்புக் கல்) உள்ளதாக இருந்தது.
அத்தியாயம் : 37
4253. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக்கரத்தில் வெள்ளி மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். அதன் குமிழ் அபிசீனியாவைச் சேர்ந்ததாயிருந்தது. அதன் குமிழ் பகுதியைத் தமது உள்ளங்கை பக்கம் அமையும்படி அணிந்திருப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 16 கையின் சுண்டுவிரலில் மோதிரம் அணிவது.
4254. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தார்கள்" என்று கூறி, தமது இடக்கையின் சுண்டுவிரலை நோக்கி சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 17 நடு விரலிலும் அதற்கடுத்துள்ள ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணிவதற்கு வந்துள்ள தடை.
4255. அபூபுர்தா ஆமிர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் இந்த விரலில் அல்லது அதற்கடுத்த விரலில் மோதிரம் அணிய வேண்டாம் என என்னைத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள்.
-அது எந்த இரு விரல்கள் என அறிவிப்பாளர் ஆஸிம் பின் குலைப் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை.-
மேலும், "கஸ்" வகைத் துணியை அணியவேண்டாம் என்றும் (சிவப்பு) மென்பட்டு விரிப்புகளில் (மீஸரா) அமர வேண்டாமென்றும் எனக்குத் தடை செய்தார்கள்.
மேலும், அலீ (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
"கஸ்" வகைத் துணி என்பது, எகிப்து அல்லது சிரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகைத் துணியாகும். அதில் விலா எலும்புகளைப் போல வரிவரியாகக் கோடுகள் இருக்கும். இன்னவற்றுக்கு அது ஒப்பாயிருக்கும். "மீஸரா" என்பது, பெண்கள் தம் கணவர்களுக்காக ஒட்டகச் சேணத்தில் அமைக்கும் சிவப்பு நிற மென்பட்டுத் திண்டுகளைப் போன்ற விரிப்புகளாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அபூமூசாவின் புதல்வர் (அபூபுர்தா) கூறினார்" என அறிவிப்பாளர்தொடரில் இடம் பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். அல்லது நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடை செய்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4256. அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த விரலில் அல்லது இந்த விரலில் மோதிரம் அணியவேண்டாம் என்று என்னைத் தடை செய்தார்கள்" என்று கூறி, நடுவிரலையும் அதற்கடுத்த (ஆட்காட்டி) விரலையும் சுட்டிக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 18 காலணி அல்லது அது போன்றதை அணிவது விரும்பத்தக்கதாகும்.
4257. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மேற்கொண்ட ஒரு போர் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள், "காலணியை அணிந்துகொள்ளுங்கள். ஏனெனில்,ஒரு மனிதர் காலணி அணிந்திருக்கும்வரை அவர் வாகனத்திலேயே இருக்கிறார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 19 காலணி அணியும்போது முதலில் வலக் காலில் அணிவதும் கழற்றும்போது முதலில் இடக்காலில் இருந்து கழற்றுவதும் விரும்பத்தக்கதாகும்; ஒரேயொரு காலணியில் நடப்பது வெறுக்கத்தக்கதாகும்.
4258. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் காலணி அணியும் போது முதலில் வலக் காலில் அணியட்டும். அதைக் கழற்றும்போது முதலில் இடக் காலில் இருந்து கழற்றட்டும். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேர அவர் அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் ஒருசேரக் கழற்றிவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
4259. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரேயொரு காலணியில் நடக்கவேண்டாம். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேர அவர் அணிந்துகொள்ளட்டும். அல்லது இரண்டையும் ஒருசேர கழற்றிவிடட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
4260. அபூரஸீன் மஸ்ஊத் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்து, தமது கையால் தமது நெற்றியில் அடித்துவிட்டு, "அறிந்துகொள்ளுங்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (அவர்கள் சொல்லாததைச் சொன்னதாகப்) பொய்யுரைக்கிறேன் என நீங்கள் பேசிக் கொள்கிறீர்கள். நீங்கள் நேர்வழியில் செல்ல, நான் (மட்டும்) வழிகெட்டுவிட வேண்டுமா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவரின் செருப்பு வார் அறுந்துவிட்டால், அதைச் சீராக்காத வரை மற்றொரு செருப்பில் நடந்து செல்லவேண்டாம்" என்று கூறினார்கள் என நான் உறுதியளிக்கிறேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 20 ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக் கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதும் (இஷ்தி மாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியைப் போர்த்திக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்வதும் (இஹ்திபா) தடை செய்யப்பட்டவை ஆகும்.
4261. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் தமது இடக் கையால் உணவு உண்பது, அல்லது ஒரேயொரு காலணியில் நடப்பது, ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவது (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு (குத்துக்காலிட்டு) அமர்வது (இஹ்திபா) ஆகியவற்றுக்குத் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 37
4262. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவரது செருப்பு வார் அறுந்துவிட்டால்" அல்லது "தமது செருப்பு வார் அறுந்து விட்ட ஒருவர்" அதைச் சீராக்காத வரை ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒரேயொரு காலுறை அணிந்தும் நடக்க வேண்டாம். இடக் கையால் சாப்பிட வேண்டாம்.
ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு (மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு குத்துக்காலிட்டு) அமர வேண்டாம். ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிட வேண்டாம்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 21 மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு கால்மீது மற்றொரு காலைப் போட்டுக் கொள்வதற்கு வந்துள்ள தடை.
4263. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிட வேண்டாம் என்றும், ஒரே துணியைப் போர்த்திக்கொண்டு (மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு குத்துக்காலிட்டு) அமர வேண்டாம் என்றும், ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருக்கும்போது கால்மீது கால் போட்டுக்கொள்ள வேண்டாம் என்றும் தடை செய்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4264. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), "ஒரேயொரு காலணியில் நடக்காதே. ஒரே கீழாடையால் (உன் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு குத்துக்காலிட்டு அமராதே. இடக் கையால் சாப்பிடாதே. ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டுவிடாதே. நீ மல்லாந்து படுத்திருக்கும்போது ஒரு காலை மற்றொரு கால்மீது போடாதே" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4265. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது போட்டுக்கொள்ள வேண்டாம்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 22 மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது போட்டுக் கொள்வதற்கு வந்துள்ள அனுமதி.
4266. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காலின் மீது மற்றொரு காலைப் போட்டுக்கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருப்பதை நான் கண்டேன்.
அத்தியாயம் : 37
4267. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 23 ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வது தடை செய்யப் பட்டதாகும்.
4268. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதைத் தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அதாவது ஆண்களுக்குத் தடை செய்தார்கள்" என (விளக்கத்துடன்) இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்கள் குங்குமப்பூச் சாயமிட்டுக் கொள்ளக்கூடாது எனத் தடை விதித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 24 நரைமுடியில் மஞ்சள் நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ சாயமிடுவது விரும்பத் தக்கதாகும். கறுப்பு நிறச் சாயமிடுவது தடை செய்யப்பட்டதாகும்.
4269. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா அவர்கள் மக்கா "வெற்றி ஆண்டில்" அல்லது "வெற்றி நாளில்" (நபி (ஸல்) அவர்களிடம்) "வந்தார்கள்". அல்லது "கொண்டுவரப் பட்டார்கள்". அவர்களது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று (தூய வெள்ளை நிறத்தில்) இருந்தன. அவருடைய துணைவியரிடம் நபி (ஸல்) அவர்கள், "இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்" என்று உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 37
4270. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா, (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள். கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 25 (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வதில் யூதர்களுக்கு மாறுசெய்தல்.
4271. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களும் கிறித்தவர்களும் (நரைமுடிக்கு) சாயமிட்டுக்கொள்வதில்லை. ஆகவே, நீங்கள் (உங்கள் நரைமுடிகளுக்குச் சாயமிட்டு) அவர்களுக்கு மாறுசெய்யுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37