4204. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (எங்கள் படைத் தளபதி உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் ஆதர்பைஜானில் இருந்தபோது) எங்களுக்கு (கலீஃபா) உமர் (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமையில் இந்தப் பட்டாடையில் ஒரு சிறிது(ம் அணிகின்ற பாக்கிய)மற்றவரே இம்மையில் அதை அணிவார்; இந்த அளவைத் தவிர: -(அந்த அளவை விவரிக்கும் வகையில் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள்) பெருவிரலுக்கு அடுத்துள்ள இரு விரல்களால் சைகை செய்து காட்டினார்கள்.- அது கோடுபோட்ட கெட்டி ஆடைகளின் பித்தான்களின் அளவு என அந்த ஆடைகளைக் கண்டபோது கருதினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் இருந்தோம்..." என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 37
4205. மேற்கண்ட ஹதீஸ் அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: நாங்கள் உத்பா பின் ஃபர்கத் (ரலி) அவர்களுடன் ஆதர்பைஜானில் அல்லது சிரியாவில் இருந்தபோது, எங்களுக்கு உமர் (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:)
இறைவாழ்த்துக்குப் பின்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பட்டு அணிவதை (ஆண்களுக்கு)த் தடை செய்தார்கள்;இந்த இரு விரல்களின் அளவைத் தவிர.
அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "(உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட "இந்த அளவு" என்பது,ஆடைகளின் கரைகளில் செய்யப்படும்) வேலைப்பாட்டையே குறிக்கிறது என அறிந்து கொள்ள எங்களுக்கு அவகாசம் தேவைப்படவில்லை.
- மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்களின் (இறுதிக்) கூற்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
4206. சுவைத் பின் ஃகஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (டமாஸ்கஸிலுள்ள) "ஜாபியா" எனுமிடத்தில் உரை நிகழ்த்துகையில், "நபி (ஸல்) அவர்கள் பட்டு அணிவதைத் தடைசெய்தார்கள்; இரு விரல்கள் அல்லது மூன்று விரல்கள் அல்லது நான்கு விரல்கள் வைக்குமிடத்தின் அளவைத் தவிர" என்று குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4207. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட அலங்காரப் பட்டு நீளங்கி ஒன்றை அணிந்தார்கள். பின்னர் விரைவாக அதைக் கழற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர்களிடம், "ஏன் விரைவாக அதைக் கழற்றிவிட்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், "அதை அணியவேண்டாம் என (வானவர்) ஜிப்ரீல் என்னைத் தடுத்துவிட்டார்" என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் அழுதுகொண்டே வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் வெறுத்த ஒன்றை எனக்குக் கொடுத்துள்ளீர்களே? எனக்கு மட்டும் என்னவாம்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காக உங்களுக்கு நான் இதை வழங்கவில்லை. இதை நீங்கள் விற்று(க் காசாக்கி)க் கொள்வதற்காகவே உங்களுக்கு வழங்கினேன்" என்று சொன்னார்கள். எனவே, அதை உமர் (ரலி) அவர்கள் இரண்டாயிரம் திர்ஹங்களுக்கு விற்று விட்டார்கள்.-இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4208. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கோடுபோட்ட பட்டுஅங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் அதை எனக்குக் கொடுத்தனுப்பினார்கள். அதை நான் அணிந்துகொண்டேன்.
(அதைக் கண்டபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகத்தில் நான் கோபத்தைக் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காக உங்களுக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. (மாறாக,) இதை முக்காடுகளாக வெட்டி (உங்கள் வீட்டுப்) பெண்களிடையே பங்கிடுவதற்காகவே உங்களுக்கு நான் கொடுத்தனுப்பினேன்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஆத் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கிணங்க அதை(த் துண்டாக்கி) என் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டுக் கொடுத்துவிட்டேன்" என்று அலீ (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கிணங்க" எனும் குறிப்பு இல்லை. "அதை நான் என் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்" என்பது மட்டுமே காணப்படுகிறது.
அத்தியாயம் : 37
4209. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தூமத்துல் ஜந்தல்" பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே பங்கிட்டுவிடுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா மற்றும் அபூகுறைப் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "(உங்கள் வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டுவிடுங்கள்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 37
4210. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோடுபோட்ட பட்டுஅங்கி ஒன்றை எனக்குக் கொடுத்தார்கள். நான் (அதை அணிந்துகொண்டு அவர்களிடம்) புறப்பட்டு வந்தபோது, அவர்களது முகத்தில் கோபத்தை நான் கண்டேன். எனவே,அதை வெட்டி என் (வீட்டுப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்.
அத்தியாயம் : 37
4211. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மென்பட்டு நீளங்கியொன்றை உமர் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "இதை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே! (முன்பு) இந்த ஆடை குறித்து வேறுவிதமாகக் கூறினீர்களே?" என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் அணிந்துகொள்வதற்காக உங்களுக்கு நான் கொடுத்தனுப்பவில்லை. (மாறாக, இதை விலைக்கு விற்று,) அந்தக் காசின் மூலம் நீங்கள் பயனடைந்து கொள்வதற்காகவே உங்களுக்கு இதை நான் கொடுத்தனுப்பினேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இம்மையில் பட்டு அணிகிறாரோ, அவர் மறுமையில் அதை அணியமாட்டார்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4213. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இம்மையில் பட்டு அணிந்தவர், மறுமையில் அதை அணியமாட்டார்.
இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
4214. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஆண்கள் பட்டு அணிவது தடைசெய்யப்படுவதற்கு முன்பு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ("ஃபர்ரூஜ்"எனும்) நீண்ட பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து கொண்டார்கள். பிறகு அதை அணிந்தபடியே (மஃக்ரிப் தொழுகை) தொழுதார்கள்.
தொழுகை முடிந்து திரும்பியதும் அதை வெறுப்பவர்களைப் போன்று பலமாக (உருவிக்) கழற்றினார்கள். பிறகு, "இது இறையச்சமுடையவர்களுக்கு உகந்ததன்று" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
பாடம் : 3 சொறிசிரங்கு உள்ளிட்டவை இருந்தால் ஆண்கள் பட்டாடை அணியலாம்.
4215. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) , ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) ஆகியோருக்குப் பயணத்தில் சொறிசிரங்கு அல்லது (வேறு) நோய் ஏற்பட்டிருந்ததால் பட்டு முழு நீளங்கி அணிந்துகொள்ள அவ்விருவருக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "பயணத்தில்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 37
4216. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது
ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகியோருக்குச் சொறிசிரங்கு ஏற்பட்டிருந்த காரணத்தால் பட்டாடை அணிந்துகொள்ள அவர்கள் இருவருக்கும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்." அல்லது "அனுமதியளிக்கப்பட்டது."
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4217. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களும் ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்ற ஒரு போர் பயணத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தமது உடலில் சிரங்கு உண்டாக்கிய) ஒட்டுண்ணிகளைக் குறித்து முறையிட்டனர். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் பட்டு முழு நீளங்கி அணிய அனுமதியளித்தார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 4 செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடையை ஆண்கள் அணிவதற்கு வந்துள்ள தடை.
4218. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டபோது, "இவை இறைமறுப்பாளர்களின் ஆடைகளில் உள்ளவையாகும். எனவே, இதை நீர் அணியாதீர்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 37
4219. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், "உன் தாயாரா இவ்வாறு (செம்மஞ்சள் நிறச் சாயமிடுமாறு) உமக்குக் கட்டளையிட்டார்?" என்று கேட்டார்கள். நான், "அவ்விரண்டையும் கழுவி (செம்மஞ்சள் நிறச் சாயத்தை அகற்றி)க் கொள்கிறேன்" என்றேன். நபி (ஸல்) அவர்கள் "இல்லை, அவ்விரண்டையும் எரித்துவிடு" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 37
4220. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை, செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியவேண்டாம் என்றும், பொன் மோதிரம் அணிய வேண்டாமென்றும், (தொழுகையில்) ருகூஉவில் குர்ஆனை ஓத வேண்டாமென்றும் தடை செய்தார்கள்.- இதை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 37
4221. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (தொழுகையில்) ருகூஉவிலிருக்கும்போது குர்ஆனை ஓத வேண்டாமென்றும், தங்கம் அணிய வேண்டாமென்றும், செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடையை அணிய வேண்டாமென்றும் என்னைத் தடுத்தார்கள்.
அத்தியாயம் : 37
4222. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தங்கமோதிரம் அணிய வேண்டாமென்றும், பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை அணிய வேண்டாமென்றும், ருகூஉ மற்றும் சஜ்தாவில் குர்ஆனை ஓத வேண்டாமென்றும், செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடையை அணிய வேண்டாமென்றும் தடைசெய்தார்கள்.
அத்தியாயம் : 37
பாடம் : 5 பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு.
4223. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் "எந்த ஆடை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?" என்று கேட்டோம். "(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 37