4104. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் ஒரு வீடு இரவில் (தீ விபத்துக்குள்ளாகி) வீட்டாரோடு எரிந்துவிட்டது. அவர்களின் நிலை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது, "இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானதே ஆகும். ஆகவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 13 உண்பது, அருந்துவது ஆகியவற்றின் ஒழுங்குமுறைகளும் விதிமுறைகளும்.
4105. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம். ஒருமுறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவரைப் போன்று (விரைந்து வந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே,இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு உண்ண (விருந்துக்கு) அழைக்கப்பெற்றால்..."என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இதில் ("தள்ளிவிடப்பட்டவரைப் போன்று" என்பதற்குப் பதிலாக) "துரத்தப்பட்டவரைப் போன்று" என்றும், முதலில் கிராமவாசி வந்தார்; பிறகு அச்சிறுமி வந்தாள் என்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஹதீஸின் இறுதியில் "பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) சொல்லி உணவு உண்டார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள் ளது.
அதில் "கிராமவாசிக்கு முன் அச்சிறுமி வந்தாள்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 36
4106. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும்போதும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லை; உண்ண உணவுமில்லை" என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது அல்லாஹ்வை நினைவுகூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது" என்று சொல்கிறான்.
அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்" என்று சொல்கிறான்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால், அவர் இல்லத்திற்குள் நுழையும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் (ஷைத்தான் "இந்த இரவில் நீங்கள் தங்குமிடத்தையும் உணவையும் அடைந்துகொண்டீர்கள்" என்று கூறுகிறான்)" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இடக்கையால் உண்ணாதீர்கள். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4108. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். ஏனெனில், ஷைத்தான் இடக்கையால்தான் உண்கிறான்; இடக் கையால்தான் பருகுகிறான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிபபாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4109. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் இடக் கையால் உண்ண வேண்டாம்; இடக் கையால் பருக வேண்டாம். ஏனெனில், ஷைத்தான் இடக் கையால்தான் உண்கிறான்; இடக்கையால் தான் பருகுகிறான்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் "இடக் கையால் வாங்காதீர்கள். இடக் கையால் கொடுக்காதீர்கள்" என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள். அபுத்தாஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "உங்களில் ஒருவர் (இடக் கையால்) உண்ண வேண்டாம்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4110. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இடக் கையால் உணவு உண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வலக் கையால் உண்பீராக!" என்று சொன்னார்கள். அவர், "என்னால் முடியாது" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மால் முடியாமலே போகட்டும்!" என்று சொன்னார்கள். அகம்பாவமே அவரை (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்படாமல்) தடுத்தது. அவ்வாறே, அவரால் தமது வாய்க்குக் கையை உயர்த்த முடியாமல் போனது.
அத்தியாயம் : 36
4111. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்தேன். (ஒருமுறை) எனது கை, உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்துகொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குழந்தாய்! (உண்ணும்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வாயாக! உன் வலக்கரத்தால் உண்பாயாக! உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பாயாக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4112. உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு அருந்தினேன். தட்டின் மூலைகளிலிருந்து இறைச்சியை எடுக்கலானேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன(து கை)க்கு அருகிலிருந்து எடுத்து உண்பாயாக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4113. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை, அவற்றின் வாய்ப்பகுதியை வெளிப் பக்கமாகச் சுருட்டிவிட்டு அதிலிருந்து நீரருந்த வேண்டாமென ("இக்தினாஸ்") தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 36
4114. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் தோல் பைகளை, அவற்றின் வாய்ப் பகுதியி(னை வெளிப்பக்கமாகச் சுருட்டிவிட்டு அதி)லிருந்து நீர் பருக வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இக்தினாஸ்" என்பது, அவற்றின் வாய்ப்பகுதியை வெளிப்பக்கமாகத் திருப்பிவிட்டு, அதிலிருந்து நீர் பருகுவதாகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 14 நின்றுகொண்டு நீர் அருந்துவது வெறுக்கத்தக்கதாகும்.
4115. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.
அத்தியாயம் : 36
4116. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அனஸ் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள், ஒருவர் நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாம் எனத் தடை செய்தார்கள்" என்று கூறினார்கள். உடனே நாங்கள், "அவ்வாறாயின் (நின்றுகொண்டு) உண்ணலாமா?" என்று கேட்டோம். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அது அதைவிட மோசமானது; அருவருப்பானது" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் கத்தாதா (ரஹ்) அவர்களின் கூற்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4117. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்துவதைக் கண்டித்தார்கள்.
அத்தியாயம் : 36
4118. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நின்றுகொண்டு நீர் அருந்த வேண்டாமெனத் தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரும் நின்றுகொண்டு அருந்தவேண்டாம். யாரேனும் மறந்து(போய் நின்று கொண்டு அருந்தி)விட்டால் அவர் வாந்தி எடுத்துவிடட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
பாடம் : 15 ஸம்ஸம் தண்ணீரை நின்றுகொண்டு அருந்துவது.
4120. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அருந்துவதற்கு ஸம்ஸம் தண்ணீரைக் கொடுத்தேன். அதை அவர்கள் நின்றுகொண்டு அருந்தினார்கள்.
அத்தியாயம் : 36
4121. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஸம்ஸம் (கிணற்றின்) தண்ணீரை ஒரு வாளியில் எடுத்து, அதை நின்றுகொண்டு அருந்தினார்கள்.
அத்தியாயம் : 36
4122. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு ஸம்ஸம் தண்ணீரை அருந்தினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4123. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அருந்துவதற்கு ஸம்ஸம் தண்ணீர் கொடுத்தேன். அதை அவர்கள் நின்றுகொண்டு அருந்தினார்கள். இறையில்லம் கஅபா அருகில் இருந்தபோதுதான் அவர்கள் தண்ணீர் கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஆகவே, அவர்களுக்கு ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்தேன்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36