4073. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது நான், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் தோல் நீக்கப்படாத கோதுமையிலிருந்து ஒருவகை பானம் தயாரிக்கப்படுகிறது. அதற்கு "அல்மிஸ்ர்" என்று பெயர் சொல்லப்படுகிறது. மேலும், தேனிலிருந்து "பித்உ" எனப்படும் ஒரு பானமும் தயாரிக்கப்படுகிறது. (அவற்றை நாங்கள் அருந்தலாமா?)" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்" என்று (பொது விதி) கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தபோது எங்கள் இருவரிடமும், "நீங்கள் (மக்களுக்கு) நற்செய்திகளை(யே அதிகமாக)ச் சொல்லுங்கள். (அவர்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். கற்றுக்கொடுங்கள். (அவர்களுக்கு) வெறுப்பேற்றிவிடாதீர்கள்" என்று கூறினார்கள்.
"நீங்கள் இருவரும் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள்" என்றும் (அறிவுரை) கூறினார்கள் என்றே நான் கருதுகிறேன். நான் திரும்பிச் சென்றபோது மீண்டும் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! யமன்வாசிகளிடம் தேன் சுண்டக்காய்ச்சப்பட்டுத் தயாரிக்கப்படும் ஒரு வகை பானம் உண்டு. மேலும், தோல் நீக்கப்படாத கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் "மிஸ்ர்" எனும் பானமும் உண்டு (அவற்றை அருந்தலாமா?)" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தொழுகையிலிருந்து தடுக்கக்கூடிய போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4074. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது, மக்களுக்கு (இஸ்லாமிய) அழைப்பு விடுங்கள். நற்செய்திகளை(யே அதிகமாக)க் கூறுங்கள். (எச்சரிக்கை விடுக்கும்போது) வெறுப்பேற்றி விடாதீர்கள். (அவர்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைச்) சிரமப்படுத்தி விடாதீர்கள்" என்று (அறிவுரை) கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் யமன் நாட்டில் தயாரித்துவரும் இரு பானங்களைப் பற்றி எங்களுக்குத் தீர்ப்பு வழங்குங்கள். அவை: கட்டியாகும்வரை ஊறவைக்கப்படும் தேனிலிருந்து தயாரிக்கப்படும் "பித்உ" எனும் பானமும்,அவ்வாறே கட்டியாகும்வரை ஊறவைக்கப்படும் சோளம், தோல் நீக்கப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் "மிஸ்ர்" எனும் பானமும் ஆகும்" என்று கூறினேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஆரம்பம் முதல்) முடிவுவரை அனைத்தும் செறிவுடன் அமைந்த ஒருங்கிணைந்த சொற்கள் வழங்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் கூறினார்கள்: தொழுகையிலிருந்து தடுக்கக்கூடிய போதை தரும் ஒவ்வொன்றையும் நான் தடை செய்கிறேன். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4075. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள "ஜைஷான்" எனுமிடத்திலிருந்து வந்து, தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒருவகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது போதையளிக்கக்கூடியதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம் (போதையளிக்கக்கூடியதே)" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) "தீனத்துல் கபாலை" நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்" என்று கூறினார்கள்.
மக்கள் "அல்லாஹ்வின் தூதரே! "தீனத்துல் கபால்" என்பது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 36
4076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல் (திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை அருந்தமாட்டார். - இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4077. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். -இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4078. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். ஒவ்வொரு மதுவும் தடை செய்யப்பட்டதாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தே அறிவிக்கிறார்கள் என்றே நான் அறிகிறேன் என அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 8 குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் மறுமையில் (சொர்க்கத்தின்) மது மறுக்கப்படுவதன் மூலம் தண்டிக்கப்படுவான்.
4079. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் மது அருந்தியவருக்கு மறுமையில் (சொர்க்கத்தின்) மது அருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4080. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"உலகில் மது அருந்திவிட்டு அதற்காகப் பாவமன்னிப்புக் கோராதவருக்கு மறுமையில் (சொர்க்கத்தின்) மது அருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும். அது அவருக்குப் புகட்டப்பட மாட்டாது" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் மஸ்லமா பின் கஅனப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம் "நாஃபிஉ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்களா?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு மாலிக் (ரஹ்), அவர்கள், "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 36
4081. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உலகில் மது அருந்தியவர் மறுமையில் அதை அருந்தமாட்டார்; பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)னால் தவிர.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 9 கெட்டித்தன்மையும் போதையும் உள்ளதாக மாறாவிட்டால், பழச்சாறுகள் அனுமதிக்கப்பட்டவையே ஆகும்.
4082. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக இரவின் ஆரம்பநேரத்தில் பழச்சாறு ஊற்றி வைக்கப்படும். காலையில் அதை அவர்கள் அருந்துவார்கள். அன்றைய பகல் முழுவதும், அடுத்த இரவும், அடுத்த நாள் பகலிலும், மற்றோர் இரவிலும், அதற்கடுத்த பகலில் அஸ்ர் நேரம் வரையிலும் அதை அருந்துவார்கள்.
பிறகு (அதில்) ஏதேனும் எஞ்சியிருந்தால் (தம்) பணியாளருக்கு அதை அருந்தக் கொடுப்பார்கள். அல்லது (அதைக் கொட்டிவிடுமாறு) உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கொட்டப்படும்.
அத்தியாயம் : 36
4083. யஹ்யா பின் உபைத் அல்பஹ்ரானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் பழச்சாறுகள் பற்றிக் குறிப்பிட்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பையொன்றில் பழச்சாறு ஊற்றிவைக்கப்பட்டுவந்தது.
திங்கட்கிழமை இரவு அவ்வாறு ஊற்றி வைக்கப்பட்டால், திங்கட்கிழமையும் செவ்வாய் கிழமை அஸ்ர் வரையும் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்துவார்கள். பிறகு அதில் ஏதேனும் எஞ்சியிருந்தால் பணியாளருக்கு அருந்தக் கொடுப்பார்கள்; அல்லது கொட்டிவிடுவார்கள்.
அத்தியாயம் : 36
4084. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக உலர்ந்த திராட்சை (தண்ணீரில்) ஊறவைக்கப் படும். அதை அன்றைய தினமும் மறுநாளும் அதற்கடுத்த மூன்றாம் நாளின் மாலை வரையும் அவர்கள் அருந்துவார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க அது (யாருக்கேனும்) அருந்தக் கொடுக்கப்படும்; அல்லது கொட்டப்பட்டுவிடும்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4085. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பையில் உலர்ந்த திராட்சை ஊறவைக்கப்படும். அதை அன்றைய தினமும் மறுநாளும் அதற்கடுத்த நாளும் அவர்கள் அருந்துவார்கள். மூன்றாவது நாள் மாலையில் தாமும் அருந்துவார்கள்; (யாருக்கேனும்) அருந்தவும் கொடுப்பார்கள். பிறகு (அதில்) ஏதேனும் எஞ்சியிருந்தால் அதைக் கொட்டி விடுவார்கள்.
அத்தியாயம் : 36
4086. யஹ்யா பின் உபைத் அபூஉமர் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், மதுவை விற்பது, வாங்குவது, வியாபாரம் செய்வது ஆகியவற்றைப் பற்றிக் கேட்டனர். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நீங்களெல்லாம் முஸ்லிம்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஆம்" என்று கூறினர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "மதுவை விற்பதும் கூடாது; வாங்குவதும் கூடாது; அது தொடர்பான வியாபாரங்களில் ஈடுபடுவதும் கூடாது" என்று கூறினார்கள். பிறகு மக்கள், பழச்சாறுகள் பற்றிக் கேட்டபோது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டுச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் மண் சாடிகளிலும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரத்திலும் சுரைக்காய் குடுவையிலும் பழச்சாறுகளை ஊறவைத்திருந்தனர். அவற்றைக் கொட்டிவிடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவ்வாறே அவை கொட்டப்பட்டன.
பிறகு தோல் பையொன்றைக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார்கள். (அதைக் கொண்டு வந்ததும்) அதில் உலர்ந்த திராட்சைகளும் சிறிது தண்ணீரும் ஊற்றப்பட்டது. பிறகு அது அந்த இரவு முழுவதும் அப்படியே (ஊற) விடப்பட்டது. காலையானதும் அன்றைய தினம் முழுவதிலும் அடுத்த இரவிலும் அதற்கடுத்த நாள் மாலைவரையிலும் அதில் தாமும் அருந்தினார்கள்; (பிறருக்கும்) அருந்தக் கொடுத்தார்கள். (அடுத்த நாள்) காலையில் அதில் எஞ்சியிருந்ததைக் கொட்டிவிடுமாறு அவர்கள் உத்தரவிட அவ்வாறே அது கொட்டப்பட்டது.
அத்தியாயம் : 36
4087. ஸுமாமா பின் ஹஸ்ன் அல்குஷைரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து, பழச்சாறுகள் பற்றிக் கேட்டேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள்,அபிசீனியாவைச் சேர்ந்த (கறுப்பு நிற) அடிமைப்பெண் ஒருவரை அழைத்து, "இவரிடம் கேளுங்கள். இவர்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகப் பழச்சாறுகளை ஊறவைப்பவராக இருந்தார்" என்று கூறினார்கள்.
அப்போது அந்த அபிசீனிய (அடிமைப்)பெண், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக இரவில் தண்ணீர் தோல் பையில் பழச்சாற்றை ஊற்றிவைத்து, அதன் வாய்ப் பகுதியை சுருக்கிட்டுக் கட்டி, அதை தொங்க விட்டுவிடுவேன். மறுநாள் காலையில் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருந்துவார்கள்" என்று கூறினார்.
அத்தியாயம் : 36
4088. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் தோல் பையொன்றில் பழச்சாறுகளை ஊற்றிவைப்போம். பையின் வாய்ப்பகுதி சுருக்கிட்டுக் கட்டப்படும். அதன் கீழ்ப்பகுதியில் துவாரம் இருக்கும். பழச் சாற்றை நாங்கள் காலையில் ஊற்றிவைத்தால் இரவில் அதை நபியவர்கள் அருந்துவார்கள்; இரவில் ஊற்றிவைத்தால் காலையில் அதை அருந்துவார்கள்.
அத்தியாயம் : 36
4089. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஉசைத் (மாலிக் பின் ரபீஆ) அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் தமது திருமணத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அதில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்டார்கள்.) அபூஉசைத் (ரலி) அவர்களின் துணைவியார் (சலாமா பின்த் உஹைப் - ரலி) அவர்களே -அவர்தாம் மணப்பெண்- அன்றைய தினம் மக்களுக்குப் பணிவிடைகள் செய்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பருகுவதற்கு மணப்பெண் என்ன வழங்கினார் தெரியுமா? அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கென்றே இரவில் பேரீச்சம் பழங்களைக் கல் தொட்டியொன்றில் ஊறப்போட்டுவைத்திருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலீமா விருந்தை) உண்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பருகத்தந்தார்.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களை (மணவிருந்துக்கு) அழைத்தார்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வலீமா விருந்தை) உண்டு முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழச்சாற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர் பருகத் தந்தார்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 36
4090. மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அவர் கல் தொட்டியொன்றில் (பேரீச்சம் பழங்களை ஊறவைத்திருந்தார்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உணவருந்தி முடித்ததும் அந்தப் பேரீச்சம் பழங்களை மணப்பெண் தமது கரத்தால் பிசைந்து சாறு எடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பருகத்தந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே அதை அவர் வழங்கினார்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4091. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஓர் அரபுப் பெண்ணைப் பற்றி (அவளை மணந்து கொள்ளுமாறு) கூறப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அழைத்து வருவதற்கு ஆளனுப்புமாறு அபூஉசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்களுக்கு உத்தரவிட, அவ்வாறே அவர்கள் ஆளனுப்பினார்கள்.
அந்தப் பெண் வந்து, (மதீனாவிலுள்ள) பனூ சாஇதா குலத்தாரின் கோட்டை ஒன்றில் தங்கினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு அப்பெண்ணிடம் வந்து, அவள் இருந்த இடத்தில் நுழைய, அங்கே அப்பெண் தலையைக் கவிழ்த்தபடி இருந்தாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் (தம்மை மணந்துகொள்ள சம்மதம் கேட்டுப்) பேசியபோது அவள், "உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்று சொன்னாள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என்னிடமிருந்து உனக்குப் பாதுகாப்பு அளித்துவிட்டேன்" என்று கூறினார்கள். மக்கள் அந்தப் பெண்ணிடம், "இவர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்க, அவள் "தெரியாது” என்று பதிலளித்தாள்.
மக்கள் "இவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். உன்னைப் பெண் பேசுவதற்காக வந்தார்கள்" என்று கூறினர். அந்தப் பெண், "அவர்களை மணந்துகொள்ளும் நற்பேற்றை நான் இழந்து துர்பாக்கியசாலி ஆகிவிட்டேனே!" என்று (வருத்தத்துடன்) கூறினாள்.
அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தோழர்களும் முன்னே சென்று பனூ சாஇதா சமுதாயக் கூடத்தில் அமர்ந்துகொண்டனர். பிறகு "எங்களுக்குக் குடிக்க தண்ணீர் கொடுங்கள்" என்று என்னிடம் சொன்னார்கள். ஆகவே,நான் அவர்களுக்காக இந்தக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்று அதில் அவர்களுக்குத் தண்ணீர் (கொண்டு வந்து) புகட்டினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(பின்னர்) சஹ்ல் (ரலி) அவர்கள் அந்தக் கிண்ணத்தை வெளியில் எடுத்தார்கள். அதில் நாங்களும் பருகினோம். பிறகு (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அதைத் தமக்கு அன்பளிப்பாகத் தரும்படி கேட்க, சஹ்ல் (ரலி) அவர்கள் அதை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்கள்.
அபூபக்ர் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுங்கள், சஹ்லே!" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4092. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இந்தக் கிண்ணத்தில் தேன், பழச்சாறு, தண்ணீர் மற்றும் பால் ஆகிய எல்லாப் பானங்களையும் அருந்தக் கொடுத்திருக்கிறேன்.
இதை ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36