4013. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் மதுவைத் தடைசெய்யும் வசனத்தை அருளியபோது, மதீனாவில் கனிந்த பேரீச்சங்கனிகளில் தயாரிக்கப்படும் மதுபானத்தைத் தவிர வேறெந்த மதுபானமும் இருக்கவில்லை.
அத்தியாயம் : 36
பாடம் : 2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றுவது தடைசெய்யப்பட்டதாகும்.
4014. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இல்லை (மாற்றக் கூடாது)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு வந்துள்ள தடை.
4015. வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள்; அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், "மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது மருந்தல்ல; நோய்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 4 பேரீச்சம் பழம், திராட்சை ஆகியவற்றை ஊறவைத்துத் தயாரிக்கப்படும் எல்லாப் பழச்சாறுகளும் (போதை தருமானால்) "மதுபானம்" ("கம்ர்") என்றே அழைக்கப்படும்.
4016. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மது (கம்ர்), இவ்விரு மரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. அவை: 1. பேரீச்சை 2. திராட்சை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4017. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மது, இவ்விரு மரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. அவை: 1. பேரீச்சை 2. திராட்சை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4018. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மது, இவ்விரு மரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. அவை: 1. திராட்சை 2. பேரீச்சை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (திராட்சை, பேரீச்சை என்பதைக் குறிக்க அல்கர்மத், அந்நக்லத் என்பதற்குப் பதிலாக) அல்கர்ம், அந்நக்ல் எனும் சொற்கள் ஆளப்பட்டுள்ளன.
அத்தியாயம் : 36
பாடம் : 5 பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கலந்து ஊறவைப்பது வெறுக்கத்தக்கதாகும்.
4019. ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளும், பேரீச்சம் பழங்களும் கலந்து ஊறவைக்கப் படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும், பேரீச்சச் செங்காய்களும் கலந்து ஊறவைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள்.
அத்தியாயம் : 36
4020. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பேரீச்சங்கனிகளும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதைத் தடைசெய்தார்கள். (அவ்வாறே) பேரீச்சச் செங்காய்களும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதையும் தடைசெய்தார்கள்.
அத்தியாயம் : 36
4021. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சச் செங்காய்களையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் ஒன்று சேர்(த்து ஊறவை)க்காதீர்கள். உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சங்கனிகளையும் ஒன்றுசேர்த்து ஊறவைக்காதீர்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4022. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளும் பேரீச்சம் பழங்களும் கல(ந்து ஊறவை)க்கப்படுவதைத் தடைசெய்தார்கள். (அவ்வாறே) நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சச் செங்காய்களும் ஒன்று சேர்த்து ஊறவைக்கப் படுவதையும் தடைசெய்தார்கள்.
அத்தியாயம் : 36
4023. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், பேரீச்சங்கனிகளும் உலர்ந்த திராட்சைகளும் கல(ந்து ஊறb வை)க்கப்படுவதைத் தடை செய்தார்கள். (அவ்வாறே) கனிந்த பேரீச்சம் பழங்களும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் கல(ந்து ஊறவை)க்கப்படுவதையும் தடை செய்தார்கள்.
அத்தியாயம் : 36
4024. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாமென எங்களுக்குத் தடைவிதித்தார்கள். (அவ்வாறே) நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் கனிந்த பேரீச்சம் பழங்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாமென்றும் தடைவிதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4025. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் பழச்சாற்றை அருந்துகின்றவர், உலர்ந்த திராட்சையைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது பேரீச்சம் பழத்தைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4026. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களை கனிந்த பேரீச்சம் பழங்களுடன், அல்லது உலர்ந்த திராட்சைகளைப் பேரீச்சம் பழங்களுடன், அல்லது உலர்ந்த திராட்சைகளை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களுடன் கல(ந்து ஊறவை)க்க வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. பிறகு "உங்களில் பழச்சாற்றை அருந்துகின்றவர்..." எனத் தொடரும் மேற்கண்ட ஹதீஸில் உள்ள இதர தகவல்களும் இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
4027. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்காதீர்கள். (அவ்வாறே) உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்காதீர்கள். (வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஊறவைத்துக்கொள்ளுங்கள்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4028. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்காதீர்கள். (அவ்வாறே) பேரீச்சச் செங்காய்களையும் உலர்ந்த திராட்சைகளையும் ஒன்றுசேர்த்து ஊறவைக்காதீர்கள். மாறாக, அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மேற்கண்ட ஹதீஸை அபூசலமா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அப்துல்லாஹ் பின் அபீ கத்தாதா (ரஹ்) அவர்களை (நேரடியாகச்) சந்தித்தேன். அப்போது தம் தந்தை அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாக மேற்கண்ட ஹதீஸை என்னிடம் அவர்கள் அறிவித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பேரீச்சச் செங்காய்களையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் (ஒன்றுசேர்த்து ஊறவைக்க வேண்டாம்) என்றும், பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் (ஒன்றுசேர்த்து ஊறவைக்க வேண்டாம்)" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4029. அ. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "பேரீச்சம் பழங்களையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும், உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும், நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களையும் பேரீச்சச் செங்காய்களையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும் தடைசெய்தார்கள். "(வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஊறவைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆ அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளையும் பேரீச்சம் பழங்களையும், (அவ்வாறே) நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களையும் பேரீச்சம் பழங்களையும் (ஒன்றாகச் சேர்த்து) ஊறவைக்க வேண்டாமெனத் தடைசெய்தார்கள். "(வேண்டுமானால்) அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக ஊறவைக்கப்படலாம்"என்று கூறினார்கள். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4030. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்று சேர்(த்து ஊறவை)க்கப்படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சம் பழங்களும் ஒன்றுசேர்த்து ஊற வைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (யமன் நாட்டிலுள்ள) "ஜுரஷ்"வாசிகளுக்குப் பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் எனத் தடைசெய்து கடிதம் எழுதினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பேரீச்சம் பழங்களையும் உலர்ந்த திராட்சைகளையும் கலந்து ஊறவைக்க வேண்டாம்" என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சம் பழங்களையும் பேரீச்சம் பழங்களையும் கலந்து ஊறவைப்பது பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 36
4031. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சச் செங்காய்களும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊற வைக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.
அத்தியாயம் : 36
4032. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சச் செங்காய்களும் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் பேரீச்சம் பழங்களும் உலர்ந்த திராட்சைகளும் ஒன்றுசேர்த்து ஊறவைக்கப்படுவதற்கும் தடை விதிக்கப்பட்டுவிட்டது.
அத்தியாயம் : 36