3999. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்!
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
4000. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரிடம் அவர் அறுப்பதற்கான குர்பானிப் பிராணி இருந்து, துல்ஹஜ் பிறை காணப்பட்டு விட்டால், அவர் குர்பானி கொடுக்காத வரை தமது தலைமுடியையோ நகங்களையோ சிறிதும் வெட்ட வேண்டாம்.
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அம்ர் பின் முஸ்லிம் பின் அம்மார் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஈதுல் அள்ஹா பெருநாளுக்குச் சில நாட்களுக்கு முன் நாங்கள் வெண்ணீர் குளியல் அறையில் இருந்தபோது, சிலர் தம் மறைவிடத்திலிருந்த ரோமங்களை அகற்றினர்.
அப்போது குளியலறையில் இருந்த ஒருவர், "(குர்பானி கொடுக்க எண்ணியிருப்பவர் துல்ஹஜ் முதல் பத்துநாட்களில்) இ(வ்வாறு ரோமங்களை அகற்றுவ)தை சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் வெறுக்கிறார்கள்; அல்லது அவ்வாறு அகற்ற வேண்டாமெனத் தடை செய்கிறார்கள்" என்று கூறினார்.
ஆகவே, நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களைச் சந்தித்து அதைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அப்போது சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "என் சகோதரர் மகனே! இந்த ஹதீஸ் மறக்கப்பட்டுக் கைவிடப்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று எனக்கு அறிவித்தார்கள்" என்று கூறி னார்கள்.
- அம்ர் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
பாடம் : 8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பது தடை செய்யப் பட்டதாகும் என்பதும் அவ்வாறு செய்பவர் சாபத்திற்குரியவர் என்பதும்.
4001. அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "உங்களிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக என்ன கூறி வந்தார்கள்?" என்று கேட்டார். இதைக் கேட்டு அலீ (ரலி) அவர்கள் கோபமுற்றார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் மூடி மறைக்கும் விதமாக எதையும் என்னிடம் இரகசியமாகக் கூறவில்லை. எனினும், நான்கு செய்திகளை என்னிடம் கூறினார்கள்" என்றார்கள். நான், "அவை யாவை, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே?" என்று கேட்டேன்.
அலீ (ரலி) அவர்கள், "தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல்,மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
4002. அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களுக்கு இரகசியமாகச் சொன்ன ஏதேனும் விஷயத்தை எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டோம்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் மறைத்து விட்டு எதையும் என்னிடம் மட்டும் இரகசியமாகச் சொல்லவில்லை. ஆயினும் அவர்கள், "அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லா) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். தம் பெற்றோரைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல், மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அத்தியாயம் : 35
4003. அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா?" என்று கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை; இதோ இந்த வாளுறையில் இருப்பதைத் தவிர" என்று கூறிவிட்டு, ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கின்றான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35

பாடம் : 1 மதுவிலக்கும் திராட்சைப் பழச்சாறு, பேரீச்சங்கனி, பேரீச்சச் செங்காய், உலர்ந்த திராட்சை உள்ளிட்டவற்றிலிருந்து தயாரிக்கப்படும் போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவே என்பதன் விளக்கமும்.
4004. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ருப் போரில் கிடைத்த செல்வங்களில் (எனது பங்காக) வயதான ஒட்டகம் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து பெற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பொறுப்பில் வந்த ஐந்தில் ஒரு பாகத்திலிருந்து) வயதான மற்றோர் ஒட்டகத்தையும் எனக்கு வழங்கினார்கள்.
ஒரு நாள் நான் அவ்விரண்டு ஒட்டகங்களையும் அன்சாரி ஒருவரின் வீட்டுவாசலருகே படுக்கவைத்திருந்தேன். "இத்கிர்" எனும் புல்லை அவற்றின் மீது ஏற்றிச் சென்று, விற்க வேண்டுமென நான் நினைத்திருந்தேன். அப்போது "பனூ கைனுகா" குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவர் என்னுடன் (அதற்கு உதவியாக வர) இருந்தார். ஃபாத்திமா(வை மணம் புரிந்த) "வலீமா" விருந்துக்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன்.
(நான் ஒட்டகத்தைப் படுக்கவைத்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (மது) அருந்திக்கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள் "ஹம்ஸா! கொழுத்த இந்தக் கிழம் ஒட்டகங்களுக்கு (நீரே போதும். ஒரு கை பார்ப்பீராக!)" என்று (யாப்பு வகைப் பாடலைப்) பாடினாள்.
உடனே ஹம்ஸா (ரலி) அவர்கள் வாளுடன் அவ்விரு ஒட்டகங்களை நோக்கிப் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டிச் சாய்த்தார்; அவற்றின் இடுப்பைப் பிளந்து, பின்னர் ஈரக்குலைகளை வெளியே எடுத்தார்.
- இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் எனக்கு இதை அறிவித்த இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் "திமில்களையுமா அவர் வெளியே எடுத்தார்?" என்று கேட்டேன். அதற்கு அவர் "ஆம்; அவற்றின் திமில்களையும் பிளந்து எடுத்துக்கொண்டே அவர் சென்றார்" என்று கூறினார்கள்.
(தொடர்ந்து அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)
என்னை அதிர்ச்சியடையச் செய்த அந்தக் காட்சியை கண்ட நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் நடந்ததைத் தெரிவித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன். ஹம்ஸா (ரலி) அவர்களிடம் சென்று தமது கோபத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
அப்போது ஹம்ஸா தமது பார்வையை உயர்த்தி, "நீங்களெல்லாம் என் மூதாதையரின் அடிமைகள்தாமே?" என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஹம்ஸா போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு திரும்பாமல்) அப்படியே பின்வாக்கில் நடந்துவந்து அவர்களைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4005. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ருப் போரின்போது போர் செல்வத்திலிருந்து எனது பங்காக வயதான ஒட்டகம் ஒன்று கிடைத்திருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அன்றைய தினத்தில் (தமது பொறுப்பில் வந்த) ஐந்தில் ஒரு பாகத்திலிருந்து வயதான மற்றோர் ஒட்டகத்தை எனக்கு வழங்கியிருந்தார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வி பாத்திமா(வை மணந்து) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்க விரும்பியபோது, "பனூ கைனுகா" குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவரிடம், அவர் என்னுடன் வந்து "இத்கிர்" புல்லை நாங்கள் கொண்டுவருவோம் எனச் சொல்லியிருந்தேன். அந்தப் புல்லைப் பொற்கொல்லர்களுக்கு விற்று அந்தப் பணத்தை என் மணவிருந்துக்குப் பயன்படுத்திக்கொள்ள விரும்பியிருந்தேன். அதற்காக நான் என் ஒட்டகங்களுக்கான சேண இருக்கைகளையும், தீவனப் பைகள் மற்றும் கயிறுகளையும் சேகரிக்கலானேன்.
அப்போது என் இரு ஒட்டகங்களும் அன்சாரீ ஒருவரது அறையின் அருகே படுக்கவைக்கப் பட்டிருந்தன. நான் சேகரிக்க விரும்பியவற்றைச் சேகரித்துவிட்டபோது (திரும்பிவந்தேன். அப்போது) என் இரு ஒட்டகங்களின் திமில்களும் பிளக்கப்பட்டிருந்தன. அவற்றின் இடுப்புப் பகுதியும் பிளக்கப்பட்டு, அதன் ஈரக்குலைகள் வெளியே எடுக்கப்பட்டிருந்தன. அவற்றின் இந்த (அவலக்) காட்சியைக் கண்டபோது என்னால் என் கண்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. (அழுதுவிட்டேன்.)
நான், "இதைச் செய்தவர் யார்?" என்று கேட்டேன். மக்கள், "ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப்’தாம் இப்படிச் செய்துவிட்டார். அவர் இந்த வீட்டில் அன்சாரிகளின் மது அருந்தும் குழுவினருடன் இருக்கிறார். அவருக்காக அவருடைய நண்பர்களும் அடிமைப் பாடகி ஒருத்தியும் பாட்டுப் பாடுகின்றனர்.
அவள் தமது பாடலில் "ஹம்ஸா! இந்தக் கிழம் ஒட்டகங்களுக்கு (நீரே போதும்! ஒரு கை பார்ப்பீராக!)" என்று பாடினாள். உடனே வாளுடன் எழுந்த ஹம்ஸா, அவ்விரு ஒட்டகங்களின் திமில்களைப் பிளந்தார். அதன் இடுப்புப் பகுதியைப் பிளந்து, அவற்றின் ஈரக்குலைகளை வெளியே எடுத்துக்கொண்டார்" என்று பதிலளித்தனர்.
உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் இருந்தார்கள். எனது முகத்தைப் பார்த்து நான் சந்தித்த (துயரத்)தை அறிந்துகொண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று (நடந்ததைப்) போன்று (ஓர் அவலத்தை) நான் ஒருபோதும் கண்டதில்லை. ஹம்ஸா என் ஒட்டகங்களிடம் எல்லை மீறி நடந்துவிட்டார். அவற்றின் திமில்களை வெட்டித் துண்டாடிவிட்டார். அவற்றின் இடுப்பைப் பிளந்துவிட்டார். இதோ அவர் இப்போது ஒரு வீட்டில் மது அருந்தும் குழுவினருடன் இருக்கிறார்" என்று சொன்னேன்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மேலங்கியைக் கொண்டுவரச் சொல்லி அதை அணிந்துகொண்டு நடந்துசென்றார்கள். அவர்களை நானும் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் பின்தொடர்ந்தோம். ஹம்ஸா இருந்த (வீட்டு)வாசல் வந்தவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உள்ளே செல்ல) அனுமதி கேட்டார்கள். அவர்கள் அனுமதி தந்தனர். அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹம்ஸாவை அவர் செய்த காரியத்திற்காகக் கண்டிக்கலானார்கள்.
அப்போது ஹம்ஸாவின் கண்கள் சிவந்திருந்தன. ஹம்ஸா (தலையை உயர்த்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தார். பிறகு தமது பார்வையைத் தாழ்த்தி அவர்களின் இரு முழங்கால் பகுதிகளைப் பார்த்தார். பிறகு மீண்டும் பார்வையை உயர்த்தி வயிற்றுப் பகுதியைப் பார்த்தார். பிறகு இன்னும் சற்று தலையை உயர்த்தி முகத்தைப் பார்த்தார். பிறகு, "நீங்களெல்லாம் என் தந்தையின் அடிமைகள்தாமே?" என்று கூறினார்.
அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல்) அப்படியே பின்வாக்கில் எட்டுவைத்து, வந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
4006. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மது தடைசெய்யப்பட்ட நாளன்று நான் அபூதல்ஹா (ரலி) அவர்களது இல்லத்தில் மக்களுக்கு மது பரிமாறிக்கொண்டிருந்தேன். அந்நாட்களில் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்கள், கனிந்த பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பேரீச்ச மதுவையே (ஃபளீக்) அவர்கள் அருந்தினர்.
(மதுவைத் தடைசெய்யும் இறைவசனம் அருளப்பெற்றதும்) ஒரு பொது அறிவிப்பாளர் "(மக்களே!) மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று அறிவிப்புச் செய்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் (என்னிடம்), "வெளியே போய் பார்(த்து வா)" என்று கூறினார்கள். அவ்வாறே நான் வெளியில் சென்றேன். அங்கு பொது அறிவிப்பாளர் ஒருவர் "அறிந்துகொள்ளுங்கள். மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று அறிவிப்புச் செய்துகொண்டிருந்தார்.
(இந்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் மதுவை வீட்டுக்கு வெளியே ஊற்றினர்.) மதீனாவின் தெருக்களில் மது ஓடியது. அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், "வெளியே சென்று இதையும் ஊற்றிவிடு" என்று (தம்மிடமிருந்த மதுவைக் கொடுத்து) கூறினார். அவ்வாறே நான் அதை ஊற்றிவிட்டேன்.
அப்போது மக்கள் (அல்லது மக்களில் சிலர்) "மது, தம் வயிறுகளில் இருக்கும் நிலையில் இன்ன மனிதர் கொல்லப்பட்டார். இன்ன மனிதர் கொல்லப்பட்டார் (அவர்களின் நிலை என்னவாகுமோ!)" என்று கூறினர்.
(இந்த வாசகம் அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பிலேயே உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை என அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்).
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "(இறைவனை) அஞ்சி, இறைநம்பிக்கை கொண்டு,நல்லறங்கள் செய்து, பிறகு அஞ்சி, இறைநம்பிக்கை கொண்டு, பின்னரும் அஞ்சி, நன்மைகளைச் செய்வார்களானால் (தடுக்கப்பட்டவற்றை முன்னர்) உட்கொண்டதற்காக இறைநம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர்மீது எந்தக் குற்றமுமில்லை" (5:93) எனும் வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 36
4007. அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் பேரீச்சங்காய் மது (ஃபளீக்) குறித்துக் கேட்டனர். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் "ஃபளீக்" எனக் குறிப்பிடும் இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) எங்களிடம் இருக்கவில்லை.
(ஒரு நாள்) நான் எங்கள் வீட்டில் (என் தாயாரின் இளைய கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் அபூஅய்யூப் (ரலி) அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் வேறுசிலருக்கும் மது பரிமாறுவதில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, "உங்களுக்கு அச்செய்தி எட்டியதா?" என்று கேட்டார். நாங்கள் "இல்லை" என்றோம். அவர், "மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார்.
அப்போது அபூதல்ஹா (ரலி) அவர்கள், "அனஸே! இந்த மதுப்பீப்பாயைக் கீழே கொட்டிவிடு" என்று கூறினார்கள். அந்த மனிதர் செய்தி தெரிவித்த பிறகு நபித்தோழர்கள் மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை. (உறுதி செய்துகொள்வதற்காக) மதுவைப் பற்றி (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை.
அத்தியாயம் : 36
4008. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் எங்கள் உறவினரிடையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு, அவர்களுக்குரிய பேரீச்சங்காய் மதுவைப் பரிமாறிக்கொண்டிருந்தேன். நானே அவர்களில் (வயதில்) சிறியவனாயிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து "மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று தெரிவித்தார். உடனே என் தந்தையின் சகோதரர்கள், "அனஸே! இதைக் கவிழ்த்துவிடு" என்று கூறினார்கள். அவ்வாறே நான் அதைக் கவிழ்த்துவிட்டேன்.
இதன் அறிவிப்பாளரான சுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "அ(வர்களுடைய ம)து எ(த்தகைய)து?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களிலிருந்தும் பேரீச்சச் செங்காய்களிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்" என்று பதிலளித்தார்கள். அப்போது அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் "அதுவே அன்றைய நாட்களில் அவர்களின் மதுபானமாக இருந்தது" என்று (விளக்கிக்) கூறினார். சுலைமான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இவ்வாறு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களே கூறியதாக மற்றொரு மனிதர் எனக்கு அறிவித்தார்.
அத்தியாயம் : 36
4009. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் என் உறவினரிடையே நின்று (மது) பரிமாறிக்கொண்டிருந்தேன்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், அதில் பின்வருமாறு காணப்படுகிறது:
அப்போது அபூபக்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் "அதுவே அன்றைய நாளில் அவர்களின் மதுபானமாக இருந்தது" என்று கூறினார்கள். அந்த இடத்தில் அனஸ் (ரலி) அவர்களும் இருந்தார்கள். அ(பூபக்ர் அவ்வாறு கூறிய)தை அனஸ் (ரலி) அவர்கள் மறுக்கவில்லை.
முஅதமிர் பின் சுலைமான் பின் தர்கான் (ரஹ்) அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில், "அன்றைய நாளில் அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது" என அனஸ் (ரலி) அவர்களே கூறியதை நான் கேட்டேன் என என்னுடனிருந்த ஒருவர் எனக்கு அறிவித்தார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 36
4010. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அன்சாரிகளில் ஒரு குழுவில் அபூதல்ஹா (ரலி), அபூதுஜானா (ரலி) மற்றும் முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோருக்கு மது பரிமாறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் உள்ளே வந்து, "புதிதாக ஒரு செய்தி வந்துள்ளது. மதுவைத் தடைசெய்யும் இறை வசனம் அருளப்பெற்றுள்ளது" என்று கூறினார்.
அன்றைய தினத்தில் நாங்கள் மதுவைக் கவிழ்த்துவிட்டோம். அ(ப்போதைய ம)து, நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் கனிந்த பேரீச்சம் பழங்களிலிருந்தும் கலந்து தயாரிக்கப்பட்டதாகவே இருந்தது.
இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"மது தடைசெய்யப்பட்டபோது மக்களின் மதுபானங்களில் பெரும்பாலனவை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களிலிருந்தும் கனிந்த பேரீச்சம் பழங்களிலிருந்தும் கலந்து தயாரித்தவையாகவே இருந்தன" என்று அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் தோல் பையிலிருந்து நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயிலிருந்தும் கனிந்த பேரீச்சம் பழத்திலிருந்தும் கலந்து தயாரித்த மது பானத்தை அபூதல்ஹா (ரலி), அபூ துஜானா (ரலி) மற்றும் சுஹைல் பின் பைளா (ரலி) ஆகியோருக்குப் பரிமாறிக்கொண்டிருந்தேன்" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 36
4011. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கனிந்த பேரீச்சம் பழத்தையும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயையும் கல(ந்து ஊறவை)க்க வேண்டாம் என்றும் பின்னர் அதை அருந்த வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள். மது தடைசெய்யப்பட்ட நாளில் அவர்களுடைய பொதுவான மதுபானம் அதுவாகவே இருந்தது.
அத்தியாயம் : 36
4012. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), அபூதல்ஹா (ரலி) மற்றும் உபை பின் கஅப் (ரலி) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங்காய்களாலும் பேரீச்சங்கனிகளாலும் தயாரித்த மதுபானத்தை நான் பரிமாறிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து "மது தடைசெய்யப்பட்டுவிட்டது" என்று கூறினார்.
உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள், "அனஸே! எழுந்து இந்தப் பாத்திரங்களை உடைத்துவிடு" என்று கூறினார்கள். அவ்வாறே நான் எங்களது கல்பாத்திரம் ஒன்றை நோக்கி எழுந்து, அதன் அடிப்பாகத்தில் அடித்தேன். அது உடைந்துவிட்டது.
அத்தியாயம் : 36
4013. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் மதுவைத் தடைசெய்யும் வசனத்தை அருளியபோது, மதீனாவில் கனிந்த பேரீச்சங்கனிகளில் தயாரிக்கப்படும் மதுபானத்தைத் தவிர வேறெந்த மதுபானமும் இருக்கவில்லை.
அத்தியாயம் : 36
பாடம் : 2 மதுபானத்தை (சமையல்) காடியாக மாற்றுவது தடைசெய்யப்பட்டதாகும்.
4014. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இல்லை (மாற்றக் கூடாது)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 3 மதுவை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு வந்துள்ள தடை.
4015. வாயில் பின் ஹுஜ்ர் அல்ஹள்ரமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் அல்ஜுஅஃபீ (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள்; அல்லது அதை வெறுத்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், "மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது மருந்தல்ல; நோய்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 36
பாடம் : 4 பேரீச்சம் பழம், திராட்சை ஆகியவற்றை ஊறவைத்துத் தயாரிக்கப்படும் எல்லாப் பழச்சாறுகளும் (போதை தருமானால்) "மதுபானம்" ("கம்ர்") என்றே அழைக்கப்படும்.
4016. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மது (கம்ர்), இவ்விரு மரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. அவை: 1. பேரீச்சை 2. திராட்சை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4017. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
மது, இவ்விரு மரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. அவை: 1. பேரீச்சை 2. திராட்சை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 36
4018. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மது, இவ்விரு மரங்களிலிருந்தே தயாரிக்கப்படுகிறது. அவை: 1. திராட்சை 2. பேரீச்சை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (திராட்சை, பேரீச்சை என்பதைக் குறிக்க அல்கர்மத், அந்நக்லத் என்பதற்குப் பதிலாக) அல்கர்ம், அந்நக்ல் எனும் சொற்கள் ஆளப்பட்டுள்ளன.
அத்தியாயம் : 36