3985. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சி உண்ணப்படுவதைத் தடைசெய்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான சாலிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்கள், குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ணமாட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3986. அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் வாகித் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்" என்று கூறினார்கள். இதை நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் பின் வாகித் சொன்னது உண்மையே. ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அள்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "(குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்துவையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆனபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல் பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதனால் என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நம்மை நாடி) வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சியை உண்ண வேண்டாமென) உங்களைத் தடுத்தேன். இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்துவையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 35
3987. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் என (முதலில்) தடை விதித்தார்கள். பின்னர் (அந்தத் தடையை நீக்கி) "நீங்களும் உண்ணலாம். பயணத்திலும் எடுத்துச் செல்லலாம். சேமித்தும்வைக்கலாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 35
3988. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மினாவில் தங்கும் நாளிலிருந்து மூன்று நாட்களுக்கு மேல் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை உண்ணாமல் இருந்தோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இப்போது நீங்கள் உண்ணலாம்;சேமித்தும்வைக்கலாம்" என்று கூறி, எங்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம் "நாங்கள் மதீனா வரும்வரை (சேமித்துவைத்தோம்)" என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 35
3989. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்காமல் இருந்துவந்தோம். பின்னர் அதை (மூன்று நாட்களுக்கு மேல்) பயண உணவாக எடுத்துச் சென்று, அதை உண்ணுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 35
3990. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மதீனாவுக்குச் செல்லும்போது, குர்பானிப் பிராணியின் இறைச்சியைப் பயண உணவாக எடுத்துச் செல்வோம்.
அத்தியாயம் : 35
3991. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "மதீனாவாசிகளே! குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் உண்ணாதீர்கள்" என்று கூறினார்கள்.
அப்போது மதீனாவாசிகள், தங்களுக்குக் குழந்தை குட்டிகளும் (இன்பம் துன்பங்களில் பங்கெடுக்கும்) உதவியாளர்களும் ஊழியர்களும் இருப்பதாக(வும் அவர்களுக்குக் கொடுப்பதற்கு இறைச்சி வேண்டும் எனவும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்களும் உண்ணுங்கள். (பிறருக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்தும் வையுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னுல் முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "சேமித்தும் வையுங்கள்" என்பதைக் குறிக்க "இஹ்பிஸூ" அல்லது "இத்தகிரூ" என்று ஐயப்பாட்டுடன் அப்துல் அஃலா (ரஹ்) அவர்களே அறிவித்தார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 35
3992. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஓர் ஆண்டில்) "உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சியில்) எதையும் வைத்திருக்க வேண்டாம்" என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமா?" என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை (அவ்வாறு செய்ய வேண்டியதில்லை); அந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 35
3993. ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டு, "ஸவ்பான்! இந்த இறைச்சியை (பயணத்தில் கொண்டுசெல்வதற்கேற்ப) தயார் செய்" என்று கூறினார்கள். நான் (அவ்வாறே தயார் செய்து) மதீனா வரும்வரை அதிலிருந்து அவர்களுக்கு உண்ணக் கொடுத்துக்கொண்டேயிருந்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3994. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "இந்த இறைச்சியை (பயணத்தில் கொண்டு செல்வதற்கேற்ப) தயார் செய்" என்று கூறினார்கள். அவ்வாறே நான் தயார் செய்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா சென்றடையும்வரை அதை உண்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "விடைபெறும் ஹஜ்ஜின்போது" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 35
3995. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடக்கத்தலங்களைச் சந்திக்க வேண்டாம் என உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் உண்ண வேண்டாமென உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி, உங்களுக்கு எவ்வாறு தோன்றுகிறதோ அவ்வாறு அதைச் சேமித்துவையுங்கள்.
தோல் பையில் தவிர வேறெதிலும் பழச்சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி, நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால், போதை தரக்கூடிய எதையும் பருகாதீர்கள்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் புரைதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
பாடம் : 6 ஆடு அல்லது ஒட்டகத்தின் முதலாவது குட்டியைப் பலியிடுவதும் (அல் ஃபரஉ), ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில் பிராணிகளைப் பலியிடுவதும் (அல்அத்தீரா).
3996. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இனி,) தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை; (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில்) பிராணிகளைப் பலியிடுதலும் இல்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ராஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "(ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டி "ஃபரஉ" ஆகும். அதை (அறியாமைக் கால) மக்கள் பலியிட்டுவந்தனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 35
பாடம் : 7 குர்பானி கொடுக்க எண்ணியிருப்பவர் துல்ஹஜ் மாதத்தின் (முதல்) பத்து நாட்களில் தலைமுடியையோ நகங்களையோ களைவதற்கு வந்துள்ள தடை.
3997. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம்.
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், "இது நபி (ஸல்) அவர்கள் கூறியதன்று எனச் சிலர் கூறுகிறார்களே!" என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "இது நபி (ஸல்) அவர்கள் கூறியதுதான் என்று நான் அறிவிக்கிறேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 35
3998. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது, (துல் ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் ஆரம்பித்துவிட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம்.
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 35
3999. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்!
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
4000. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரிடம் அவர் அறுப்பதற்கான குர்பானிப் பிராணி இருந்து, துல்ஹஜ் பிறை காணப்பட்டு விட்டால், அவர் குர்பானி கொடுக்காத வரை தமது தலைமுடியையோ நகங்களையோ சிறிதும் வெட்ட வேண்டாம்.
இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அம்ர் பின் முஸ்லிம் பின் அம்மார் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஈதுல் அள்ஹா பெருநாளுக்குச் சில நாட்களுக்கு முன் நாங்கள் வெண்ணீர் குளியல் அறையில் இருந்தபோது, சிலர் தம் மறைவிடத்திலிருந்த ரோமங்களை அகற்றினர்.
அப்போது குளியலறையில் இருந்த ஒருவர், "(குர்பானி கொடுக்க எண்ணியிருப்பவர் துல்ஹஜ் முதல் பத்துநாட்களில்) இ(வ்வாறு ரோமங்களை அகற்றுவ)தை சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் வெறுக்கிறார்கள்; அல்லது அவ்வாறு அகற்ற வேண்டாமெனத் தடை செய்கிறார்கள்" என்று கூறினார்.
ஆகவே, நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களைச் சந்தித்து அதைப் பற்றி அவர்களிடம் கூறினேன். அப்போது சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள், "என் சகோதரர் மகனே! இந்த ஹதீஸ் மறக்கப்பட்டுக் கைவிடப்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று எனக்கு அறிவித்தார்கள்" என்று கூறி னார்கள்.
- அம்ர் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
பாடம் : 8 அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறிப் பிராணிகளை அறுப்பது தடை செய்யப் பட்டதாகும் என்பதும் அவ்வாறு செய்பவர் சாபத்திற்குரியவர் என்பதும்.
4001. அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "உங்களிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக என்ன கூறி வந்தார்கள்?" என்று கேட்டார். இதைக் கேட்டு அலீ (ரலி) அவர்கள் கோபமுற்றார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் மூடி மறைக்கும் விதமாக எதையும் என்னிடம் இரகசியமாகக் கூறவில்லை. எனினும், நான்கு செய்திகளை என்னிடம் கூறினார்கள்" என்றார்கள். நான், "அவை யாவை, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே?" என்று கேட்டேன்.
அலீ (ரலி) அவர்கள், "தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல்,மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
4002. அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களுக்கு இரகசியமாகச் சொன்ன ஏதேனும் விஷயத்தை எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டோம்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் மறைத்து விட்டு எதையும் என்னிடம் மட்டும் இரகசியமாகச் சொல்லவில்லை. ஆயினும் அவர்கள், "அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லா) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். தம் பெற்றோரைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல், மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அத்தியாயம் : 35
4003. அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா?" என்று கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை; இதோ இந்த வாளுறையில் இருப்பதைத் தவிர" என்று கூறிவிட்டு, ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:
அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கின்றான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35

பாடம் : 1 மதுவிலக்கும் திராட்சைப் பழச்சாறு, பேரீச்சங்கனி, பேரீச்சச் செங்காய், உலர்ந்த திராட்சை உள்ளிட்டவற்றிலிருந்து தயாரிக்கப்படும் போதையூட்டும் ஒவ்வொன்றும் மதுவே என்பதன் விளக்கமும்.
4004. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ருப் போரில் கிடைத்த செல்வங்களில் (எனது பங்காக) வயதான ஒட்டகம் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து பெற்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது பொறுப்பில் வந்த ஐந்தில் ஒரு பாகத்திலிருந்து) வயதான மற்றோர் ஒட்டகத்தையும் எனக்கு வழங்கினார்கள்.
ஒரு நாள் நான் அவ்விரண்டு ஒட்டகங்களையும் அன்சாரி ஒருவரின் வீட்டுவாசலருகே படுக்கவைத்திருந்தேன். "இத்கிர்" எனும் புல்லை அவற்றின் மீது ஏற்றிச் சென்று, விற்க வேண்டுமென நான் நினைத்திருந்தேன். அப்போது "பனூ கைனுகா" குலத்தைச் சேர்ந்த பொற்கொல்லர் ஒருவர் என்னுடன் (அதற்கு உதவியாக வர) இருந்தார். ஃபாத்திமா(வை மணம் புரிந்த) "வலீமா" விருந்துக்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன்.
(நான் ஒட்டகத்தைப் படுக்கவைத்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (மது) அருந்திக்கொண்டிருந்தார். அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள் "ஹம்ஸா! கொழுத்த இந்தக் கிழம் ஒட்டகங்களுக்கு (நீரே போதும். ஒரு கை பார்ப்பீராக!)" என்று (யாப்பு வகைப் பாடலைப்) பாடினாள்.
உடனே ஹம்ஸா (ரலி) அவர்கள் வாளுடன் அவ்விரு ஒட்டகங்களை நோக்கிப் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டிச் சாய்த்தார்; அவற்றின் இடுப்பைப் பிளந்து, பின்னர் ஈரக்குலைகளை வெளியே எடுத்தார்.
- இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் எனக்கு இதை அறிவித்த இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் "திமில்களையுமா அவர் வெளியே எடுத்தார்?" என்று கேட்டேன். அதற்கு அவர் "ஆம்; அவற்றின் திமில்களையும் பிளந்து எடுத்துக்கொண்டே அவர் சென்றார்" என்று கூறினார்கள்.
(தொடர்ந்து அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)
என்னை அதிர்ச்சியடையச் செய்த அந்தக் காட்சியை கண்ட நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் நடந்ததைத் தெரிவித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் நடந்தேன். ஹம்ஸா (ரலி) அவர்களிடம் சென்று தமது கோபத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
அப்போது ஹம்ஸா தமது பார்வையை உயர்த்தி, "நீங்களெல்லாம் என் மூதாதையரின் அடிமைகள்தாமே?" என்று கூறினார். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஹம்ஸா போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு திரும்பாமல்) அப்படியே பின்வாக்கில் நடந்துவந்து அவர்களைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 36