3913. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்பது தடை செய்யப்பட்டதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3914. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
பாடம் : 4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு வந்துள்ள அனுமதி.
3915. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரின் வணிகக் குழுவொன்றை எதிர்கொள்ள படைப் பிரிவு ஒன்றில் எங்களை அனுப்பினார்கள்.
எங்களுக்கு அபூஉபைதா பின் அல்ஜர் ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். ஒரு பை பேரீச்சம் பழத்தை எங்களுக்குப் பயண உணவாகக் கொடுத்தார்கள். எங்களுக்குக் கொடுக்க வேறெதையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. அபூஉபைதா (ரலி) அவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு பேரீச்சம் பழமாக எங்களுக்குக் கொடுத்துவந்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்) "அதை வைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள்? (அது உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்காதே?)" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: குழந்தை வாயிலிட்டுச் சுவைப்பதைப் போன்று நாங்களும் அந்தப் பேரீச்சம் பழத்தைச் சுவைப்போம். அதற்கு மேல் தண்ணீரும் அருந்திக்கொள்வோம். அன்றைய பகலிலிருந்து இரவு வரை அதுவே எங்களுக்குப் போதுமானதாயிருக்கும்.
நாங்கள் எங்களிடமிருந்த தடிகளால் கருவேல மரத்தில் அடி(த்து இலை பறி)ப்போம். பிறகு அதைத் தண்ணீரில் நனைத்து அதையும் உண்டோம்.
பிறகு நாங்கள் கடற்கரையோரமாக நடந்தோம். அப்போது கடலோரத்தில் பெரிய மணல் திட்டைப் போன்று ஏதோ ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. அங்கு நாங்கள் சென்றோம். அங்கே "கொழுப்புத் தலை திமிங்கலம்" (அம்பர்) எனப்படும் ஒரு பிராணி கிடந்தது.
(தளபதி) அபூஉபைதா (ரலி) அவர்கள் "செத்ததாயிற்றே?" என்று கூறினார்கள். பிறகு "இல்லை, நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதர்கள் ஆவோம். அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உள்ளோம். நீங்கள் நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே, (இதை) உண்ணுங்கள்" என்று கூறினார்கள்.
அந்தத் திமிங்கலத்தை வைத்துக்கொண்டு நாங்கள் ஒரு மாதம் கழித்தோம். எங்கள் முந்நூறு பேரின் உடலும் வலிமையாகிவிட்டது. நாங்கள் அந்தத் திமிங்கலத்தின் விழிப் பள்ளத்திலிருந்து பெரிய பாத்திரங்கள் மூலம் எண்ணெய் எடுத்தோம். அதன் உடலைக் காளை மாட்டின் அளவுக்குத் துண்டு போட்டோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களில் பதிமூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, அதன் விழிப் பள்ளத்தில் உட்காரவைத்தார்கள்.
மேலும், அதன் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து, அதை (பூமியில்) நட்டுவைத்தார்கள். பிறகு எங்களிடமிருந்த ஒரு பெரிய ஒட்டகத்தில் சிவிகை பூட்டி அதில் ஏறி அந்த எலும்பிற்குக் கீழே கடந்துபோனார்கள். (அந்த எலும்பு தலையைத் தொடவில்லை. அந்த அளவுக்குப் பெரியதாக இருந்து.) பிறகு அந்த மீனை (அரை வேக்காட்டில்) வேகவைத்து, பயண உணவாக எடுத்துக்கொண்டோம்.
நாங்கள் மதீனா வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களிடம் தெரிவித்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும். அதில் ஏதேனும் உங்களிடம் மீதியிருந்தால் நமக்கும் உண்ணக் கொடுங்களேன்!" என்று கேட்டார்கள்.
உடனே நாங்கள் அதிலிருந்து சிறிதளவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினோம். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3916. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் முந்நூறு பேரை ஒரு படைப்பிரிவில் வாகனங்களில் அனுப்பினார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் எங்கள் (படைக்குத்) தளபதியாக இருந்தார்கள்.
நாங்கள் குறைஷியரின் வணிகக் குழுவொன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆகவே, நாங்கள் கடற்கரையில் அரை மாதம் தங்கினோம். (இந்நாட்களில் உணவுப் பற்றாக் குறையால்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. எனவே,நாங்கள் கருவேல மரத்தின் இலைகளைப் புசித்தோம். ஆகவேதான், அந்தப் படைப்பிரிவு "கருவேலஇலை படைப்பிரிவு" எனப் பெயர் பெற்றது.
இந்த (இக்கட்டான சூழ்)நிலையில் கடல் எங்களுக்கு "அல்அம்பர்" (கொழுப்புத் தலைத் திமிங்கலம்) எனப்படும் (ஒரு வகைக் கடல்வாழ்) உயிரினத்தை ஒதுக்கியது. நாங்கள் அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக்கொண்டோம். அ(ந்த மீனைப் புசித்த)தனால் (வலிமையான) உடல்கள் எங்களுக்குத் திரும்பக் கிடைத்தன.
அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்த மீனின் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுப் பிறகு,படையிலிருந்த உயரமான மனிதரையும், உயரமான ஒட்டகம் ஒன்றையும் கண்டு(பிடித்து), அவரை அந்த ஒட்டகத்தில் ஏற்றி அனுப்ப, அவர் அந்த எலும்பிற்குக் கீழே (தலை முட்டாமல்) கடந்து சென்றார்.
அந்த மீனுடைய கண்ணின் எலும்புக்குள் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அதன் விழிப் பள்ளத்திலிருந்து நாங்கள் இப்படி இப்படி பெரிய பாத்திரத்தில் கொழுப்பை எடுத்தோம்.
(அந்தப் பயணத்தின் துவக்கத்தில்) எங்களுடன் ஒரு பை நிறைய பேரீச்சம் பழங்கள் இருந்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கைப் பிடி பேரீச்சம் பழம் கொடுத்துவந்தார்கள். பிறகு (நாட்கள் செல்லச் செல்ல) ஒவ்வொரு பேரீச்சம் பழம் தந்தார்கள். அதுவும் தீர்ந்து விட்டபோதுதான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம்.
அத்தியாயம் : 34
3917. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கருவேல இலை"ப் படைப்பிரிவின் போது, ஒரு மனிதர் (கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள்) மூன்று ஒட்டகங்கள் அறு(த்து உணவளி)த்தார். பிறகு மூன்று ஒட்டகங்கள் அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்கள் அறுத்தார். பிறகு (அவர் அறுக்க முற்பட்டபோது) அவரை அபூஉபைதா (ரலி) அவர்கள் தடுத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 34
3918. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களில் முந்நூறு பேரை ஒரு படைப்பிரிவில் அனுப்பினார்கள். நாங்கள் எங்கள் பயண உணவை எங்கள் தோள்களில் சுமந்து எடுத்துச் சென்றோம்.
அத்தியாயம் : 34
3919. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முந்நூறு பேர் கொண்ட படைப்பிரிவொன்றை அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் தலைமையில் அனுப்பினார்கள்.
அவர்களிடமிருந்த பயண உணவுகள் தீர்ந்துவிட்டபோது, அபூஉபைதா (ரலி) அவர்கள் படைப் பிரிவினரிடமிருந்த உணவுகளை ஒரு பையில் சேகரித்தார்கள். அதையே எங்களுக்கு உணவாக விநியோகித்தார்கள். இறுதியில் நாள் ஒன்றுக்கு ஒரு பேரீச்சம் பழம் மட்டுமே எங்களுக்குக் கிடைத்தது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரைக்கு (சீஃபுல் பஹ்ர்) அனுப்பினார்கள். அப்படையில் நானும் ஒருவனாயிருந்தேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட அறிவிப்புகளில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இதில் வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "படைப் பிரிவினர் அந்த (மீன்) உணவைப் பதினெட்டு இரவுகள் உண்டனர்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஜுஹைனா" குலத்தார் வசிக்கும் பகுதியை நோக்கிப் படைப்பிரிவொன்றை அனுப்பினார்கள். அவர்களுக்கு ஒரு மனிதரைத் தளபதியாக நியமித்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 34
பாடம் : 5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்கு வந்துள்ள தடை.
3920. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தவணைமுறைத் திருமணத்திற்கும் ("முத்ஆ"),நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 34
3921. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3922. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3923. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளன்று நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள். (அன்றைய தினத்தில்) மக்களுக்கு அந்த இறைச்சியின் தேவை இருக்கவே செய்தது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3924. சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம் நாட்டுக் கழுதைகளின் இறைச்சி(யை உண்பது) குறித்துக் கேட்டேன். அவர்கள், "கைபர் போர் நாளன்று எங்களுக்குப் பசி ஏற்பட்டது. அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அந்த நகரிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த, அந்த ஊர் மக்களுக்குச் சொந்தமான (நாட்டுக்) கழுதைகளை நாங்கள் (போர்ச் செல்வமாகப்) பெற்றோம். அவற்றை நாங்கள் அறுத்தோம். எங்கள் பாத்திரங்களில் கழுதைகளின் இறைச்சி வெந்துகொண்டிருந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களில் ஒருவர் "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள். கழுதைகளின் இறைச்சிகளில் சிறிதும் உண்ணாதீர்கள்" என்று அறிவித்தார் எனத் தெரிவித்தார்கள்.
அப்போது நான், "எதற்காக அதற்குத் தடை விதித்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள், "(இந்த அறிவிப்பைச் செவியுற்ற) எங்களில் சிலர் "முற்றாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்துவிட்டார்கள்" என்றும், வேறுசிலர் "(அப்படியல்ல போர்ச்செல்வமாகக் கைப்பற்றிய) அந்தக் கழுதைகளிலிருந்து ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) செலுத்தப்படாததால்தான் (தாற்காலிகமாகத்) தடை செய்தார்கள்"என்றும் பேசிக்கொண்டோம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 34
3925. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் (முற்றுகை) நாட்களில் எங்களுக்கு(க் கடுமையான) பசி ஏற்பட்டிருந்தது. கைபர் போர் (தொடங்கிய) நாளன்று நாங்கள் நாட்டுக் கழுதைகளை (போர்ச் செல்வமாக)க் கைப்பற்றி அவற்றை அறுத்(துச் சமைத்)தோம்.
பாத்திரங்கள் கொதிக்கத் தொடங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள். கழுதைகளின் இறைச்சியில் சிறிதும் உண்ணாதீர்கள்" என்று (உரக்கக் கூவி) அறிவித்தார்.
அப்போது மக்களில் சிலர், "(போர்ச்செல்வமாகப் பிடிக்கப்பட்ட) அக்கழுதைகளிலிருந்து ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) செலுத்தப்படாததால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்" என்று கூறினர். வேறுசிலர், "(அப்படியல்ல;) முற்றாக அதற்குத் தடை விதித்து விட்டார்கள்" என்று கூறினர்.
அத்தியாயம் : 34
3926. பராஉ பின் ஆஸிப் (ரலி) மற்றும் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் (கைபர் போரின்போது நாட்டுக்) கழுதைகளை (போர்ச் செல்வமாக)க் கைப்பற்றி அவற்றைச் சமைத்துக்கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் ஒருவர் "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்" என்று அறிவிப்புச் செய்தார்.
அத்தியாயம் : 34
3927. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நாளன்று (நாட்டுக்) கழுதைகளை நாங்கள் (போர்ச் செல்வமாகக்) கைப்பற்றி (சமைக்கலா)னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் ஒருவர் "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்"என்று அறிவிப்புச் செய்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3928. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதென எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3929. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (கைபர் போரின்போது) நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை, அது பச்சையாயிருந்தாலும் சமைக்கப்பட்டிருந்தாலும் எறிந்துவிடுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதற்குப் பின்பு அதை உண்ணும்படி (அனுமதியளித்து) எங்களுக்கு அவர்கள் உத்தரவிடவே யில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3930. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்ததற்குக் காரணம், நாட்டுக் கழுதை மக்களின் பொதிகளைச் சுமந்து செல்லும் வாகனமாக இருப்பதால், (உண்ணப்படும் பட்சத்தில்) அவர்களுக்கு வாகனம் இல்லாமல் போய்விடும் என நபியவர்கள் அஞ்சியதா? அல்லது கைபர் நாளன்று நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கு (நிரந்தரமாக)த் தடை விதித்தார்களா என்பது எனக்குத் தெரியாது.
அத்தியாயம் : 34
3931. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காக)ப் புறப்பட்டோம். பிறகு கைபர்வாசிகளுக்கு எதிராக எங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான். வெற்றி பெற்ற அன்றைய மாலை வேளையில் மக்கள் அதிகமான நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது என்ன நெருப்பு? எதற்காக மூட்டியிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். "இறைச்சி சமைப்பதற்காக" என்று மக்கள் கூறினர். "எந்த இறைச்சி?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, "நாட்டுக் கழுதைகளின் இறைச்சி" என்று மக்கள் கூறினர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றைக் கொட்டிவிட்டு, அந்தப் பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்"என்று கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே, இறைச்சிகளைக் கொட்டிவிட்டு, பாத்திரங்களைக் கழுவிக்கொள்ளலாமா?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அப்படியே ஆகட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3932. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றிகொண்டபோது, அந்த ஊரிலிருந்து வெளியே வந்த நாட்டுக் கழுதைகளை நாங்கள் கைப்பற்றி, அவற்றை அறுத்துச் சமைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களில் ஒருவர், "அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீங்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதெனத் தடைசெய்கிறார்கள். அவை அசுத்தமானவையும் ஷைத்தானின் நடவடிக்கையும் ஆகும்" என்று அறிவிப்புச் செய்தார்.
உடனே பாத்திரங்கள் அவற்றில் உள்ளவற்றோடு கவிழ்க்கப்பட்டன. அப்போது அப்பாத்திரங்களில் இறைச்சி வெந்து கொதித்துக்கொண்டிருந்தது.
அத்தியாயம் : 34