3799. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்கா வெற்றியின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள் "மக்கா வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் (மக்காவைத் துறப்பது) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) எண்ணம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் புறப்பட்டுச் செல்லுங்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 33
3800. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாடு துறப்பது (ஹிஜ்ரத்) பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு நாசம்தான்! ஹிஜ்ரத்தின் நிலை மிகவும் கடினமானது. உன்னிடம் ஒட்டகங்கள் இருக்கின்றனவா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்" என்று விடையளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றுக்குரிய ஸகாத்தை நீ கொடுத்துவருகிறாயா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்" என்றார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், நீ பல ஊர்களுக்கு அப்பால் சென்றுகூட வேலை செய்(து வாழலாம்). ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்க(ளின் பிரதி பலன்க)ளிலிருந்து எதையும் குறைக்கமாட்டான்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ் உன் நற்செயல்க(ளின் பிரதிபலன்க)ளிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்" என்று இடம்பெற்றுள்ளது. ("ஏனெனில்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை.) மேலும் அந்த அறிவிப்பில், "அவ்வொட்டகங்கள் (நீர்நிலைகளுக்கு) நீரருந்தச் செல்லும் (முறை) நாளில் அவற்றின் பாலைக் கற(ந்து ஏழைகளுக்கு கொடு)க்கிறாயா?" என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் "ஆம்" என்று பதிலளித்தார்" எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 21 பெண்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) வாங்கிய முறை.
3801. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் (மக்காவிலிருந்து மதீனாவுக்கு) நாடு துறந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தால், பின்வரும் இறைவசனத்துக்கேற்ப அவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும். "நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து, தாம் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபச்சாரம் புரியமாட்டோம்... என்றெல்லாம் உறுதிப் பிரமாணம் அளித்தால், அதை ஏற்று, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக!" (60:12) என்பதே அந்த வசனமாகும்.
இறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் ("இணை வைக்கமாட்டோம், திருடமாட்டோம், விபச்சாரம் புரியமாட்டோம்"என்ற) இந்த நிபந்தனைகளுக்கு யார் ஒப்புதல் அளிக்கிறாரோ அவர் தேர்வில் வென்றுவிட்டார் என்று முடிவு செய்வார்கள். இந்த உறுதிமொழியை அப்பெண்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டுவிட்டால், அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கிவிட்டேன். நீங்கள் செல்லலாம்" என்று கூறுவார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! (உறுதிப் பிரமாணம் வாங்கும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய் மொழியாகவே அப்பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள்.
அல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப்பெண்களிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழியாகப்) பெறவில்லை. (உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணின் கையையும் ஒரு போதும் தொட்டதில்லை. அவர்களிடம் உறுதிமொழி வாங்கியதும் "உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக்கொண்டேன்" என்று வார்த்தையால் மட்டுமே கூறுவார்கள். (பொதுவாக ஆண்களிடம் உறுதிமொழி வாங்கும்போது கரம் பற்றுவதைப் போன்று பெண்களின் கரம் பற்றவில்லை.)
அத்தியாயம் : 33
3802. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களின் உறுதிப் பிரமாணம் (பைஅத்) தொடர்பாகக் கூறினார்கள்:
(பெண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை, எந்தப் பெண்ணையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய்மொழியாகவே பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அவ்வாறு உறுதிமொழி வாங்கியதும், "உன்னிடம் உறுதிமொழி பெற்றுக்கொண்டேன். நீ செல்லலாம்" என்று கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 22 இயன்றவரை செவியுற்றுக் கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்தல்.
3803. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களின் கட்டளைகளைச்) செவியுற்றுக் கீழ்ப்படிந்து நடப்போம் என உறுதிமொழி அளிக்கும்போது அவர்கள், "என்னால் முடிந்த விஷயங்களில்" என்று (சேர்த்துச் சொல்லுமாறு) கூறுவது வழக்கம்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 23 பருவ வயது எது என்பது பற்றிய விளக்கம்.
3804. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பதினான்கு வயதினனாக இருந்தபோது, உஹுதுடைய நாளில் போருக்காக (ஆட்கள் தேர்வு நடந்த சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நின்றேன். ஆனால், (போரில் கலந்துகொள்ள) எனக்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. (அடுத்த ஆண்டு நடந்த) அகழ்ப்போரின் போது, நான் அவர்களுக்கு முன் நின்ற சமயம் நான் பதினைந்து வயதினனாக இருந்தேன். அப்போது (போரில் கலந்துகொள்ள) எனக்கு அனுமதியளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கலீஃபாவாக இருந்தபோது அவர்களிடம் சென்று, (இப்னு உமர் (ரலி) அவர்களின்) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், "(அப்படியென்றால்) இதுதான் சிறியவருக்கும் பெரியவருக்கும் இடையே (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும்" என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (இராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படியும் அதைவிடக் குறைந்த வயது உடையவர்களைச் சிறுவர்களின் கணக்கில் சேர்த்துவிடும் படியும் தம் ஆளுநர்களுக்குக் கடிதம் எழுதினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் பதினான்கு வயதினனாக இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சிறுவனாகவே கருதினார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 24 இறைமறுப்பாளர்களின் கைகளில் சிக்கி (இழிவுபடுத்தப்பட்டு)விடக்கூடும் என்ற அச்சம் இருக்கும்போது, குர்ஆனை இறைமறுப்பாளர்களின் நாட்டுக்கு எடுத்துச் செல்லக் கூடாது.
3805. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குர்ஆன் பிரதியுடன் எதிரியின் நாட்டுக்குப் பயணம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.
அத்தியாயம் : 33
3806. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
குர்ஆன் பிரதியுடன் எதிரியின் நாட்டுக்குப் பயணம் செய்வதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். அது எதிரிகளின் கையில் அகப்(பட்டு இழிவுபடுத்தப்)படும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3807. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆன் பிரதியுடன் (எதிரியின் நாட்டுக்குப்) பயணம் செய்யாதீர்கள். ஏனெனில், அது எதிரிகளின் கையில் அகப்(பட்டு இழிவுபடுத்தப்)படுவதை என்னால் அஞ்சாமல் இருக்க முடியவில்லை.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (அப்படித் தான்) அதை எதிரிகள் எடுத்து வைத்துக்கொண்டு, உங்களுடன் அவர்கள் குதர்க்கவாதம் செய்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இஸ்மாயீல் பின் உலய்யா மற்றும் அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "அது எதிரிகளின் கையில் அகப்(பட்டு இழிவு படுத்தப்)படுவதை நான் அஞ்சுகிறேன்" என்று இடம்பெற்றுள்ளது.
சுஃப்யான் பின் உயைனா மற்றும் அள்ளஹ்ஹாக் பின் உஸ்மான் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "எதிரிகளின் கையில் அது அகப்(பட்டு இழிவுபடுத்தப்)படும் என்ற அச்சமே இதற்குக் காரணம்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 25 குதிரைப் பந்தயமும் அதற்காகக் குதிரையை மெலிய வை(த்துப் பயிற்சியளி)ப்பதும்.
3808. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலிய வைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே "அல்ஹஃப்யா" எனுமிடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். "ஸனிய்யத்துல் வதா" மலைக் குன்றே அதன் பந்தய எல்லையாக இருந்தது. (அவ்வாறே) மெலிய வைக்கப்படாத (பயிற்சியளிக்கப்படாத) குதிரைகளுக்கிடையே "ஸனிய்யத்துல் வதா"விலிருந்து பனூ ஸுரைக் பள்ளிவாசல்வரை பந்தயம் வைத்தார்கள். இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன் ஆவேன்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பதினாறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இஸ்மாயீல் பின் உலய்யா மற்றும் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "நான் அந்தப் பயணத்தில் முந்தி வந்தேன். அப்போது நானிருந்த குதிரை அந்தப் பள்ளிவாசலைத் தாவிக் குதித்தது" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 26 குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது.
3809. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை நன்மை உள்ளது.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3810. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குதிரையொன்றின் நெற்றி ரோமத்தைத் தம் விரலால் சுருட்டிவிட்டபடி "குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள்வரை போர்ச் செல்வமும் (மறுமையில் கிடைக்கும்) பிரதிபலன் என்ற நன்மையும் பிணைக்கப் பட்டிருக்கின்றன" என்று கூறியதை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3811. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அவை: (அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால் கிடைக்கும்) போர்ச்செல்வமும் (மறுமையில் கிடைக்கும்) பிரதிபலனும் ஆகும்.
இதை உர்வா பின் அல்ஜஅத் அல்பாரிக்கீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3812. உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குதிரைகளின் நெற்றிகளில் நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அது எப்படி?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால்) நன்மையும் போர்ச்செல்வமும் மறுமை நாள்வரை கிடைக்குமே!" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் (உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்களின் தந்தை பெயருடன் இணைத்து) உர்வா பின் அல்ஜஅத் (ரலி) என இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "(அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால்) பிரதிபலனும் போர்ச்செல்வமும் கிடைக்குமே!" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் உர்வா அல்பாரிக்கீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றிலும் "(அவற்றில் ஏறி அறப்போர் புரிவதால்) பிரதிபலனும் போர்ச்செல்வமும் கிடைக்குமே!" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
3813. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குதிரைகளின் நெற்றிகளில் அருள்வளம் (பரக்கத்) உள்ளது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 27 குதிரையின் தன்மைகளில் விரும்பத்தகாத அம்சம்.
3814. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குதிரைகளில் "ஷிகால்" வகையை விரும்பாதவர்களாக இருந்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3815. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துர் ரஸ்ஸாக் பின் ஹம்மாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஷிகால் என்பது குதிரையின் வலப்பக்கப் பின் காலிலும் இடப்பக்க முன் காலிலும் வெள்ளை நிறம் இருப்பதாகும். அல்லது வலப்பக்க முன் காலிலும் இடப்பக்கப் பின் காலிலும் வெள்ளை நிறம் காணப்படுவதாகும்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 28 அறப்போர் புரிதல் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் புறப்படுதல் ஆகியவற்றின் சிறப்பு.
3816. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் போராடுவதற்காகவும், அவன்மீது கொண்ட நம்பிக்கையாலும் அவனுடைய தூதர்களை மெய்ப்படுத்துவதற்காகவும் என்றே யார் அவனுடைய பாதையில் புறப்படுகிறாரோ அவரைச் சொர்க்கத்தில் நுழைய வைக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான். அல்லது அவர் பெற்ற நன்மையுடன் அல்லது போர்ச்செல்வத்துடன் அவர் புறப்பட்ட வீட்டுக்கே அவரைத் திரும்பக் கொண்டுபோய்ச் சேர்க்க அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்.
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! அல்லாஹ்வின் வழியில் (அறப்போரில்) காயப்படுத்தப்பட்டவர், அவர் காயப்பட்ட அதே நிலையில் மறுமை நாளில் வருவார். அவரது (விழுப்புண்ணிலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறத்திலிருக்கும். அதன் மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும்.
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! முஸ்லிம்களுக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற நிலை இல்லையாயின், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிய புறப்படும் அனைத்துப் படைப்பிரிவுகளிலும் கலந்து கொள்ளாமல் நான் ஒருபோதும் பின்தங்கமாட்டேன். (ஒன்று விடாமல் அனைத்திலும் கலந்திருப்பேன்.) ஆயினும், அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வதற்கு என்னிடமும் வாகன வசதிகள் இல்லை. அவர்களிடமும் வாகன வசதிகள் இல்லை. இந்நிலையில் என்னுடன் வராமல் பின்தங்கிவிடுவது அவர்களுக்கு மனவேதனையை உண்டாக்கும் (ஆகவேதான், அனைத்துப் படைப்பிரிவுகளிலும் நான் கலந்துகொள்ளவில்லை).
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டுப் பிறகு (உயிர் கொடுக்கப்பட்டு) மீண்டும் போரிட்டுக் கொல்லப்பட்டுப் பிறகு (உயிர்க் கொடுக்கப்பட்டு) மீண்டும் போரிட்டுக் கொல்லப்படுவதையே நான் விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3817. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், தனது பாதையில் அறப்போர் புரியச் சென்றவரைச் சொர்க்கத்தில் நுழைவிப்பேன்; அல்லது (மறுமையின்) நற்பலன் அல்லது அவர் அடைந்துகொண்ட போர்ச் செல்வம் ஆகியவற்றுடன் அவர் புறப்பட்ட அவரது இல்லத்திற்கே அவரைத் திருப்பி அனுப்புவேன் என்று பொறுப்பேற்றுக்கொண்டான். அவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடவும் அவனுடைய வார்த்தையை மெய்ப்பிக்கவுமே புறப்பட்டுச் சென்றிருக்க வேண்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3818. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) காயப்படுத்தப்பட்ட ஒருவர் -தனது பாதையில் காயப்படுத்தப்பட்டவர் யார் என்பதை அல்லாஹ் அறிவான்- தமது (விழுப்புண்ணிலிருந்து) குருதி கொப்புளிக்கின்ற நிலையிலேயே மறுமை நாளில் வருவார். அவரது (காயத்திலிருந்து வழியும் திரவத்தின்) நிறம் இரத்தத்தின் நிறத்திலிருக்கும். அதன் மணமோ கஸ்தூரி மணமாயிருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33