பாடம் : 1 மக்கள் அனைவரும் (ஆட்சியதிகாரத்தில்) குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருந்துவரும்.
3714. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். அவர்களில் இறைமறுப்பாளராயிருப்பவர் குறைஷியரில் இறை மறுப்பாளராயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3715. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் அனைவரும் இந்த (ஆட்சியதிகாரம்) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களில் முஸ்லிமாயிருப்பவர் குறைஷியரில் முஸ்லிமாயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார். மக்களில் இறை மறுப்பாளராயிருப்பவர் குறைஷியரில் இறைமறுப்பாளராயிருப்பவரைப் பின்பற்றுபவர் ஆவார்.
அத்தியாயம் : 33
3716. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நன்மையிலும் தீமையிலும் (இஸ்லாத்திலும், அறியாமைக்காலத்திலும்) மக்கள் அனைவரும் குறைஷியரைப் பின்பற்றுபவர்கள் ஆவர்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3717. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. - இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 33
3718. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு கலீஃபாக்கள் மக்களை ஆளாதவரை இந்த ஆட்சியதிகாரம் முடிவடையாது" என்று கூறிவிட்டு, பிறகு எனக்குக் கேட்காமல் இரகசியமாக ஏதோ (என் தந்தையிடம்) சொன்னார்கள்.
அப்போது நான் என் தந்தையிடம், "நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு என் தந்தை "அவர்கள் அனைவரும் குறைஷியர் ஆவர் (என்று கூறினார்கள்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3719. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், "பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் மக்களை ஆளும்வரை இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு எனக்குக் கேட்காத விதத்தில் ஏதோ (என் தந்தையிடம்) நபி (ஸல்) அவர்கள் இரகசியமாகக் கூறினார்கள். நான் என் தந்தையிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் "இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 33
3720. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இஸ்லாம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாக இருந்துவரும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு ஏதோ சொன்னார்கள். அதை நான் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களிடம், "என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு என் தந்தை, "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 33
3721. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "இந்த ஆட்சியதிகாரம் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாக இருந்துவரும்" என்று கூறிவிட்டுப் பிறகு ஏதோ சொன்னார்கள். அதை நான் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் என் தந்தையிடம், "என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 33
3722. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (சமுரா -ரலி) அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வரை வலிமையானதாகவும் பாதுகாப்போடும் இருந்துவரும்" என்று சொல்லக் கேட்டேன். பிறகு ஏதோ சொன்னார்கள். மக்கள் (பேசிக் கொண்டிருந்ததால்) அதைக் கேட்கவிடாமல் என்னைச் செவிடாக்கிவிட்டார்கள். எனவே, நான் என் தந்தையிடம், "நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3723. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அதை என் அடிமை நாஃபிஉ இடம் கொடுத்தனுப்பினேன். அதில் "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டிருந்தேன். அவர்கள் எனக்குப் பதில் கடிதம் எழுதினார்கள். (அதில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்கள்:)
ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று மாஇஸ் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் (விபசாரக் குற்றத்திற்காக) கல்லெறிந்து கொல்லப்பட்ட மாலைப் பொழுதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமைநாள் நிகழ்வதற்கு முன் உங்களைப் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் ஆளும்வரை இந்த மார்க்கம் (வலிமையுடன்) நிலைபெற்றிருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்" என்று கூறினார்கள்.
மேலும், முஸ்லிம்களில் ஒரு சிறு குழுவினர் (பாரசீக மன்னன்) குஸ்ரூவின் அல்லது குஸ்ரூ குடும்பத்தாரின் கோட்டையான வெள்ளை மாளிகையை வெற்றிகொள்வார்கள்.
மேலும், மறுமை நிகழ்வதற்கு முன் பெரும் பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்.
மேலும், அல்லாஹ் உங்களில் ஒருவருக்குச் செல்வத்தை வழங்கினால் முதலில் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் செவழிக்கட்டும்! மேலும், நான் உங்களை ("அல் கவ்ஸர்" தடாகத்தின் அருகில்) எதிர்பார்த்துக் காத்திருப்பேன் என்று கூறியதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸை எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 33
பாடம் : 2 ஆட்சித் தலைவரை நியமிப்பதும் நியமிக்காமல் விடுவதும்.
3724. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை (கலீஃபா உமர் (ரலி) அவர்கள்) தாக்கப்பட்டு (படுக்கையில்) இருந்தபோது அவர்கள் அருகில் நான் இருந்தேன். அப்போது அவர்களை மக்கள் பாராட்டிப் பேசினர். மேலும், "அல்லாஹ் உங்களுக்கு நற்பலனை வழங்கட்டும்" என்று கூறினர். அதற்கு என் தந்தை "(என்னைப்) பிடித்தோ பிடிக்காமலோ (பாராட்டுகிறீர்கள்)" என்று கூறினார்கள். அப்போது மக்கள், "நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமியுங்கள்" என்று கூறினர்.
அதற்கு, "நான் உயிரோடு இருக்கும்போதும் இறந்த பிறகும் உங்கள் விவகாரத்திற்குப் பொறுப்பேற்க வேண்டுமா? நான் வகித்த இந்தப் பதவியில் (இறைவனிடம்) எனது பங்கு எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்தால் போதும். நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அதற்கும் முன்மாதிரி உண்டு). ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவர் (அதாவது அபூபக்ர் (ரலி) அவர்கள்) அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றார்கள். (ஆட்சித் தலைவரை நியமிக்காமல்) அப்படியே நான் உங்களை விட்டுவிட்டால், (அதற்கும் முன்மாதிரி உண்டு). ஏனெனில், என்னைவிடச் சிறந்தவரான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறுதான் (உங்களுக்கு யாரையும் நியமிக்காமல்) உங்களை விட்டுச் சென்றார்கள்" என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
என் தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நினைவுகூர்ந்தபோது, என் தந்தை யாரையும் தமக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன்.
அத்தியாயம் : 33
3725. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றபோது அவர், "உனக்குத் தெரியுமா? உன்னுடைய தந்தை தமக்குப் பின் வேறு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள்" என்று கூறினார். நான் "அவ்வாறு அவர்கள் செய்துவிடக்கூடாது" என்று கூறினேன். அதற்கு அவர், "(இல்லை) அவ்வாறுதான் செய்வார்கள்" என்றார். நான், "இது தொடர்பாக அவர்களிடம் நான் பேசுவேன்" எனச் சத்தியமிட்டேன்.
பிறகு காலைவரை அமைதியாக இருந்துவிட்டேன். (இது தொடர்பாக) அவர்களிடம் நான் பேசவில்லை. (அது குறித்து அவர்களிடம் பேசுவேன் என நான் சத்தியம் செய்திருந்ததால்) எனது வலக்கையில் ஒரு மலையை நான் சுமந்துகொண்டிருந்ததைப் போன்று எனக்கு இருந்தது. திரும்ப அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்களின் நிலை குறித்து என்னிடம் விசாரித்தார்கள். அதைப் பற்றி அவர்களிடம் நான் தெரிவித்தேன்.
பிறகு அவர்களிடம், "மக்கள் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொள்வதை நான் கேள்விப் பட்டேன். அதைத் தங்களிடம் நான் சொல்வேன் எனச் சத்தியம் செய்துவிட்டேன். தாங்கள் தங்களுக்குப் பிறகு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டீர்கள் எனப் பேசிக் கொண்டனர். (உங்கள்) ஒட்டகத்தையோ ஆட்டையோ மேய்க்கின்ற ஒருவன் உங்களுக்கு இருந்து அவன் அவற்றை (மேய்க்கப்போன இடத்திலேயே) விட்டுவிட்டு, பின்னர் உங்களிடம் வந்தால், அவன் (அவற்றைப்) பாழாக்கிவிட்டான் என்றே நீங்கள் கருதுவீர்கள். அப்படியானால், மக்களை மேய்ப்பது அதைவிடக் கடினமானது (அல்லவா?)" என்று நான் சொன்னேன்.
அப்போது எனது கருத்துக்கு என் தந்தை உடன்பட்டார்கள். தமது தலையைச் சிறிது நேரம் தாழ்த்திக்கொண்டிருந்தார்கள். பிறகு தலையை என் பக்கமாக உயர்த்தி, "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தனது மார்க்கத்தைப் பாதுகாப்பான். நான் எனக்குப் பின் ஓர் ஆட்சித் தலைவரை நியமிக்காவிட்டால் (அது தவறல்ல); ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பிறகு யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கவில்லை. நான் எனக்குப் பின் யாரையேனும் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அதுவும் தவறாகாது. ஏனெனில்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குப் பின் (என்னை) ஆட்சித் தலைவராக நியமித்தார்கள்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் நினைவு கூர்ந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நிகராக யாரையும் அவர்கள் ஆக்கமாட்டார்கள்; தமக்குப் பின் யாரையும் ஆட்சித் தலைவராக நியமிக்கமாட்டார்கள் என நான் அறிந்துகொண்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 3 பதவியைத் தேடுவதற்கும் அதன் மீது பேராசைப்படுவதற்கும் வந்துள்ள தடை.
3726. அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துர் ரஹ்மானே! ஆட்சிப் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் அது உங்களுக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துர் ரஹ்மான் பின் சமுரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3727. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையின் சகோதரர் புதல்வர்களில் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அப்போது அவ்விருவரில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தங்களுக்கு அளித்துள்ள பொறுப்புகளில் சிலவற்றுக்கு எங்களை அதிகாரிகளாக நியமியுங்கள்" என்று சொன்னார். மற்றொருவரும் அவ்வாறே கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்த ஆட்சியதிகாரத்தைக் கேட்கின்ற ஒருவருக்கோ ஆசைப்படுகின்ற ஒருவருக்கோ நாம் அதை வழங்கமாட்டோம்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3728. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். என்னுடன் (என்) அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். அவர்களில் ஒருவர் என் வலப்பக்கத்திலும் மற்றொருவர் என் இடப்பக்கத்திலும் இருந்தனர். அவ்விருவரும் (நபி (ஸல்) அவர்களிடம் அரசாங்கப்) பதவி அளிக்குமாறு கோரினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள்.
நபியவர்கள், "அபூமூசா!" அல்லது "அப்துல்லாஹ் பின் கைஸ்!" நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "சத்திய (மார்க்க)த்துடன் தங்களை அனுப்பியவன் மீதாணையாக! இவர்கள் இருவரும் தமது மனதில் இருந்ததை என்னிடம் தெரிவிக்கவுமில்லை. இவர்கள் பதவி கேட்பார்கள் என்று எனக்குத் தெரியுவும் செய்யாது" என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இதழுக்குக் கீழ் துருத்திக்கொண்டிருந்த பல் துலக்கும் குச்சியை இப்போதும்கூட நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள், "யார் பதவியை விரும்புகிறாரோ, அவருக்கு நாம் பதவியை "ஒருபோதும் கொடுக்கமாட்டோம்" அல்லது "கொடுப்பதில்லை". ஆகவே, "அபூமூசா!" அல்லது "அப்துல்லாஹ் பின் கைஸ்!" நீங்கள் (ஆளுநராகச்) செல்லுங்கள்" என்று கூறி, என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பிறகு என்னைப் பின்தொடர்ந்து முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள்.
முஆத் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தபோது "வாகனத்திலிருந்து இறங்குங்கள் (இதில் அமருங்கள்)" என்று கூறிவிட்டு, (அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதமாக) அவர்களுக்குத் தலையணை ஒன்றை எடுத்து வைத்தேன்.
அப்போது எனக்கு அருகில் ஒரு மனிதர் கட்டப்பட்டிருப்பதைக் கண்ட முஆத் (ரலி) அவர்கள், "இவர் யார்?" என்று கேட்டார்கள். நான், "இவர் யூதராயிருந்து இஸ்லாத்தைத் தழுவினார். அதற்குப் பிறகு (இஸ்லாத்தை விட்டு வெளியேறி) தமது பழைய துன்மார்க்கத்திற்கே திரும்பிச் சென்றுவிட்டார்; யூதராகிவிட்டார்" என்று சொன்னேன்.
அதற்கு முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாதவரை நான் அமரமாட்டேன்" என்று கூறினார்கள். பிறகு மீண்டும் "சரி, அமருங்கள்" என்றேன். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடையவும் தீர்ப்புப்படி இவருக்கு மரண தண்டனை அளிக்கப்படாத வரை நான் அமரமாட்டேன்" என்று கூறினார்கள்.
இவ்வாறு மூன்று முறை நடந்தது. எனவே, அவருக்கு மரணதண்டனை அளிக்கும்படி நான் உத்தரவிட அவ்வாறே அவர் கொல்லப்பட்டார்.
பிறகு நாங்கள் இருவரும் இரவுத்தொழுகை குறித்துப் பேசிக்கொண்டோம். அப்போது எங்களில் ஒருவர், (அதாவது) முஆத் (ரலி) அவர்கள், "நான் இரவில் சிறிது நேரம் உறங்குகிறேன். சிறிது நேரம் நின்று வணங்குகிறேன். நின்று வணங்குவதற்கு (இறைவனிடம்) நான் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் நான் பிரதிபலனை எதிர்பார்க்கிறேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 4 அவசியமின்றி ஆட்சிப் பொறுப்பை ஏற்பது விரும்பத்தக்கதன்று.
3729. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் (அரசுப்) பதவி வழங்கக் கூடாதா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, "அபூதர்! நீர் பலவீனமானவர். அது (பதவி) ஒரு கையடைப் பொருளாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 33
3730. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அபூதர்! உம்மை நான் பலவீனமானவராகவே காண்கிறேன். எனக்கு நான் விரும்புவதையே உமக்கும் விரும்புகிறேன். இருவருக்குக்கூட நீர் தலைமை ஏற்காதீர். அநாதையின் சொத்துக்கு நீர் பொறுப்பேற்காதீர்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
பாடம் : 5 நேர்மையான ஆட்சியாளரின் சிறப்பும், கொடுமைக்கார ஆட்சியாளன் அடையும் தண்டனையும், குடிமக்களிடம் நளினமாக நடந்துகொள்ளுமாறு வந்துள்ள தூண்டுதலும், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்குவதற்கு வந்துள்ள தடையும்.
3731. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக்கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்).
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3732. அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சில விஷயங்களைப் பற்றிக் கேட்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?" என்று கேட்டார்கள். நான், "எகிப்தியரில் ஒருவன்" என்று பதிலளித்தேன். அவர்கள், "உங்கள் ஆட்சியாளர் இந்தப் போரில் உங்களிடம் எப்படி நடந்துகொண்டார்?" என்று கேட்டார்கள்.
அதற்கு நான், "வெறுக்கத்தக்க அம்சங்கள் எதையும் நாங்கள் அவரிடம் காணவில்லை. எங்களில் ஒருவரது ஒட்டகம் செத்துவிட்டால், அவருக்கு அவர் ஒட்டகம் வழங்கினார். அடிமை இறந்துவிட்டால், அவருக்கு அடிமை தந்தார். செலவுக்குப் பணம் தேவைப்பட்டால் பணம் தந்தார்" என்று விடையளித்தேன்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், "அவர் என் சகோதரர் முஹம்மத் பின் அபீபக்ர் விஷயத்தில் நடந்துகொண்ட விதம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியைக் கூறவிடாமல் என்னைத் தடுக்காது" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, "இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33
3733. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆண் (மகன்) தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்" என்று (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என நான் எண்ணுகிறேன்" என்று கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 33