3413. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ அல்பத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் அடிமையைச் சாட்டையால் அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னால் யாரோ, "நினைவிருக்கட்டும், அபூமஸ்ஊத்!" என்று கூறியதைக் கேட்டேன். அப்போது நான் கோபத்தில் இருந்ததால், அந்தக் குரலை (நன்கு) விளங்கிக்கொள்ளவில்லை. அவர் என்னை நெருங்கி வந்தபோது (பார்த்தால்) அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் "நினைவிருக்கட்டும். அபூமஸ்ஊத்! நினைவிருக்கட்டும். அபூ மஸ்ஊத்!" என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
உடனே நான் என் கையிலிருந்த சாட்டையைக் கீழே போட்டேன். அப்போது அவர்கள் "நினைவிருக்கட்டும். அபூமஸ்ஊத்! உமக்கு இந்த அடிமையின் மீதிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது" என்று சொன்னார்கள். நான், "இதன் பின்னர் ஒருபோதும் நான் எந்த அடிமையையும் அடிக்கமாட்டேன்" என (உறுதி) மொழிந்தேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அதைக் கேட்டவுடன் அவர்கள்மீது கொண்ட அச்சத்தால் எனது கையிலிருந்த சாட்டை கீழே விழுந்துவிட்டது" என அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27
3414. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குப் பின்னாலிருந்து யாரோ, "அபூ மஸ்ஊதே நினைவிருக்கட்டும்! இவர்மீது உமக்கிருக்கும் அதிகாரத்தைவிடப் பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது" என்று கூறுவதை நான் செவியுற்றேன். நான் திரும்பிப் பார்த்தேன். அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். உடனே நான், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர்" என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்! நீ இவ்வாறு செய்திருக்காவிட்டால் "நரகம் உம்மை எரித்திருக்கும்" அல்லது "நரகம் உம்மைத் தீண்டியிருக்கும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 27
3415. அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு முறை) என் அடிமையை அடித்துக்கொண்டிருந்தேன். அவர், "அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்" என்றார். நான் (தொடர்ந்து) அவரை அடிக்கலானேன். உடனே அவர், (எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதரைக் கண்டு) "நான் அல்லாஹ்வின் தூதரிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" என்றார். உடனே அவரை நான் விட்டு விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! (இவரைத் தண்டிப்பதற்கு) இவர்மீது உனக்குள்ள ஆற்றலைவிட (உன்னைத் தண்டிப்பதற்கு) அல்லாஹ் உன்மீது அதிக ஆற்றல் படைத்தவன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன். அல்லாஹ்வின் தூதரிடம் பாதுகாப்புக் கோருகிறேன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 27
பாடம் : 9 ஒருவர் தம் அடிமை விபசாரம் புரிந்து விட்டதாக அவதூறு கூறுவதற்கு வந்துள்ள கண்டனம்.
3416. அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (நிரபராதியான) தம் அடிமைமீது விபசாரம் புரிந்துவிட்டதாக அவதூறு கூறுகிறாரோ, அவருக்கு மறுமை நாளில் (சாட்டையடி) தண்டனை வழங்கப்படும்; அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "(மனந்திருந்தி பாவமன்னிப்புக் கோரினாலே போதும்; பாவமன்னிப்புக் கிட்டும் எனும் நற்செய்தியுடன் வந்த) "தவ்பா"வின் நபி அபுல்காசிம் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 27
பாடம் : 10 ஒருவர் தம் அடிமைக்குத் தாம் உண்பதிலிருந்து உணவளிப்பதும், தாம் அணிவதிலிருந்து ஆடையளிப்பதும், அவனது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவனைச் சிரமப்படுத்தாமலிருப்பதும்.
3417. மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) "ரபதா" எனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றோம். அப்போது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது அதே போன்ற ஒரு (புதிய) மேலங்கியும் இருந்தன. நாங்கள், "அபூதர் அவர்களே! (அவர் அணிந்திருக்கும் மேலங்கியையும் வாங்கி) இரண்டையும் சேர்த்து நீங்களே அணிந்து கொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி (புதிய) ஆடையாக இருக்குமே?" என்று கேட்டோம். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் பின்வருமாறு விடையளித்தார்கள்:
எனக்கும் என் சகோதரர்களில் ஒருவருக்குமிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபுப்பெண் அல்லர். எனவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டுத் தரக் குறைவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) என்னைப் பற்றி முறையிட்டார். நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தபோது, "அபூதர்ரே! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்" என்று சொன்னார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் மற்ற மனிதர்களை ஏசும்போது பதிலுக்கு அவர்கள் அவருடைய தந்தையையும் தாயையும் ஏசத்தானே செய்கிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அபூதர்! நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்" என்று கூறிவிட்டு, "(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, நீங்கள் உண்பதிலிருந்து அவர்களுக்கு உணவளியுங்கள். நீங்கள் அணிவதிலிருந்து அவர்களுக்கு அணியக் கொடுங்கள். அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழைப்புத் தாருங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 27
3418. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) மற்றும் அபூமுஆவியா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே (இன்னும்) இருக்கின்றீர்" என்பதற்குப் பின் "நான் வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்தக்கால கட்டத்திலுமா (அறியாமைக்காலக் கலாசாரம் கொண்டவனாய் உள்ளேன்)?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்று கூறினார்கள் என அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (இன்னும் சற்றுக் கூடுதலாக) "ஆம். நீர் வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்த காலக்கட்டத்திலும் (அறியாமைக் காலக் கலாசாரம் கொண்டவராய் இருக்கின்றீர்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் காணப்படுகிறது.
ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவரது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்திவிட்டால், (அதற்குப் பரிகாரமாக) அவரை விற்றுவிடட்டும்" என்று இடம்பெற்றுள்ளது. ஸுஹைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அப்பணியில் அவருக்கு ஒத்துழைக்கட்டும்" என இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பு, "அவரது சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்தாதீர்கள்" என்பதோடு முடிவடைந்துவிடுகிறது. "அவரை விற்றுவிடட்டும்" என்பதோ, "அவருக்கு ஒத்துழைக்கட்டும்" என்பதோ அவரது அறிவிப்பில் இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 27
3419. மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள்மீது ஒரு மேலங்கியும் அவர்களுடைய அடிமை யின் மீது அதே மாதிரியான மேலங்கியும் இருப்பதைக் கண்டேன். நான் அது குறித்து அவர் களிடம் வினவியபோது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு (அடிமை) மனிதரை ஏசும் போது, அவருடைய தாயைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீர் அறியாமைக் காலத்துக் கலாசாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர். (அடிமைகளான) அவர்கள் உங்கள் சகோதரர்களும் ஊழியர்களும் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். யாருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உணவளிக்கட்டும். தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணியத் தரட்டும். அவர்களது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்தாதீர்கள். அவ்வாறு அவர்களது சக்திக்கு மீறிய பணியை அவர்களுக்குக் கொடுத்தால் அப்பணியில் அவர்களுக்கு நீங்களும் ஒத்துழையுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3420. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமைக்கு உணவும் உடையும் அளிக்கப்பட வேண்டும். அவரது சக்திக்கு மீறிய பணியைக் கொடுத்து அவர் சிரமப்படுத்தப்படக்கூடாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3421. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய பணியாளர் வெப்பத்தையும் புகையையும் தாங்கிக்கொண்டு உணவு சமைத்துக் கொண்டுவந்தால், அவரையும் தம்முடன் அமரச் செய்து அவர் உண்ணட்டும். உணவு குறைவானதாக இருந்தால் அதில் ஓரிரு கவளங்களையாவது அவரது கையில் வைக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான தாவூத் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"ஓரிரு கவளங்கள்" என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள "உக்லத்தன் அவ் உக்லத்தைனி" என்பதற்கு "லுக்மத்தன் அவ் லுக்மத்தைனி" என்று பொருள். (இரண்டுக்கும் பொருள் ஒன்றே.)
அத்தியாயம் : 27
பாடம் : 11 தன் உரிமையாளருக்கும் விசுவாசமாக நடந்து, இறைவழிபாட்டையும் அழகுபடச் செய்யும் அடிமைக்குக் கிடைக்கும் நன்மையும் பிரதிபலனும்.
3422. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமை, தம் உரிமையாளருக்கு விசுவாசமாக நடந்து, அல்லாஹ்வையும் நன்முறையில் வழிபடுவாராயின் அவருக்கு இரு முறை(யினாலும்) நன்மை உண்டு.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3423. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்குச் சொந்தமான நல்ல அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு.
இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு, "அபூஹுரைராவின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாமலிருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் இறப்பதையே விரும்பியிருப்பேன்" என்றார்கள்.
சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
தம் தாயாரு(க்குச் செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்ற அவரு)டனேயே இருந்ததால், தாயார் இறக்கும்வரை அபூஹுரைரா (ரலி) அவர்கள் (கூடுதலான) ஹஜ்ஜுக்குக் கூடச் செல்லவில்லை என நமக்குச் செய்தி எட்டியது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபுத்தாஹிர் அஹ்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நல்ல அடிமைக்கு" என்று இடம்பெற்றுள்ளது. "ஒருவருக்குச் சொந்தமான" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்ட அபூஹுரைரா (ரலி) அவர்களைப் பற்றிய குறிப்பும் அதற்குப் பின்னுள்ளவையும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 27
3424. அபூசாலிஹ் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஓர் அடிமை அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமையையும் தம் உரிமையாளருக்குச் செய்ய வேண்டிய கடமையையும் நிறைவேற்றினால், அவருக்கு இரு நன்மைகள் உண்டு" என்று சொன்னார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நான் இந்த ஹதீஸை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது கஅப் (ரலி) அவர்கள், "(மறுமை நாளில்) அவருக்கும் வசதியற்ற இறை நம்பிக்கையாளருக்கும் விசாரணை ஏதுமில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3425. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவழிபாட்டிலும் தம் உரிமையாளரின் உறவிலும் செம்மையாகச் செயல்பட்ட நிலையில் மரணிப்பதே ஓர் அடிமைக்கு நன்று; மிகவும் நன்று.
அத்தியாயம் : 27
பாடம் : 12 பலருக்குச் சொந்தமான ஓர் அடிமையில் தமது பங்கை மட்டும் ஒருவர் விடுதலை செய்தல்.
3426. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குரிய பங்கை விடுதலை செய்கிறாரோ, அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு,தம் கூட்டாளிகளுக்கு அவர்களுக்குரிய பங்குகளின் விலையைக் கொடுத்து, அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்துவிடவேண்டும். இல்லையெனில், அவர் எந்த அளவுக்கு விடுதலை செய்தாரோ, அந்த (தமது பங்கின்) அளவுக்குத்தான் விடுதலை செய்தவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3427. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவர்மீது கடமையாகும். அவரிடம் (அந்த அளவுக்குச்) செல்வம் இல்லாவிட்டால், அவர் எந்த அளவுக்கு அவ்வடிமையை விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவர் விடுதலை செய்தவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவருக்கு அந்த அடிமையின் விலையை எட்டுகின்ற அளவுக்குச் செல்வமிருந்தால், அவ்வடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு (தமது செல்வத்திலிருந்து அதைச் செலுத்தி அவனை முழுமையாக விடுதலை செய்து)விட வேண்டும். இல்லையெனில்,அவர் எந்த அளவுக்கு அவ்வடிமையை விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவர் விடுதலை செய்தவர் ஆவார்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அய்யூப் மற்றும் யஹ்யா பின் சயீத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் மட்டுமே "அவரிடம் அந்த அளவுக்குச் செல்வம் இல்லாவிட்டால், அவர் எந்த அளவுக்கு விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவர் விடுதலை செய்தவர் ஆவார்" எனும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. மற்றவர்களின் அறிவிப்பில் இக்குறிப்பு காணப்படவில்லை. அவ்விருவரும், "இக்குறிப்பு ஹதீஸிலேயே உள்ளதா, அல்லது அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்களின் கூற்றா என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறினர். இவற்றில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களது அறிவிப்பைத் தவிர வேறு எந்த அறிவிப்பிலும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்" எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 27
3429. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கும் மற்றொருவருக்கும் சொந்தமான ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால்,அவ்வடிமையின் (சந்தை) விலையைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் மதிப்பிட்டு, வசதியுடையவராக அவர் இருந்தால், (மீதி விலையையும் செலுத்தி) அவனை முழுமையாக விடுதலை செய்துவிட வேண்டும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3430. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவரிடம் அந்த அடிமையின் முழு விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அதன் மூலம் அவர் அவ்வடிமையின் மற்ற பங்குகள் முழுவதையும் விடுதலை செய்துவிட வேண்டும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 27
3431. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கும் மற்றொருவருக்கும் சொந்தமான ஓர் அடிமையை அவர்களில் ஒருவர் விடுதலை செய்தால், (தம் கூட்டாளிக்குச் சேர வேண்டிய பங்கிற்கும்) அவரே பொறுப்பாளியாவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 27
3432. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ, அவரது செல்வத்திலிருந்தே அந்த அடிமை(யின் மீதிப்பங்கும்) விடுதலை செய்யப்பட வேண்டும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 27