3079. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் (உண்பதற்கேற்ப) சிவக்காத வரை அவற்றை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; கதிர்கள் (முற்றி) வெண்ணிறமாகி, அவை பாழாகிவிடும் எனும் அச்சம் விலகாதவரை அவற்றை விற்பதற்கும் தடை விதித்தார்கள் விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவருக்கும் (இவ்வாறு) தடை விதித்தார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3080. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மரத்திலுள்ள) கனிகள், பலன் உறுதிப்படும் நிலையை அடைந்து, அவை பாழாகும் நிலையைக் கடக்காத வரை அவற்றை விற்காதீர்கள்.
இதன் அறிவிப்பாளரான இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பலன் உறுதிப்படும் நிலையை அடைதல் என்பது, (உண்பதற்கு ஏற்றவாறு) சிவப்பாகவோ மஞ்சளாகவோ அது மாறுவதைக் குறிக்கும்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை" என்பதுடன் ஹதீஸ் முடிவடைகிறது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம் பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3081. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) கனிகளை விற்காதீர்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "பலன் உறுதிப்படுதல் என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(அப்பழங்கள்) பாழாகும் நிலையைக் கடந்துவிடுவதாகும்" என விடையளித்தார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3082. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மரத்திலுள்ள) பழங்கள், (கனிந்து) நல்ல நிலையை அடையாத வரை அவற்றை விற்க வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தடைவிதித்தார்கள்". அல்லது "எங்களுக்குத் தடைவிதித்தார்கள்".
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3083. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மரத்திலுள்ள) கனிகள், பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை அவற்றை விற்பதற்குத் தடைவிதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3084. அபுல் பக்த்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், பேரீச்ச மர(த்திலுள்ள பழ)ங்களை விற்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், "பேரீச்ச மரத்திலுள்ள கனிகள் உண்ணப்படும் பக்குவத்தை அடையும் முன்பும் எடை போடப்படுவதற்கு முன்பும் அவற்றை விற்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்" என்று கூறினார்கள். நான், "(மரத்திலுள்ளதை) எடை போடுதல் எப்படி?" என்று கேட்டேன். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் "(அதன் எடை இவ்வளவு இருக்கும் என) மதிப்பிடப்படுவதற்கு முன்பு" என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3085. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மரத்திலுள்ள கனிகளை, பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை விற்காதீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21
3086. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) பழங்களை விற்பதற்குத் தடை விதித்தார்கள்; உலர்ந்த பேரீச்சப்பழத்திற்குப் பதிலாக (உலராத) பச்சைப் பழத்தை விற்பதற்கும் தடைவிதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அராயா" வியாபாரத்தில் அ(வ்வாறு விற்ப)தற்கு அனுமதியளித்தார்கள்.
இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அராயா வியாபாரத்தில் (அவ்வாறு) விற்கப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்" என்று சில கூடுதலான சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3087. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பலன் உறுதிப்படும் நிலையை அடையாத வரை (மரத்திலுள்ள) கனிகளை விற்காதீர்கள். உலர்ந்த (கொய்யப்பட்ட) பழங்களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத பழங்களை விற்காதீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே அறிவித்துள்ளார்கள்.
இந்த ஹதீஸ் (மொத்தம்) ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
பாடம் : 14 உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத பேரீச்சம் பழங்களை விற்பது தடை செய்யப்பட்டுள்ளது; "அராயா"வில் தவிர!
3088. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முஸாபனா" மற்றும் "முஹாகலா" ஆகிய வியாபாரங்களைத் தடை செய்தார்கள்.
"முஸாபனா" என்பது, பேரீச்ச மரத்திலுள்ள (உலராத) கனிகளை உலர்ந்த (கொய்யப்பட்ட) பேரீச்சம் கனிகளுக்குப் பதிலாக (பண்டமாற்று முறையில்) விற்பதாகும். "முஹாகலா" என்பது, (அறுவடை செய்யப்பட்ட) கோதுமைக் கதிரிலுள்ள (தானியத்)தை விற்பதும் (அறுவடை செய்யப்பட்ட) கோதுமைக்குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்குக் கொடுப்பதும் ஆகும்.
சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையாதவரை அவற்றை விற்காதீர்கள்; உலர்ந்த பேரீச்சம் பழத்திற்குப் பதிலாக (மரத்திலுள்ள) உலராத பழத்தை விற்காதீர்கள்" என்று சொன்னார்கள்.
மேலும், சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (தம் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழியாக ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வருமாறு அறிவித்தார்கள்:
அதன் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரத்திலுள்ள) உலராத கனிகளுக்குப் பதிலாக உலர்ந்த அல்லது செங்காயான பேரீச்சங்கனிகளை விற்பதற்கு "அராயா"வில் (மட்டும்) அனுமதியளித்தார்கள்; "அராயா" அல்லாதவற்றில் அனுமதியளிக்கவில்லை.
அத்தியாயம் : 21
3089. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதற்கு "அராயா"க்காரர்களுக்கு மட்டும் அனுமதியளித்தார்கள்.
அத்தியாயம் : 21
3090. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அராயா"வில் (மட்டும் மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு வீட்டுக்காரர்கள் (தோட்ட உரிமையாளர்கள்) எடுத்துக்கொள்ளவும், அவற்றைச் செங்காய்களாக அவர்கள் உட்கொள்ளவும் அனுமதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3091. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், அதில் "("அராயா"வின் ஒருமையான) "அரிய்யா" என்பது, (ஏழை) மக்களுக்காக ஒதுக்கப்படும் பேரீச்ச மரங்களாகும். அவற்றிலுள்ள கனிகளை அவர்கள் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்றுக்கொள்வார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3092. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரத்திலுள்ள) பேரீச்சங்கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதற்கு "அராயா" வியாபாரத்தில் அனுமதியளித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அரிய்யா" என்பது, ஒருவர் தம் வீட்டாரின் உணவுக்காக மரத்திலுள்ள செங்காய்களைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு, உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக வாங்குவதாகும்.
அத்தியாயம் : 21
3093. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அராயா"வில் (மட்டும் மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு, அவற்றுக்குப் பதிலாக உலர்ந்த கனிகளை அளந்து விற்க அனுமதியளித்தார்கள்.
அத்தியாயம் : 21
3094. மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "குத்துமதிப்பாகக் கணக்கிட்டு எடுத்துக்கொள்ள அனுமதித்தார்கள்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3095. மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அராயா" வியாபாரத்தில் (மட்டும் மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதற்கு அனுமதியளித்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 21
3096. சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மரத்திலுள்ள) உலராத கனிகளை உலர்ந்த (கொய்யப்பட்ட) பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதற்குத் தடை விதித்தார்கள். மேலும், "அது வட்டியாகும்; அதுவே "முஸாபனா" ஆகும்"என்றும் கூறினார்கள். ஆயினும், "அராயா"வில் மட்டும் அதற்கு அனுமதியளித்தார்கள். "அராயா" என்பது, (ஏழைகளுக்கு வழங்கப்பட்ட) ஓரிரு பேரீச்சமரங்களிலுள்ள உலராத கனிகளை வீட்டுக்காரர்கள் (தோட்ட உரிமையாளர்கள்) குத்துமதிப்பாகக் கணக்கிட்டு உலர்ந்த பழங்களுக்குப் பதிலாக எடுத்துக் கொண்டு, அந்தச் செங்காய்களை உண்பதாகும்.
இந்த ஹதீஸை புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் தமது தெருவில் வசித்த (பனூ ஹாரிஸா குடும்பத்தைச் சேர்ந்த) சில நபித்தோழர்களிடமிருந்து அறிவித்தார்கள். சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்களும் அவர்களில் ஒருவர் ஆவார்கள்.
அத்தியாயம் : 21
3097. புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அராயா"வில் (மட்டும் மரத்திலுள்ள) உலராத கனிகளைக் குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதற்கு அனுமதியளித்தார்கள் என நபித்தோழர்கள் கூறினர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3098. புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் தம் தெருவாசிகளான நபித்தோழர்கள் சிலரிடமிருந்து அறிவித்த மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "வட்டி" ("ரிபா") என்பதற்குப் பதிலாக "பறித்தல்" ("ஸப்ன்") எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "வட்டி" என்றே காணப்படுகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் வாயிலாக மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21