2925. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஆகவே உமர் (ரலி) அவர்கள் அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவினார்கள். அப்போது, "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு தாம்பத்திய உறவு நடைபெறாத தூய்மையான நிலையில் அவளை மணவிலக்குச் செய்யட்டும்!" என்றும், "இத்தாவை எதிர்கொள்வதற்கு ஏற்ற நாட்களில் அவளை அவர் மணவிலக்குச் செய்யட்டும்!" என்றும் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2926. யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "ஒருவர் மாதவிடாயிலிருக்கும் தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அப்துல்லாஹ் பின் உமரை (அதாவது என்னை) உங்களுக்குத் தெரியுமா? நான் மாதவிடாயிலிருந்த என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இது குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்; பின்னர் அவள் தனது "இத்தா"வை எதிர்பார்த்திருக்க வேண்டும் (பிறகு விரும்பினால் மணவிலக்குச் செய்துகொள்ளட்டும்!) என உத்தரவிடுங்கள்" என்று கூறினார்கள்.
தொடர்ந்து யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "ஒருவர் மாதவிடாயிலிருந்த தம் மனைவியைத் தலாக் சொல்லிவிட்டால், அதை மணவிலக்காக நீங்கள் கருதுவீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(அதை மணவிலக்காகக் கருதாமல்) வேறென்ன? ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாமலும், (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்து விட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 18
2927. யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "(உங்கள் புதல்வர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! அவள் (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் விரும்பினால் அவர் மணவிலக்குச் செய்து கொள்ளட்டும்! (என்று உத்தரவிடுங்கள்)" என்று கூறினார்கள்.
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "(மாதவிடாய் காலத்தில் சொல்லப்பட்ட) அந்த மணவிலக்கை நீங்கள் மணவிலக்காகக் கருதினீர்களா?" என்று கேட்டேன். அதற்கு "ஒருவன் (தனது கடமையை நிறைவேற்ற) இயலாமலும், (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் மணவிலக்கைத் தடுக்க என்ன உள்ளது?" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2928. அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், அவர்களால் மணவிலக்குச் செய்யப்பட்ட அவர்களுடைய மனைவியைப் பற்றிக் கேட்டேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். இது பற்றி (என் தந்தை) உமர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப் பட்டபோது, அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்), "நீங்கள் உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! அவள் (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும், அவள் தூய்மையாக இருக்கும்போது அவளை மணவிலக்குச் செய்து கொள்ளட்டும்!" என்று கூறினார்கள். ஆகவே, நான் என் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொண்டேன். பிறகு அவள் தூய்மையுடனிருந்த போது அவளை நான் மணவிலக்குச் செய்தேன்" என்று கூறினார்கள்.
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "(உங்கள் மனைவி) மாதவிடாயிலிருந்த போது நீங்கள் சொன்ன தலாக்கை மணவிலக்காகக் கருதினீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் (எனது கடமையை நிறைவேற்ற) இயலாமலும் அதை அறிந்துகொள்ளாமலும் இருந்தாலும்கூட, அதை நான் மணவிலக்காகக் கருதாமல் எப்படி இருக்க முடியும்?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 18
2929. அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மாதவிடாயிலிருந்த என் மனைவியை நான் மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (என் தந்தையிடம்), "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு (மாதவிடாயிலிருந்து) அவள் தூய்மையடைந்ததும் மணவிலக்குச் செய்யட்டும்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் தொடர்ந்து கூறுகிறார்கள்:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "(மாதவிடாயின்போது சொல்லப்பட்ட அந்தத் தலாக்கை) மணவிலக்காக நீங்கள் கருதினீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(தலாக்காகக் கருதாமல்) வேறென்ன?"என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், (மாதவிடாயின்போது நீங்கள் சொன்ன தலாக்கை) மணவிலக்காகக் கருதுகிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (தலாக்காகக் கருதாமல்) வேறென்ன? எனக் கேட்டார்கள்" என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 18
2930. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஒருவர் தம் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)?" என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் "அப்துல்லாஹ் பின் உமர் (அதாவது நான்) யார் என்று உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அதற்கு அவர்கள், "நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இச்செய்தியைத் தெரிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும் என்று கூறினார்கள்" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த அளவு மட்டுமே நான் இந்த ஹதீஸை என் தந்தை தாவூஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்.) அவர்கள் இதை விடக் கூடுதலாக வேறொன்றும் கூறியதை நான் கேட்கவில்லை.
அத்தியாயம் : 18
2931. அபுஸ் ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அஸ்ஸா" என்பாரின் முன்னாள் அடிமையாயிருந்த அப்துர் ரஹ்மான் பின் அய்மன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "ஒருவர் தம் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டார். இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார். -அப்போது (அங்கிருந்த) நான் அதைச் செவியுற்றுக் கொண்டிருந்தேன்.- அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அப்துல்லாஹ் பின் உமர்,மாதவிடாயிலிருந்த தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார்" என்று கூறி, அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்!" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவளைத் திரும்ப அழைத்துக்கொண்டேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், "மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் அவர் மணவிலக்குச் செய்து கொள்ளட்டும்; அல்லது தம்மிடமே (மனைவியாக) வைத்துக்கொள்ளட்டும்!" என்றார்கள்.
மேலும், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "நபி (ஸல்) அவர்கள் "நபியே! பெண்களை நீங்கள் மணவிலக்குச் செய்தால், அவர்கள் "இத்தா"வைக் கடைப்பிடிப்பதற்கேற்ப அதன் ஆரம்பப் பகுதியில் மணவிலக்குச் செய்யுங்கள்" (65:1)என்ற வசனத்தை (ஓர் ஓதல் முறைப்படி) ஓதிக் காட்டினார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "உர்வா" என்பாரின் முன்னாள் அடிமையாயிருந்த அப்துர் ரஹ்மான் பின் அய்மன் (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று கேட்டார்கள். அப்போது நான் அதைச் செவியுற்றுக்கொண்டிருந்தேன் என அபுஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
"உர்வா என்பாரின் முன்னாள் அடிமையாயிருந்த" என்று அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் அறிவித்திருப்பது தவறாகும். அப்துர் ரஹ்மான் பின் அய்மன் (ரஹ்) அவர்கள், "அஸ்ஸா" என்பாரின் முன்னாள் அடிமையே ஆவார்.
அத்தியாயம் : 18
பாடம் : 2 முத்தலாக்.
2932. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. பின்னர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "நிதானமாகச் செயல்பட்டு (மீட்டுக் கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்று) வந்த ஒரு விஷயத்தில் மக்கள் (இப்போது) அவசரம் காட்டுகிறார்கள். எனவே, அதை (முத்தலாக்கை) அவர்களுக்கெதிராக (மீட்டுக்கொள்ள இயலாதவாறு) நாம் செயல்படுத்தினால் என்ன?" என்று கூறி, அவ்வாறே அதைச் செயல்படுத்தினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2933. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபுஸ்ஸஹ்பா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) மற்றும் அபூபக்ர் (ரலி) ஆகியோரது காலத்திலும் உமர் (ரலி) அவர்களது ஆட்சியில் (முதல்) மூன்று வருடங்களிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே கருதப்பட்டுவந்ததை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "ஆம்"என்றார்கள்.
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2934. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபுஸ்ஸஹ்பா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "உங்களிடமுள்ள அரிய தகவல்களைக் கூறுங்கள்; முத்தலாக், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களது காலத்திலும் ஒரு தலாக்காக இருக்கவில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "ஆம்;அவ்வாறுதான் இருந்தது. பின்னர் உமர் (ரலி) அவர்களது காலத்தில் மக்கள் தலாக்கை மலிவாக்கி அவசரக் கோலத்தில் செய்ய ஆரம்பித்தபோது, உமர் (ரலி) அவர்கள் முத்தலாக்கை அவர்கள்மீது செல்லுபடியாக்கினார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 18
பாடம் : 3 ஒருவர் தம் மனைவியிடம் "நீ எனக்குத் தடை செய்யப்பட்டவள் (ஹராம்)" என்று மணவிலக்குச் செய்யும் நோக்கமின்றி கூறினால், (அது மணவிலக்கு ஆகாது; எனினும், சத்திய முறிவுக்கான) பரிகாரம் செய்வது கடமையாகும்.
2935. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"(ஒருவர் தம் மனைவியை நோக்கி "நீ எனக்குத் தடை செய்யப்பட்டவள்" எனக் கூறித் தமக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றை) விலக்கிக்கொள்வதானது, பரிகாரம் செய்ய வேண்டிய சத்தியம் ஆகும்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, "உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது" எனும் (33:21ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.
அத்தியாயம் : 18
2936. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "ஒருவர் தம் மனைவியை நோக்கி "நீ எனக்குத் தடை செய்யப்பட்டவள்" எனக் கூறி(த் தமக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யப்பட்டதாக ஆக்கி)னால், அது பரிகாரம் செய்ய வேண்டிய சத்தியமாகும்" என்று கூறிவிட்டு, "உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 18
2937. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களது அறையில் அதிகநேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, (இது பிடிக்காமல் நபியவர்களின் துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் "நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் "தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா?" என்று கேட்க வேண்டும்" எனக் கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்.
அவ்வாறே எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது, முன்பு பேசி வைத்திருந்தபடி கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அப்படியெல்லாம் இல்லை.) மாறாக, ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவு தான். சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்" என்று கூறினார்கள். ஆகவே, "நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக்கொள்கிறீர்கள்?" என்று தொடங்கி "நீங்கள் இருவரும் இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)" என முடியும் (66:1-4) வசனங்கள் அருளப்பெற்றன.
(இந்த 66:4ஆவது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) "நீங்கள் இருவரும்" என்பது ஆயிஷா (ரலி) அவர்களையும் ஹஃப்ஸா (ரலி) அவர்களையுமே குறிக்கிறது.
(66:3ஆவது வசனத்தில்) "நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்"என்று அல்லாஹ் கூறியிருப்பது, "இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக ஒருபோதும் அதை நான் அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதையே குறிக்கிறது.
அத்தியாயம் : 18
2938. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இனிப்பும் தேனும் விருப்பமானவையாக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் சென்று அவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தபோது, ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல் பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும்,அதிலிருந்து தயாரித்த பானத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது.
உடனே நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! இ(தை நிறுத்துவ)தற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்" என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா (ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது,அல்லாஹ்வின் தூதரே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். "இல்லை" என்று உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். உடனே "இது என்ன வாடை?" என்று அவர்களிடம் கேளுங்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்து (துர்)வாடை வீசுவதைக் கடுமையானதாகக் கருதுவார்கள்.) அப்போது அவர்கள், "எனக்கு ஹஃப்ஸா தேன்(கலந்த) பானம் புகட்டினார்" என்று உங்களிடம் கூறுவார்கள். உடனே நீங்கள் "இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (அதன் பிசினை உட்கொண்டு)விட்டு வந்திருக்கலாம். (அதனால் தான் வாடை வருகிறது)" என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) சொன்னேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களிடம் சென்றபோது, (நான் சொன்ன படி செய்துவிட்டு) சவ்தா (என்னிடம்) கூறினார்: எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலுக்கு வந்தபோதே, உனக்குப் பயந்து நீ என்னிடம் சொன்னபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்ல முனைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை நெருங்கியதும் அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை" என்று பதிலளித்தார்கள். "அப்படியானால் இது என்ன வாடை?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹஃப்ஸா எனக்குத் தேன் (கலந்த) பானம் புகட்டினார்" என்று சொன்னார்கள். நான், "அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (அதன் பிசினை உட்கொண்டு)விட்டு வந்திருக்கலாம். (அதனால்தான் தேனில் வாடை ஏற்பட்டுவிட்டது போலும்)" என்று கூறினேன்.
(தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது,அவர்களிடம் நானும் அவ்வாறே கூறினேன். பிறகு அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் சென்றபோது, அவரும் அவ்வாறே கூறினார். பின்னர் ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றபோது, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குச் சிறிதளவு தேன் தரட்டுமா?" என்று கேட்டார். அவர்கள் "அது எனக்குத் தேவையில்லை" என்றார்கள்.
(இது குறித்து) சவ்தா (ரலி) அவர்கள், "அல்லாஹ் தூயவன்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (அதை அருந்தவிடாமல்) நாம் தடுத்து விட்டோமே!" என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள். நான் அவரிடம், "சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப் போகிறது)" என்று சொல்வேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
-இதே ஹதீஸ் மேலும் ஓர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
பாடம் : 4 ஒருவர் தம் மனைவிக்கு (தம்முடன் சேர்ந்து வாழவும் பிரிந்துவிடவும்) விருப்ப உரிமை அளிப்பதானது, அவரது எண்ணத்தைப் பொறுத்தே தவிர மணவிலக்கு ஆகாது.
2939. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளிக்குமாறு அல்லாஹ்வின் தூதருக்கு (இறைவனால்) கட்டளையிடப்பட்டது. அப்போது அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார்கள்: "(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்" (என்று அதைச் சொல்லிவிட்டு,) "நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்காதவரை அவசரப்பட வேண்டாம்" என்று சொன்னார்கள். என் பெற்றோர் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப் போவதில்லை என்பது நபியவர்களுக்குத் தெரிந்திருந்தது.
பிறகு அவர்கள் "நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் விரும்பினால், வாருங்கள்! உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் விடுவித்துவிடுகிறேன். நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகையும் விரும்பினால்,உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார்செய்துள்ளான்" (33:28,29)எனும் வசனங்களை ஓதினார்கள். அப்போது நான், "இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் எதற்காக அனுமதி கேட்கவேண்டும்? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகையுமே விரும்புகிறேன்" என்று சொன்னேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியரும் என்னைப் போன்றே நடந்துகொண்டனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2940. முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் "(நபியே! உங்கள் துணைவியரான) அவர்களில் நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீங்கள் விரும்பியவர்களை (விரும்பும் காலம் வரை) உங்களுடன் இருக்கவைக்கலாம்" (33:51) எனும் இறைவசனம் அருளப்பெற்ற பின்னரும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் (மற்றொரு மனைவியிடம் செல்ல விரும்பினால் அந்நாளை விட்டுக் கொடுக்கும்படி) எங்களிடம் அனுமதி கேட்பார்கள்" என்று சொன்னார்கள்.
அதற்கு நான், "அவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் அனுமதி கேட்கும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "(அல்லாஹ்வின் தூதரே!) வேறொரு மனைவிக்காக எனது நாளை விட்டுக் கொடுக்கும்படி) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காக வேண்டியும் தங்களை விட்டுக் கொடுக்கமாட்டேன்" என்று சொல்வேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் முஆதா பின்த் அப்தில் லாஹ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 18
2941. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (தமது மணப் பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) விருப்ப உரிமை அளித்தார்கள். அ(வ்வாறு அவர்கள் உரிமை அளித்த)தை நாங்கள் மணவிலக்காகக் கருதவில்லை.
அத்தியாயம் : 18
2942. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் மனைவிக்கு விருப்பஉரிமை அளித்து, அவள் என்னையே தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டால், அவளுக்கு (ஆரம்பத்தில்) ஒன்றென்ன! நூறு அல்லது ஆயிர(ம் விவாகர) த்திற்கு நான் உரிமை அளித்திருந்தாலும் அதை நான் பொருட்படுத்தமாட்டேன். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (தமது மணப் பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) விருப்பஉரிமை அளித்தார்கள். அதுவென்ன தலாக்காகவா ஆகிவிட்டது?" என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 18
2943. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருக்கு (தமது மணப் பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) விருப்பஉரிமை அளித்தார்கள். அ(வ்வாறு அவர்கள் உரிமை அளித்த)து மணவிலக்காக இருக்கவில்லை.
அத்தியாயம் : 18
2944. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியரான) எங்களுக்கு (தமது மணப் பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள) விருப்பஉரிமை அளித்தார்கள். அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை(ச் சார்ந்து வாழ்வதை)யே தேர்ந்தெடுத்தோம். இ(வ்வாறு உரிமை அளித்த)தை அவர்கள் தலாக் எனக் கருதவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 18