281. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நபியின்) உள்ளம்,அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை””” எனும் (53:11 ஆவது) வசனத்திற்குப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க, (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.
அத்தியாயம் : 1
282. ஸிர்ரு பின் ஹூபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார்” எனும் (53:18 ஆவது) வசனம் குறித்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நபி (ஸல் அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க, அவரது (நிஜ) உருவத்தில் அவரைப் பார்த்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 77 "நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவரைக் கண்டார்" எனும் (53:13ஆவது) இறைவசனத்தின் பொருளும், விண்ணுலகப் பயணத்தின்போது நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்களா? என்பதும்.
283. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவரைக் கண்டார்" எனும் (53:13ஆவது) வசனம், "நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பார்த்ததையே குறிக்கிறது" என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 1
284. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
”நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை அகத்தால் பார்த்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (53:13 ஆவது) வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள்.
அத்தியாயம் : 1
285. அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“(நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை” (53:11), “நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்” (53:13), ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது அகத்தால் பார்த்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
286. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
287. மஸ்ரூக் பின் அஜ்த உ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), “அபூஆயிஷா, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்” என்று கூறினார்கள்: நான், அவை எவை?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார்” என்று சொன்னார்கள். உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்)கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அல்லாஹ், “திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்’ (81:23) என்றும், “நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்’ (53:13) என்றும் கூறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
இந்த சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது,(வானவர்) ஜிப்ரீலை, (நான் பார்த்த்தை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து(பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.அப்போது அவருடைய பிராமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்கள்.
மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்.
“கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” (6:103).
அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் (தனது அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை (வேதமாக) அறிவிக்கச்செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தோனும் ஞானமிக்கோனும் ஆவான்” (42:51).
(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவேத்திலிருந்து எதையும் மறைத்தார்கள் என்று யாரேனும் கூறினால், அவரும் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுகட்டிவிட்டார்.அல்லாஹ்வோ, “(எம்) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்! (இவ்வாறு) நீங்கள் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீங்கள் நிறைவேற்றியவராகமாட்டீர்கள்” (5:67) என்று கூறுகின்றான்.
“நபி (ஸல்) அவர்கள் நாளை நடக்கவிருப்பதைத் தெரிவிப்பார்கள்’ என்று யாரேனும் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது மிகபெரும் பொய்யைப் புனைந்துவிட்டார். அல்லாஹ்வோ, “(நபியே!) கூறுக: அல்லாஹ்வைத் தவிர வான்ங்களிலும் பூமியிலும் உள்ள யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்” (27:65) என்று கூறுகின்றான்.
அத்தியாயம் : 1
288. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் கீழ்க்காணும் தகவல் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பெற்ற (வேதத்)திலிருந்து எதையும் மறைப்பவராக இருந்தால், பின்வரும் வசனத்தை மறைத்திருப்பார்கள்: (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள்புரிந்து நீங்களும் அவர்மீது உபகாரம் புரிந்தீர்களோ, அவரிடத்தில் நீங்கள், "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் துணைவியை (மணவிலக்குச் செய்துவிடாமல்) உம்மிடமே நிறுத்திவைத்துக்கொள்ளும்" என்று சொன்னபோது, அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை மனிதர்களுக்குப் பயந்து நீங்கள் உங்களது மனத்தில் மறைத்துவைத்தீர்கள்; அல்லாஹ்வே நீங்கள் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியுடையோன். (33:37)
அத்தியாயம் : 1
289. மேற்கண்ட (287ஆவது) ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மஸ்ரூக் (ரஹ்) அவர்கள், "நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் "முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் தூயவன். நீர் கூறியதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது..." என்று கூறியதாக ஹதீஸ் துவங்குகிறது. (இது தொடர்பான அறிவிப்புகளில்) மேற்கண்ட (287ஆவது) ஹதீஸே முழுமையானதும் விரிவானதும் ஆகும்.
அத்தியாயம் : 1
290. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்க்கவில்லை என்று கூறிய) ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், "(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போன்று, அல்லது அதைவிடச் சமீபமாக (அவர்கள் இருவருக்கும் இடையிலான) நெருக்கம் இருந்தது. பிறகு அல்லாஹ் தன் அடியாருக்கு எதை அறிவித்தானோ அதை அறிவித்தான்" எனும் (53:9-11) வசனங்களின் பொருள் என்ன?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "அது (வானவர்) ஜிப்ரீலை (நபியவர்கள் பார்த்ததை)யே குறிக்கிறது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் மனித உருவிலேயே நபி (ஸல்) அவர்களிடம் வருவார்கள். ஆனால், இம்முறை மட்டும் அடிவானத்தையே அடைத்தபடி (பிரமாண்டமான) தமது (நிஜ) உருவத்தில் வந்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 78 "(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?" என்றும், "நான் ஓர் ஒளியைக் கண்டேன்" என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியது.
291. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
அத்தியாயம் : 1
292. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூதர் (ரலி) அவர்களிடம் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருந்தால் அவர்களிடம் (ஒரு விஷயத்தைப் பற்றி) கேட்டிருப்பேன்" என்று கூறினேன். "எதைப் பற்றிக் கேட்டிருப்பாய்?" என்று என்னிடம் அவர்கள் கேட்டார்கள். நான், "நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டிருப்பேன்" என்றேன்.
அபூதர் (ரலி) அவர்கள், "(இதுபற்றி) நான் அல்லாஹ்வின் தூதரிடமே கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் ஓர் ஒளியைக் கண்டேன் (அவ்வளவுதான்; வேறு எதையும் நான் காணவில்லை)" என்று பதிலளித்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 79 "அல்லாஹ் உறங்கமாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், "ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும்; அதை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம்வரையுள்ள படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்" என்று அவர்கள் கூறியதும்.
293. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச்
சொன்னார்கள். (அவை:)
1) வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.
2) அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.
3) (மனிதன்) இரவில் புரிந்த செயல், பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
4) (மனிதன்) பகலில் புரிந்த செயல், இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
5) ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். -மற்றோர் அறிவிப்பில் "நெருப்பே அவனது திரையாகும்" என்று காணப்படுகிறது.- அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
294. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று நான்கு விஷயங்களைச் சொன்னார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் அதில் "அவனுடைய படைப்பினங்கள்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. "ஒளியே அவனது திரையாகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
295. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று நான்கு விஷயங்களைச் சொன்னார்கள்:
1) அல்லாஹ் உறங்கமாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.
2) அவன் தராசை உயர்த்துகிறான்; தாழ்த்துகிறான்.
3)(மனிதன்) பகலில் புரிந்த செயல், இரவில் இறைவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
4) (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகலில் அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 80 இறைநம்பிக்கையாளர்கள் மறுமையில் இறைவனைக் காண்பார்கள் என்பதற்குரிய சான்று.
296. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன்னால் ஆனவை. "அத்ன்" எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன்மீதுள்ள "பெருமை" எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.
இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
297. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும்போது (அவர்களிடம்) அல்லாஹ், "உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்க வில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?" என்று கேட்பார்கள்.
அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.
இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
298. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பிறகு "நன்மை புரிந்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமும் கிடைக்கும்" எனும் இந்த (10:26ஆவது) வசனத்தையும் நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 81 இறைவனைக் காணும் வழிமுறை.
299. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பௌர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?" என்று கேட்டார்கள். மக்கள், "(சிரமம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?" என்று கேட்டார்கள். மக்கள், "(சிரமம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வாறுதான் (மறுமையில்) இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களை ஒன்றுகூட்டி, "(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக்கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்" என்று கூறுவான். ஆகவே, சூரியனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்(களான தீயசக்தி)களை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் அவற்றைப் பின்தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள்.
அப்போது இறைவன் அவர்களிடம், அவர்கள் அறிந்திராத ஒரு தோற்றத்தில் வந்து, "நான் உங்கள் இறைவன்" என்பான். உடனே அவர்கள், "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்" என்பர். அப்போது அவர்கள் அறிந்துகொள்ளும் தோற்றத்தில் அவர்களிடம் இறைவன் வந்து, "நான் உங்கள் இறைவன்" என்பான். அதற்கு அவர்கள், "நீயே எங்கள் இறைவன்" என்று கூறியவாறு அவனைப் பின் தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும். நானும் என் சமுதாயத்தாருமே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்போம். அன்று இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள். அந்தச் சூழ்நிலையில் இறைத் தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும் "அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்று" என்பதாகவே இருக்கும். நரகத்(தின் மேலே உள்ள அப்பாலத்)தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் (சஅதான்) முற்களைப் போன்றிருக்கும்.
-பிறகு "கருவேலமரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், "ஆம் (பார்த்திருக்கிறோம்), அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள்.-
(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்றுதான் இருக்கும். ஆயினும், அதன் பருமன் என்னவென்று அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப்பிடிக்கும். அவர்களில் தமது (பாவச்) செயலால் (அங்கு) தங்கிவிட்ட இறைநம்பிக்கையாளரும் இருப்பார். இன்னும் அவர்களில் தண்டனை அளிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்படுபவரும் இருப்பார். இறுதியாக இறைவன், அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காமல் இருந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" என்று உறுதிகூறியவர்களில், தான் கருணைகாட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். வானவர்கள் நரகத்திலிருக்கும் அவர்களை சஜ்தாவின் அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள். மனிதனி(ன் உடலி)ல் உள்ள சஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப் பகுதிகளை நரகம் தீண்டுகிறது. சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆகவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
அப்போது அவர்கள்மீது "மாஉல் ஹயாத்" எனப்படும் (ஜீவ) நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள்.
பிறகு இறைவன் (தன்) அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடிப்பான். அப்போது நரகத்தை முன்னோக்கியபடி ஒரு மனிதர் மட்டும் எஞ்சியிருப்பார். அந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார். அவர் "என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரிக்கிறது. ஆகவே, நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிடுவாயாக!" என்று கூறி, அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனைகளைச் சொல்லி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார். பிறகு அல்லாஹ், "இ(ப்போது நீ கோரிய)தை உனக்கு நான் செய்(து கொடுத்)தால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?" என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், "(இல்லை;) வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான். இதையடுத்து அவர் சொர்க்கத்தை முன்னோக்கி, அ(திலுள்ள)தைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை அமைதியாக இருப்பார்.
பிறகு, "என் இறைவா! சொர்க்கத்தின் வாசல்வரை என்னைக் கொண்டுசெல்வாயாக!" என்பார். அதற்கு இறைவன் அவரிடம், "இப்போது உனக்கு நான் வழங்கியதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டேன் என நீ வாக்குறுதியும் உறுதிமொழியும் வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!" என்பான். ஆனால், அவர் தொடர்ந்து "என் இறைவா..." என்று கூறி அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக்கொண்டே இருப்பார். அவரிடம் இறைவன், "(உனது இந்தக் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?" என்று கேட்பான்.
அதற்கு அவர், "இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்)" என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, அல்லாஹ் அவரைச் சொர்க்கத்தின் வாசல்வரை கொண்டு செல்வான். அவர் சொர்க்கத்தின் வாசலில் நிற்கும்போது அவருக்காகச் சொர்க்கம் திறந்துகொள்ளும். உடனே அவர் அதிலுள்ள உல்லாசமான சுகங்களைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை மௌனமாக இருப்பார். பிறகு, "என் இறைவா! என்னைச் சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!" என்று கூறுவார். அப்போது அவரிடம் இறைவன், "இப்போது உனக்கு வழங்கப்பெற்றதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டாய் என்று கூறி என்னிடம் வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் நீ வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலைதான் என்ன!" என்று கேட்பான். அதற்கு அவர், "என் இறைவா! நான் உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆகிவிடக்கூடாது" என்று கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடுவான். அவரைக் கண்டு இறைவன் சிரித்ததும் "சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்!" என்று கூறிவிடுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின், "நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்" என்று அவரிடம் இறைவன் கூறுவான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டுத் தம் இறைவனிடம் கோருவார். அப்போது இறைவன் இன்னின்னதை ஆசைப்படு என்று அவருக்கு நினைவு படுத்துவான். இறுதியில் அவருடைய ஆசைகள் அனைத்தும் அடங்கிவிடும்போது, "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று இறைவன் கூறுவான்.
அறிவிப்பாளர் அதாஉ பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(மேற்கண்ட ஹதீஸை அறிவித்த) அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் இருந்தார்கள். அன்னார் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸிற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால்,"இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று இறைவன் அம்மனிதரிடம் கூறுவான்" என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தபோது தான், அபூசயீத் (ரலி) அவர்கள் (குறுக்கிட்டு) "இதுவும் இதைப் போன்று பத்துமடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான்" என்றல்லவா ஹதீஸ் இருக்கிறது, அபூஹுரைரா!" என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், " "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்றே நான் மனனமிட்டுள்ளேன்" என்று கூறினார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், "நான் "இதுவும் இதைப்போன்று பத்துமடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன் என்று அறுதியிட்டுக் கூறுகிறேன்" என்றார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் கடைசி மனிதராவார்.
அத்தியாயம் : 1
300. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு ஹதீஸ் துவங்குகிறது:
நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் "அல்லாஹ்வின் தூதரே, மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?" என்று கேட்டார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 1