2565. துஐப் அபூகபீஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலி ஒட்டகங்களுடன் என்னை (மக்காவிற்கு) அனுப்பி வைத்தார்கள். அப்போது, "இவற்றில் ஏதேனும் ஒன்று பாதிப்புக்குள்ளாகி இறந்துவிடுமோ என நீர் அஞ்சினால், உடனே அதை அறுத்துவிடுவீராக! பிறகு அதன் (கழுத்தில் கிடக்கும்) செருப்பில் அதன் இரத்தத்தை நனைத்து, அதன் விலாப் புறத்தில் அ(ந்த அடையாளத்)தைப் பதித்துவிடுவீராக! நீரோ உன் பயணக் குழுவினரில் எவருமோ அதை உண்ணாதீர்" என்று கூறினார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 67 "விடைபெறும்" தவாஃப் ("தவாஃபுல் வதா") கடமையாகும் என்பதும் மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கு அந்தக் கடமையில்லை என்பதும்.
2566. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில் ஹஜ்ஜை முடித்ததும்) மக்கள் பல்வேறு முனைகளில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ஹஜ் செய்த) எவரும் இறையில்லம் கஅபாவை இறுதியாகச் சந்தித்(து தவாஃப் செய்)திடாமல் மக்காவிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டாம்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2567. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறையில்லம் கஅபாவைத் தரிசித்(து "தவாஃபுல் வதாஉ" செய்)தலே இறுதிச் செயலாக அமைய வேண்டும் என (ஹஜ்ஜுக்கு வந்த) மக்கள் கட்டளையிடப்பட்டனர். ஆயினும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணுக்கு மட்டும் ("தவாஃபுல் வதா"வை விட்டுவிட) சலுகை அளிக்கப்பட்டது. - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2568. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், "மாதவிடாய் ஏற்பட்ட பெண் இறுதியாக இறையில்லம் கஅபாவைச் சந்தித்(து "தவாஃபுல் வதா" செய்)திடாமலேயே புறப்பட்டுச் செல்லலாம் என நீங்கள் தீர்ப்பு வழங்குகின்றீர்களா? (இது சரியா?)" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவ்வாறில்லை என நீங்கள் கருதினால், இன்ன அன்சாரிப் பெண்ணிடம் (சென்று) இவ்வாறு அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்களா (இல்லையா) எனக் கேளுங்கள்" என்றார்கள். அவ்வாறே ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் (சென்று,கேட்டுவிட்டுத்) திரும்பிவந்து, "நீங்கள் சொன்னது உண்மை என்றே கண்டேன்" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2569. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு, அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "தவாஃபுல் இஃபாளா" செய்த பின்பு மாதவிடாய் ஏற்பட்டது. அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் நம்மை (புறப்பட விடாமல்) தடுத்துவிட்டாரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அவர் "தவாஃபுல் இஃபாளா" செய்துவிட்டார்,அல்லாஹ்வின் தூதரே!" என்று கூற, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் (பரவாயில்லை) அவர் புறப்படலாம் ("தவாஃபுல் வதா" செய்ய வேண்டியதில்லை)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2570. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஆறு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு, "விடைபெறும்" ஹஜ்ஜின்போது அவர் தூய்மையான நிலையில் "தவாஃபுல் இஃபாளா" செய்த பின்பு மாதவிடாய் ஏற்பட்டது" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது பற்றிக் கூறினேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2571. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(துல்ஹஜ் பத்தாவது நாளில்) "தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு முன்பு ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிடுமோ என நாங்கள் அஞ்சிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "ஸஃபிய்யா நம்மை (புறப்படவிடாமல்) தடுத்துவிட்டாரா?" என்று கேட்டார்கள். நாங்கள், "அவர் "தவாஃபுல் இஃபாளா" செய்துவிட்டார்" என்று கூறினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் பிரச்சினையில்லை" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2572. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
("விடைபெறும்" ஹஜ்ஜின்போது) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் நம்மை (புறப்பட விடாமல்) தடுத்துவிடுவார் போலிருக்கிறதே! அவர் உங்களுடன் "தவாஃப்" (இஃபாளா) செய்யவில்லையா?"என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம் (செய்துவிட்டார்)" என்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அப்படியானால் நீங்கள் புறப்படுங்கள்!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2573. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜை முடித்த பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களிடம், ஓர் ஆண் தன் மனைவியிடம் நாடுகின்ற (தாம்பத்தியத்)தை நாடினார்கள். அப்போது, "அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் நம்மை (புறப்பட விடாமல்) தடுத்து விட்டாரா?" என்று கேட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவர் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "தவாஃபுஸ் ஸியாரத்" (தவாஃபுல் இஃபாளா) செய்துவிட்டார்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அவர் உங்களுடன் புறப்படட்டும்!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2574. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜை முடித்துக்கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பிய போது, ஸஃபிய்யா (ரலி) அவர்கள் (மாதவிடாய் ஏற்பட்டதால்) தமது கூடார வாசலில் கவலை அடைந்தவராகத் துக்கத்துடன் இருந்தார். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் (செல்லமாக), "உன் கழுத்து அறுபட; தொண்டை வலி வர! நீ "நஹ்ரு" டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "தவாஃபுல் இஃபாளா" செய்தாயா?" என்று கேட்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் "ஆம்" என்று கூற, நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால் நீ புறப்படு" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "கவலை அடைந்தவராகத் துக்கத்துடன் இருந்தார்" எனும் குறிப்பு இடம்பெற வில்லை. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
பாடம் : 68 ஹாஜிகளும் மற்றவர்களும் கஅபாவிற்குள் நுழைவதும், அதனுள் தொழுவதும், அதன் அனைத்துப் பகுதிகளிலும் பிரார்த்திப்பதும் விரும்பத்தக்கவையாகும்.
2575. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா அல்ஹஜபீ (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவிற்குள் சென்றனர். உஸ்மான் தாழிட்டார். அவர்கள் (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள். பின்னர் பிலால் (ரலி) அவர்கள் வெளியே வந்தபோது அவர்களிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உள்ளே) என்ன செய்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "இரண்டு தூண்களைத் தமக்கு இடப்பக்கமும் ஒரு தூணைத் தமக்கு வலப் பக்கமும் மூன்று தூண்களைத் தமக்குப் பின்புறமும் இருக்குமாறு (நின்று) தொழுதார்கள்" என்று விடையளித்தார்கள். அன்று இறையில்லம் கஅபாவில் ஆறு தூண்கள் இருந்தன.
அத்தியாயம் : 15
2576. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் (ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) வந்து, இறையில்லம் கஅபாவின் முற்றத்தில் இறங்கினார்கள். பிறகு (கஅபாவின் காவலராயிருந்த) உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் (அவர்களை அழைத்துவரும் படி) ஆளனுப்பினார்கள். உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் சாவியுடன் வந்து கஅபாவின் கதவைத் திறந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைந்தார்கள். உள்ளே நுழைந்ததும் கதவைத் தாழிடும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட,அவ்வாறே தாழிடப்பட்டது. பின்னர் அவர்கள் நீண்ட நேரம் அதனுள் தங்கியிருந்து விட்டுப் பிறகு கதவைத் திறந்தார்கள்.
(இச்செய்தி அறிந்து) நான் மக்களை முந்திக்கொண்டு (கஅபாவிற்குச்) சென்றேன். கஅபாவிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் எதிர்கொண்டேன். அவர்களுக்குப் பின்னால் பிலால் (ரலி) அவர்கள் வந்தார்கள். உடனே நான் பிலால் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்களா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம்" என்றார்கள். நான் "எந்த இடத்தில்?" என்று கேட்க, அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "இரு தூண்களுக்கிடையே நேராக" என்று கூறினார்கள். நான் பிலால் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள்" என்று கேட்க மறந்துவிட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2577. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கா வெற்றி ஆண்டில் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களது ஒட்டகத்தின் மீது (பயணம் செய்து) வந்து, கஅபாவின் முற்றத்தில் தமது ஒட்டகத்தை மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களை அழைத்(துவரச் செய்)து, "என்னிடம் கஅபாவின் சாவியைக் கொண்டுவாருங்கள்" என்று கூறினார்கள். (சாவியைப் பெறுவதற்காக) உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் தம் அன்னையிடம் சென்றபோது, அவர் அதைத் தர மறுத்தார். அப்போது உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் சாவியை என்னிடம் தந்துவிடுங்கள்! இல்லாவிட்டால், என் முதுகந்தண்டிலிருந்து இந்த வாள் வெளியேறும்" என்று கூறினார்கள். பின்னர் அவர் அந்தச் சாவியை உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுக்க, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து அதைக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் கதவைத் திறந்தார்கள்...
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2578. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவெற்றி நாளில்) இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அப்போது அவர்களுடன் உசாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர். அவர்கள் உள்ளே சென்று,தாழிட்டுக்கொண்டு நீண்ட நேரம் தங்கியிருந்தார்கள். பின்னர் கதவு திறக்கப்பெற்றபோது, நானே முதல் ஆளாக உள்ளே நுழைந்தேன். அப்போது வெளியே வந்துகொண்டிருந்த பிலால் (ரலி) அவர்களைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் எந்த இடத்தில் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், "அவ்விரு முன் தூண்களுக்கிடையே" என்று பதிலுரைத்தார்கள். நான் பிலால் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்?" என்று கேட்க மறந்துவிட்டேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2579. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் கஅபாவிற்குப் போய்ச்சேர்ந்தேன். அங்கு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உசாமா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைந்திருந்தார்கள். உள்ளே சென்றதும் உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் கஅபாவின் தலைவாயிலை மூடிவிட்டார்கள். பிறகு நீண்ட நேரம் அதனுள் இருந்தார்கள். பின்னர் கதவு திறக்கப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள். நான் படியில் ஏறி கஅபாவிற்குள் நுழைந்தேன். (வெளியே வந்து கொண்டிருந்தவர்களிடம்), "நபி (ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இங்கு தான்" என (ஓர் இடத்தைக் காட்டி)க் கூறினார்கள். நான் அவர்களிடம் "நபி (ஸல்) அவர்கள் எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள்?" என்று கேட்க மறந்துவிட்டேன்.
அத்தியாயம் : 15
2580. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்து தாழிட்டுக்கொண்டனர். அவர்கள் கதவைத் திறந்ததும் முதல் ஆளாக நானே உள்ளே புகுந்தேன். அப்போது (வெளியே வந்த) பிலால் (ரலி) அவர்களைச் சந்தித்து, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழுதார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம், வலப்பக்கமிருக்கும் இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்" என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2581. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உசாமா பின் ஸைத் (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைவதை நான் கண்டேன். அப்போது அந்த நால்வருடன் வேறெவரும் கஅபாவிற்குள் நுழையவில்லை. பின்னர் தாழிடப்பட்டுவிட்டது.
என்னிடம் "பிலால் (ரலி) அவர்கள்" அல்லது "உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள்", "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவின் நடுவில் வலப்பக்கமிருக்கும் இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள்" எனக் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2582. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நீங்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்படியே உத்தரவிடப்பட்டுள்ளீர்கள்; கஅபாவினுள் நுழையுமாறு உங்களுக்கு உத்தரவிடப்படவில்லை" என்று கூறியதைத் தாங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், கஅபாவிற்குள் நுழைய வேண்டாம் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தடை விதிக்கவில்லை. ஆயினும், அவர்கள் உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வருமாறு கூறியதைச் செவியுற்றேன்:
நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்துப் பகுதிகளிலும் பிரார்த்தித்துவிட்டு, உள்ளே தொழாமலேயே வெளியேறிவிட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவின் (வாசல்) முன் நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் "இதுவே உங்கள் தொழும் திசை (கிப்லா) ஆகும்" என்றும் கூறினார்கள்.
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அதன் பகுதிகள் என்பது என்ன? அதன் ஒவ்வொரு மூலையையுமா குறிப்பிடுகிறீர்கள்?"என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை; இறையில்லத்தின் ஒவ்வொரு திசையிலும் (பிரார்த்தித்தார்கள்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2583. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்தார்கள். அதனுள் ஆறு தூண்கள் இருந்தன. ஒவ்வொரு தூணுக்கு அருகிலும் நின்று அவர்கள் பிரார்த்தித்தார்கள். ஆனால், தொழவில்லை.
அத்தியாயம் : 15
2584. இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் தமது உம்ர(த்துல் களா)வின்போது இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இல்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 15