பாடம் : 55 (ஹஜ் கிரியைகளுக்குப் பின்) தலைமுடியைக் குறைப்பதைவிட முழுமையாக மழிப்பதே சிறந்ததாகும்; குறைத்துக்கொள்ளவும் அனுமதி உண்டு.
2503. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ் கிரியைகளுக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையை மழித்தார்கள். அவர்களுடைய தோழர்களில் சிலரும் மழித்துக்கொண்டனர். வேறுசிலர் (சிறிதளவு) முடியைக் குறைத்துக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என்று ஓரிரு முறை பிரார்த்தித்தார்கள். பிறகு "முடியை குறைத்துக்கொண்டவர்களுக்கும் (அருள் புரிவானாக)" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2504. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவாயாக!" என்று பிரார்த்தித்தபோது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக் கொள்பவர்களுக்கும் (சேர்த்துப் பிரார்த்தியுங்கள்)" என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறைவா! மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவாயாக!" என்றார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்..." என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (இறைவா, அருள் புரிவாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 15
2505. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மழித்துக்கொள்பவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக!" என்று பிரார்த்தித்ததும் மக்கள், "அல்லாஹ்வின் தூதரே, குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ், மழித்துக்கொள்பவர்களுக்கு அருள் புரிவானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்), "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்..." என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மறுபடியும்) "அல்லாஹ், மழித்துக்கொள்பவர்களுக்கு அருள்புரிவானாக!" எனப் பிரார்த்தித்தார்கள். மக்கள் (திரும்பவும்) "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்வர்களுக்கும்..." என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக)" எனப் பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 15
2506. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நான்காவது தடவையில் "குறைத்துக்கொள்பவர்களுக்கும் (அல்லாஹ் அருள் புரிவானாக)" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள் என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2507. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" எனப் பிரார்த்தித்ததும் மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! "குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" என்று (மீண்டும்) பிரார்த்தித்தார்கள். மக்கள் (மீண்டும்), "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக் கொள்பவர்களுக்கும் (பிரார்த்தியுங்கள்)" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா, மழித்துக்கொள்பவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். மக்கள் (மறுபடியும்) "அல்லாஹ்வின் தூதரே! குறைத்துக்கொள்பவர்களுக்கும்..." என்றதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குறைத்துக்கொள்பவர்களுக்கும் (மன்னிப்பு அளிப்பாயாக)" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2508. உம்முல் ஹுஸைன் பின்த் இஸ்ஹாக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது தலையை மழித்துக் கொள்பவர்களுக்காக மூன்று முறையும், முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்காக ஒரு முறையும் பிரார்த்தித்ததை நான் செவியுற்றேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் வகீஉ பின் அல்ஜர்ராஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "விடைபெறும் ஹஜ் ஜின்போது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
2509. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜில் (ஹஜ் கிரியைகளை முடித்ததும்) தமது தலையை மழித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 56 துல்ஹஜ் பத்தாவது நாளில் (முதலில்) கல்லெறிவதும் பிறகு அறுத்துப் பலியிடுவதும் பிறகு தலையை மழிப்பதும் நபிவழி (சுன்னா) ஆகும். மழிக்கும் போது தலையின் வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதும் நபிவழியாகும்.
2510. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜில்) மினாவிற்குச் சென்ற போது, (முதலில்) ஜம்ர(த்துல் அகப)ôவிற்குச் சென்று கற்களை எறிந்தார்கள். பின்னர் மினாவிலிருந்த தமது கூடாரத்திற்கு வந்து அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் வலப்பக்கத்தையும் பின்னர் இடப்பக்கத்தையும் காட்டி, "எடு" என்றார்கள். பிறகு அந்த முடியை மக்களிடையே விநியோகிக்க (உத்தரவிடலா)னார்கள்.
அத்தியாயம் : 15
2511. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (தலையின்) வலப்பக்கத்தை நாவிதரிடம் காட்டி "எடு" என்றார்கள். பிறகு அந்த முடியைத் தமக்கு அருகிலிருந்த மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பின்னர் தமது (தலையின்) இடப்பக்கத்தை நாவிதரிடம் காட்டினார்கள். அவர் அதை மழித்தார். அந்த முடியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் (தமது தலையின்) வலப்பக்கத்திலிருந்து ஆரம்பித்தார்கள். ஓரிரு முடிகளை மக்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பின்னர் இடப்பக்கத்தைக் காட்டி அவ்வாறே (மழிக்கச்) செய்தார்கள். பிறகு, "அபூதல்ஹா இங்கே இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். (அவர் வந்ததும்) அவரிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 15
2512. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா"வில் கல்லெறிந்துவிட்டுப் பிறகு பலி ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதை அறுத்தார்கள். நாவிதரும் அங்கே அமர்ந்திருந்தார். அவரி டம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைக் கையால் சுட்டிக் காட்டினார்கள். வலப் பக்கத்தை அவர் மழித்ததும் முடியைத் தமக்கு அருகிலிருந்தவர்களிடையே விநியோகிக்கச் செய்தார்கள். பிறகு நாவிதரிடம் "மறு பக்கத்தை மழி" என்றார்கள். பின்னர் "அபூதல்ஹா எங்கே?" என்று கேட்டு, (அவர்கள் வந்ததும்) அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள்.
அத்தியாயம் : 15
2513. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) "ஜம்ரத்துல் அகபா"வில் கற்களை எறிந்து, தமது பலிப்பிராணியை அறுத்துப் பலியிட்டதும் தமது தலையை மழித்தார்கள். நாவிதரிடம் தமது தலையின் வலப்பக்கத்தைக் காட்டியபோது, அவர் அதை மழித்தார். அபூதல்ஹா அல்அன்சாரி (ரலி) அவர்களை அழைத்து, அவர்களிடம் அந்த முடியைக் கொடுத்தார்கள். பிறகு நாவிதரிடம் தமது தலையின் இடப்பக்கத்தைக் காட்டி "மழி" என்றார்கள். அவர் மழித்ததும் அதை அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொடுத்து "இதை மக்களிடையே விநியோகிப்பீராக!" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 57 ஒருவர் பலியிடுவதற்கு முன் தலை முடியை மழித்துவிட்டாலோ, கல் எறிவதற்கு முன் பலியிட்டுவிட்டாலோ (குற்றமில்லை).
2514. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது மக்களின் கேள்விகளுக்கு விடையளித்தவாறு மினாவில் நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தெரியாமல் நான் பலியிடுவதற்கு முன்பே தலையை மழித்துவிட்டேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக!"என்றார்கள். பின்னர் மற்றொரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தெரியாமல் நான் கல்லெறிவதற்கு முன்பே அறுத்துப் பலியிட்டு விட்டேன்" என்றார். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக!"என்றார்கள். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முந்திச் செய்யப்பட்டது என்றோ, அல்லது பிந்திச்செய்யப்பட்டது என்றோ கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்திற்கும் "குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்" என்றே விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2515. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜின்போது) தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம் மக்கள் (சில விளக்கங்களை) கேட்கலாயினர். அவர்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறுத்துப் பலியிடுவதற்கு முன் கல்லெறிய வேண்டும் என அறிந்திருக்கவில்லை. எனவே, கல்லெறிவதற்கு முன்பே பலியிட்டுவிட்டேன்"என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை. (இப்போது) கல்லெறிவீராக!" என்றார்கள். மற்றொருவர், "தலையை மழிப்பதற்கு முன் பலியிட வேண்டும் என்பதை அறியாமல், நான் பலியிடுவதற்கு முன்பாக தலையை மழித்துவிட்டேன்" என்று கேட்கலானார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை. (இப்போது) பலியிடுவீராக!" என்றார்கள்.
அன்றைய தினத்தில் மறதியால், அல்லது அறியாமையால் ஒரு மனிதர் சில கிரியைகளைவிடச் சிலவற்றை முந்திச் செய்துவிட்டதாகக் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "குற்றமில்லை; (இப்போது) அதைச் செய்யுங்கள்" என்று விடையளிப்பதையே நான் செவியுற்றேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2516. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து) நின்று, "நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்னின்ன கிரியைகளைச் செய்ய வேண்டும் என அறிந்திருக்க வில்லை" என்றார். பிறகு மற்றொரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன கிரியைகளுக்கு முன் இன்ன கிரியையைச் செய்ய வேண்டும் என (தவறாக) நினைத்துக் கொண்டுவிட்டேன் எனக்கூறி, (கல்லெறிதல், பலிப்பிராணியை அறுத்தல், தலைமுடி களையுதல் ஆகிய) இம்மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார். அவற்றுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்" என்றே விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2517. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் மேற்கண்ட ஹதீஸில் இடம்பெற்றுள்ள "இம்மூன்று விஷயங்களை" என்பதைத் தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன; "இம்மூன்று விஷயங்களை" எனும் வாசகம் அவரது அறிவிப்பில் இடம்பெறவில்லை.
யஹ்யா அல்உமவீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் பலியிடுவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன். கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்" என்பன போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2518. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "நான் அறுத்துப் பலியிடுவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "குற்றமில்லை; (இப்போது) பலியிடுவீராக!" என்றார்கள். அவர், "நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டு விட்டேன்" என்றார். அதற்கும் "குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!" என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2519. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் ஓர் ஒட்டகத்தின் மீதிருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார்" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2520. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "ஜம்ரத்துல் அகபா"விற்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் கல்லெறிவதற்கு முன் தலையை மழித்துவிட்டேன்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!"என்றார்கள். மற்றொரு மனிதர் வந்து, "நான் கல்லெறிவதற்கு முன் அறுத்துப் பலியிட்டுவிட்டேன்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குற்றமில்லை; (இப்போது) கல்லெறிவீராக!" என்றார்கள். இன்னொரு மனிதர் வந்து, "நான் கல்லெறிவதற்கு முன் கஅபாவுக்குத் திரும்பிச் சென்று (தவாஃபுல் இஃபாளா செய்து) விட்டேன்" என்றார். அதற்கு, "குற்றமில்லை; (இப்போது சென்று) கல்லெறிவீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அன்றைய நாளில் அவர்களிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அவர்கள் "குற்றமில்லை. (இப்போது) செய்யுங்கள்"என்றே விடையளித்ததை நான் கண்டேன்.
அத்தியாயம் : 15
2521. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (துல்ஹஜ் பத்தாவது நாளில் நிறைவேற்ற வேண்டிய கிரியைகளான) பலியிடுதல், தலைமுடியை மழித்தல், கல்லெறிதல் ஆகியவற்றை முன் பின்னாகச் செய்வதைப் பற்றிக் கேட்கப்பட்ட போது "குற்றமில்லை (இப்போது செய்யுங்கள்)" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 58 துல்ஹஜ் பத்தாவது நாளில் "தவாஃபுல் இஃபாளா" செய்வது விரும்பத்தக்கதாகும்.
2522. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் "தவாஃபுல் இஃபாளா"ச் செய்துவிட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ர் தொழுகையைத் தொழுதார்கள்.
இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்களும் "நஹ்ரு" டைய நாளில் "தவாஃபுல் இஃபாளா"ச் செய்து விட்டுத் திரும்பிச் சென்று மினாவில் லுஹ்ர் தொழுவார்கள். அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களும் செய்தார்கள் என்றும் அவர்கள் குறிப்பிடுவார்கள்.
அத்தியாயம் : 15