25. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.
அவற்றில், "(மது ஊற்றிவைக்கப்படும் பாத்திரங்களான) சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய், மண்சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங்களுக்குத் தடை விதிக்கிறேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
முஆத் அல்அம்பரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், அப்துல் கைஸ் குலத்தின் (தலைவர்) அஷஜ் (எனும் முன்திர் பின் ஆயித்-ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக இடம்பெற்றுள்ளது:
(அஷஜ்ஜே!) அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உங்களிடம் உள்ளன 1. அறிவாற்றல்
2. நிதானம்.
அத்தியாயம் : 1
26. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தைச் சேர்ந்த சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "இறைவனின் தூதரே! நாங்கள் "ரபீஆ" குலத்தாரின் (இன்ன) குடும்பத்தார் ஆவோம். எங்களுக்கும் உங்களுக்குமிடையே "முளர்" குலத்து இறைமறுப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். இதனால் (போர் நிறுத்தம் நிகழும்) புனித மாதங்களில் தவிர வேறு மாதங்களில் நாங்கள் உங்களிடம் வர முடியாது. ஆகவே, எங்களுக்கு ஒரு கட்டளையிடுங்கள். அதை(ச் செயல்படுத்துமாறு) எங்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு நாங்கள் கட்டளையிடுவோம். அதைக் கடைப்பிடித்து நடந்தால் நாங்களும் சொர்க்கம் செல்வோம்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான்கு விஷயங்களை உங்களுக்கு நான் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களை உங்களுக்குத் தடை செய்கின்றேன்: அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தொழுகையைக் கடைப்பிடியுங்கள். ஸகாத் வழங்குங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். அத்துடன் போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்திலொரு பங்கை (அரசு பொதுநிதிக்கு)ச் செலுத்துங்கள்.
நான்கு பொருட்களை உங்களுக்கு நான் தடை செய்கிறேன். சுரைக்காய்க் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் மரப் பீப்பாய் ("அந்நகீர்") ஆகியவைதாம் அவை" என்று கூறினார்கள்.
அப்போது மக்கள், "இறைவனின் தூதரே! "அந்நகீர் என்பது என்னவென்று தாங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம் (அறிவேன்).பேரீச்சமரத்தின் அடி மரத்தைத் துளையிட்டு அதில் "சிறு பேரீச்சம் பழங்களை" அல்லது "பேரீச்சம் பழங்களை" நீங்கள் போட்டு வைப்பீர்கள். பிறகு அதில் தண்ணீரை ஊற்றுவீர்கள். அதன் கொதி நிலை அடங்கியதும் அதை நீங்கள் அருந்துவீர்கள். (அதை அருந்தியதும் போதையேற்றப்பட்டுவிடுகிறது.) எந்த அளவிற்கென்றால் "உங்களில் ஒருவர்" அல்லது"மக்களில் ஒருவர்" தம்முடைய தந்தையின் சகோதரர் மகனையே கூட வாளால் வெட்டிவிடுகின்றார்" என்று கூறினார்கள்.
அந்தத் தூதுக் குழுவினரிடையே இவ்வாறு காயமேற்பட்ட ஒரு மனிதர் இருந்தார். அவர் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வெட்கப்பட்டுக்கொண்டு அ(ந்தக் காயத்)தை மறைத்துக் கொண்டிருந்தேன்" என்று கூறுகிறார். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (வேறு) எந்தப் பாத்திரத்தில்தான் அருந்துவோம்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வாய்ப்பகுதி சுருக்கிட்டுக் கட்டப்படும் தோல் பைகளில்" என்று கூறினார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் ஏராளமாகப் பெருச்சாளிகள் உள்ளன. அங்கு தோல் பைகள் சரிப்பட்டுவரா" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே! அவற்றைப் பெருச்சாளிகள் சாப்பிட்டாலும் சரியே!" என்று கூறினார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் அப்துல் கைஸ் குலத்தாரின் (தலைவர்) அஷஜ் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்:
உங்களிடம் அல்லாஹ் நேசிக்கின்ற இரு குணங்கள் உள்ளன. 1. அறிவாற்றல் 2. நிதானம்.
அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்த அப்துல் கைஸ் தூதுக் குழுவினரைச் சந்தித்த ஒருவர் (இந்த ஹதீஸை) நமக்கு அறிவித்தார்.
அத்தியாயம் : 1
27. அபூநள்ரா முன்திர் பின் மாலிக் அல்அவகீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தது பற்றி மேற்கண்ட ஹதீஸிலுள்ளவாறே அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் அதில், (மரப் பீப்பாய் (அந்நகீர்) பற்றி விளக்கமளிக்கையில் நபி (ஸல்) அவர்கள்) "பேரீச்சமரத்தின் அடிமரத்தைக் குடைந்து அதனுள் "சிறு பேரீச்சம் பழங்களை" அல்லது "பேரீச்சம் பழத்தையும் தண்ணீரையும்" கலந்துவிடுவீர்கள்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
"சிறு பேரீச்ச மரங்களை" அல்லது "பேரீச்சம் பழங்களை" என்று ஐயப்பாட்டுடன் அறிவிப்பாளர் சயீத் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள வாசகம் அதில் இடம்பெறவில்லை.
அந்தத் தூதுக் குழுவினரைச் சந்தித்த பலர் எனக்கு இதை அறிவித்தனர் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (அவர்களில் ஒருவரான) அபூநள்ரா மேற்கண்டவாறு அறிவித்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
28. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எங்களைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! எந்தெந்தக் குடிபானங்கள் எங்களுக்குத் தகும்?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மரப் பீப்பாயில் ("அந்நகீரில்"-ஊற்றிவைக்கப்பட்ட பானத்தை) அருந்தாதீர்கள்" என்று கூறினார்கள். அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எங்களைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! அந்நகீர் என்பது என்ன என்று தாங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம். பேரீச்சமரத்தின் அடிப்பாகத்தின் நடுவே துளையிடப் படுவதுதான்" என்று கூறிவிட்டு, "சுரைக்காய்க் குடுவையிலும் மண் சாடியிலும் நீங்கள் அருந்தாதீர்கள்.சுருக்குக் கயிற்றால் வாய்ப்பகுதி கட்டப்படும் தோல் பைகளையே பயன்படுத்துங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 7 இஸ்லாமிய உறுதிமொழிகள் மற்றும் நெறிமுறைகளை ஏற்குமாறு அழைப்பு விடுத்தல்.
29. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (யமன் நாட்டின் நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பிவைத்தபோது சொன்னார்கள்:
நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத்தாரிடம் செல்கிறீர்கள். அவர்களிடம் நீங்கள் (செல்லும் போது), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி அளிக்கும்படி அவர்களுக்கு அழைப்புவிடுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால், அல்லாஹ் அவர்கள்மீது ஒவ்வொரு நாளும் ஐந்து (நேரத்) தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள்மீது அல்லாஹ் ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தைக் கடமையாக்கியுள்ளான் என்றும், அது அவர்களில் செல்வர்களிடமிருந்து பெறப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால், (அவர்களிடம் ஸகாத்தை வசூலிக்கும்போது) அவர்களின் செல்வங்களில் (நடுத்தரமானவற்றை விடுத்து) உயர்ந்தவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன். அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில், அவன் செய்யும் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேதுமில்லை.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
30. அபூமஅபத் (நாஃபித்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது "நீங்கள் ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள்..." என்று சொன்னார்கள்" எனத் தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முழுமையாக அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 1
31. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்த போது சொன்னார்கள்:
நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமுதாயத்தாரிடம் செல்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் விடுக்கும் முதலாவது அழைப்பு, (ஏக இறைவனான) அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள் என்பதாகவே இருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வை (ஏகன் என்று) ஏற்றுக்கொண்டால், அல்லாஹ் அவர்கள்மீது (நாளொன்றுக்கு) இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். தொழுகையை அவர்கள் நிறைவேற்றினால், அவர்களில் செல்வர்களாய் இருப்பவர்களிடமிருந்து வசூலிக்கப்பெற்று அவர்களில் ஏழைகளாயிருப்பவர்களிடையே விநியோகிக்கப்பட வேண்டிய ஸகாத்தை அல்லாஹ் அவர்கள்மீது கடமையாக்கியுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவியுங்கள். இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால், மக்களின் செல்வங்களிலிருந்து உயர்ந்தவற்றைத் தவிர்த்துவிடுங்கள். (அவற்றை ஸகாத்தாகப் பெறாதீர்கள்).
அத்தியாயம் : 1
பாடம் : 8 மக்கள் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்" என்று கூறி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் வழங்கி, நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த அனைத்துக் கட்டளைகளையும் நம்பிக்கை கொள்ளாதவரை அவர்களுடன் போரிடுமாறு (இறைத் தூதருக்கு) இடப்பெற்ற உத்தரவு; அவ்வாறு செய்தவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தமது உயிரையும் உடைமையையும் காத்துக்கொள்வார்; அவரது அந்தரங்கம் அல்லாஹ்விடம் விடப்படும் என்ற அறிவிப்பு; ஸகாத் முதலான இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றை மறுப்பவருடன் போரிடப்படும் என்ற அறிவிப்பு; ஆட்சித் தலைவர் இஸ்லாமிய அடையாளங்(களான சில விதிமுறை)களுக்கு முக்கியத்துவம் அளித்திடவேண்டும் என்ற உத்தரவு.
32. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபின் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சியாளர் ஆக்கப்பட்டதும் அரபுகளில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்ததன் மூலம்) இறை மறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆயத்தமானார்கள். அப்போது) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று (இந்த) மக்கள் கூறும்வரை அவர்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் (தகுந்த காரணமிருந்தாலன்றி)தமது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது (அந்தரங்கம் பற்றிய) விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது." என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது நீங்கள் எவ்வாறு (இறை நம்பிக்கை கொண்டுள்ள) இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?" என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஏனெனில் ஸகாத், செல்வத்திற்குரிய கடமையாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழங்கிவந்த ஒட்டகத்தின் கயிற்றை இவர்கள் என்னிடம் வழங்க மறுத்தாலும் அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்" என்றார்கள். இது குறித்து உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை, போர் (தொடுப்பதன் மீது உறுதியான முடிவு) செய்வதற்காக அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததை நான் கண்டுகொண்டேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக்கொண்டேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
33. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. யார் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறிவிடுகிறாரோ அவர் -தகுந்த காரணம் இருந்தாலன்றி- தமது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்.அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
34. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என உறுதிமொழி கூறி, என்னையும் எனக்குக் கிடைத்துள்ள (மார்க்கத்)தையும் நம்புகின்றவரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. இதை அவர்கள் செயல்படுத்தினால் (தகுந்த காரணம் இருந்தாலன்றி) தமது உயிரையும் செல்வத்தையும் என்னிடமிருந்து காத்துக்கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
35. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அவர்கள் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று சொல்லிவிட்டால் (தகுந்த காரணம் இருந்தாலன்றி) என்னிடமிருந்து தம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது" என்று கூறினார்கள். பிறகு, "(நபியே!) நிச்சயமாக நீர் நினைவூட்டுபவர்தாம். அவர்கள்மீது ஆதிக்கம் செலுத்துபவர் அல்லர்" எனும் இறை வசனங்களை (88:21, 22) ஓதிக் காட்டினார்கள்.
வேறு சில அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
36. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் உறுதிமொழி கூறி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத்தும் வழங்கும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளை இடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் செய்துவிட்டால் (தகுந்த காரணம் இருந்தாலன்றி) என்னிடமிருந்து தம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வார்கள். அவர்களது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
37. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்துவிடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.
இதைத் தாரிக் பின் அஷ்யம் பின் மஸ்ஊத் அல்அஷ்ஜயீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
38. மேற்கண்ட ஹதீஸ் தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்களிடமிருந்தே வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "யார் ஓரிறைக் கொள்கையை ஏற்று..." என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது.
அத்தியாயம் : 1
பாடம் : 9 மரணத் தறுவாயில் உள்ள ஒருவர், உயிர் பிரிவதற்கு சற்று முன்னர் இஸ்லாத்தை ஏற்றால்கூட அது செல்லும்;இணைவைப்பாளர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது; இணைவைப்பாளராக உள்ள நிலையில் இறந்து போனவர் நரகவாசிகளில் ஒருவர்தாம். அவரை எந்த வகையிலும் காப்பாற்ற முடியாது- என்பதற்கான ஆதாரம்.
39. முஸய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தை) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை நெருங்கிவிட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அங்கே, அவரருகே அபூஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் அல்முஃகீராவையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் பெரிய தந்தையே! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் சாட்சியம் கூறுவேன்" என்று சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் "அபூதாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?" என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அபூதாலிப் அவர்களிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள்; தாம் முன்பு சொன்னதையே அவரிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது "நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்கிறேன்" என்பதாகவே இருந்தது. "லா இலாஹ இல்லல்லாஹ்" எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்" என்று சொன்னார்கள். அப்போது தான் கண்ணியமும் மாண்பும் உடைய அல்லாஹ், "இறைவனுக்கு இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது நன்கு தெளிவாகிவிட்ட பின்னரும் (அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும் சரி) அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை" எனும் (9:113ஆவது) வசனத்தை அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ், "(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்" எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 1
40. மேற்கண்ட ஹதீஸ் மேலும் சில அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அப்போது அல்லாஹ் வசனத்தை அருளினான்" என்று ஹதீஸ் முடிகிறது. அவ்விரு வசனங்களும் அந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை. மேலும், "அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும் தாம் முன்பு சொன்னதையே (அபூதாலிபிடம்) திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இந்த இடத்தில் "அவ்விருவரும் அவரிடம் அதைச் சொல்லிக்கொண்டேயிருந்தார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
41. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை (அபூதாலிப்) உடைய மரண தறுவாயில் "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள்; இதை வைத்து உங்களுக்காக நான் மறுமைநாளில் (அல்லாஹ்விடம்) சாட்சியம் கூறுவேன்" என்று கூறினார்கள். ஆனால் அவர், (ஏகத்துவ உறுதிமொழி கூற) மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ், "(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது" எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
42. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் பெரிய தந்தை (அபூதாலிபின் மரண தறுவாயில்) அவர்களிடம், "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். இதை வைத்து உங்களுக்காக நான் மறுமைநாளில் சாட்சியம் கூறுவேன்" என்று கூறினார்கள். அதற்கு அவர், "பயம்தான் அவரை இவ்வாறு செய்யவைத்தது என்று என்னைப் பற்றிக் குறைஷியர் குறை கூறிவிடுவார்கள் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் (ஏகத்துவ உறுதிமொழியான) இதைக் கூறி உம்முடைய கண்களை நான் குளிர வைத்திருப்பேன்" என்று கூறினார். அப்போதுதான் அல்லாஹ் "(நபியே!) நீங்கள் விரும்பியவரை (யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான்" எனும் (28:56 ஆவது) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 1
பாடம் : 10 ஓரிறைக் கோட்பாட்டில் இறந்தவர் சொர்க்கம் செல்வது உறுதி என்பதற்கான ஆதாரம்.
43. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (மனமார) அறிந்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வார்.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
44. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது மக்களிடம் இருந்த உணவுப் பொருட்கள் தீர்ந்துவிட்டன. அதனால் மக்களின் (உணவுக்காகப்) பயண ஒட்டகங்களில் சிலவற்றை அறுக்கலாம் என்று கூட நபி (ஸல்) அவர்கள் எண்ணினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! மக்களிடம் எஞ்சியுள்ள உணவுப் பொருட்களை ஒன்றுதிரட்டி, அதில் (பெருக்கம் ஏற்பட) தாங்கள் பிரார்த்தித்தால் நன்றாயிருக்குமே!" என்று கூறினார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள். அப்போது தம்மிடம் கோதுமை வைத்திருந்தவர் கோதுமையைக் கொண்டுவந்தார்; பேரீச்சம் பழங்கள் வைத்திருந்தவர் பேரீச்சம் பழங்களைக் கொண்டுவந்தார். -அறிவிப்பாளர் தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) கூறுகிறார்கள்: முஜாஹித் (ரஹ்) அவர்கள், "பேரீச்சம் பழங்களின் கொட்டைகள் வைத்திருந்தவர் பேரீச்சம்பழக் கொட்டைகளைக் கொண்டுவந்தார்" என்று கூறினார்கள். நான், "பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை வைத்து மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவற்றை வாயிலிட்டுச் சுவைத்துவிட்டு, அதற்கு மேல் தண்ணீரை அருந்திக்கொள்வார்கள்" என்று கூறினார்கள்.-
(மக்களிடமிருந்த உணவுப் பொருட்கள் ஒன்று திரட்டப்பட்டன.) அதில் (பெருக்கம் ஏற்பட) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (அவ்வாறே பெருக்கம் ஏற்பட்டது.) எந்த அளவிற்கென்றால் மக்கள் அனைவரும் தங்கள் பயண(த்திற்கு வேண்டிய) உணவை நிரப்பிக் கொண்டனர். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரு உறுதிமொழிகளுடன், அவற்றில் சந்தேகம் கொள்ளாமல் இறைவனைச் சந்திக்கும் அடியார் எவரும் சொர்க்கம் செல்லாமல் இருக்கமாட்டார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1