2376. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "ஒருவர் உம்ராவிற்காக (மக்கா நகருக்கு) வந்து இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துவிட்டார். ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே "சயீ" செய்யவில்லை. இந்நிலையில், அவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடலாமா? (அதாவது இஹ்ராமிலிருந்து விடுபடலாமா?)" என்று கேட்டோம். அதற்கு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு) வந்தபோது இறையில்லம் கஅபாவை ஏழு முறைச் சுற்றிவந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமிற்குப் பின்னால் (நின்று) இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் ஏழு முறை (ஓடினார்கள்). உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 29 (ஹஜ்ஜின்போது) கஅபாவைச் சுற்றி வந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே "சயீ" செய்த பின் (ஹஜ் முடியும்வரை) அந்த இஹ்ராமிலேயே நீடிப்பது, (அதாவது) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பது அவசியமாகும்.
2377. முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இராக்வாசிகளில் ஒருவர் என்னிடம், "நீங்கள் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம் "ஒருவர் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்"கட்டி, (மக்காவிற்கு வந்ததும்) இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார். இந்நிலையில் அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளலாமா, அல்லது கூடாதா?" என்று கேளுங்கள். உர்வா (ரஹ்) அவர்கள் "இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது" என்று பதிலளித்தால் "விடுபடலாம் என ஒரு மனிதர் கூறுகிறாரே?" என்று கேளுங்கள்" என்றார்.
அவ்வாறே நான் உர்வா (ரஹ்) அவர்களிடம் (சென்று) கேட்டபோது அவர்கள், "ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர் ஹஜ்ஜை முடிக்காமல் இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது" என்று விடையளித்தார்கள். நான் "அப்படியானால், விடுபடலாம் என ஒருவர் கூறுகிறாரே?" என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், "அவர் சொன்னது தவறு" என்றார்கள்.
பின்னர் அந்த மனிதர் என் எதிரே வந்து அ(வர் கூறியனுப்பிய)து பற்றி என்னிடம் கேட்டார். அ(ப்போது உர்வா (ரஹ்) அவர்கள் கூறிய)தை நான் அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அந்த மனிதர் என்னிடம், "உர்வா (ரஹ்) அவர்களிடம் "அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளதாக ஒரு மனிதர் தெரிவித்து வந்தாரே? அஸ்மா (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரின் நிலை என்ன? அவர்களும் அவ்வாறு செய்துள்ளனரே?" என்று நீங்கள் கேளுங்கள்" என்றார்.
அவ்வாறே நான் (மீண்டும்) உர்வா (ரஹ்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தேன். அப்போது உர்வா (ரஹ்) அவர்கள் "யார் அவர்?" என்று கேட்டார்கள். நான் "எனக்குத் தெரியாது" என்றேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், "அவருக்கு என்ன நேர்ந்தது? என்னிடமே வந்து நேரடியாகக் கேட்க மறுக்கிறாரே? அவர் (மார்க்க விஷயங்களில் பிடிவாதம் காட்டக்கூடிய) ஓர் இராக்வாசி என்றே நான் கருதுகிறேன்" என்றார்கள். நான் "எனக்குத் தெரியாது" என்று (மீண்டும்) சொன்னேன்.
உர்வா (ரஹ்) அவர்கள், "அவர் பொய்யுரைத்துவிட்டார்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்ததும் முதல் வேலையாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃபுல் குதூம்) வந்தார்கள்.
பின்னர் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தபோது, முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்தார்கள். பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவைச் சேர்த்தல் போன்ற) வேறெதுவும் நிகழவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்தபோது, அ(பூபக்ர் (ரலி) அவர்கள் செய்த)தைப் போன்றே செய்தார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ் செய்தார்கள். அவர்கள் (மக்காவிற்கு வந்ததும்) முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றி வருவதையே நான் கண்டேன்; பின்னர் அதைத் தவிர (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றுதல், ஹஜ்ஜோடு உம்ராவைச் சேர்த்தல் போன்ற) வேறெதுவும் நிகழவில்லை.
பின்னர் முஆவியா (ரலி), அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆகியோரும் (அவ்வாறே செய்தனர்.) பின்னர் என் தந்தை ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்களின் முதல் வேலையாக இருந்ததும் கஅபாவைச் சுற்றுவதாகத் தான் இருந்தது. அதைத் தவிர வேறொன்றும் நடக்க வில்லை. பின்னர் முஹாஜிர்களும் அன்சாரிகளும் அவ்வாறு செய்வதையே நான் கண்டேன்; பின்னர் அதைத் தவிர வேறெதுவும் நிகழவில்லை.
பின்னர் அவ்வாறு செய்தவர்களில் இறுதியானவராக இப்னு உமர் (ரலி) அவர்களையே நான் கண்டேன். அவர்கள் ஹஜ்ஜை உம்ராவாக மாற்றவில்லை. இதோ அவர்களுடன் இப்னு உமர் (ரலி) அவர்களே இருக்கிறார்கள். அவர்களிடமே மக்கள் கேட்க வேண்டியதுதானே! முன்னோர்களில் எவரும் தம் பாதங்களை (மக்காவில்) பதித்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் இருந்ததில்லை. பின்னர் (ஹஜ்ஜை முடிக்காமல்) இஹ்ராமிலிருந்து விடுபடமாட்டார்கள். என் தாயார் (அஸ்மா-ரலி), என் சிறிய தாயார் (ஆயிஷா-ரலி) ஆகியோர் (மக்காவிற்கு) வந்ததும் முதல் வேலையாக இறையில்லம் கஅபாவைச் சுற்றிவராமல் வேறெதையும் தொடங்கமாட்டார்கள். பின்னர் (ஹஜ்ஜை முடிக்கும்வரை) இஹ்ராமிலிருந்து விடுபடாமல் இருப்பார்கள்.
என் தாயார் (அஸ்மா-ரலி) அவர்கள் என்னிடம், "நானும் என் சகோதரி (ஆயிஷா-ரலி) அவர்களும் (உன் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களும் மற்றும் இன்னின்ன மனிதரும் உம்ராவிற்குச் சென்றபோது ஹஜருல் அஸ்வதைத் தொட்டதும் (அதாவது தவாஃபும் "சயீ"யும் செய்து முடித்ததும்) இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம்" என்று தெரிவித்தார்கள். (எனவே இராக்கைச் சேர்ந்த) அந்த மனிதர் பொய்யான தகவலையே குறிப்பிட்டுள்ளார்" என்று உர்வா (ரஹ்) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2378. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "இஹ்ராம்" கட்டியவர்களாக (ஹஜ்ஜுக்கு)ப் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உங்களில்) தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருப்பவர் தமது இஹ்ராமிலேயே நீடிக்கட்டும்; பலிப்பிராணியைக் கொண்டுவராதவர் இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்" என்று சொன்னார்கள். அப்போது என்னுடன் பலிப்பிராணி இல்லாததால் நான் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டேன். (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களுடன் பலிப்பிராணி இருந்ததால் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அப்போது நான் எனது ஆடையை அணிந்து புறப்பட்டேன்; ஸுபைர் (ரலி) அவர்கள் அருகில் அமர்ந்தேன். உடனே அவர்கள் "என்னிடமிருந்து எழுந்து (சென்று) விடு" என்றார்கள். அப்போது நான், "உங்கள் மீது (ஆசையோடு) பாய்ந்துவிடுவேன் என அஞ்சுகிறீர்களா?" என்று கேட்டேன்.
- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2379. மேற்கண்ட தகவல் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. ஆயினும் அதில், ("என்னிடமிருந்து எழுந்துவிடு" என்பதற்குப் பதிலாக) "என்னைவிட்டு விலகிச் சென்றுவிடு" என்று ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அதற்கு நான், "உங்கள்மீது (ஆசையோடு) பாய்ந்துவிடுவேன் என நீங்கள் அஞ்சுகிறீர்களா?" என்று கேட்டேன் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2380. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா (ரலி) அவர்கள் (மக்காவில் "அல்முஅல்லா" பொது மையவாடி அருகிலுள்ள) "அல்ஹுஜூன்" எனும் மலையைக் கடந்து செல்லும்போதெல்லாம் பின்வருமாறு அவர்கள் கூறுவதை நான் கேட்டுள்ளேன்:
அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கருணை புரியட்டும்! சாந்தி அளிக்கட்டும்! நாங்கள் (ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இங்கு வந்து தங்கினோம். அப்போது எங்களிடம் (பயணத்திற்கான) மூட்டை முடிச்சுகள் குறைவாகவே இருந்தன; பயண வாகனங்களும் உணவுகளும் குறைவாகவே இருந்தன. அப்போது நானும் என் சகோதரி ஆயிஷாவும் (என் கணவர்) ஸுபைர் (ரலி) அவர்களும் இன்ன மனிதரும் இன்ன மனிதரும் உம்ராவிற்காக "இஹ்ராம்"கட்டி தல்பியாச் சொன்னோம். நாங்கள் கஅபாவைச் சுற்றி ("சயீ"யும் செய்து) வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டோம். பிறகு மாலையில் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டினோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹாரூன் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அஸ்மா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை கூறியதாவது"என்றே இடம்பெற்றுள்ளது. "அப்துல்லாஹ்" எனும் அவர்களது பெயர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 30 "தமத்துஉ" வகை ஹஜ்.
2381. முஸ்லிம் அல்குர்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "தமத்துஉ" வகை ஹஜ் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனுமதியளித்தார்கள். -இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் அதற்குத் தடை விதித்துவந்தார்கள்- எனவே, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இதோ இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களின் தாயார் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தமத்துஉ" செய்யத் தம்மை அனுமதித்தார்கள் எனக் கூறுகிறார்கள். ஆகவே, அவரிடம் சென்று அதைப் பற்றிக் கேளுங்கள்" என்றார்கள்.
அவ்வாறே அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் கனத்த உடலுடைய கண் பார்வையற்ற பெண்மணியாக இருந்தார்கள். அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தமத்துஉ" செய்வதற்கு அனுமதியளித்தார்கள்" எனக் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2382. மேற்கண்ட தகவல் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ அல்அம்பரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தமத்துஉ" எனும் சொல்லே காணப்படுகிறது. "தமத்துஉ முறை ஹஜ்" என இடம்பெற வில்லை. முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "முத்அத்துல் ஹஜ்" ("தமத்துஉ" ஹஜ்) பற்றிக் கூறினார்களா? அல்லது "முத்அத்துந் நிசா" (தவணை முறைத் திருமணம்) பற்றிக் கூறினார்களா? என எனக்குத் தெரியவில்லை" என்று முஸ்லிம் அல்குர்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2383. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா"ச் சொன்னார்கள். அவர்களுடைய தோழர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா"ச் சொன்னார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை; அவர்களுடைய தோழர்களில் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. மற்றவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டார்கள். பலிப்பிராணியைக் கொண்டுவந்தவர்களில் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் ஒருவராக இருந்ததால் அவர்களும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.
அத்தியாயம் : 15
2384. மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "தம்மிடம் பலிப்பிராணி இல்லாதவர்களில் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களும் மற்றொரு மனிதரும் அடங்குவர்; எனவே, அவர்கள் இருவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 31 ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ராச் செய்யலாம்.
2385. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அ(றியாமைக் காலத்த)வர்கள், ஹஜ்ஜுடைய மாதங்களில் உம்ராச் செய்வது பூமியில் நடக்கும் பாவங்களிலேயே மிகக் கொடியபாவம் எனக் கருதிவந்தனர். (துல்கஅதா,துல்ஹஜ், முஹர்ரம் என மூன்று மாதங்கள், போர் செய்யத் தடைவிதிக்கப்பட்ட புனித மாதங்களாகத் தொடர்ந்து வந்ததால்) முஹர்ரம் மாதத்திற்கான தடையை ஸஃபருக்கு மாற்றிக் கொள்வார்கள். (ஹஜ் பயணத்திற்கான சுமையைச் சுமந்த ஒட்டகங்களின் முதுகில்)
"வடு மறைந்து
காலடித் தடங்கள் அழிந்து
ஸஃபர் மாதம் கழிந்தால்
உம்ராச் செய்யலாம்; உம்ராச் செய்பவர்"
என்றும் அவர்கள் கூறிவந்தனர்.
நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காவது நாள் காலை, ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களாக (மக்காவிற்கு) வந்தபோது, (தம் தோழர்களிடம்) அவர்களது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள். இது நபித்தோழர்களுக்கு மிகக் கடினமாகத் தெரிந்தது. இதனால் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?" என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எல்லாமும்தான் அனுமதிக்கப்படும்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2386. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் (காலை மக்காவிற்கு) வந்து, சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். சுப்ஹுத் தொழுகையை முடித்ததும், "தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ள விரும்புபவர் அதை உம்ராவாக ஆக்கிக் கொள்ளட்டும்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2387. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ரவ்ஹ் பின் உபாதா (ரஹ்), யஹ்யா பின் கஸீர் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டினார்கள்" என்று நஸ்ர் பின் அலீ (ரஹ்) அவர்களது முந்தைய அறிவிப்பில் இடம் பெற்றதைப் போன்றே உள்ளது.
அபூஷிஹாப் அப்து ரப்பிஹி பின் நாஃபிஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டினோம்" என்று காணப்படுகிறது.
நஸ்ர் பின் அலீ (ரஹ்) அவர்களைத் தவிர மற்ற அனைவரின் அறிவிப்புகளிலும் "அல்பத்ஹா எனுமிடத்தில் சுப்ஹுத் தொழுதார்கள்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2388. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (துல்ஹஜ் மாதம் முதல்)பத்தின் நான்காவது நாளில் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, தல்பியாச் சொன்னவர்களாக (மக்காவிற்கு) வந்தார்கள். (தோழர்கள்) தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ளுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2389. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) "தூ தவா" எனும் பள்ளத்தாக்கில் சுப்ஹுத் தொழுகை தொழுதார்கள். துல்ஹஜ் நான்காவது நாள் மக்காவிற்கு வந்து, தம் தோழர்களில் பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவந்தவர்கள் தவிர மற்றவர்கள் தமது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளுமாறு கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 15
2390. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இது, நாம் (உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்குமிடையே இடைவெளிவிட்டுப்) பயனடைந்த உம்ராவாகும். ஆகவே, "(உங்களில்) எவரிடம் பலிப்பிராணி இல்லையோ அவர் முழுமையாக இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடட்டும். ஏனெனில், மறுமை நாள்வரை ஹஜ்ஜுடன் உம்ராவும் சேர்ந்திருக்கும்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2391. அபூஜம்ரா அள்ளுபஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் "தமத்துஉ" வகை ஹஜ் செய்தேன். அவ்வாறு செய்யலாகாதென என்னைச் சிலர் தடுத்தனர். நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதைச் செய்யுமாறு எனக்கு அவர்கள் உத்தரவிட்டார்கள்.
பின்னர் (ஒரு நாள்) நான் இறையில்லம் கஅபாவுக்குச் சென்று (அதன் அருகில்) உறங்கினேன். அப்போது ஒருவர் எனது கனவில் தோன்றி "ஒப்புக்கொள்ளப்பட்ட உம்ராவும் பாவச் செயல் கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜும் (உமக்குக் கிடைத்துவிட்டன)"என்று கூறினார்.
உடனே நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று நான் (கனவில்) கண்டதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் "அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ் மிகப் பெரியவன். (இந்த ஹஜ் முறை) அபுல்காசிம் (ஸல்) அவர்களின் வழி முறையாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 32 இஹ்ராம் கட்டும்போது, பலி ஒட்டகத்தின் கழுத்தில் மாலை தொங்கவிடுவதும், அதற்கு அடையாளமிடுவதும்.
2392. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("விடைபெறும்" ஹஜ்ஜுக்காகச் சென்றபோது) "துல்ஹுலைஃபா"வில் லுஹ்ர் தொழுகை தொழுதுவிட்டுத் தமது பலி ஒட்டகத்தைக் கொண்டுவரச் சொல்லி, அதன் வலப்பக்கத்திமில் பகுதியில் கீறி அடையாளமிட்டார்கள்; இரத்தத்தை அதிலிருந்து துடைத்தார்கள்; இரு செருப்புகளை (அதன் கழுத்தில் அடையாளத்திற்காக) தொங்கவிட்டார்கள். பின்னர் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, "பைதாஉ" எனும் குன்றில் அது நேராக நின்றதும் ஹஜ்ஜுக்காகத் தல்பியாச் சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "துல்ஹுலைஃபா"விற்கு வந்தபோது" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. "அங்கு லுஹ்ர் தொழுதார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
(இறையில்லம் கஅபாவைச் சுற்றியவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்.)
அத்தியாயம் : 15
2393. அபூஹஸ்ஸான் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பனுல் ஹுஜைம் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "ஒருவர் (மக்காவிற்கு வந்து) இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்" எனும் இந்தத் தீர்ப்பு என்ன (சரிதானா)? இது மக்களைக் "கவர்ந்துள்ளது" அல்லது "குழப்பியுள்ளது" என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "(இது) உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழி முறையாகும்; நீங்கள் வெறுத்தாலும் சரியே" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2394. அபூஹஸ்ஸான் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார்;இறையில்லத்தைச் சுற்றி வருதலே உம்ராவாகும் எனும் கருத்தாக்கம் மக்களிடையே பரவலாகிவிட்டிருக்கிறது" என்று சொல்லப்பட்டது. அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "(ஆம்; இது) உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையாகும்; நீங்கள் வெறுத்தாலும் சரியே" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2395. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அதாஉ (ரஹ்) அவர்கள், "ஹஜ் செய்பவரோ மற்றவரோ (அதாவது உம்ராச் செய்பவரோ) இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்துவிட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுவார் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்" என்று அறிவித்தார்கள்.
நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், "எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பின்னர் அவை (பலிப்பிராணிகள் அறுப்பதற்காகச்) சென்றடையும் இடம், பழைமையான அந்த ஆலயமாகும்" எனும் (22:33ஆவது) இறை வசனத்திலிருந்தும், நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது அவர்(களுடன் வந்தவர்)களுக்கு இஹ்ராமிலிருந்து விடுபடும்படி இட்ட கட்டளையை ஆதாரமாகக் கொண்டும்தான் இப்படிக் கூறினார்கள்" என்றார்கள்.
நான், "இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், "அது, அரஃபாவில் தங்கியதற்குப் பின்பும் அதற்கு முன்பும் (அனுமதிக்கப்பட்டதே)" என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள் என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15