1973. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (ஷஅபான் மாதத்தின்) எண்ணிக்கையை (முப்பது நாட்களாக) முழுமையாக்கிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1974. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; (மேக மூட்டத்தால்) உங்களுக்குத் திங்கள் தென்படவில்லையானால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1975. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிறை குறித்துக் கூறுகையில், "நீங்கள் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். (மறு)பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் தென்பட்டால், (மாதத்தை) முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 3 ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்.
1976. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்கள். (வழக்கமாக அந்த நாளில்) ஏதேனும் நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 4 மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்.
1977. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியருடன் ஒரு மாதகாலம் சேரப் போவதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு (விலகி) இருந்தார்கள். பின்னர் இருபத்தொன்பது இரவுகள் முடிந்ததும் (அந்த இரவுகளை நான் எண்ணிக்கொண்டே இருந்தேன்) என்னிடம்தான் முதன்முதலில் வந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் ஒரு மாதம் எங்களிடம் வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே, இருபத்தொன்பது நாட்கள் முடிந்ததும் வந்துவிட்டீர்களே? நான் அந்த இரவுகளை எண்ணிக் கொண்டிருந்தேனே!" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்" என்றார்கள்.
அத்தியாயம் : 13
1978. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியரிடமிருந்து ஒரு மாதகாலம் விலகியிரு(க்கப்போவதாகக் கூறியிரு)ந்தார்கள். பின்னர் இருபத்தொன்பதாம் நாள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள், "இன்று இருபத்தொன்பதாவது நாள்தான்" என்று சொன்னோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று தடவை கைகளைத் தட்டி, இறுதியில் ஒரு விரலை மட்டும் விரிக்காமல் மடக்கிவைத்திருந்துவிட்டு, "மாதம் என்பது இப்படி (இருபத்தொன்பது நாட்களாகவும்) இருக்கும்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1979. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடமிருந்து ஒரு மாதகாலம் விலகியிரு(க்கப் போவதாகக் கூறியிரு)ந்தார்கள். பின்னர் இருபத்தொன்பதாம் நாள் காலையிலேயே புறப்பட்டு எங்களிடம் வந்தார்கள். அப்போது சிலர், "அல்லாஹ்வின் தூதரே! (இன்று) இருபத்தொன்பதாம் நாள் காலைதான்" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்" என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் கை விரல்களை (விரித்து) மூன்று முறை சேர்த்துக் காட்டினார்கள். இரண்டு தடவை எல்லா விரல்களையும் விரித்தார்கள்; மூன்றாவது தடவை ஒன்பது விரல்களை மட்டுமே விரித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பபாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1980. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலரிடம் ஒரு மாதகாலம் செல்லப்போவதில்லை எனச் சத்தியம் செய்து (விலகி) இருந்தார்கள். பின்னர் இருபத்தொன்பது நாட்கள் முடிந்ததும் அன்று "காலையில்" அல்லது "மாலையில்" அவர்களிடம் சென்றார்கள். அப்போது, "இறைவனின் தூதரே! எங்களிடம் ஒரு மாதகாலம் வரமாட்டீர்கள் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கும்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1981. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒரு கையை மற்றொரு கையில் (மூன்று தடவைகள்) அடித்து, "மாதம் என்பது இப்படியும் இப்படியும் இருக்கும்" என்று சொன்னார்கள். மூன்றாவது தடவையில் ஒரு விரலை மடக்கிக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 13
1982. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "மாதம் என்பது இப்படி, இப்படி, இப்படி இருக்கும்" என்று கூறி (தம் கை விரல்களை முதலிரு முறை) பத்து,பத்து என்றும், (மூன்றாவதாக) ஒரு முறை ஒன்பது என்றும் சைகை செய்து காட்டினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 5 ஒவ்வோர் ஊர்க்காரர்களுக்கும் அவரவர் பார்க்கும் பிறையே (கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்). ஓர் ஊரில் பிறை பார்த்தால்,வெகு தொலைவில் உள்ளவர்களுக்கு அது பொருந்தாது.
1983. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த) குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் (ஒரு வேலை நிமித்தம்) என்னை ஷாம் (சிரியா) நாட்டிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பினார்கள். நான் ஷாம் சென்று அவரது தேவையை நிறைவுசெய்தேன். நான் ஷாமில் இருந்தபோது ரமளான் (முதல்)பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவில் நான் பிறையைக் கண்டேன்.
பிறகு அந்த (ரமளான்) மாதத்தின் இறுதியில் நான் மதீனா வந்துசேர்ந்தேன்.
அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (பயணம் குறித்து) என்னிடம் விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தும் பேசினார்கள். அப்போது "நீங்கள் (ஷாமில்) எப்போது பிறை பார்த்தீர்கள்?" என்று கேட்டார்கள். நான், "நாங்கள் வெள்ளியன்று பிறை கண்டோம்" என்று பதிலளித்தேன். அவர்கள், "நீயே அதைக் கண்டாயா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (நானும் கண்டேன்). மக்களும் அதைக் கண்டார்கள். மக்களும் நோன்பு நோற்றனர். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்" என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், "ஆனால், நாங்கள் சனிக்கிழமை இரவுதான் (முதல்) பிறை கண்டோம். எனவே, நாங்கள் (ரமளான் மாதத்தின்) எண்ணிக்கையை முப்பது நாட்களாக முழுமையாக்கும் வரை, அல்லது (ஷவ்வால் மாதத்தின் முதல்) பிறையைப் பார்க்கும்வரை நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்போம்" என்று சொன்னார்கள். அதற்கு நான், "முஆவியா (ரலி) அவர்கள் (முதல்பிறை) கண்டு, நோன்பு நோற்றது உங்களுக்குப் போதாதா?" என்று கேட்டேன். அதற்கு, "இல்லை. இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 6 (முதல்)பிறை பெரியதாகவோ சிறியதாகவோ தென்படுவதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. பார்ப்பதற்காகவே பிறையை (சிறிது நேரம்) அல்லாஹ் தென்படச் செய்கிறான். மேகமூட்டம் தென்பட்டால் (மாதத்தின் நாட்கள்) முப்பதாக முழுமையாக்கப்படும்.
1984. அபுல் பக்தரீ சயீத் பின் ஃபைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உம்ராவிற்காக (மக்காவிற்கு)ப் புறப்பட்டுச் சென்றோம். (வழியில்) நாங்கள் "பத்னு நக்லா" எனுமிடத்தில் தங்கியிருந்தபோது, பிறையைப் பார்க்க ஒன்றுகூடினோம். அப்போது மக்களில் சிலர், "அது மூன்றாவது பிறை" என்று கூறினர். வேறுசிலர், "(அல்ல) அது இரண்டாவது பிறை" என்று கூறினர். பின்னர் நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, "நாங்கள் பிறை பார்த்தோம். மக்களில் சிலர் "அது மூன்றாவது பிறை" என்றனர். வேறுசிலர் "அது இரண்டாவது பிறை" என்று கூறினர்" என்று சொன்னோம். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "எந்த இரவில் நீங்கள் பிறை கண்டீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு, "இன்ன (மாதத்தின்) இன்ன இரவில்" என்று பதிலளித்தோம். அப்போது, "பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிதுநேரம் தென்படச் செய்கிறான். ஆகவே, அது நீங்கள் கண்ட இரவுக்குரியதே ஆகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
அத்தியாயம் : 13
1985. அபுல் பக்தரீ சயீத் பின் பைரூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "தாத்து இர்க்" எனும் இடத்தில் இருந்தபோது ரமளான் (முதல்) பிறையைக் கண்டோம். அதைப் பற்றிக் கேட்பதற்காக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவரை அனுப்பினோம். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் சிறிதுநேரம் தென்படச்செய்கிறான். உங்களுக்கு (வானில்) மேகமூட்டம் தென்படுமானால் (மாதத்தின் நாட்களின்) எண்ணிக்கையை (முப்பதாக) முழுமையாக்கிக் கொள்ளுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 7 இரு பெருநாட்களின் மாதங்கள் (சேர்ந்தாற்போல்) குறையாது.
1986. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
1987. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு பெருநாட்களின் மாதங்கள் குறையாது.
இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் காலித் பின் மஹ்ரான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இரு பெருநாட்களின் மாதங்களான ரமளானும் துல்ஹஜ்ஜும் குறையாது" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 13
பாடம் : 8 ஃபஜ்ர் நேரம் வந்தவுடன் நோன்பு ஆரம்பமாகிவிடும். ஃபஜ்ர் நேரம் வரும்வரை உண்ணுதல் உள்ளிட்ட செயல்கள் செல்லும். நோன்பு ஆரம்பமாகுதல், சுப்ஹுத் தொழுகையின் நேரம் ஆரம்பமாகுதல் உள்ளிட்ட விதிமுறைகளுடன் தொடர்புடைய ஃபஜ்ர் நேரம் எது?
1988. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கறுப்புக் கயிற்றிலிருந்து விடியலின் வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்" (2:187) வசனம் அருளப்பெற்றபோது நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் வெள்ளை நிறத்தில் ஒரு கயிறு, கறுப்பு நிறத்தில் மற்றொரு கயிறு என இரு கயிறுகளை என் தலையணையின் கீழே வைத்து, பகலில் இருந்து இரவை (பிரித்து) அறிய முயன்றேன். (ஆயினும், என்னால் பிரித்தறிய முடியவில்லை)" என்று சொன்னேன். அதற்கு அவர்கள், "உங்கள் தலையணை நிச்சயம் (மிக) அகலமானதாய் இருக்கவேண்டும். (கறுப்புக்கயிறு, வெள்ளைக்கயிறு என்பன அவற்றின் உண்மையான பொருளில் கூறப்படவில்லை. மாறாக,) அது இரவின் கருமையும் பகலின் வெண்மையுமே ஆகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
1989. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்" எனும் இந்த (2:187 ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் வெள்ளைக்கயிறு ஒன்றையும் கறுப்புக்கயிறு ஒன்றையும் எடுத்து வைத்துக்கொண்டு, அவையிரண்டும் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை (சஹர் உணவு) சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அதன் பின்னர் அல்லாஹ், "மினல் ஃபஜ்ர்" (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளி அ(வ்வசனத்)தைத் தெளிவுபடுத்தினான்.
அத்தியாயம் : 13
1990. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கறுப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தென்படும்வரை நீங்கள் உண்ணுங்கள்; பருகுங்கள்" எனும் இந்த (2:187 ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, நோன்பு நோற்க நாடியுள்ள ஒருவர் தம் இரு கால்களில் (ஒன்றில்) கறுப்புக்கயிற்றையும் (மற்றொன்றில்) வெள்ளைக்கயிற்றையும் கட்டிக்கொண்டு, அவ்விரண்டும் தமது பார்வைக்குத் தெளிவாகப் புலப்படும்வரை சாப்பிட்டுக்கொண்டிருப்பார். ஆகவே, அதற்குப் பின்னர் அல்லாஹ், "மினல் ஃபஜ்ர்" (விடியலின்) எனும் சொல்லையும் சேர்த்து அருளினான். அப்போதுதான் மக்கள், இதன் மூலம் அல்லாஹ் அதிகாலையையும் இரவையுமே நாடுகிறான் என்பதை அறிந்துகொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1991. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிலால் அவர்கள், (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச்செய்வார். எனவே, (ஃபஜ்ர் தொழுகைக்காக) இப்னு உம்மி மக்தூம் செய்யும் தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
1992. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பிலால் (பின்)இரவில் தொழுகை அறிவிப்புச் செய்வார். (நீங்கள் சஹர் நேரம் முடிந்து விட்டதாக நினைத்துவிடாதீர்கள்.) இப்னு உம்மி மக்தூமின் தொழுகை அறிவிப்பை நீங்கள் கேட்கும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13