1928. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக நெருக்கத்திலிருக்கும் பிரிவினர் அவர்களைக் கொன்றொழிப்பார்கள்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1929. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தார் இரு பிரிவினராகி நிற்கும்போது, அவர்களிடையேயிருந்து (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். அவ்விரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக அருகிலிருக்கும் ஒரு சாரார் அவர்களைக் கொன்றொழிக்கப் பொறுப்பேற்றுக்கொள்வர்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1930. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் (கிளர்ச்சியாளர்கள்) கூட்டம் ஒன்று தோன்றும். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக அருகிலிருக்கும் பிரிவினரே அவர்களைக் கொன்றொழிக்கப் பொறுப்பேற்றுக் கொள்வர்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1931. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரைப் பற்றி, பிரிவினை ஏற்படும் வேளையில் அவர்கள் தோன்றுவார்கள். இரு பிரிவினரில் சத்தியத்திற்கு மிக அருகிலிருக்கும் பிரிவினரே அவர்களைக் கொன்றொழிப்பார்கள்" என்று குறிப்பிட்டதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 48 காரிஜிய்யாக்களைக் கொல்லுமாறு வந்துள்ள தூண்டல்.
1932. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றால், (உண்மையில் அவர்கள் சொன்னதையே அறிவிக்கிறேன். ஏனெனில்,) நான் வானத்திலிருந்து கீழே விழுந்துவிடுவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது அவர்கள் சொல்லாததைப் புனைந்து சொல்வதைவிட எனக்கு விருப்பமானதாகும். எனக்கும் உங்களுக்கும் இடையே உள்ள ஒரு விவகாரத்தில் நான் உங்களிடம் பேசினால் (ராஜதந்திரத்தைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாது. ஏனெனில்,) போர் என்பது சூழ்ச்சிதான் (என்பதை நினைவில் கொள்ளவும்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் இளம் வயதினராயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச்சிறந்த சொல்லை (குர்ஆன் வசனங்களை) எடுத்துச்சொல்வார்கள். குர்ஆனை ஓதுவார்கள். வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள். (இஸ்லாமிய ஆட்சியாளர்களே!) அவர்களை நீங்கள் எங்கு சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு, அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் சென்றுவிடுவார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 12
1933. அபீதா பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அலீ (ரலி) அவர்கள் காரிஜிய்யாக்களைப் பற்றிக் கூறுகையில், "அவர்களிடையே ஊனமான கையுடைய ஒரு மனிதர் இருப்பார். நீங்கள் வரம்பு மீறிவிடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லையாயின், அவர்களைக் கொல்பவர்களுக்கு அல்லாஹ் தன் தூதரின் நாவினால் வாக்களித்துள்ள நற்பலனை உங்களுக்கு நான் அறிவித்துவிடுவேன்" என்று கூறினார்கள். நான், "இதைத் தாங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! ஆம்; கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக!" என்று (மூன்று முறை) சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
("ஊனமான கையுடைய மனிதர்" என்பதைக் குறிக்க ஹதீஸின் மூலத்தில்) "முக்தஜுல் யதி" அல்லது "மூதனுல் யதி" அல்லது "மஸ்தூனுல் யதி" எனும் சொற்றொடர்கள் ஆளப்பட்டுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அறிவிப்பாளர் அபீதா (ரஹ்) அவர்கள் "நான் செவியுற்ற செய்தியைத்தான் உங்களுக்கு அறிவிப்பேன்" என்று கூறிவிட்டு,அலீ (ரலி) அவர்கள் தொடர்பான மேற்கண்ட ஹதீஸை அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 12
1934. ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நஹ்ரவான் நகரத்தைச் சேர்ந்த) காரிஜிய்யாக்களை நோக்கிச் சென்ற அலீ (ரலி) அவர்களின் படையில் நானும் இருந்தேன். (செல்லும் வழியில்) அலீ (ரலி) அவர்கள், "மக்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என் சமுதாயத்திலிருந்து ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அவர்களின் ஓதலுடன் உங்களின் ஓதலை ஒப்பிடும்போது,உங்களின் ஓதல் ஒன்றுமேயில்லை; அவர்களது தொழுகையுடன் உங்களது தொழுகையை ஒப்பிடும்போது, உங்களது தொழுகை ஒன்றுமேயில்லை; அவர்களது நோன்புடன் உங்களது நோன்பை ஒப்பிடும்போது, உங்களது நோன்பு ஒன்றுமேயில்லை. (அந்த அளவிற்கு அவர்களுடைய வணக்க வழிபாடுகள் அதிகமாயிருக்கும்.) தங்களுக்குச் சாதகமான ஆதாரம் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுக்கு எதிரான ஆதாரமாகவே இருக்கும். அவர்களது தொழுகை(யில் அவர்கள் குர்ஆனை ஓதுவது), அவர்களது கழுத்தெலும்பைத் தாண்டிச்செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்றுவிடுவதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
அவர்களை வீழ்த்தும் படையினர், அதற்காகத் தமக்கு வழங்கப்படவுள்ள நற்பலன் குறித்துத் தங்களுடைய நபியின் நாவினால் அறிவிக்கப்பட்டுள்ளதை அறிவார்களாயின், அதையே நம்பிக்கொண்டு நற்செயல் புரியாமல் இருந்துவிடுவார்கள். அவர்களிடையே கைபுஜம் மட்டுமே உள்ள ஒரு மனிதன் அவர்களுக்கு அடையாளம் ஆவான். முழங்கைக்குக் கீழே அவனுக்குக் கையிருக்காது. அவனது கை புஜத்தின் மீது மார்புக்காம்பைப் போன்று ஒரு கட்டியிருக்கும். அதன் மீது வெள்ளை முடிகள் முளைத்திருக்கும். நீங்கள் சந்ததிகளையும் செல்வங்களையும் கவனிக்கும் பிரதிநிதிகளாக இவர்களை விட்டுவிட்டு, முஆவியா (ரலி) அவர்களிடமும் ஷாம்வாசிகளிடமும் (ஸிஃப்பீன் போருக்காகச்) சென்று விடுவீர்கள். (இந்த காரிஜிய்யாக்களோ உங்கள் குழந்தை குட்டிகளைத் துன்புறுத்துவார்கள். உங்கள் சொத்துக்களைச் சூறையாடுவார்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக! (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வர்ணித்த) அந்த(காரிஜிய்யா)க் கூட்டத்தார் இவர்களாகத்தாம் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், இவர்கள் அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிர்களைக் கொலை செய்துள்ளார்கள்; மக்களுடைய கால்நடைகளைக் கொள்ளையடித்துள்ளார்கள். எனவே, அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி, அவர்களை நோக்கிச் செல்லுங்கள் (அவர்களை வெல்லுங்கள்)" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(அந்தப் பயணத்தில்) ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் (காரிஜிய்யாக்கள்) முகாமிட்டிருந்த ஒவ்வொரு தளங்களையும் எனக்குக் காட்டினார்கள். இறுதியாக நாங்கள் ("அத்தப்ரஜான்" எனும்) ஒரு பாலத்தைக் கடந்துசென்றோம். (கலகக்காரர்களான காரிஜிய்யாக்களை) நாங்கள் சந்தித்தபோது, காரிஜிய்யாக்களின் அன்றைய தளபதியாக அப்துல்லாஹ் பின் வஹ்ப் அர்ராசிபீ என்பான் இருந்தான். அவன் காரிஜிய்யாக்களிடம் "ஹரூரா போரின்போது இவர்கள் அல்லாஹ்வின் பெயரால் ஆணையிட்டு உங்களிடம் (சமாதான ஒப்பந்தக்) கோரிக்கையை முன்வைத்ததைப் போன்று இப்போதும் கோரிக்கை வைத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். (அதற்கு இடமளித்துவிடாமல்) ஈட்டியை எறியுங்கள்; வாட்களை உறைகளிலிருந்து உருவி(த் தயாராக வைத்து)க் கொள்ளுங்கள்" என்று கூறினான். உடனே அவர்கள் திரும்பிச்சென்று தூரத்தில் நின்று கொண்டு தங்களுடைய ஈட்டிகளை வீசினர்; தங்களுடைய வாட்களை உருவி(யவாறு மக்களிடையே புகுந்த)னர். (அலீ (ரலி) அவர்களுடைய படையிலிருந்த) மக்களும் அவர்கள்மீது தங்களுடைய ஈட்டிகளைப் பாய்ச்சினர். அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் (அலீ (ரலி) அவர்களின் அணியிலிருந்த) மக்களில் இருவர் மட்டுமே கொல்லப்பட்டனர்.
பிறகு (எங்களிடம்) அலீ (ரலி) அவர்கள், "அவர்களிடையே ஊனமான கையுடைய அந்த மனிதனைத் தேடிப்பாருங்கள்" என்று கூறினார்கள். மக்கள் தேடிப்பார்த்தபோது அவன் தட்டுப்படவில்லை. எனவே, அலீ (ரலி) அவர்களே எழுந்து சென்று, ஒருவர்மீது ஒருவராக அவர்கள் கொல்லப்பட்டுக் கிடந்த பகுதிக்கு வந்து "உடல்களை நகர்த்துங்கள்" என்று கூறினார்கள். அவனது உடல் தரைப் பகுதியின் அடியில் கிடப்பதைக் கண்டார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் "தக்பீர்" (அல்லாஹ் மிகப்பெரியவன் என்று) கூறினார்கள். பிறகு "அல்லாஹ் உண்மையே சொன்னான்; அவனுடைய தூதர் (அவனது செய்தியை) எட்டச் செய்தார்கள்" என்று சொன்னார்கள்.
அப்போது அலீ (ரலி) அவர்களிடம் அபீதா அஸ்ஸல்மானீ (ரஹ்) அவர்கள் வந்து, "இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! (காரிஜிய்யாக்கள் குறித்த) இந்த ஹதீஸை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "ஆம்;எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக!" என்று பதிலளித்தார்கள். இவ்வாறு மூன்று முறை சத்தியம் செய்யுமாறு அலீ (ரலி) அவர்களை அபீதா (ரஹ்) அவர்கள் கோரினார்கள். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே சத்தியம் செய்தார்கள்.
அத்தியாயம் : 12
1935. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த (பிற்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய) உபைதுல்லாஹ் பின் அபீராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹரூராவாசி(களான காரிஜிய்யாக்)கள் தோன்றியபோது நான் அலீ (ரலி) அவர்களுடன் (அவர்களது அணியில்) இருந்தேன். ஹரூரிய்யாக்கள் "ஆட்சி அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்குமில்லை" (லா ஹுக்ம இல்லா லில்லாஹ்) எனும் கோஷத்தை எழுப்பினர். அலீ (ரலி) அவர்கள், "(இது) சத்திய வார்த்தைதான். ஆனால், தவறான நோக்கம் கொள்ளப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில மனிதர்களைப் பற்றி(ய அடையாளங்களை) எங்களுக்குத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட அப்பண்புகள் (காரிஜிய்யாக்களான) இவர்களிடம் (இருப்பதை) நான் அறிகிறேன். இவர்கள் நாவால் உண்மை சொல்கிறார்கள். ஆனால், அது அவர்களது தொண்டையைத் தாண்டாது (என்று கூறி, தொண்டையைச் சுட்டிக்காட்டுகிறார்கள்);அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அவனிடம் மிகவும் வெறுப்புக்குரியவன், இவர்களில் கறுப்புநிறமுடைய ஒரு மனிதனாவான். அவனது கைகளில் ஒன்று "ஆட்டின் பால் மடியைப் போன்றிருக்கும்" அல்லது "(பெண்ணின்) மார்புக் காம்பைப் போன்றிருக்கும்" என்று கூறினார்கள்.
அலீ (ரலி) அவர்கள் (தம் படையினருடன் சேர்ந்து காரிஜிய்யாக்களுடன் போரிட்டு) அவர்களைக் கொன்றொழித்தபோது, "(அந்தக் கறுப்பு மனிதனைத் தேடிப்) பாருங்கள்" என்று கூறினார்கள். அவர்கள் (தேடிப்)பார்த்தபோது அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அலீ (ரலி) அவர்கள் "திரும்பவும் சென்றுபாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய்யுரைக்கவில்லை; என்னிடம் பொய்யுரைக்கப்படவுமில்லை" என்று இரண்டு அல்லது மூன்று முறை சொன்னார்கள். பிறகு அவர்கள் அவனது உடலை ஒரு குழியில் கண்டனர். அதைக் கொண்டுவந்து அலீ (ரலி) அவர்களுக்கு முன்னால் வைத்தனர். இந்த நிகழ்ச்சி நடந்தபோதும் காரிஜிய்யாக்கள் குறித்து அலீ (ரலி) அவர்கள் கூறியபோதும் அந்த இடத்தில் நான் இருந்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
யூனுஸ் பின் அப்தில் அஃலா (ரஹ்) அவர்களது மற்றோர் அறிவிப்பில், "அந்தக் கறுப்பு மனிதனை நான் பார்த்தேன்" என்று இப்னு ஹுனைன் (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 49 காரிஜிய்யாக்கள் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலேயே மோசமானவர்கள் ஆவர்.
1936. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எனக்குப் பின் என் சமுதாயத்தில்" ("அல்லது எனக்குப் பின் விரைவில் என் சமுதாயத்தில்") ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய கழுத்துகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போன்று, மார்க்கத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்று விடுவார்கள். பிறகு அதன் பக்கம் திரும்பமாட்டார்கள். அவர்கள்தாம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களிலேயே மோசமானவர்கள் ஆவர்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இந்த ஹதீஸை அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஹகம் அல்கிஃபாரீ (ரலி) அவர்களுடைய சகோதரர் ராஃபிஉ பின் அம்ர் அல்கிஃபாரீ (ரலி) அவர்களைச் சந்தித்தபோது, "அபூதர் (ரலி) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற இன்னின்ன ஹதீஸ்கள் என்ன?" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸையும் அவர்களிடம் சொன்னேன். அப்போது ராஃபிஉ பின் அம்ர் (ரலி) அவர்கள், "நானும் இந்த ஹதீஸை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
1937. யுசைர் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்களிடம், "காரிஜிய்யாக்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்களா?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கிழக்கு (இராக்) திசையில் தமது கையால் சைகை செய்தவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: (இங்கிருந்து) ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களது கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உடலின் மறு புறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று, இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளீயேறிச் சென்றுவிடுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இங்கிருந்து சில கூட்டத்தார் கிளம்புவார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1938. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கிழக்கு (இராக்) திசையிலிருந்து வழிதவறிய ஒரு கூட்டத்தார் கிளம்புவார்கள். அவர்களுடைய தலைகள் மழிக்கப்பட்டு (மொட்டையாக) இருக்கும்.
இதை சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 50 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் ஸகாத் (பெறுவது) தடை செய்யப்பட்டுள்ளது. பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குலத்தாரே அவர்களுடைய குடும்பத்தார் ஆவர்; மற்றவர்கள் அல்லர்.
1939. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், தர்மப் பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சீ...சீ... கீழே போடு; நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக்கூடாது என்பது உனக்குத் தெரியாதா?" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நமக்கு தர்மப்பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது உனக்குத் தெரியாதா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக்கூடாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1940. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் என் வீட்டாரிடம் திரும்பிச்செல்லும் போது எனது படுக்கையின் மீது பேரீச்சம்பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது தர்மப்பொருளாக இருக்குமோ என்று நான் அஞ்சி, உடனே அதைப் போட்டுவிடுகின்றேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1941. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக.! நான் எனது வீட்டாரிடம் திரும்பிச் செல்லும் போது "எனது படுக்கையின் மீது" (அல்லது "எனது வீட்டில்") பேரீச்சம் பழம் கிடப்பதைப் பார்த்து, அதை உண்பதற்காக எடுப்பதுண்டு. பின்னர் அது "தர்மப்பொருளாக" (அல்லது "தர்மப்பொருட்களில் ஒன்றாக") இருக்குமோ என்று அஞ்சி உடனே அதைப் போட்டுவிடுகின்றேன்.
அத்தியாயம் : 12
1942. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டபோது, "இது தர்மப்பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 12
1943. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாலையில் (கிடந்த) ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றபோது, "இது தர்மப் பொருளாக இருக்காது என்றிருந்தால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 12
1944. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தைக் கண்டபோது, "இது தர்மப்பொருளாக இருக்காது என்றிருந்தால், இதை நான் சாப்பிட்டிருப்பேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 51 நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தாரை தர்மப்பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்தலாகாது.
1945. அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களும் (என் பாட்டனாரின் சகோதரர்) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்னையும் ஃபள்ல் பின் அப்பாஸையும் சுட்டிக்காட்டி) "இவ்விரு இளைஞர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, அவ்விருவரையும் இந்தத் தர்மப்பொருட்களை வசூலிக்கும் பொறுப்பில் அமர்த்துமாறு கேட்கச் சொல்வோம்.(அவ்வாறு இவர்கள் அமர்த்தப் பட்டால்), மக்கள் வழங்குகின்ற (ஸகாத்)தை அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்படைப்பார்கள். (இந்தப் பணிக்காக) மக்களுக்குக் கிடைக்கின்ற (சன்மானப்) பொருள் இவர்களுக்குக் கிடைக்கும்" என்று பேசிக்கொண்டனர்.
இவ்வாறு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் அங்கு வந்து அவர்களுக்கு முன்னால் நின்றார்கள். அப்போது அவர்கள் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் அ(வர்களிருவரும் பேசிக்கொண்ட)தைத் தெரிவித்தனர். அதைக் கேட்ட அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்" என்று சொன்னார்கள். ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களை நோக்கி "அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள்மீதுள்ள பொறாமையால்தான் இவ்வாறு நீங்கள் செய்கிறீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு(டைய மகளை மணமுடித்துக்கொண்டதன் மூலம் அவர்களு)டன் திருமண பந்தத்தை அடைந்துகொண்டுவிட்டீர்கள். அதைக் கண்டு நாங்கள் உங்கள் மீது பொறாமை கொள்ளவில்லையே!" என்று கூறினர். அலீ (ரலி) அவர்கள், "(சரி) அவர்கள் இருவரையும் அனுப்பிவையுங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தோம். அலீ (ரலி) அவர்கள் (அங்கேயே) சாய்ந்து படுத்துக் கொண்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையை முடித்ததும் அவர்களது அறையை நோக்கி நாங்கள் (இருவரும்) முந்திக்கொண்டு சென்று, அவர்களது அறைக்கு அருகில் நின்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுடைய காதுகளைப் பிடித்து, "நீங்கள் இருவரும் உங்கள் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துங்கள்" என்று சொன்னார்கள். பிறகு அறைக்குள் நுழைந்தார்கள். நாங்களும் உள்ளே நுழைந்தோம். அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். நாங்கள் இருவரும் ("நீ பேசு, நீ பேசு" என) ஒருவரையொருவர் பேசச்சொல்லிக் கொண்டிருந்தோம். பிறகு எங்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்களிலேயே மிகவும் ஈகை குணம் கொண்டவரும் உறவினர்களை நன்கு அரவணைத்துக்கொள்பவரும் ஆவீர்கள். நாங்கள் மணமுடிக்கும் வயதை அடைந்துவிட்டோம். எனவே, இந்தத் தானதர்மங்களை வசூலிக்கும் பொறுப்புகளில் ஒன்றில் எங்களை நீங்கள் நியமிப்பதற்காக நாங்கள் வந்துள்ளோம். மக்கள் வழங்கும் ஸகாத் பொருட்களை அப்படியே உங்களிடம் கொண்டுவந்து ஒப்படைப்போம். (இப்பணிக்குச் சன்மானமாக) அவர்கள் பெற்றுக்கொள்வதை நாங்களும் பெற்றுக்கொள்வோம்" என்று கூறினார்.
இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீண்டநேரம் அமைதியாக இருந்தார்கள். இறுதியில் அவர்களிடம் நாங்களே பேசலாமா என்று எண்ணினோம். (இதற்குள்) ஸைனப் (ரலி) அவர்கள் திரைக்கு அப்பாலிருந்து பேசவேண்டாம் என எங்களுக்குச் சைகை செய்யலானார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மப் பொருள் முஹம்மதின் குடும்பத்தாருக்குத் தகாது. (ஏனெனில்,) அவை மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்" என்று கூறிவிட்டு, "(பனூ அசத் கூட்டத்தைச் சேர்ந்தவரான) மஹ்மியாவையும் நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிபையும் என்னிடம் வரச் சொல்லுங்கள்" என்று கூறினார்கள். (அப்போது மஹ்மியா (ரலி) அவர்கள் போரில் கிடைத்த ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தார்கள்.) அவர்கள் இருவரும் வந்தபோது மஹ்மியா (ரலி) அவர்களிடம், "இந்த இளைஞருக்கு (ஃபள்ல் பின் அப்பாஸுக்கு) உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே மஹ்மியா (ரலி) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். பிறகு நவ்ஃபல் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம், (என்னைச் சுட்டிக்காட்டி), "இந்த இளைஞருக்கு உங்களுடைய மகளை மணமுடித்து வையுங்கள்" என்று சொன்னார்கள். அவ்வாறே நவ்ஃபல் (ரலி) அவர்கள் எனக்கு(த் தம்முடைய மகளை) மணமுடித்து வைத்தார்கள். மேலும், மஹ்மியா (ரலி) அவர்களிடம் "இவர்கள் இருவருக்காகவும் போரில் கிடைத்த ஐந்தில் ஒருபாகம் நிதியிலிருந்து இன்ன இன்னதை மணக்கொடையாக (மஹ்ர்) கொடுங்கள்" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் நவ்ஃபல் (ரஹ்) அவர்கள் (அந்த) மஹ்ர் தொகை (எவ்வளவு என்பது) குறித்து என்னிடம் குறிப்பிடவில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1946. மேற்கண்ட ஹதீஸ் அப்துல் முத்தலிப் பின் ரபீஆ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "என் தந்தை ரபிஆ பின் அல் ஹாரிஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) மற்றும் அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் என்னிடமும் ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடமும் "நீங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும் அதில், அலீ (ரலி) அவர்கள் தமது மேல்துண்டைப் போட்டு அதன் மீது சாய்ந்து படுத்துக்கொண்டார்கள். மேலும், "நான் ஹசனின் தந்தை (அபுல் ஹசன்) ஆவேன்; கருத்துடையவனும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறியனுப்பிய விஷயத்திற்கு உங்களுடைய புதல்வர்கள் இருவரும் பதில் கொண்டுவரும் வரை இவ்விடத்தைவிட்டு நான் நகரமாட்டேன்" என்று அலீ (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம் பெற்றுள்ளது.
மேலும் இந்த ஹதீஸில் பின்வருமாறும் காணப்படுகிறது:
பிறகு எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்தத் தர்மப்பொருட்கள், மக்களின் (செல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம். இவை முஹம்மதுக்கோ முஹம்மதின் குடும்பத்தாருக்கோ அனுமதிக்கப்படவில்லை" என்று கூறினார்கள். மேலும், "மஹ்மியா பின் ஜஸ்உவை என்னிடம் வரச் சொல்லுங்கள்" என்றார்கள். அவர் பனூ அசத் குலத்தைச் சேர்ந்தவராவார். அவரை போரில் கிடைத்த செல்வங்களில் ஐந்தில் ஒரு பாக (குமுஸ்) நிதியைப் பாதுகாக்கும் பொறுப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நியமித்திருந்தார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 52 நபி (ஸல்) அவர்களுக்கும் பனூ ஹாஷிம் மற்றும் பனுல் முத்தலிப் குடும்பத்தாருக்கும் அன்பளிப்புகள் வழங்கலாம்;அன்பளிப்பவர் ஸதக்கா என்ற முறையில் அதை உடைமையாக்கியிருந்தாலும் சரியே! தர்மம் வழங்கப்பெற்றவர் தர்மப் பொருளைக் கைப்பற்றியவுடனேயே "தர்மப்பொருள்" எனும் பெயர் அதை விட்டும் நீங்கிவிடும்; தர்மம் வாங்கக் கூடாதவர் அதைப் பெறலாம்.
1947. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஜுவைரியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, "உணவேதும் உள்ளதா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களிடம் ஆட்டின் ஓர் எலும்பைத் தவிர வேறெந்த உணவும் இல்லை, அல்லாஹ்வின் தூதரே! அந்த எலும்புகூட என் முன்னாள் அடிமைப் பெண்ணுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும்" என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதை எனக்கு அருகில் வை! அது தனது இடத்தை (அன்பளிப்பின் தகுதியை) அடைந்துவிட்டது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12