பாடம் : 37 ஆசையோடு எதிர்பார்க்காமலும், யாசிக்காமலும் ஒருவருக்கு வழங்கப்பட்டால் அதை அவர் பெற்றுக்கொள்ளலாம்.
1888. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். (அப்போதெல்லாம்) நான் "என்னைவிட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்களேன்" என்று சொல்வேன். (ஒருமுறை இவ்வாறு) அவர்கள் எனக்குப் பொருள் ஒன்றைக் கொடுத்தபோது "என்னைவிட அதிகத் தேவையுடையவருக்கு இதைக் கொடுங்கள்" என்று நான் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். இந்தச் செல்வத்திலிருந்து எது நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் உங்களிடம் வருகிறதோ அதை (மறுக்காமல்) பெற்றுக்கொள்ளுங்கள். இ(வ்வாறு ஏதும் கிடைக்கவி)ல்லையாயின், நீங்களாக அதைத் தேடிச் செல்லாதீர்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1889. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்கு நன்கொடை வழங்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "என்னைவிட அதிகத் தேவை உள்ளவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்" என்று கூறுவார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை வாங்கி உடைமையாக்கிக் கொள்ளுங்கள்; அல்லது தர்மம் செய்துவிடுங்கள். நீங்கள் ஆசையோடு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் இந்தச் செல்வத்திலிருந்து உங்களிடம் எது வருகிறதோ அதை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். அப்படி வராவிட்டால் அதைத் தேடி நீங்களாகச் செல்லாதீர்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இதனால்தான் (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் யாரிடமும் எதையும் கேட்கமாட்டார்கள். தாமாக முன்வந்து வழங்கப்பட்டால் அதை மறுக்கவுமாட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1890. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாஇதீ அல்மாலிகீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னை ஸகாத் வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். நான் அந்தப் பணியை முடித்துவிட்டு (வந்து), உமர் (ரலி) அவர்களிடம் ஸகாத் பொருட்களை ஒப்படைத்தபோது எனக்கு ஊதியம் கொடுக்க உத்தரவிட்டார்கள். அப்போது நான், "நான் இந்த வேலையை அல்லாஹ்விற்காகவே செய்தேன். எனக்குரிய ஊதியம் அல்லாஹ்விடமே உள்ளது" என்று சொன்னேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (நீங்களாகக் கேட்காமல்) உங்களுக்கு (ஏதேனும்) வழங்கப் பட்டால், அதை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். ஏனென்றால், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஸகாத் வசூலிப்பவனாக இருந்தேன். அதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஊதியம் வழங்கினார்கள். நீங்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்களாகக் கேட்காமல் ஏதேனும் உங்களுக்கு (நீங்கள் செய்த பணிக்காக) வழங்கப்பட்டால் அதை நீங்கள் (வாங்கி) உட்கொள்ளுங்கள்; தர்மமும் செய்யுங்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாஇதீ அல்மாலிகீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 38 உலக(ஆதாய)த்தின் மீது பேராசை கொள்வது விரும்பத்தக்கதன்று.
1891. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முதியவரின் மனம்கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது:
1, இம்மை வாழ்வின் மீதுள்ள ஆசை.
2, பொருளாசை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1892. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முதியவரின் மனம்கூட இரண்டை நேசிப்பதில் இளமையாகவே உள்ளது:
1. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை. 2. பொருளாசை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1893. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகன் (மனிதன்) முதுமையை அடையும்போதும் அவனது இரு குணங்கள் மட்டும் இளமையாகவே இருக்கும்:
1. பொருளாசை. 2. (நீண்ட) ஆயுள்மீதுள்ள ஆசை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இன்னும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 39 ஒரு மனிதனுக்கு இரு ஓடைகள் (நிறைய செல்வம்) இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் எதிர்பார்ப்பான்.
1894. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். மனிதனின் வாயை (சவக் குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(மேற்கண்டவாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன். (இந்த வாசகம் அல்லாஹ்விடமிருந்து) அருளப்பெற்ற இறைவசனமா, அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவந்த பொன்மொழியா என்று எனக்குத் தெரியாது" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1895. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்குத் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தாலும், (அதைப் போன்று) மற்றொரு நீரோடையும் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான்.அவனது வாயை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அத்தியாயம் : 12
1896. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந்தாலும் அதனுடன் அதைப்போன்ற மற்றொரு நீரோடை தனக்கு இருக்க வேண்டுமென்றே அவன் விரும்புவான். அவனது மனத்தை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா, அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இந்த வாசகம் குர்ஆனில் உள்ளதா என்று எனக்குத் தெரியாது" என்று (மட்டும்) இடம்பெற்றுள்ளது. (இவ்வாறு) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படவில்லை.
அத்தியாயம் : 12
1897. அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் பஸ்ரா (இராக்) நகரத்திலுள்ள குர்ஆன் அறிஞர்களிடம் (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். (அவர்களது அழைப்பை ஏற்று) குர்ஆனைக் கற்றறிந்த முன்னூறு பேர் அவர்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
பஸ்ராவாசிகளிலேயே நீங்கள்தாம் சிறந்தவர்கள் ஆவீர்கள்; அவர்களிலேயே குர்ஆனை நன்கறிந்தவர்களும் ஆவீர்கள். எனவே, (தொடர்ந்து) குர்ஆனை ஓதிவாருங்கள். காலம் நீண்டுவிட்ட போது உங்களுக்கு முன் வாழ்ந்த (வேதம் அருளப்பெற்ற சமுதாயத்த)வர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டதைப் போன்று உங்களுடைய உள்ளங்களும் இறுகிவிட வேண்டாம். நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஓர் அத்தியாயத்தை ஓதிவந்தோம்; நீளத்திலும் கடுமை(யான எச்சரிக்கை விடுக்கும் தோரணை)யிலும் "பராஅத்" எனப்படும் (9ஆவது) அத்தியாயத்திற்கு நிகராக அதை நாங்கள் கருதினோம். ஆனால், அந்த அத்தியாயத்தை நான் மறக்கச் செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும், அதில் "ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு ஓடைகள் (நிரம்ப) செல்வம் இருந்தாலும் மூன்றாவது ஓடையை அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை (சவக்குழியின்) மண்ணைத் தவிர வேறெதுவும் நிரப்பாது" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். மேலும், மற்றோர் அத்தியாயத்தையும் நாங்கள் ஓதிவந்தோம். அதை (சப்பஹ, யுசப்பிஹு, சப்பிஹ் என) இறைத்துதியில் தொடங்கும் அத்தியாயங்களில் ஒன்றுக்கு நிகராகவே நாங்கள் கருதினோம். அந்த அத்தியாயத்தையும் நான் மறக்கச்செய்யப்பட்டுவிட்டேன். ஆயினும்,அதில் "நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? (அவ்வாறு நீங்கள் செய்யாததைப் பிறருக்குச் சொல்வீர்களாயின்) அது உங்களுக்கு எதிரான சாட்சியாக உங்களுடைய கழுத்துகளின் மீது எழுதப்படும். பின்னர் மறுமை நாளில் அது குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" எனும் வசனத்தை நான் நினைவில் வைத்துள்ளேன். (இந்த அத்தியாயங்கள் பின்னர் மாற்றப்பட்டுவிட்டன.)
அத்தியாயம் : 12
பாடம் : 40 வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று.
1898. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 41 இவ்வுலகத்தின் கவர்ச்சி குறித்து அஞ்சுதல்.
1899. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து (சொற்பொழிவு மேடைமீது) நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உங்களுக்காக வெளிப்படுத்தும் இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்க(ளான கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர்வகை)களைத் தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்தார்கள். பிறகு (அந்த மனிதரிடம்) "என்ன கேட்டீர்கள்?" என்றார்கள். அதற்கு அவர், "அல்லாஹ்வின் தூதரே, நன்மை தீமையை உருவாக்குமா என்று கேட்டேன்" என்றார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மையால் நன்மையே விளையும். ஆனால், இ(ந்தக் கவர்ச்சியான)து ஒரு நன்மையா? வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகின்றன; (அப்போதுதான் துளிர்விட்ட) பசும் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பசும் புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, (அசைபோடுவதற்காகச்) சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொள்கிறது. (இதனால் நன்கு சீரணமாகி குழைவு நிலையில்) சாணமிடுகின்றது. அல்லது சிறுநீரை வெளியேற்றுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் மேய்ந்துவிட்டு வந்து) அசைபோடுகின்றது. பிறகு (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கிறது. (அவ்வாறுதான்) யார் ஒரு செல்வத்தை உரிய முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு அதில் வளம் (பரகத்) வழங்கப்படும். யார் ஒரு செல்வத்தை முறையற்ற வழிகளில் எடுத்துக்கொள்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1900. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவன் உங்களுக்காக வெளிப்படுத்தும் இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள். அப்போது மக்கள், "இவ்வுலகின் கவர்ச்சிப் பொருட்கள் எவை, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) பூமியின் வளங்கள்(தாம் அவை)" என்று பதிலளித்தார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நன்மையால் நன்மையே விளையும். நன்மையால் நன்மையே விளையும். நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால் நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் கொண்டுசென்றுவிடுகின்றன; பசுமையான புல்லைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நோக்கி(ப் படுத்துக்கொண்டு) அசைபோடுகின்றது. (இதனால் நன்கு சீரணமாகி குழைவு நிலையில்) சிறுநீரையும் வெளியேற்றி சாணமுமிடுகிறது. பின்னர் (வயிறு காலியானவுடன்) மீண்டும் சென்று மேய்கிறது.
இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் அதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் அதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்று இருக்கிறார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1901. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடைமீது அமர்ந்தார்கள். அவர்களைச் சுற்றி நாங்களும் அமர்ந்தோம். அப்போது அவர்கள் "எனக்குப் பின், உங்களிடையே இவ்வுலகின் கவர்ச்சியும் அதன் அலங்காரங்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதானது, உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகின்றவற்றில் ஒன்றாகும்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?" என்று கேட்டார். அதற்கு (பதிலளிக்காமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாக இருந்தார்கள். அப்போது அந்த மனிதரிடம் "உமக்கு என்ன ஆயிற்று? நீர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பேச்சுக் கொடுக்கிறீர். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!" என்று கேட்கப்பட்டது. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மௌனம் தொடருவதைக் கண்ட)நாங்கள் அவர்களுக்கு இறைஅறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறது என்று கருதினோம். பிறகு அவர்கள் இயல்பு நிலைக்கு வந்து தம்மீதிருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துவிட்டு, "இந்தக் கேள்வி கேட்டவர் (எங்கே?)" என்று (அவரைப் பாராட்டுவதைப் போல) கேட்டார்கள். பின்னர், ""நன்மையால் நன்மையே விளையும். வசந்த காலத்தில் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை), வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்றுவிடுகின்றன; அல்லது கொல்லும் அளவிற்குச் சென்றுவிடுகின்றன. பச்சைப் புற்களைத் தின்னும் கால்நடையைத் தவிர. (அது மடிவதில்லை. ஏனெனில்,) அது (பச்சைப் புற்களைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது, சூரியனை நேராக நோக்கி(ப் படுத்துக்கொண்டு அசை போடுகின்றது); சாணமிட்டு சிறுநீரும் கழிக்கின்றது. பின்னர் (வயிறு காலியானவுடன் மீண்டும் சென்று) மேய்கிறது.
இந்த (உலகின்) செல்வம் இனிமையும் பசுமையும் உடையதாகும். ஒரு முஸ்லிம் தமது செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அ(வரது செல்வமான)து அவருக்குச் சிறந்த தோழனாகும்.-(இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்) அல்லது அவர்கள் கூறியதைப் போன்று.- யார் முறையற்ற வழிகளில் செல்வத்தை எடுத்துக்கொள்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவர் ஆவார். மேலும், மறுமை நாளில் அந்தச் செல்வம் அவருக்கு எதிரான சாட்சியாக அமையும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 42 சுயமரியாதை மற்றும் பொறுமையின் சிறப்பு.
1902. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும், செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்டபோதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்துவிட்டபோது, "என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானத்துடன் வாழச்செய்வான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். யார் (இன்னல்களைச்) சகித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை வேறெதுவும் எவருக்கும் வழங்கப்படுவதில்லை" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 43 போதுமான வாழ்வாதாரமும் போதுமென்ற மனமும்.
1903. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முஸ்லிமாகி போதுமான வாழ்வாதாரம் வழங்கப்பட்டு, அல்லாஹ் வழங்கியதைப் போதுமெனக் கருதினாரோ அவர் (வாழ்க்கையில்) வெற்றி பெற்றுவிட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1904. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைவா! முஹம்மதின் குடும்பத்தாருக்குப் பசியைத் தணிக்கத் தேவையான உணவை வழங்குவாயாக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
பாடம் : 44 அருவருப்பாகப் பேசியும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தியும் கேட்டவருக்கும் வழங்குவது.
1905. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிலருக்குத் தானப்பொருட்களை) பங்கிட்டுக் கொடுத்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே, அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைவிட இவர்கள் அல்லாத மற்றவர்களே இ(ந்தப் பொருட்களைப் பெறுவ)தற்கு மிகவும் தகுதியுடையவர்கள்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர்கள் அருவருப்பாகப் பேசி, அல்லது என்னைக் கஞ்சன் என்று சொல்லி என்னிடம் கேட்கும் அளவிற்கு என்னைக் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். ஆனால், நான் கஞ்சன் அல்லன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1906. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நடந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தடித்த கரையுள்ள நஜ்ரான் (யமன்) நாட்டு சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை அடைந்து, அந்தச் சால்வையை வேகமாக இழுத்தார். அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுத்தின் ஒரு மூலையில் (காயப்படுத்தி) அடையாளம் பதித்துவிட்டிருந்ததை நான் கண்டேன். பிறகு அவர், "முஹம்மதே! உங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்" என்று சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்கு நன்கொடை வழங்குமாறு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இக்ரிமா பின் அம்மார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிறகு அந்தக் கிராமவாசி அந்தச் சால்வையை வேகமாக இழுத்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர்மீது கோபப்படாமல்) தமது நெஞ்சை அந்தக் கிராமவாசிக்கு நேராகத் திருப்பினார்கள்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் வேகமாக இழுத்தபோது சால்வை (இரண்டாகக்) கிழிந்துவிட்டது. அதன் ஓர் ஓரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கழுத்திலேயே இருந்தது" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1907. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("கபா" எனும்) மேலங்கிகளை(த் தம் தோழர்களுக்கு)ப் பங்கிட்டார்கள். (ஆனால், என் தந்தை) மக்ரமா (ரலி) அவர்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே, மக்ரமா (ரலி) அவர்கள் (என்னிடம்), "அன்பு மகனே! (என்னோடு வா!) நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வோம்" என்று சொல்ல, அவர்களுடன் நான் சென்றேன். (அங்கு சென்று சேர்ந்ததும்) "நீ உள்ளே போய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என்னிடம் அழைத்து வா" என்று சொன்னார்கள். நான் அவ்வாறே மக்ரமா (ரலி) அவர்களிடம் வரும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்ரமா (ரலி) அவர்களிடம் புறப்பட்டு வந்தார்கள். அப்போது அவர்களிடம் அந்த அங்கிகளில் ஒன்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களுக்காக இதை நான் பத்திரப்படுத்தி வைத்தேன்" என்று சொன்னார்கள். மக்ரமா (ரலி) அவர்கள் அந்த அங்கியைக் கூர்ந்து பார்த்துவிட்டு, "மக்ரமா திருப்தி அடைந்து விட்டான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12