1823. குறைப் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அன்னை) மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (தம்முடைய) அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செயதார்கள். அதை அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ உன் தாயின் சகோதரர்களுக்கு அவளை (அன்பளிப்பாகக்) கொடுத்திருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்குமே!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1824. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பெண்களே! உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்!" என்று கூறினார்கள். நான் (என் கணவர்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்று "நீங்களே கையில் காசில்லாதவர்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெண்களாகிய) எங்களைத் தர்மம் செய்யுமாறு பணித்தார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (வறுமையில் வாழும் உங்களுக்கே அதை நான் வழங்கலாமா எனக்) கேளுங்கள். அதுவே எனக்குப் போதுமாகும் என்றால் (நான் உங்களுக்கே வழங்கிவிடுவேன்). இல்லை (கணவனுக்கு மனைவி வழங்குவது தர்மமாகக் கருதப்படாது) என்றால், அதை நான் பிறருக்குக் கொடுத்துவிடுவேன்" என்று கூறினேன். அப்போது (என் கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் என்னிடம் "இல்லை, நீயே அவர்களிடம் செல்" என்று கூறிவிட்டார்கள். எனவே, நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டுவாசலில் (ஏற்கெனவே) ஓர் அன்சாரிப்பெண்ணும் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது (எங்களுக்கு) மதிப்பு கலந்த அச்சம் இருந்தது. (எனவே, வெளியிலேயே நின்றுகொண்டிருந்தோம்.)
பின்னர் பிலால் (ரலி) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்தபோது அவரிடம் நாங்கள், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, இரு பெண்கள் வீட்டுவாசலில் நின்றுகொண்டு, தம் கணவன்மார்களுக்கும் தமது மடியில் வளரும் (தந்தையற்ற) அநாதைக் குழந்தைகளுக்கும் தம்மீது கடமையான தர்மத்தை வழங்கலாமா என வினவுகிறார்கள் என்று கேளுங்கள். ஆனால், நாங்கள் யார் என்று அவர்களிடம் சொல்லவேண்டாம்" என்று கூறினோம். பிலால் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவ்விருவரும் யார்?" என்று பிலாலிடம் கேட்டார்கள். அதற்கு "ஓர் அன்சாரிப் பெண்ணும் ஸைனபும்" என்று பிலால் பதிலளித்தார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?" என்று கேட்டார்கள். "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய துணைவியார்"" என்று பிலால் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்விருவருக்கும் இரு நன்மைகள் உண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 12
1825. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்கள் அறிவித்த மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் பள்ளிவாசலில் இருந்தபோது என்னைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் "உங்கள் நகைகளிலிருந்தாவது தர்மம் செய்யுங்கள்" என்று கூறினார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 12
1826. (அன்னை) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (என் முதல் கணவரான) அபூ சலமாவின் பிள்ளைகளுக்குச் செலவழிப்பதால் (தர்மம் செய்த) நன்மை எனக்கு உண்டா? அவர்களை நான் இன்னின்னவாறு (பிறரிடம் கையேந்தும் நிலையில்) விட்டுவிடமாட்டேன். அவர்களும் என் பிள்ளைகளே" எனக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். அவர்களுக்காக நீ செலவிட்ட(டால் அ)தற்கான நன்மை உனக்கு உண்டு" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1827. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் (இறைவனிடம்) நன்மையை எதிர்பார்த்தவராகத் தம் குடும்பத்தாருக்குச் செலவு செய்தால் அதுவும் அவர் செய்த தர்மமாகும்.
இதை பத்ருப்போரில் கலந்துகொண்டவரான அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1828. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இணைவைப்பவரான) என் தாயார் என்னிடம் "ஆசையுடன்" அல்லது "அச்சத்துடன்" வந்துள்ளார். நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 12
1829. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியருடன் சமாதான ஒப்பந்தம் செய்திருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் என்னிடம் வந்தார். நான், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் என் தாயாருடன் உறவு கொண்டாடலாமா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 15 இறந்தவருக்காகத் தர்மம் செய்தால் அதன் பலன் இறந்தவரைச் சென்றடையும்.
1830. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல் திடீரென இறந்துவிட்டார். அவர் (மட்டும் இறுதி நேரத்தில்) பேசியிருந்தால் தர்மம் செய்யுமாறு அறிவுறுத்தியிருப்பார் என்று நான் எண்ணுகிறேன். இந்நிலையில் அவருக்காக நான் தர்மம் செய்தால் அவருக்கு நன்மை கிட்டுமா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூஉசாமா (ஹம்மாத் பின் உசாமா பின் ஸைத்-ரஹ்) அவர்களது அறிவிப்பிலேயே "அவர் இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்காமல்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மற்றவர்களது அறிவிப்பில் இக்குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 12
பாடம் : 16 நல்லறங்கள் ஒவ்வொன்றுக்கும் "ஸதக்கா" (தர்மம்) எனும் பெயர் பொருந்தும்.
1831. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எல்லா நல்லறமும் தர்மமே.
இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1832. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்களில் (ஏழைகளான) சிலர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! வசதிபடைத்தோர் நன்மைகளை (தட்டி)க் கொண்டு போய்விடுகின்றனர். நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர்; நாங்கள் நோன்பு நோற்பதைப் போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர்; (ஆனால், அவர்கள்) தங்களது அதிகப்படியான செல்வங்களைத் தானதர்மம் செய்கின்றனர். (அவ்வாறு தானதர்மங்கள் செய்ய எங்களிடம் வசதி இல்லையே!)" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்களும் தர்மம் செய்வதற்கான (முகாந்தரத்)தை அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லையா? இறைவனைத் துதிக்கும் ஒவ்வொரு துதிச் சொல்லும் (சுப்ஹானல்லாஹ்) தர்மமாகும்; இறைவனைப் பெருமைப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் (அல்லாஹு அக்பர்) தர்மமாகும்; ஒவ்வொரு புகழ்மாலையும் (அல்ஹம்து லில்லாஹ்) தர்மமாகும்; ஒவ்வொரு "ஓரிறை உறுதிமொழி"யும் (லா இலாஹ இல்லல்லாஹ்) தர்மமாகும்; நல்லதை ஏவுதலும் தர்மமே; தீமையைத் தடுத்தலும் தர்மமே;உங்களில் ஒருவர் தமது பாலுறுப்பி(னைப் பயன்படுத்துகின்ற விதத்தி)லும் தர்மம் உண்டு" என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தம் துணைவியிடம்) இச்சைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் நன்மை கிடைக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நீங்களே) சொல்லுங்கள்: தடைசெய்யப்பட்ட வழியில் அவர் தமது இச்சையைத் தீர்த்துக்கொண்டால் அவருக்குக் குற்றம் உண்டல்லவா! அவ்வாறே அனுமதிக்கப்பட்ட வழியில் அவர் தமது இச்சையை நிறைவேற்றிக்கொள்ளும்போது அதற்காக அவருக்கு நன்மை கிடைக்கவே செய்யும்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 12
1833. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு விஷயம் (சொல்கிறேன்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவிற்கு அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி (தக்பீர்), அல்லாஹ்வைப் புகழ்ந்து (தஹ்மீத்), அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று (ஏகத்துவ உறுதி) கூறி, அல்லாஹ்வைத் துதித்து (தஸ்பீஹ்), அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி (இஸ்திஃக்ஃபார்), மக்களின் நடைபாதையில் (இடையூறாகக்) கிடந்த ஒரு கல்லையோ அல்லது முள்ளையோ அல்லது எலும்பையோ அகற்றி, நல்லதை ஏவி, அல்லது தீமையைத் தடுத்(து நல்லறங்கள் புரிந்)தாரோ அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே நடமாடுகிறார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூதவ்பா அர்ரபீஉ பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் சில நேரங்களில் ("அவர் நடமாடுகிறார்" என்பதற்கு பதிலாக) "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்று அறிவித்துள்ளார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("நல்லதை ஏவி" என்பதுடன் "அல்லது" என்பதைச் சேர்த்து) "அல்லது நல்லதை ஏவி" என்றும், "அவர் மாலைப் பொழுதை அடைகிறார்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஒவ்வொரு மனிதனும் (முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன்) படைக்கப் பட்டுள்ளான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் "அன்றைய தினத்தில் (தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திவிட்ட நிலையிலேயே) அவர் நடமாடுகிறார்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1834. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்று கூறினார்கள். அப்போது "(தர்மம்செய்ய ஏதும்) அவருக்குக் கிடைக்கவில்லையானால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "அவர் தம் கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; பிறருக்கும் தர்மம் செய்வார்" என்று சொன்னார்கள். "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால் (என்ன செய்வார்), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்" என்றார்கள். "(இதற்கும் அவர்) சக்தி பெறாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் "அவர் "நல்லதை" அல்லது "நற்செயலை"(ச் செய்யும்படி பிறரை) ஏவட்டும்" என்றார்கள். "(இயலாமையால் இதையும்) அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது), சொல்லுங்கள்?" என்று கேட்டதற்கு, நபி (ஸல்) அவர்கள், "அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே தர்மம்தான்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1835. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸ்களாகும். பின்வரும் ஹதீஸும் அவற்றில் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கள் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தம்முடைய ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தமது வாகனத்தின் மீது ஏறி அமர உதவுவதும் அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தர்மமாகும். இன்சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும்.
அத்தியாயம் : 12
பாடம் : 17 (நல்வழியில்) செலவு செய்பவரும் செலவு செய்ய மறுப்பவரும்.
1836. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலை நேரத்தை அடையும்போது இரு வானவர்கள் (வானத்திலிருந்து) இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர், "இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலனை அளிப்பாயாக!" என்று கூறுவார். மற்றொருவர், "இறைவா! (கடமையானவற்றில்கூடச்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைக் கொடுப்பாயாக!" என்று கூறுவார்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 18 தானதர்மத்தை ஏற்க ஆள் கிடைக்காமல்போவதற்கு முன் தர்மம் செய்யுமாறு வந்துள்ள தூண்டல்.
1837. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இப்போதே) தானதர்மம் செய்துகொள்ளுங்கள். ஏனெனில், மக்களுக்கு ஒரு காலம் வரப் போகிறது; அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு (அதைப் பெறுபவர் யாரேனும் கிடைப்பாரா என) அலைவார். ஆனால், அதை ஏற்பவர் எவரையும் காண மாட்டார். அந்தப் பொருள் வழங்கப்படுகின்ற ஒருவன் "நேற்றே இதை நீ கொண்டு வந்திருந்தாலாவது நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்; இன்றோ இது எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிடுவான்.
இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 12
1838. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தங்கத்தை எடுத்துக்கொண்டு தர்மம் செய்வதற்காக அலைவார். ஆனால், அதைப் பெற்றுக்கொள்ளக்கூடிய எவரையும் அவர் காணமாட்டார். மேலும், (அப்போது போர்கள் மிகுந்து) ஆண்கள் குறைந்து, பெண்கள் அதிகரித்துவிடுவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்துவந்து, அவனைச் சார்ந்திருக்கும் நிலை காணப்படும்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அப்துல்லாஹ் பின் பர்ராத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஓர் ஆணை (இந்த நிலையில்) நீங்கள் காண்பீர்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 12
1839. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
செல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் நிகழாது. எந்த அளவிற்கு (செல்வம் பெருகும்) எனில், ஒருவர் தமது செல்வத்திற்குரிய ஸகாத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்வார். ஆனால், அவரிடமிருந்து அதைப்பெற்றுக்கொள்ள ஒருவரையும் அவர் காணமாட்டார். மேலும், அரபுமண் மேய்ச்சல் நிலங்களாகவும் (கரை புரண்டோடும்) வாய்க்கால்களாகவும் மாறாதவரை (யுகமுடிவு நாள் நிகழாது).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1840. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காதவரை யுகமுடிவு நாள் ஏற்படாது. எந்த அளவிற்கு (செல்வம் பெருகும்) எனில்,அந்நாளில் பொருளின் உரிமையாளருக்கு, அவரிடமிருந்து தர்மத்தைப் பெற்றுக்கொள்பவர் குறித்த கவலை ஏற்படும். தர்மத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு ஒருவர் அழைக்கப்படுவார். ஆனால், அவரோ "இது எனக்குத் தேவையில்லை" என்று கூறிவிடுவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
1841. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பூமி தனது வயிற்றிலுள்ள புதையல்களான தங்கக் கட்டி, வெள்ளிக் கட்டி ஆகியவற்றைத் தூண்களைப் போன்று வாந்தியெடுக்கும். அப்போது கொலை செய்தவன் வந்து, "இதற்காகவே நான் கொலை செய்தேன்" என்று கூறுவான். உறவுகளை அரவணைக்காதவன் வந்து, "இதற்காகவே நான் என் இரத்த உறவுகளைத் துண்டித்தேன்" என்று கூறுவான். திருடன் வந்து, "இதற்காகவே எனது கரம் துண்டிக்கப்பட்டது" என்று கூறுவான். பிறகு அதை (அப்படியே) விட்டுவிடுவார்கள்; அதிலிருந்து எதையும் எடுக்கமாட்டார்கள் (அந்த அளவிற்கு அவர்கள் ஏற்கெனவே வசதியுடனிருப்பார்கள்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12
பாடம் : 19 முறையான சம்பாத்தியத்திலிருந்து செய்யும் தர்மம் (இறைவனிடம்) ஏற்கப் படுவதும் அது வளர்ச்சியடைவதும்.
1842. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தூய்மையானதை மட்டுமே ஏற்பான். யார் தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து தர்மம் செய்கிறாரோ அதை அளவற்ற அருளாள(னான இறைவ)ன் தனது வலக்கரத்தால் வாங்கிக்கொள்கிறான். அது ஒரு பேரீச்சங்கனியாக இருந்தாலும் சரியே! அது அந்த அருளாளனின் கையில் வளர்ச்சி அடைந்து மலையைவிடப் பெரியதாகிவிடுகின்றது. உங்களில் ஒருவர் "தமது குதிரைக் குட்டியை" அல்லது "தமது ஒட்டகக் குட்டியை" வளர்ப்பதைப் போன்று.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 12