1443. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பள்ளிவாசலில் ஒரு மனிதர் (குர்ஆன்) ஓதிக்கொண்டிருப்பதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ், அவருக்குக் கருணைபுரிவானாக! (இன்ன அத்தியாயத்திலிருந்து) எனக்கு மறக்கவைக்கப்பட்டிருந்த இன்ன வசனத்தை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்" என்று சொன்னார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதிவருகின்றவரின் நிலையெல்லாம், கயிற்றால் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தின் (உரிமையாளரின்) நிலையை ஒத்திருக்கிறது. அதனை அவர் கண்காணித்து வந்தால் தன்னிடமே அதை அவர் தக்கவைத்துக்கொள்ளலாம். அதை அவிழ்த்துவிட்டு விட்டாலோ அது ஓடிப்போய்விடும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1445. மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், மூசா பின் உக்பா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "குர்ஆனை மனனம் செய்திருப்பவர் இரவிலும் பகலிலும் அதை ஓதிவருவதில் ஈடுபட்டால் அதை நினைவில் வைத்திருப்பார்; அவ்வாறு ஈடுபடாவிட்டால் மறந்துவிடுவார்" என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1446. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இன்ன இன்ன (குர்ஆன்) வசனங்களை நான் மறந்துவிட்டேன்" என்று ஒருவர் கூறுவது தான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், "மறக்கவைக்கப்பட்டுவிட்டது" என்று அவர் கூறட்டும்! குர்ஆனைத் தொடர்ந்து (ஓதி) நினைவுபடுத்திவாருங்கள். ஏனெனில், (கயிற்றில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் ஒட்டகம் முதலான) கால்நடைகள் அதன் கயிற்றிலிருந்து தப்பி ஓடுவதைவிட மிக வேகமாகக் குர்ஆன் மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து தப்பிவிடக் கூடியதாகும்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1447. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இந்தக் குர்ஆனை (ஒதி அதை)க் கவனித்துவாருங்கள். ஏனெனில், (ஒட்டகம் முதலான) கால்நடைகள் அதன் கயிற்றிலிருந்து தப்பிவிடுவதைவிட மிகவும் வேகமாகக் குர்ஆன் மனிதர்களின் நெஞ்சங்களிலிருந்து தப்பிவிடக்கூடியதாகும். மேலும்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான் மறந்துவிட்டேன் என்று கூற வேண்டாம். வேண்டுமானால், "மறக்கவைக்கப்பட்டுவிட்டது" என்று அவர் கூறட்டும்" எனக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1448. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இன்ன இன்ன (குர்ஆன்) அத்தியாயங்களை நான் மறந்துவிட்டேன்" அல்லது "இன்ன இன்ன (குர்ஆன்) வசனங்களை நான் மறந்துவிட்டேன்" என்று ஒருவர் கூறுவதுதான் அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். வேண்டுமானால், "மறக்க வைக்கப்பட்டுவிட்டது" என்று அவர் கூறட்டும்!
இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1449. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்தக் குர்ஆனை (ஓதி அதை)க் கவனித்து வாருங்கள். ஏனெனில், முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கயிற்றில் கட்டிவைக்கப்பட்டுள்ள ஒட்டகத்தை விட மிக வேகமாகக் குர்ஆன் தப்பிவிடக் கூடியதாகும்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 34 குர்ஆனை இனிய குரலில் ஓதுவது விரும்பத்தக்கதாகும்.
1450. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ், தன் தூதர் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆன் ஓதும் போது செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று வேறெதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் "ஒரு நபி (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆன் ஓதும்போது அல்லாஹ் செவிகொடுத்துக் கேட்பதைப் போன்று..." என்று (சிறிய வித்தியாசத்துடன்) அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 6
1451. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ், தன் தூதர் ஒருவர் குரலெடுத்து (முழு ஈடுபாட்டுடன்) இனிமையாகக் குர்ஆனை ஓதும்போது செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று வேறெதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றே இடம் பெற்றுள்ளது. "அவர்கள் கூறியதைக் கேட்டேன்" என்று இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
1452. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், தன் தூதர் ஒருவர் குரலெடுத்து இனிமையாகக் குர்ஆன் ஓதும்போது செவி கொடுத்துக் கேட்டதைப் போன்று வேறெதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "செவிகொடுத்துக் கேட்பது" என்பதைக் குறிக்க ("க அதனிஹி" என்பதற்கு பதிலாக) "க இத்னிஹீ" எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 6
1453. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அபூமூசா (ரலி) அவர்களைப் பாராட்டி) "அப்துல்லாஹ் பின் கைஸ்" அல்லது "அஷ்அரீ"தாவூத் (அலை) அவர்களின் சங்கீதம் (போன்ற இனிய குரல்) ஒன்று வழங்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1454. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி), "நீங்கள் நேற்றிரவில் குர்ஆன் ஓதிக்கொண்டிருந்ததைச் செவியுற்றேன். அப்போது நீங்கள் என்னைப் பார்த்திருந்தால் (உங்களுக்கு மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்). (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சங்கீதம் (போன்ற இனிய குரல்) ஒன்று உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
பாடம்: 35 மக்கா வெற்றி தினத்தில் நபி (ஸல்) அவர்கள் "அல்ஃபத்ஹ்" (எனும் 48ஆவது) அத்தியாயத்தை ஓதியது பற்றிய குறிப்பு.
1455. முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றிப் பயணத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி "அல்ஃபத்ஹ்" எனும் (48ஆவது) அத்தியாயத்தை "தர்ஜீஉ" செய்து (ஓசை நயத்துடன்) ஓதினார்கள்" என அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் அல் முஸனீ (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்.மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டு விடுவார்கள் எனும் அச்சம் எனக்கில்லையாயின் அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் ("தர்ஜீஉ" செய்து) ஓதிக் காட்டியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக் காட்டியிருப்பேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1456. முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி "அல்ஃபத்ஹ்" (எனும் 48ஆவது) அத்தியாயத்தை "தர்ஜீஉ" செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக் கொண்டிருந்ததை நான் கண்டேன்" என்று அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, "தர்ஜீஉ" செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக் காட்டினார்கள்.
மக்கள் (என்னைச் சுற்றிலும் திரண்டுவிடுவர் என்பது) குறித்து நான் அஞ்சவில்லையாயின் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியதைப் போன்றே உங்களுக்கும் நான் எடுத்(துரைத்)திருப்பேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 6
1457. மேற்கண்ட ஹதீஸ் இன்னும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "வாகனத்தின் மீது பயணம் செய்தபடி அல்ஃபத்ஹ் அத்தியாயத்தை ஒதிக்கொண்டிருந்தார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 36 குர்ஆன் ஓதுவதால் அமைதி இறங்குகிறது.
1458. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் "அல்கஹ்ஃப்" எனும் (18ஆவது) அத்தியாயத்தை (தமது இல்லத்தில் அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நீண்ட இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை ஒரு மேகம் சூழ்ந்துகொண்டு வட்டமிட்டபடி நெருங்கத் தொடங்கியது. அதனால் குதிரை மிரள ஆரம்பித்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "குர்ஆன் ஓதியக் காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1459. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தமது வீட்டில் வாகனப் பிராணி ஒன்று இருக்க, "அல்கஹ்ஃப்" எனும் (18ஆவது) அத்தியாயத்தை ஓதினார். உடனே அந்தப் பிராணி மிரள ஆரம்பித்தது. அந்த மனிதர் (திரும்பிப்) பார்த்தார். அப்போது மேகத்திரள் ஒன்று வந்து அவரை மூடிக்கொண்டது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், "இன்னாரே, நீர் தொடர்ந்து ஓதிக்கொண்டேயிரு(ந்திருக்க வேண்டு)ம். அந்த மேகம் குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உம்மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும்" என்று சொன்னார்கள்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ("மிரள ஆரம்பித்தது" என்பதற்கு பதிலாக) "குதிக்கலாயிற்று" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1460. உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஓர் இரவில் எனது பேரீச்சங்(கனிகளை உலரவைக்கும்) களத்தில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தேன். அப்போது எனது குதிரை கடுமையாக மிரண்டது. நான் தொடர்ந்து ஓதிக்கொண்டே இருந்தேன். மீண்டும் குதிரை மிரண்டது. தொடர்ந்து நான் ஓதிக் கொண்டேயிருந்தேன். மீண்டும் அது மிரண்டது. (அங்கு படுத்திருந்த என் மகன்) யஹ்யாவை அந்தக் குதிரை மிதித்துவிடுமோ என்று நான் அஞ்சிய போது அதை நோக்கி எழுந்து சென்றேன். அங்கு மேகம் போன்றதொரு பொருளை என் தலைக்கு மேலே கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காணமுடியவில்லை.
காலையில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று "அல்லாஹ்வின் தூதரே! நான் நேற்றிரவு பாதி இரவில் எனது பேரீச்சங்களத்தில் குர்ஆன் ஓதிக்கொண்டி ருக்கையில் என் குதிரை கடுமையாக மிரண்டது" என்று (நடந்ததைச்) சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே?" என்று கேட்டார்கள். "நான் தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது" என்று நான் சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே?" என்று கேட்டார்கள். "நான் தொடர்ந்து ஓதினேன். மீண்டும் எனது குதிரை மிரண்டது" என்று சொன்னேன். "இப்னு ஹுளைரே, தொடர்ந்து ஓதியிருக்கலாமே!" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்) கூறியபோது, "(என் மகன்) யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். அவன் அதன் அருகில் இருந்தான். எனவே, நான் திரும்பிச் சென்றேன். நான் (எனது தலையை உயர்த்தி வானைப் பார்த்தபோது) அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. நான் பார்த்தவுடன் அது வானில் உயர்ந்து (என் கண்ணைவிட்டு மறைந்து)விட்டது; பிறகு நான் அதைக் காணவில்லை" என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன் குரலைக் கேட்டு நெருங்கி வந்த வானவர்கள்தாம் அவர்கள். நீர் தொடர்ந்து ஓதியிருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள். மக்களைவிட்டும் அது மறைந்திருக்காது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
அத்தியாயம் : 6
பாடம் : 37 குர்ஆனை மனனமிட்டவரின் சிறப்பு.
1461. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை(ப் பார்த்தும், மனனமிட்டும்) ஓதுகின்ற இறைநம்பிக்கையாளரின் நிலையானது நாரத்தைப் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதன் வாசனையும் நன்று; சுவையும் நன்று. (மற்ற நற்செயல்கள் புரிந்து கொண்டு) குர்ஆன் ஓதாமலிருக்கும் இறை நம்பிக்கையாளரின் நிலையானது, பேரீச்சம் பழத்தின் நிலையைப் போன்றதாகும். அதற்கு வாசனை கிடையாது. (ஆனால்) அதன் சுவை நன்று. நயவஞ்சகனாகவும் இருந்துகொண்டு குர்ஆனையும் ஓதிவருகின்றவரின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு. நயவஞ்சகனாகவும் இருந்துகொண்டு குர்ஆனையும் ஓதாமலிருப்பவரின் நிலையானது, குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதற்கு வாசனையும் கிடையாது; சுவையோ கசப்பு.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஹம்மாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நயவஞ்சகன்" என்பதற்கு பதிலாக "தீயவன்" எனும் சொல் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 38 குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவரின் சிறப்பும் திக்கித் திணறி ஓதுகின்றவரின் சிறப்பும்.
1462. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை நன்கு மனனமிட்டுத் தங்குதடையின்றி ஓதுகின்றவர் கடமை தவறாத கண்ணியமிக்கத் தூதர்(களான வானவர்)களுடன் இருப்பார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதைச்) சிரமத்துடன் திக்கித் திணறி ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு. இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "குர்ஆனை மிகுந்த சிரமத்துடன் ஓதிவருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6