1420. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது "தக்பீர் (தஹ்ரீம்)" கூறுவார்கள். பிறகு "வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய" ஓதுவார்கள். அதில் ("வ அன மினல் முஸ்லிமீன்" என்பதற்கு பதிலாக) வ அன அவ்வலுல் முஸ்லிமீன் (நான் முஸ்லிம்களில் முதல்வன் ஆவேன்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்கிறான்.) "ரப்பனா வ லக்கல் ஹம்து" (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும் உரியது)" என்று கூறுவார்கள். சஜ்தாவில் "சஜத வஜ்ஹீ லில்லதீ... ஸவ்வரஹு ஃப அஹ்சன ஸுவரஹு" (முகத்தை அழகிய முறையில் வடிவமைத்த...) என்று கூறுவார்கள். சலாம் கொடுக்கும்போது "அல்லாஹும்மஃக்ஃபிர்லீ மா கத்தம்த்து..." என்று (மேற்கண்ட) ஹதீஸில் உள்ளவை போன்று இறுதிவரை ஓதுவார்கள். "அத்தஹிய்யாத்துக்கும் சலாமுக்குமிடையே" எனும் குறிப்பு இடம்பெற வில்லை.
அத்தியாயம் : 6
பாடம் : 27 இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் (நின்று) குர்ஆன் ஓதுவது விரும்பத் தக்கதாகும்.
1421. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அதில் அவர்கள் "அல்பகரா”” எனும் (இரண்டாவது) அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். நான் "அவர்கள் நூறு வசனம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். ஆனால், அவர்கள் (நூறு வசனம் முடிந்த பின்னும்) தொடர்ந்து ஓதினார்கள். நான் "அ(ந்த அத்தியாயத்)தை (இரண்டாகப் பிரித்து ஓதி இரண்டாவது) ரக்அத்தில் முடித்துவிடுவார்கள்" என்று எண்ணினேன். ஆனால் (அதை முதல் ரக்அத்திலேயே) தொடர்ந்து ஓதினார்கள். நான் "அவர்கள் அந்த அத்தியாயம் முடிந்ததும் ருகூஉச் செய்துவிடுவார்கள்” என்று எண்ணினேன். அவர்கள் (அந்த அத்தியாயம் முடிந்ததும்) "அந்நிசா" எனும் (4ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து ஓதினார்கள்; பிறகு ஆலு இம்ரான் எனும் (3ஆவது) அத்தியாயத்தை ஆரம்பித்து நிறுத்தி நிதானமாக ஓதினார்கள். அவற்றில் இறைவனைத் துதிப்பது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச்செல்லும்போது (ஒதுவதை நிறுத்திவிட்டு), (சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன் என) இறைவனைத் துதித்தார்கள்; (இறையருளை) வேண்டுவது பற்றிக்கூறும் வசனத்தைக் கடந்து செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு), (இறையருளை) வேண்டினார்கள். (இறை தண்டனையிலிருந்து) பாதுகாப்புக் கோருவது பற்றிக் கூறும் வசனத்தை ஓதிச் செல்லும்போது (ஓதுவதை நிறுத்திவிட்டு, இறைவனிடம்) பாதுகாப்புக் கோரினார்கள்.
பிறகு ருகூஉச் செய்தார்கள். அவர்கள் ருகூவில் "சுப்ஹான ரப்பியல் அழீம்" (மகத்துவ மிக்க என் இறைவன் தூயவன்) என்று கூறலானார்கள். அவர்கள் நிலையில் நின்ற அளவுக்கு ருகூஉச் செய்தார்கள். பின்னர் (ருகூவிலிருந்து நிமிரும்போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்) என்று கூறிவிட்டுக் கிட்டத்தட்ட ருகூஉச் செய்த அளவுக்கு நீண்ட நேரம் நிலையில் நின்றிருந்தார்கள். பிறகு சஜ்தாச் செய்தார்கள். அதில் "சுப்ஹான ரப்பியல் அஃலா" (மிக்க மேலான என் இறைவன் தூயவன்) என்று கூறினார்கள். அவர்கள் நிலையில் நின்றிருந்த அளவுக்கு சஜ்தாச் செய்தார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா லக்கல் ஹம்து" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்கிறான்; எங்கள் இறைவா, உனக்கே புகழ் அனைத்தும் உரியது) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1422. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நான் (ஓர் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தஹஜ்ஜுத்) தொழுதேன். அவர்கள் நீண்ட நேரம் நிலையில் நின்றிருந்தார்கள். நான் ஒரு தவறான முடிவுக்குக்கூடச் சென்றுவிட்டேன்?" என்று கூறினார்கள். அப்போது "அந்தத் தவறான முடிவு என்ன?" என்று கேட்கப்பட்டது. அதற்கு, "அவர்களுடன் தொழுவதை விட்டுவிட்டு உட்கார்ந்துவிடலாம் என்று எண்ணினேன்" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 28 (இரவுத் தொழுகைக்கு எழாமல்) விடிய விடிய உறங்குபவர் குறித்து அறிவிக்கப் பட்டுள்ளவை.
1423. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)இரவுத் தொழுகைக்கு எழாமல்) விடியும்வரை உறங்கிய ஒருவரைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது. அதற்கு "அவருடைய காதுகளில்” அல்லது "அவரது காதில்” ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1424. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் இரவு நேரத்தில் வந்து, "நீங்கள் இருவரும் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! எங்களது உயிர் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நினைத்தால் எங்களை அவன் எழுப்பிவிடுவான்" என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல்) திரும்பிச் சென்றார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது தமது தொடையில் அடித்துக்கொண்டே (நான் உடனடியாக பதில் சொன்னதை எண்ணி) "மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்" (எனும் 18:54ஆவது வசனத்தைக்) கூறியபடியே சென்றார்கள்.
அத்தியாயம் : 6
1425. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கிக்கொண்டிருக்கும் போது அவரது தலையின் பின் பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், "இன்னும் உனக்கு நீண்ட இரவு இருக்கிறது (நன்றாக உறங்கு)" என்று கூறி ஊதுகிறான். அவர் (அவனது போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண்விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் அங்கத்தூய்மை (உளூ) செய்தால் இரண்டாவது முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்துவிடுகின்றன. அவர் சுறுசுறுப்புடனும் நல்ல மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 29 கூடுதலான (நஃபில்) தொழுகைகளைப் பள்ளிவாசலில் தொழலாம்; ஆனால், வீட்டில் தொழுவதே உசிதமானது.
1426. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1427. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுடைய இல்லங்களிலும் (கூடுதலான தொழுகைகளை) தொழுங்கள். இல்லங்களை சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.-இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் (ஃபர்ள்) தொழுது முடித்ததும் தமது தொழுகையில் சிலவற்றை (கூடுதல் தொழுகையை) தமது வீட்டிலும் தொழட்டும். ஏனெனில், அவ்வாறு அவர் தொழுவதால் அவரது வீட்டில் அல்லாஹ் நன்மையை உருவாக்குகிறான்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1429. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவுகூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1430. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். "அல்பகரா" எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடிவிடுகிறான்.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1431. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பாயினால் ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டு அதில் தொழுவதற்காகப் புறப்பட்டார்கள். அந்த இடத்தைத் தேடி (நபித் தோழர்களில்) சிலரும் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். பிறகு அடுத்த நாள் இரவும் வந்து கூடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தோழர்களிடம் வராமல் தாமதப்படுத்தினார்கள். எனவே, தோழர்கள் தங்களது குரலை உயர்த்தினர். (நபியவர்களுக்கு நினைவூட்ட அவர்களது வீட்டுக்) கதவின் மீது சிறு கற்களை எறிந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்துடன் அவர்களை நோக்கி வெளியே வந்து, "(இத்தொழுகையில் கலந்துகொள்ளும்) உங்களுடைய இச்செயல் தொடர்ந்துகொண்டே போகிறது. (இத்தொழுகை) உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணி (அஞ்சி)னேன். (ஆகவே தான் இன்று நான் உங்களிடம் வரவில்லை.) எனவே, உங்கள் இல்லங்களிலேயே (கூடுதலான - நஃபில்) தொழுகையைத் தொழுதுவாருங்கள். கடமையாக்கப்பட்ட தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தமது வீட்டிலேயே நிறைவேற்றுவதுதான் சிறந்ததாகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 6
1432. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (ரமளான் மாதத்தில்) பாயினால் ஓர் அறையைப் பள்ளிவாசலில் அமைத்துக் கொண்டு, சில இரவுகள் (அதைத் தடுப்பாக வைத்துக்கொண்டு) அதனுள் தொழுதார்கள். அவ்வாறு தொழும்போது மக்களில் சிலர் அவர்களிடம் திரண்டு வந்தனர்...
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பில் ("கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் எண்ணினேன்" என்பதற்குப் பின்) "இத்தொழுகை உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிட்டால் உங்களால் அதை நிறைவேற்ற முடியாது" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 30 இரவுத் தொழுகை உள்ளிட்ட நற்செயல்களை நிரந்தரமாகத் தொடர்ந்து செய்வதன் சிறப்பு.
1433. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. அதை அவர்கள் இரவில் ஓர் அறை போன்று அமைத்துக்கொண்டு அதனுள் தொழுவார்கள். (அதில் அவர்கள் தொழும்போது) அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழலாயினர். பகலில் அந்தப் பாயை விரிப்பாக பயன்படுத்துவார்கள். ஓர் இரவில் மக்கள் கூடிவிட்டனர். அப்போது அவர்கள் "மக்களே! உங்களால் (நிரந்தரமாகச் செய்ய) முடிந்த நற்செயல்களையே கடைப்பிடித்து வாருங்கள். ஏனெனில், நீங்கள் சடையாதவரை அல்லாஹ்வும் சடைவதில்லை. நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்" என்று கூறினார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நற்செயலைச் செய்தால் அதை நிலையாக(த் தொடர்ந்து) செய்வார்கள்.
அத்தியாயம் : 6
1434. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே"என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1435. அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிபாடு எவ்வாறிருந்தது? (வழிபாட்டுக்காக என்று) குறிப்பிட்ட நாட்கள் எதையும் அவர்கள் ஒதுக்கியிருந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இல்லை. அவர்களின் (எந்த) வணக்க(வழிபாடு)ம் நிரந்தரமானதாகவே இருந்தது" என்று கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் செய்ய முடிந்ததைப் போன்று உங்களில் எவரால் செய்ய முடியும்?" என்று கேட்டார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். அது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் சரியே.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நற்செயலைச் செய்தால் அதை விடாமல் (தொடர்ந்து) செய்துவருவார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 31 தொழும்போது தூக்கம் மேலிட்டால், அல்லது குர்ஆன் ஓதுவதோ இறைவனைத் துதிப்பதோ தடைபட்டால் தூக்கக் கலக்கம் விலகும்வரை அவர் உட்கார்ந்துவிட வேண்டும்; அல்லது உறங்கிவிட வேண்டும்.
1437. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் வந்தபோது இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் "ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் தொழும்போது சோர்வடைந்தால் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொள்வார்" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமாக இருக்கும்போது தொழட்டும்; சோர்வடைந்தால் உட்கார்ந்துகொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1438. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹவ்லா பின்த் துவைத் பின் ஹபீப் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா எனும் பெண்மணி என்னைக் கடந்து சென்றார். அப்போது என் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். நான் "இவர் ஹவ்லா பின்த் துவைத் ஆவார்; இவர் இரவெல்லாம் உறங்க மாட்டார் (விடிய விடிய தொழுது கொண்டிருப்பார்) என மக்கள் கூறுகின்றனர்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இரவில் உறங்குவதில்லையா? உங்களால் இயன்ற நற்செயலையே செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ்வும் சலிப்படைவதில்லை" என்று கூறினார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1439. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஒரு பெண்மணி இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்து, "இவர் யார்?" என்று கேட்டார்கள். நான் "இவர் (இன்னார்;) இவர் (இரவெல்லாம்) உறங்காமல் தொழுதுகொண்டே இருப்பார்" என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நற்செயல்களில் உங்களால் இயன்றதையே செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சடைவடையாதவரை அல்லாஹ்வும் சடைவடையமாட்டான்" என்று கூறினார்கள்.
ஒருவர் நிலையாகத் தொடர்ந்து செய்து வரும் நற்செயலே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விருப்பமானதாக இருந்தது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அபூஉசாமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அந்தப் பெண்மணி பனூஅசத் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6