1190. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 54 தொழவைப்பதற்கு (இமாமத்) அதிகத் தகுதியுடையவர் யார்?
1191. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்.- இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். மக்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு அறிந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சமஅளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அவருடைய அனுமதியின்றி அமர வேண்டாம்.
இதை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அபூசயீத் அல்அஷஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர்" என்பதற்கு பதிலாக "அவர்களில் வயதில் மூத்தவர்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1193. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரும் அதை முதலில் ஓதக் கற்றுக்கொண்டவரும் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். அவர்கள் அனைவருமே சமஅளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்தவர்களாய் இருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். ஒருவரது வீட்டிலோ அல்லது ஒருவருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்திலோ (அவருடைய அனுமதியின்றி) நீங்கள் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒருவருடைய வீட்டில் "அவர் உங்களுக்கு அனுமதியளித்தால் தவிர" அல்லது "அவரது அனுமதியின்றி" அவரது விரிப்பின் மீது நீங்கள் அமராதீர்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1194. மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)பனூலைஸ் தூதுக் குழுவில்) ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருணை உள்ளம் கொண்டவராகவும் இளகிய மனம் படைத்தவராகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுகிறோம் என எண்ணிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டுவந்த எங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்று அவர்களிடையே தங்கியிருந்து அவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுங்கள். (கடமைகளை நிறைவேற்றும்படி) அவர்களைப் பணியுங்கள். தொழுகை (நேரம்) வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகை அறிவிப்புச் செய்யட்டும்; பிறகு உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மாலிக் பின் அல் ஹுவைரிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் (என் குலத்தார்) சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நாங்கள் ஒத்த வயதுடைய இளைஞர்களாய் இருந்தோம்" என்று மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 5
1195. மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என் நண்பர் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நாங்கள் (அவர்களிடம் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு) அவர்களிடமிருந்து திரும்பிச்செல்ல விரும்பிய போது எங்களிடம் அவர்கள் "தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகை அறிவிப்புச் செய்யுங்கள். பிறகு இகாமத் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் காலித் அல்ஹத்தாஉ (ரஹ்) அவர்கள் "இருவரும் சமஅளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தனர்" என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 55 முஸ்லிம்களுக்கு ஏதேனும் சோதனை (பேரழிவு) ஏற்பட்டால் எல்லாத் தொழுகைகளிலும் "குனூத்" (எனும் சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதுவது விரும்பத் தக்கதாகும்.
1196. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் (குர்ஆன்) ஓதிய பின் தக்பீர் சொல்(லி ருகூஉ செய்)வார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) "ரப்பனா வ லக்கல் ஹம்து" (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று கூறுவார்கள். பிறகு நின்றவாறு (பின்வரும் "குனூத்"தை) ஓதுவார்கள்:
இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரையும் (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா, (கடும் பகை கொண்ட) முளர் குலத்தார்மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக! இறைவா! லிஹ்யான், ரிஅல், தக்வான், உஸய்யா ஆகிய குலத்தாரை நீ உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! உஸய்யா குலத்தார் (பெயருக்கேற்ப) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்.
பிறகு "அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை" எனும் (3:128ஆவது) இறைவசனம் அருளப்பெற்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டார்கள் என நமக்குச் செய்தி எட்டியது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "(நபி) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!" என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
1197. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப்பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" என்று கூறியதும் பின்வருமாறு குனூத் ஓதுவார்கள்:
இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப் பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!
தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்தேன். உடனே நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்" என்றேன். அப்போது, "(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்கப்பட்டது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷா தொழுதுகொண்டிருந்த போது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்"என்று சொல்லிவிட்டு, பிறகு சஜ்தாச் செய்வதற்கு முன்பாக, "இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீரபிஆவைக் காப்பாற்றுவாயாக...!" என்று தொடங்கி, "(நபி) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்ச ஆண்டுகளைப் போன்று" என்பது வரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
1198. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! கிட்டத்தட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்றே நான் உங்களுக்குக் தொழுவிக்கிறேன்" என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர், இஷா, சுப்ஹு ஆகியத் தொழுகைகளில் குனூத் (சோதனைக்காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்கு சார்பாகவும் (கொடுஞ் செயல்புரிந்த) இறைமறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள்.
அத்தியாயம் : 5
1199. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பிஃரு மஊனா" (எனுமிடத்தில் பிராசாரத்திற்காச் சென்ற தம்) தோழர்களைக் கொன்றவர்களுக்கு எதிராக அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா, ரிஅல், தக்வான் மற்றும் லிஹ்யான் ஆகிய குலத்தாருக்கு எதிராக (முப்பது (நாட்கள்) வைகறை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தித்தார்கள். பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் அல்லாஹ் ஒரு வசனத்தை அருளினான். அதை நாங்கள் ஓதிவந்தோம். பின்னர் அந்த வசனம் (அல்லாஹ்வின் ஆணைப்படி) நீக்கப்பட்டுவிட்டது:
"நாங்கள் எங்கள் இறைவனிடம் வந்து சேர்ந்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம்" என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்" என்பதே அந்த வசனம்.
அத்தியாயம் : 5
1200. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம், ருகூஉவிற்குப் பின்பு சிறிது காலம் (அதாவது ஒரு மாத காலம்) ஓதினார்கள்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1201. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூஉவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும், "உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்துவிட்டார்கள்" என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1202. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் ஃபஜ்ர் தொழுகையில் ருகூஉக்குப் பின்னால் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் பனூ உஸய்யா குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 5
1203. ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "குனூத் (எனும் சோதனைக் காலப் பிரார்த்தனை நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ருகூஉக்கு முன்பா அல்லது அதற்குப் பின்பா (எப்போது ஓதப்பட்டது)?" என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் "ருகூஉக்கு முன்புதான்" என்று பதிலளித்தர்கள். நான் "ருகூஉக்குப் பின்னர்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குனூத் ஓதினார்கள் என்று சிலர் கூறுகின்றனரே?" என்று கேட்டேன் அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம்தான் (ருகூஉவிற்குப் பிறகு) குனூத் ஓதினார்கள். அதில் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) என்றழைக்கப்பட்ட தம் தோழர்களை (பிஃரு மஊனா எனுமிடத்தில்) கொன்ற மக்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1204. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பிஃரு மஊனா" நாளில் கொல்லப்பட்ட குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) என்றழைக்கப்பட்ட எழுபது பேருக்காக மன வேதனைப்பட்டதைப் போன்று தாம் அனுப்பிவைத்த வேறு எந்தப் படைப்பிரிவினருக்காகவும் (அவர்கள் உயிர் நீத்தபோது) மனவேதனைப்பட்டதில்லை. அவர்களைக் கொன்றவர்களுக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருமாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சற்று கூடுதல் குறைவுடன் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1205. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒருமாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்ட உஸய்யா ஆகிய குலத்தாரைச் சபித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1206. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒருமாதம் அரபுக் குலத்தினர் பலருக்கெதிராகப் பிரார்த்தித்து குனூத் (எனும் சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதினார்கள். பின்னர் அ(வ்வாறு பிரார்த்திப்ப)தை விட்டுவிட்டார்கள்.
அத்தியாயம் : 5
1207. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையிலும் மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதிவந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1208. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.
அத்தியாயம் : 5
1209. குஃபாஃப் பின் ஈமா அல் ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையில் "இறைவா! பனூ லிஹ்யான், ரிஅல், தக்வான் மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்ட உஸய்யா ஆகிய குலத்தாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். "ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பானாக;அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் பாதுகாப்பானாக!" என்றும் பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 5