1143. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தொடையில் அடித்து, "தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தும் மக்களிடையே நீங்கள் தங்க நேரிட்டால் உங்களது நிலை எப்படி இருக்கும்?" என்று கேட்டார்கள். "(அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் எனத் தாங்கள் உத்தரவிடுகின்றீர்கள்?" என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு உங்களது தேவைக்காகச் செல்லுங்கள்! நீங்கள் பள்ளிவாசலில் இருக்கும்போதே தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அப்போதும் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1144. அபுல்ஆலியா அல்பர்ராஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
)பஸ்ராவில் ஆட்சியராக இருந்த) இப்னு ஸியாத் தொழுகையைத் தாமதப்படுத்தினார். அப்போது என்னிடம் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் வந்தார்கள். நான் அவர்களுக்காக ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டேன். அதில் அவர்கள் அமர்ந்தார்கள். நான் அவர்களிடம் இப்னு ஸியாதின் செயல் குறித்துச் சொன்னேன். அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் தமது உதட்டைக் கடித்துக்கொண்டே என் தொடையில் அடித்துவிட்டு, "நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் (என் தந்தையின் சகோதரர்) அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் உமது தொடையில் நான் அடித்ததைப் போன்றே எனது தொடையில் அடித்துவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:
நீங்கள் என்னிடம் கேட்டதைப் போன்றே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் உமது தொடையில் அடித்ததைப் போன்றே என் தொடைமீது அடித்துவிட்டு, "தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள்! பின்னர் மக்களுடன் தொழுகின்ற வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் அப்போதும் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். "நான் (ஏற்கெனவே) தொழுதுவிட்டேன். இனி தொழமாட்டேன்" என்று சொல்லாதீர்கள்!" என்றார்கள்.
அத்தியாயம் : 5
1145. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தையின் சகோதரர்) அபூதர் (ரலி) அவர்கள் (என்னிடம்), "தொழுகையை உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்தும் மக்களிடையே நீங்கள் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டால் "உமது நிலை எப்படி இருக்கும்?" அல்லது (பன்மையில்) "உங்களுடைய நிலை எப்படி இருக்கும்?" "என்று கேட்டுவிட்டுப் பிறகு, "அப்போது தொழுகையை உரிய நேரத்தில் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். பிறகு (கூட்டுத்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் அப்போதும் நீங்கள் மக்களுடன் (சேர்ந்து) தொழுது கொள்ளுங்கள். அது கூடுதல் நன்மையாகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 5
1146. அபுல் ஆலியா அல்பர்ராஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்களிடம், "நாங்கள் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தன்று சில ஆட்சித் தலைவர்களைப் பின்பற்றித் தொழுகிறோம்; அவர்கள் தொழுகையைத் தாமதப்படுத்தித் தொழுகின்றனர்" என்று கூறினேன். உடனே அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள் எனது தொடையில் வலிக்கும் அளவிற்கு ஓர் அடி அடித்தார்கள். பிறகு, "நான் இது தொடர்பாக (என் தந்தையின் சகோதரர்) அபூதர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள் என் தொடையில் அடித்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: நான் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள்ளுங்கள்! பின்னர் மக்களுடன் நீங்கள் தொழும் தொழுகையைக் கூடுதலான (நஃபில்) தொழுகையாக ஆக்கிக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள் .
மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸாமித் (ரஹ்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர்
)ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களின் தொடையில் அடித்தார்கள் என என்னிடம் தெரிவிக்கப்பட்டது" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 43 கூட்டுத் தொழுகையின் (ஜமாஅத்) சிறப்பும், கூட்டுத் தொழுகைக்குச் செல்லாமலிருப்பது தொடர்பாக வந்துள்ள கண்டனமும்.
1147. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
1148. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தனியாகத் தொழும் தொழுகையைவிடக் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழும் தொழுகை, இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். அதிகாலை (ஃபஜ்ர்) தொழுகையில் இரவு நேரத்து வானவர்களும், பகல் நேரத்து வானவர்களும் ஒன்று சேர்கிறார்கள்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், "நீங்கள் விரும்பினால், "(நபியே!) அதிகாலையில் ஓதுவதை (தொழுவதை)க் கடைப்பிடிப்பீராக! (ஏனெனில்,) அதிகாலையில் ஓதுவது (வானவர்களால்) சாட்சியம் சொல்லப்படக்கூடியதாகும்" எனும் (17:78ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால், அவற்றில் "இருபத்தைந்து பங்கு" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1149. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கூட்டுத் தொழுகையானது, தனியாகத் தொழும் இருபத்தைந்து தொழுகைகளுக்கு நிகரானதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
1150. உமர் பின் அதாஉ பின் அபில்குவார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு நாள்) நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஸைத் பின் ஸப்பான் (ரஹ்) அவர்களுடைய மருமகன் அபூஅப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அவ்வழியாகச் சென்றார்கள். அன்னாரை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அழைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: "இமாமுடன் சேர்ந்து தொழுவதானது, தனியாகத் தொழும் இருபத்தைந்து தொழுகைகளை விடச் சிறந்தததாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1151. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, தனியாகத் தொழுவதைவிட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
1152. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, தனியாகத் தொழுவதைவிட இருபத்தேழு மடங்கு கூடுதல் நன்மையுடையதாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இப்னு நுமைர் (ரஹ்) அவர்கள் தம் தந்தை நுமைர் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பில் "இருபதுக்கும் மேற்பட்ட (மடங்கு நன்மையுடையதாகும்)" என்றும், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இருபத்தேழு மடங்கு (அதிக நன்மையுடையதாகும்)" என்றும் இடம்பெற்றுள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
)ஜமாஅத்துடன் தொழுவது தனியாகத் தொழுவதைவிட) இருபதுக்கும் மேற்பட்ட மடங்கு கூடுதல் சிறப்புடையதாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
1153. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் சிலரைச் சில தொழுகைகளில் காணாமல் தேடினார்கள். அப்போது அவர்கள் "நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்துவிட்டு, விறகுக் கட்டைகளைக் கொண்டுவரச் சொல்லி, (கூட்டுத்) தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று அவர்களை வீட்டோடு தீயிட்டுக் கொளுத்திவிட வேண்டும் என்று எண்ணியதுண்டு. அவர்களில் ஒருவர் சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்பு கிடைக்கும் எனத் தெரிந்தால்கூட அவர் அதில் (அதாவது இஷாத் தொழுகையில்) கட்டாயம் கலந்துகொள்வார்" என்று (இடித்துக்) கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1154. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகர்களுக்கு மிகவும் சிரமமான தொழுகை, இஷாவும் ஃபஜ்ரும் ஆகும். அவர்கள் அவ்விரு தொழுகைகளில் உள்ள சிறப்பை அறிவார்களானால் (முழங்கால்களில்) தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். நான் தொழுகைக்கு (பாங்கும்) இகாமத்(தும்) சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு பணித்துவிட்டுப் பிறகு விறகுக் கட்டைகள் சகிதமாக என்னுடன் மக்களில் சிலரை அழைத்துக்கொண்டு, கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத மக்களை நோக்கிச் சென்று, அவர்களை வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1155. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உதவியாளர்களிடம் விறகுக்கட்டைகளைச் சேகரித்து வருமாறு உத்தரவிட்டுப் பின்னர் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தலைமையேற்றுத் தொழுவிக்குமாறு கூறிவிட்டுப் பிறகு (கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாத) வீட்டாரை அவர்களுடைய வீடுகளுடன் சேர்த்து எரித்துவிட வேண்டும் என நான் எண்ணியதுண்டு.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1156. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாத சிலர் குறித்து, "நான் ஒரு மனிதரிடம் மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறிவிட்டு, பின்னர் ஜுமுஆத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் (வீட்டில்) இருப்பவர்களை (நோக்கிச் சென்று அவர்களை) வீட்டோடு சேர்த்து எரித்துவிட வேண்டும் என எண்ணியதுண்டு" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 44 தொழுகை அறிவிப்பைக் கேட்பவர் பள்ளிவாசலுக்குச் செல்வது கட்டாயமாகும்.
1157. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிவாசலுக்கு அழைத்து வரக்கூடிய வழிகாட்டி எவரும் எனக்கு இல்லை" என்று கூறி, வீட்டிலேயே தொழுதுகொள்ள தமக்கு அனுமதியளிக்குமாறு கோரினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். பிறகு அவர் திரும்பிச் சென்றபோது அவரை அழைத்து, "தொழுகை அறிவிப்பு சப்தம் உமக்குக் கேட்கிறதா?" என்று கேட்டார்கள். அவர் "ஆம்" (கேட்கிறது) என்றார். நபி (ஸல்) அவர்கள் "அப்படியானால் நீர் அதற்கு செவிசாய்ப்பீராக!" (கூட்டுத்தொழுகையில் வந்து கலந்துகொள்வீராக!) என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 45 கூட்டுத் தொழுகை நேரிய வழிகளில் ஒன்றாகும்.
1158. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகர் என (வெளிப்படையாக) அறியப்பட்டவரையும் நோயாளியையும் தவிர வேறெவரும் (கூட்டுத்) தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்த தில்லை. நோயாளிகூட இரு மனிதர்களுக்கிடையே (தொங்கியவாறு) நடந்துவந்து தொழுகையில் சேர்ந்துவிடுவார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு நேரிய வழிகளைக் கற்பித்தார்கள். தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் பள்ளிவாசலில் தொழுவது அத்தகைய நேர்வழிகளில் ஒன்றாகும்.
அத்தியாயம் : 5
1159. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
யார் நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் இடங்களில் (பள்ளிவாசல்களில்) இந்தத் தொழுகைகளைப் பேணி(த் தொழுது)வரட்டும். ஏனெனில்,அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான். (கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுதுகொள்ளும் இன்ன மனிதரைப் போன்று நீங்களும் உங்கள் வீடுகளிலேயே தொழுதுவருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக் கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள்.
யார் "அங்கத் தூய்மை" (உளூ) செய்து அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்;அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை. (எங்களில் நோயாளியான) ஒரு மனிதர் இரு மனிதருக்கிடையே தொங்கியவாறு அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு.
அத்தியாயம் : 5
பாடம் : 46 தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) அறிவிப்புச் செய்த பிறகு பள்ளிவாசலை விட்டு வெளியேறலாகாது.
1160. அபுஷ்ஷஅஸா அல்முஹாரிபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) அறிவிப்புச் செய்தார். உடனே (அங்கிருந்த) ஒரு மனிதர் பள்ளிவாசலில் இருந்து எழுந்து சென்றார். அந்த மனிதர் பள்ளிவாசலைவிட்டு வெளியேறும்வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, "கவனியுங்கள்: இவர், அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1161. அபுஷ்ஷஅஸா அல்முஹாரிபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
தொழுகை அறிவிப்புச் செய்யப்பட்ட பின் பள்ளிவாசலை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த ஒரு மனிதரை அபூஹுரைரா (ரலி) அவர்கள் பார்த்தார்கள். அப்போது அவர்கள், "கவனியுங்கள்: இந்த மனிதர், அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்கு மாறு $செய்துவிட்டார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 47 இஷாவையும் சுப்ஹையும் ஜமாஅத்துடன் தொழுவதன் சிறப்பு.
1162. அப்துர் ரஹ்மான் பின் அபீஅம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு பள்ளிவாசலுக்கு வந்து தனியாக அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் சென்று நானும் அமர்ந்தேன். அப்போது அவர்கள், "என் சகோதரரின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், பாதி இரவுவரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார். சுப்ஹுத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றவர், இரவு முழுதும் நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5