பாடம் : 31 தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்துகொண்டவர் அந்தத் தொழுகையையே அடைந்துகொண்டவராவார்.
1063. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்துகொண்டவர் அந்தத் தொழுகையையே அடைந்துகொண்டவராவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
1064. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தொழுகையில் ஒரு ரக்அத்தை இமாமுடன் அடைந்துகொண்டாரோ அவர் அந்தத் தொழுகையையே (ஜமாஅத்துடன்) அடைந்துகொண்டவராவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், எதிலும் "இமாமுடன்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் அந்தத் தொழுகை முழுவதையும் அடைந்துகொண்ட வராவார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1065. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிப்பதற்கு முன் சுப்ஹுத் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்து கொண்டவர், சுப்ஹுத் தொழுகையை (முழுமையாக) அடைந்துகொண்டவராவார். சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்துகொண்டவர் அஸ்ர் தொழுகையை (முழுமையாக) அடைந்து கொண்டவராவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1066. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையில் ஒரு "சஜ்தா"வை, அல்லது சூரியன் உதிப்பதற்கு முன் சுப்ஹுத் தொழுகையில் ஒரு "சஜ்தா"வை அடைந்துகொண்டவர் அந்தத் தொழுகையை (முழுமையாக) அடைந்து கொண்டவராவார்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதில் இடம்பெற்றுள்ள "சஜ்தா" என்பதற்கு "ரக்அத்" என்று பொருள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1067. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மறைவதற்கு முன் அஸ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்துகொண்டவர், (அந்தத் தொழுகையையே) அடைந்துகொண்டுவிட்டார். சூரியன் உதிப்பதற்கு முன் ஃபஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்து கொண்டவர், (அந்தத் தொழுகையையே) அடைந்து கொண்டுவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 32 ஐவேளைத் தொழுகை நேரங்கள்.
1068. இப்னு ஷிஹாப் முஹமமத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(வலீத் பின் அப்தில் மலிக் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (ஒரு நாள்) அஸ்ர் தொழுகையைச் சிறிது நேரம் தாமதப்படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள், "(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (தொழுகை கடமையான "மிஅராஜ்" இரவுக்கு மறுநாள்) இறங்கி,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இமாமாக (நின்று) தொழுவித்தார்கள். (அப்போது அஸ்ர் தொழுகையை இதற்கு முந்தியே தொழுதார்கள்)" என்று கூறினார்கள். அதற்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், உர்வா!" என்று சொன்னார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள் கூறினர்கள்:
பஷீர் பின் அபீமஸ்ஊத் (ரஹ்) அவர்கள் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(வானவர்) ஜிப்ரீல் (ஒரு நாள்) இறங்கிவந்து, எனக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். அவர்களுடன் நான் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன். பிறகும் அவர்களுடன் தொழுதேன்" என்று சொல்லி, ஐந்து (நேரத்) தொழுகைகளைத் தம் விரல்களால் எண்ணிக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1069. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் (அஸ்ர்) தொழுகையைத் தாமதப் படுத்தினார்கள். அப்போது அவர்களிடம் வந்த உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) தெரிவித்தார்கள்:
)கூஃபா நகரின் ஆளுநராயிருந்த) முஃகீரா பின் ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஒரு நாள் (அஸ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அப்போது அங்கு வந்த அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள், "ஏன் இவ்வாறு (தாமதப்படுத்தினீர்கள்), முஃகீரா? (தொழுகை கடமையாக்கப் பட்ட மிஅராஜ் இரவுக்கு மறுநாள்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கித் தொழு(வித்)தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். மீண்டும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் தொழுதார்கள். (ஐவேளைத் தொழுகையை முடித்த) பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் "இவ்வாறே நான் (உங்களுக்குச் செய்து காட்டுமாறு) பணிக்கப்பட்டேன்"என்று கூறியதையெல்லாம் நீங்கள் அறிந்திருக்க வில்லையா, என்ன?" என்று கேட்டார்கள்.
அதற்கு உர்வா (ரஹ்) அவர்களிடம் உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், "நீங்கள் என்ன அறிவிக்கிறீர்கள் என்பதை (நன்கு) கவனியுங்கள், உர்வா! ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தொழுகை நேரத்தைக் காட்டினார்களா?" என்று கேட்டார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், "(ஆம்) இவ்வாறுதான் பஷீர் பின் அபீமஸ்ஊத் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 5
1070. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனது அறையிலிருந்து சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: சூரிய ஒளி எனது அறைக்குள் விழுந்து கொண்டும் நிழல் இன்னும் (கிழக்குப்புறச் சுவரில்) விழாமலும் உள்ள நிலையில் நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுவார்கள்.
அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நிழல் இன்னும் (கிழக்குப் புறச் சுவரில்) தெரியாத நிலையில்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1071. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரிய ஒளி எனது அறைக்குள் இருந்துகொண்டிருக்க, அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்; அப்போது எனது அறையில் நிழல் படிந்திருக்காது.
அத்தியாயம் : 5
1072. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது
சூரிய ஒளி எனது அறைக்குள் இருந்துகொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1073. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் ஃபஜ்ர் (அதிகாலைத் தொழுகை) தொழ விரும்பினால், அதன் நேரம் சூரியனின்
மேற்பகுதி வெளிப்படும்வரை உள்ளது. பின்னர் நீங்கள் லுஹ்ர் (மதியத் தொழுகை) தொழ விரும்பினால், அதன் நேரம் (நண் பகலிலிருந்து) அஸ்ர் (மாலைத் தொழுகையின்) நேரம் வரும்வரை உள்ளது. பின்னர் நீங்கள் அஸ்ர் தொழ விரும்பினால், அதன் நேரம் சூரியன் பொன்னிறமாகும்வரை உள்ளது. பின்னர் நீங்கள் மஃக்ரிப் (அஸ்தமன நேரத் தொழுகை) தொழ விரும்பினால், அதன் நேரம் (அஸ்தமனத்திலிருந்து) செம்மேகம் மறையும்வரை உள்ளது. பின்னர் நீங்கள் இஷா (இரவு நேரத் தொழுகை), தொழ விரும்பினால் அதன் நேரம் (செம்மேகம் மறைந்ததிலிருந்து) நள்ளிரவுவரை உள்ளது.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1074. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹ்ர் தொழுகையின் நேரம் அஸ்ர் நேரம் வரும்வரை உள்ளது. அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் பரவி மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை உள்ளது. ஃபஜ்ர் தொழுகையின் நேரம் சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும், இரண்டு தடவை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1075. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹ்ர் தொழுகையின் நேரம், சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு(ச் சமமாக) ஆகி, அஸ்ர் நேரத்திற்கு முன்புவரை உள்ளது. அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவு வரை உள்ளது. சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் ஆரம்பமானதிலிருந்து சூரியன் உதயமாவதற்கு முன்புவரை உள்ளது. சூரியன் உதித்துவிட்டால் தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையேதான் அது உதயமாகிறது.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
1076. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகை நேரங்கள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள், "ஃபஜ்ர் தொழுகையின் நேரம் சூரியனின் மேற்புற விளிம்பு வெளிப்படுவதற்கு முன்புவரை உள்ளது. லுஹ்ர் தொழுகையின் நேரம் சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தது முதல் அஸ்ர் நேரம் வருவதற்கு முன்புவரை உள்ளது. அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் விளிம்பு மறைவதற்கு முன்புவரை உள்ளது. மஃக்ரிப் தொழுகையின் நேரம், சூரியன் மறைந்தது முதல் செம்மேகம் மறைவதற்கு முன்புவரை உள்ளது. இஷாத் தொழுகையின் நேரம் நள்ளிரவுவரை உள்ளது" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 5
1077. அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தை யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள், "உடல் சுகத்(தைத் தேடுவ)தினால் கல்வியை அடைய முடியாது"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1078. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் தொழுகையின் நேரம் குறித்துக் கேட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "நம்முடன் இவ்விரு நாட்கள் தொழுங்கள்!" என்று கூறினார்கள். (அன்றைய தினம்) சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது, பிலால் (ரலி) அவர்களிடம் பாங்கு(ம் பிறகு இகாமத்தும்) சொல்லுமாறு உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (அஸ்ர் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் அஸ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். அப்போது சூரியன் ஒளிமிக்கதாகவும் தெளிவாகவும் (வானில்) தெரிந்தது. பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (மஃக்ரிப் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் சூரியன் மறையும்போது மஃக்ரிப் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.
பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (இஷாத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் செம்மேகம் மறையும்போது இஷாத் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (ஃபஜ்ர் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் வைகறை புலரும்போது ஃபஜ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள்.
இரண்டாம் நாள் நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் வெப்பம் தணிந்த பின் லுஹ்ர் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் வெப்பம் தணிந்த பின், நன்கு வெப்பம் குறைந்திருந்த வேளையில் இகாமத் சொன்னார்கள். பின்னர் சூரியன் உயர்ந்திருக்கவே அஸ்ர் தொழுதார்கள். முந்திய நாளைவிடச் சிறிது நேரம் தாமதப்படுத்தினார்கள். செம்மேகம் மறைவதற்கு முன் மஃக்ரிப் தொழுதார்கள். இரவின் மூன்றில் ஒரு பகுதி சென்ற பின் இஷாத் தொழுதார்கள். நன்கு வெளிச்சம் வந்த பின் (சூரிய உதயத்துக்கு முன்) ஃபஜ்ர் தொழுதார்கள். பிறகு "தொழுகை நேரம் குறித்து என்னிடம் வினவியவர் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "நான் (இதோ இருக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே!" என்றார். நபி (ஸல்) அவர்கள் "நீங்கள் (இரு தினங்களாகக்) கண்ட நேரங்களுக்கு இடைப்பட்ட நேரம்தான் உங்கள் (ஐவேளைத்) தொழுகையின் நேரமாகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1079. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் குறித்து வினவினார். (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், "நம்முடன் தொழுகையில் கலந்துகொள்வீராக!" என்று கூறினார்கள். இதையடுத்து நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் (இருட்டு இருக்கும்போதே சுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட பிலால் (ரலி) அவர்கள் இருட்டு இருக்கும்போதே (சுப்ஹுத் தொழுகைக்காக) பாங்கு சொன்னார்கள். வைகறை உதயமாகும் போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுதார்கள். பிறகு சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது லுஹ்ர் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பின்னர் சூரியன் உயர்ந்திருக்கும்போதே அஸ்ர் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் சொல்லுமாறு) பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு சூரியன் மறைந்தபோது மஃக்ரிப் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பிறகு செம்மேகம் மறைந்ததும் இஷாத் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள்.
மறுநாள் பிலால் (ரலி) அவர்களிடம் (சுப்ஹுத் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு வெளிச்சம் வந்த பின் சுப்ஹுத் தொழுதார்கள். பிறகு லுஹ்ர் தொழுகைக்கு (வெப்பம் தணிந்த பின் பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு வெப்பம் தணிந்த பின் தொழுதார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் அஸ்ர் தொழுகைக்காக (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டு சூரியன் ஒளிமிக்கதாகவும் தெளிவாகவும் இருந்தபோது பொன்னிறம் ஏற்படுவதற்கு முன்பே அஸ்ர் தொழுதார்கள். பிறகு அவர்களிடம் செம்மேகம் மறைவதற்கு முன் மஃக்ரிப் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். பிறகு இரவின் "ஒரு பகுதி" அல்லது "மூன்றில் ஒரு பகுதி" (அறிவிப்பாளர் ஹரமீ பின் உமாரா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.) கடந்த பின் இஷாத் தொழுகைக்கு (பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். அதிகாலையில், "கேள்வி கேட்டவர் எங்கே?நீங்கள் கண்ட (இவ்விரு தினங்களின் தொழுகை நேரங்களின்) இடைப்பட்ட நேரமே (ஐவேளைத்) தொழுகையின் நேரமாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1080. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகையின் நேரங்கள் குறித்து வினவினார். அப்போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் (வாய்மொழியாக) பதிலேதும் கூறவில்லை. (பின்வருமாறு செய்துகாட்டினார்கள்:) வைகறை புலர்ந்ததும் ஃபஜ்ர் தொழுகைக்காக இகாமத் (கூறச்) சொன்னார்கள். அப்போது (இருள் இருந்த காரணத்தால்) மக்களில் சிலர் சிலரை அறிந்துகொள்ள இயலவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (லுஹர் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட்டார்கள். சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் லுஹ்ர் தொழுகைக்காக பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர் "நண்பகலாகிவிட்டது" என்று கூறினார். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எல்லாரையும் விட அறிந்தவர்களாக இருந்தார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (அஸ்ர் தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் சூரியன் உயர்ந்திருக்கவே அஸ்ர் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (மஃகரிப் தொழுகைக்காக பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் சூரியன் மறைந்தபோது மஃக்ரிப் தொழுகைக்காக இகாமத் சொன்னார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் (இஷாத் தொழுகைக்கு பாங்கும் இகாமத்தும் கூறுமாறு) உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் செம்மேகம் மறைந்தபோது இஷாத் தொழுகைக்கு இகாமத் சொன்னார்கள்.
மறுநாள் ஃபஜ்ர் தொழுகையைப் பிற்படுத்தித் தொழுதார்கள். எந்த அளவிற்கென்றால் தொழுகையை முடித்துத் திரும்பியபோது ஒருவர் "சூரியன் உதயமாகிவிட்டது" அல்லது "சூரியன் உதிக்கப்போகிறது" என்று கூறினார். பிறகு லுஹ்ர் தொழுகையைப் பிற்படுத்தித் தொழுதார்கள். அது முந்திய நாள் அஸ்ர் தொழுத நேரத்திற்கு நெருக்கமாக இருந்தது. பிறகு அஸ்ர் தொழுகையைப் பிற்படுத்தித் தொழுதார்கள். எந்த அளவிற்கென்றால் தொழுகையை முடித்துத் திரும்பியபோது ஒருவர் "சூரியன் சிவந்துவிட்டது" என்று கூறினார்.
பிறகு மஃக்ரிப் தொழுகையைச் செம்மேகம் மறையும்வரை பிற்படுத்தினார்கள். பிறகு இஷாத் தொழுகையை இரவின் முந்திய மூன்றிலொரு பகுதி நேரமாகும்வரை பிற்படுத்தினார்கள். விடிந்ததும் வினாத்தொடுத்த அந்த மனிதரை அழைத்து "இவ்விரு (நாட்களின் தொழுகை) நேரங்களுக்கும் இடைப்பட்ட நேரமே (ஐவேளைத் தொழுகைகளின்) நேரமாகும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1081. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் (மஃக்ரிப் தொழுகையின் நேரம் தொடர்பாக) "மறுநாள் செம்மேகம் மறைவதற்கு முன் மஃக்ரிப் தொழுதார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 33 கூட்டுத் தொழுகைக்குச் செல்லும் வழியில் வெப்பத்தாக்குதலுக்கு ஆளாவோர், கடுமையான வெயில் காலத்தில் வெப்பம் தணியும்வரை லுஹர் தொழுகையைத் தாமதப்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.
1082. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெப்பம் கடுமையாகும்போது அது தணியும்வரை தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சு காரணமாகவே உண்டாகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5