4651. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا بَيَانٌ، أَنَّ وَبَرَةَ، حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ خَرَجَ عَلَيْنَا أَوْ إِلَيْنَا ابْنُ عُمَرَ، فَقَالَ رَجُلٌ كَيْفَ تَرَى فِي قِتَالِ الْفِتْنَةِ. فَقَالَ وَهَلْ تَدْرِي مَا الْفِتْنَةُ كَانَ مُحَمَّدٌ صلى الله عليه وسلم يُقَاتِلُ الْمُشْرِكِينَ، وَكَانَ الدُّخُولُ عَلَيْهِمْ فِتْنَةً، وَلَيْسَ كَقِتَالِكُمْ عَلَى الْمُلْكِ.
பாடம் : 5 (பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ் வுக்கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் அறப்போர் புரியுங்கள் (எனும் 8:39ஆவது வசனத்தொடர்)
4651. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எங்களிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள் புறப்பட்டுவந்தார்கள். (அப்போது) ஒருவர் (அன்னாரிடம்), “நீங்கள் (இந்த முஸ்லிம்களுக்கிடையிலான) குழப்பத்தின் (காரணமாக விளைந்துள்ள) போரைக் குறித்து என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “குழப்பம்' (ஃபித்னா) என்றால் என்ன என்பது உமக்குத் தெரியுமா? முஹம்மத் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களுடன் போரிட்டுவந்தார்கள். இணைவைப்பாளர்களிடம் முஸ்லிம் ஒருவர் சென்றால் குழப்பத்தில் (சோதனையில்) சிக்கிக்கொள்வார்” என்று பதிலளித்துவிட்டு, “அவர்களது போர் ஆட்சியதிகாரத்திற்காக நடக்கும் உங்களது போரைப் போன்று இருந்ததில்லை” என்றும் கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4652. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ لَمَّا نَزَلَتْ {إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ} فَكُتِبَ عَلَيْهِمْ أَنْ لاَ يَفِرَّ وَاحِدٌ مِنْ عَشَرَةٍ ـ فَقَالَ سُفْيَانُ غَيْرَ مَرَّةٍ أَنْ لاَ يَفِرَّ عِشْرُونَ مِنْ مِائَتَيْنِ ـ ثُمَّ نَزَلَتِ {الآنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمُ} الآيَةَ، فَكَتَبَ أَنْ لاَ يَفِرَّ مِائَةٌ مِنْ مِائَتَيْنِ ـ زَادَ سُفْيَانُ مَرَّةً ـ نَزَلَتْ {حَرِّضِ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ}. قَالَ سُفْيَانُ وَقَالَ ابْنُ شُبْرُمَةَ وَأُرَى الأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْىَ عَنِ الْمُنْكَرِ مِثْلَ هَذَا.
பாடம் : 6 நபியே! இறைநம்பிக்கையாளர் களுக்குப் போர் புரிவதில் ஆர்வமூட்டுவீராக! உங்களில்(நிலைகுலையாத) பொறுமையாளர் கள் இருபது பேர் இருந்தால் (எதிரி களில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் (இத்தகையோர்) உங்களில் நூறுபேர் இருந்தால் இறைமறுப்பாளர் களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்; ஏனெனில், இவர்கள் புரிந்துகொள்ளாத மக்களாக இருக்கிறார்கள் (எனும் 8:65 ஆவது இறைவசனம்)
4652. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இருநூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்” எனும் (8:65ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, ஒருவர் பத்து பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு விதியாக்கப்பட்டது.

இதையே, “இருநூறு பேரைக் கண்டு இருபது பேர் வெருண்டோடக் கூடாது” என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் பலமுறை தெரிவித்தார்கள்.

அதன் பிறகு, “எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் நன்கறிந்துகொண்டு, தற்சமயம் (அதை) உங்களுக்குத் தளர்த்தி விட்டான். ஆகவே, உங்களில் (பொறுமையும்) சகிப்புத் தன்மை(யும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் (மற்ற) இருநூறு பேரை வெற்றி கொண்டு விடுவார்கள். (இத்தகைய) ஆயிரம் பேர் உங்களிடம் இருந்தால் அல்லாஹ்வின் உதவியால் (மற்ற) இரண்டாயிரம் பேரை வெற்றி கொண்டுவிடுவார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்” எனும் (8:66ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

(அதன் மூலம்) அல்லாஹ் நூறு முஸ்லிம்கள் இருநூறு பேரைக் கண்டு வெருண்டோடக் கூடாது என்று விதித்தான்.

ஒருமுறை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் இவ்வசனம் (8:65) குறித்துக் கூறியபோது (கூஃபாவின் நீதிபதியும் தாபிஉமான அப்துல்லாஹ்) இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள், “நன்மை புரியும்படி கட்டளையிட்டுத் தீமையிலிருந்து தடுப்பதையும்கூட நான் இது போன்றே கருதுகின்றேன் என்று கூறினார்” என்றும் கூடுதலாக அறிவித்தார்கள்.

அத்தியாயம் : 65
4653. حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ السُّلَمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، قَالَ أَخْبَرَنِي الزُّبَيْرُ بْنُ خِرِّيتٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ {إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ} شَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ حِينَ فُرِضَ عَلَيْهِمْ أَنْ لاَ يَفِرَّ وَاحِدٌ مِنْ عَشَرَةٍ، فَجَاءَ التَّخْفِيفُ فَقَالَ رالآنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضُعْفًا فَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ}. قَالَ فَلَمَّا خَفَّفَ اللَّهُ عَنْهُمْ مِنَ الْعِدَّةِ نَقَصَ مِنَ الصَّبْرِ بِقَدْرِ مَا خُفِّفَ عَنْهُمْ.
பாடம் : 7 “எனினும் உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு தற்போது (அதை) உங்களுக்கு அல்லாஹ் தளர்த்தி விட்டான்” எனும் (8:66ஆவது) இறைவசனம்
4653. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் இருபது பேர் இருந்தால் (எதிரிகளில்) இரு நூறு பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள்” எனும் (8:65ஆவது) வசனம் அருளப்பெற்று, (முஸ்óம்) ஒருவர் (இறைமறுப்பாளர்கள்) பத்துப் பேரைக் கண்டு வெருண்டோடாமல் (எதிர்த்து நின்று சமாளித்துப் பொறுமையாக) இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட போது அது முஸ்லிம்களுக்குச் சிரமமாயிருந்தது. ஆகவே, (சட்டத்தைத்) தளர்த்தும் வசனம் வந்தது.

அதில் அல்லாஹ், “எனினும், உங்களிடம் பலவீனம் இருக்கிறது என்பதை அல்லாஹ் அறிந்துகொண்டு தற்சமயம் (அதனை) உங்களுக்குத் தளர்த்திவிட்டான். ஆகவே, உங்களில் (நிலைகுலையாத) பொறுமையாளர்கள் நூறு பேர் (எதிரிகளில்) இருநூறு பேரை வெற்றி கொள்வார்கள்” எனும் வசனம்(8:66) அருளப்பெற்றது.

(எதிரிகளைச் சமாளிக்கும்) விகிதத்தை அல்லாஹ் குறைத்துவிட்டபோதே அதே அளவுக்குச் சகிப்புத் தன்மையையும் அவன் குறைத்துவிட்டான்.

அத்தியாயம் : 65
4654. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ آخِرُ آيَةٍ نَزَلَتْ {يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ} وَآخِرُ سُورَةٍ نَزَلَتْ بَرَاءَةٌ.
பாடம்: 9. “பராஅத்' (“அத்தவ்பா') அத்தியாயம்1 (9:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மர்ஸத்' எனும் சொல்லுக்கு “பாதை' என்பது பொருள். (9:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இல்லன்' எனும் சொல்லுக்குப் பந்தம், பொறுப்பு, உடன்படிக்கை ஆகிய பொருள்கள் உண்டு. (9:16ஆவது வசனத்திலுள்ள “அந்தரங்க நண்பர்கள்' என்பது மூலத்திலுள்ள “வலீஜத்' எனும் சொல்லின் பொருளாகும். பொதுவாக) மற்றொன்றினுள் நீ நுழைவித்த எல்லாப் பொருள்களையும் “வலீஜத்' எனும் சொல் குறிக்கும். (9:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஷ்ஷுக்கா' எனும் சொல்லுக்கு “பயணம்' என்று பொருள். (9:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்கபால்' எனும் சொல்லுக்குச் சீர்குலைவு, மரணம் (அல்மவ்த்) ஆகிய பொருள்கள் உண்டு. (“அல்மூத்தா' என்பதன்படி “மனநோய்' எனும் பொருளும் உண்டு.) (9:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வலா தஃப்தின்னீ' எனும் சொற்றொட ருக்கு “என்னை நீர் கண்டிக்காதீர்' என்று பொருள். (9:53ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கர்ஹ்' எனும் சொல்லும் (அதே வகைச் சொல்லான) “குர்ஹ்' எனும் சொல்லும் (“வெறுப்பு' எனும்) ஒரே பொருள் கொண்டவை ஆகும். (9:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தகலன்' எனும் சொல்லுக்கு “மக்களின் நுழைவிடம்' என்று பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “யஜ்மஹூன்' எனும் சொல்லுக்கு “விரைந்தோடுவார்கள்' என்பது பொருள். (9:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்முஉதஃபிக்காத்' எனும் சொல்லுக்கு “தலைகீழாகக் கவிழ்ந்த ஊர்கள்' என்று பொருள். “வல்முஃதஃபிக்கத்த அஹ்வா' எனும் (53:53ஆவது) வசனத்திற்கு, “(லூத்தின் மக்களுடைய) கவிழ்ந்து போன நகரங்களை அதலபாதாளத்தில் தூக்கிப்போட்டவனும் அவன்தான்” என்பது பொருள். (9:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அத்ன்' எனும் சொல்லுக்கு, “நிலையானது' என்பது பொருள். (அதன் வினைச்சொல்லான) “அதன்த்து பி அர்ளின்' எனும் வாக்கியத்திற்கு, “நான் ஒரு பகுதியில் நிலையாகத் தங்கினேன்' என்று பொருள். இதிலிருந்து “மஅதின்' (சுரங்கம்) என்ற சொல் பிறந்தது. மேலும் “மஅதினி சித்க்' என்றால் “சத்தியத்தின் பிறப்பிடம்' என்று பொருள். (9:87ஆவது வசனத்திலுள்ள “கவாலிஃப்' (பின்தங்கிவிட்டவர்கள்) எனும் சொல்லின் ஒருமையான) “அல்காலிஃப்' எனும் சொல், என் பின்னால் வராமல் நான் சென்றபின் (தன் வீட்டிலேயே) அமர்ந்துகொண்டவனைக் குறிக்கும். இச்சொல்லிலிருந்து “யக்லுஃபுஹு ஃபில் ஃகாபிரீன்' (அவருக்குப் பின்னால் அவருக்குப் பதிலாக அமையக்கூடிய ஒருவர்) எனும் சொல்வழக்கு பிறந்தது. “கவாலிஃப்' என்பது “காலிஃபா' எனும் பெண்பால் ஒருமையின் பன்மையாகவும் இருக்கலாம். ஏனெனில், இந்த அமைப்பில் ஆண்பால் பன்மை ஃபாரிஸ்-ஃபவாரிஸ் (குதிரை வீரர்), ஹாலிக்-ஹவாலிக் (அழிந்துபோனவர்) ஆகிய இரு சொற்களில் மட்டுமே உண்டு. (9:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்கைராத்' எனும் சொல்லின் ஒருமை “அல்கைரத்' என்பதாகும். இதற்கு “சிறந்தவை' என்பது பொருள். (9:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முர்ஜவ்ன' எனும் சொல்லுக்கு “காத்திருப்பில் வைக்கப்பட்டவர்கள்' என்பது பொருள். (9:109ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷஃபா' எனும் சொல்லுக்கு “விளிம்பு' என்பது பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “ஜுருஃப்' எனும் சொல்லுக்கு “சரிந்து விழக்கூடிய வெள்ளம் மற்றும் ஓடைகள்' என்பது பொருள். “ஹாரின்' எனும் சொல்லுக்கு “இடிந்து விழக்கூடியது' என்பது பொருள். “தஹவ்வரத்தில் பிஃரு' என்றால், “கிணறு இடிந்துவிட்டது' என்பது பொருள். (9:114ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ல அவ்வாஹ்' எனும் சொல்லுக்கு “பரிவோடும் பயத்தோடும் அடிபணிகின்றவர்' என்பது பொருள். ஒரு கவிஞர் சொன்னார்: நான் இரவில் அந்த ஒட்டகத்தில் சிவிகை பூட்ட எழுந்தால், மன சஞ்சலம் உள்ள மனிதன் அடங்கி ஒடுங்குவதைப் போன்று அந்த ஒட்டகமும் அடங்கி அடிபணியும். பாடம் : 1 “(இறைநம்பிக்கையாளர்களே!) இணை கற்பிப்போரில் யாரிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் வந் துள்ள விலகல் பிரகடனம் (இது)” எனும் (9:1ஆவது) இறைவசனம் (9:3ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அஃதான்' எனும் சொல்லுக்கு “அறிவிப்பு' என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (9:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “உதுனு (யுஃமினு)' எனும் சொற்றொடருக்கு “(அல்லாஹ்வை) உண்மை என நம்பும் செவி' என்பது பொருள். (9:103ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தூய்மைப்படுத்துகின்ற' எனும் ஒரே பொருள் கொண்ட) “துதஹ்ஹிருஹும்' மற்றும் “துஸக்கீஹிம்' போன்ற இரு சொற்களைப் பயன்படுத்துவது (அரபியர் வழக்கில்) மிகுதியாக உண்டு. (“துஸக்கீஹிம்' என்பதன் வேர்ச்சொல்லான) “ஸகாத்' எனும் சொல்லுக்கு “கீழ்ப்படிதல்; “மனத் தூய்மை' ஆகிய பொருள்கள் உண்டு. (இதே “ஸகாத்' எனும் சொல் இடம்பெற்றுள்ள 41:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லா யுஉத்தூனஸ் ஸகாத்த' (ஸகாத் வழங்காதவர்கள்) என்பதன் கருத்து: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உறுதி கூறாதவர்கள். (9:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “யுளாஹிஊன' எனும் சொல்லின் மற்றோர் ஓதல் முறையான) “யுளாஹƒன' எனும் சொல்லுக்கு “ஒத்திருக்கிறார்கள்' என்று பொருள்.
4654. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

“(நபியே!) உம்மிடம் அவர்கள் (வாரிசுகள் இல்லாமல் இறந்துவிடுவோர் குறித்து) தீர்ப்புக் கேட்கிறார்கள்; அத்தகையவர்கள் குறித்து உங்களுக்கு அல்லாஹ் தீர்ப்பு அளிக்கிறான்... என்று நீர் கூறுவீராக!” எனும் (4:17ஆவது) இறை வசனம்தான் கடைசியாக அருளப்பெற்ற இறைவசனமாகும்.

(9ஆவது அத்தியாயமான) “பராஅத்' (அத்தவ்பா) அத்தியாயமே இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயம் ஆகும்.2

அத்தியாயம் : 65
4655. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، وَأَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَنِي أَبُو بَكْرٍ فِي تِلْكَ الْحَجَّةِ فِي مُؤَذِّنِينَ، بَعَثَهُمْ يَوْمَ النَّحْرِ يُؤَذِّنُونَ بِمِنًى أَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ. قَالَ حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ثُمَّ أَرْدَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ بِبَرَاءَةَ. قَالَ أَبُو هُرَيْرَةَ فَأَذَّنَ مَعَنَا عَلِيٌّ يَوْمَ النَّحْرِ فِي أَهْلِ مِنًى بِبَرَاءَةَ، وَأَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ.
பாடம் : 2 “ஆகவே, (இணைவைப்பாளர் களே!) நீங்கள் (விரும்பியபடி) பூமியில் நான்கு மாதங்கள் (எங்கு வேண்டுமானாலும்) நடமாடலாம். நீங்கள் அல்லாஹ்விடமிருந்து தப்பியோட முடியாது என்பதையும் அல்லாஹ் மறுப்பாளர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்” எனும் (9:2ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “சீஹூ' எனும் சொல்லுக்கு “நடமாடுங்கள்' என்பது பொருள்.
4655. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அபூபக்ர் (ரலி) அவர்கள் தலைமையில் “விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய (வர)க் கூடாது; நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது” என்று மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் அனுப்பிவைத்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பிரகடனம் செய்யும்படி அலீ (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொடர்ந்து) கூறுகிறார்கள்:

எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹிஜ்ஜா பத்தாம்) நாளன்று மினாவாசிகளிடையே, “(இணை வைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்தும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யமாட்டார் என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.3

அத்தியாயம் : 65
4656. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي عُقَيْلٌ، قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ بَعَثَنِي أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ فِي تِلْكَ الْحَجَّةِ فِي الْمُؤَذِّنِينَ، بَعَثَهُمْ يَوْمَ النَّحْرِ يُؤَذِّنُونَ بِمِنًى أَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ. قَالَ حُمَيْدٌ ثُمَّ أَرْدَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِعَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، فَأَمَرَهُ أَنْ يُؤَذِّنَ بِبَرَاءَةَ. قَالَ أَبُو هُرَيْرَةَ فَأَذَّنَ مَعَنَا عَلِيٌّ فِي أَهْلِ مِنًى يَوْمَ النَّحْرِ بِبَرَاءَةَ، وَأَنْ لاَ يَحُجَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ، وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ.
பாடம் : 3 “மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் சார்பில் எல்லா மக்களுக்கும் விடுக்கப்படும் பொது அறிவிப்பு என்னவெனில், இறைவனுக்கு இணைவைப்பவர்களைவிட்டு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நிச்சயமாக விலகிவிட்டார்கள். ஆகவே, (இறைமறுப்பிலிருந்தும் ஒப்பந்த மீறலிலிருந்தும்) நீங்கள் விலகிக்கொண்டால் அது உங்களுக்குத்தான் நல்லது. (அவ்வாறன்றி) நீங்கள் புறக்கணித்தால், அல்லாஹ்வை நீங்கள் தோல்வியுறச் செய்ய முடியாது என்பதை நன்கறிந்துகொள்ளுங்கள். மேலும், (நபியே!) கடுமையான தண்டனை உண்டெனும் “நற்செய்தி'யை இறைமறுப்பாளர்களுக்கு அறிவிப்பீராக” எனும் (9:3ஆவது) இறைவசனம் (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) “அதான்' எனும் சொல்லுக்கு “அறிவிப்பு' என்பது பொருள்.
4656. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது தலைமையில் நடந்த) அந்த ஹஜ்ஜின்போது “துல்ஹிஜ்ஜா மாதம் பத்தாம் (நாளான நஹ்ருடைய) நாளில் மினாவில் “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும், இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது' என்றும் அறிவிப்புச் செய்யும்படி அனுப்பிவைத்த அறிவிப்பாளர்களுடன் என்னையும் (ஒருவனாக) அனுப்பிவைத்தார்கள்.

பிறகு, நபி (ஸல்) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பின்னால்) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அனுப்பி, (இணைவைப்பாளர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டது (பராஅத்) குறித்துப் பொது அறிவிப்புச் செய்யும்படி கட்டளையிட்டார்கள்.

ஆகவே, எங்களுடன் அலீ (ரலி) அவர்களும் நஹ்ருடைய (ஃதுல்ஹிஜ்ஜா பத்தாம்) நாளன்று மினாவாசிகளிடையே (இணைவைப்போரிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்) விலகிக்கொண்டனர் என்றும், இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது என்றும் இறையில்லத்தை நிர்வாணமானவர் எவரும் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது என்றும் அறிவிப்புச் செய்தார்கள்.4

அத்தியாயம் : 65
4657. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَهُ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَيْهَا قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ أَنْ لاَ يَحُجَّنَّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ وَلاَ يَطُوفَ بِالْبَيْتِ عُرْيَانٌ. فَكَانَ حُمَيْدٌ يَقُولُ يَوْمُ النَّحْرِ يَوْمُ الْحَجِّ الأَكْبَرِ. مِنْ أَجْلِ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ.
பாடம் : 4 ...ஆயினும், இணைவைப்பாளர் களில் எவருடன் உங்களுக்கு உடன்படிக்கை ஏற்பட்டு, பின்னர் அவர்கள் (தமது உடன்படிக்கையை நிறைவேற்றுவதில்) உங்களுக்கு எந்தக் குறைபாடும் வைக்காமலும் உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவாமலும் இருக்கிறார்களோ அவர்களுக்கு விதிவிலக்கு உண்டு (எனும் 9:4ஆவது இறைவசனம்)
4657. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“விடைபெறும் ஹஜ்'ஜுக்கு முன்பு அபூபக்ர் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலைவராக்கி அனுப்பிய ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது' என்றும், “நிர்வாணமானவர் எவரும் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது' என்றும் மக்களிடையே பொது அறிவிப்புச் செய்யும் ஒரு குழுவினருடன் என்னையும் (ஓர் அறிவிப்பாளராக) அனுப்பிவைத்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் (இந்த) ஹதீஸின் அடிப்படையில், “(துல்ஹிஜ்ஜா பத்தாம் நாளான) நஹ்ருடைய நாள்தான் பெரிய ஹஜ் நாளாகும்” என்று சொல்லிவந்தார்கள்.

அத்தியாயம் : 65
4658. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا زَيْدُ بْنُ وَهْبٍ، قَالَ كُنَّا عِنْدَ حُذَيْفَةَ فَقَالَ مَا بَقِيَ مِنْ أَصْحَابِ هَذِهِ الآيَةِ إِلاَّ ثَلاَثَةٌ، وَلاَ مِنَ الْمُنَافِقِينَ إِلاَّ أَرْبَعَةٌ. فَقَالَ أَعْرَابِيٌّ إِنَّكُمْ أَصْحَابَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم تُخْبِرُونَا فَلاَ نَدْرِي فَمَا بَالُ هَؤُلاَءِ الَّذِينَ يَبْقُرُونَ بُيُوتَنَا وَيَسْرِقُونَ أَعْلاَقَنَا. قَالَ أُولَئِكَ الْفُسَّاقُ، أَجَلْ لَمْ يَبْقَ مِنْهُمْ إِلاَّ أَرْبَعَةٌ. أَحَدُهُمْ شَيْخٌ كَبِيرٌ لَوْ شَرِبَ الْمَاءَ الْبَارِدَ لَمَا وَجَدَ بَرْدَهُ.
பாடம் : 5 (சத்தியம் செய்து) உடன்படிக்கை செய்துகொண்ட பிறகு இவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்துவிட்டு உங்களது மார்க்கத் தைத் தாக்க முற்பட்டால் (இத்தகைய) இறைமறுப்பின் தலைவர்களோடு போர் புரியுங்கள். ஏனென்றால், அவர்களுக்குச் சத்தியங்கள் (என்பதெல்லாம்) கிடையாது. அவர்கள் (பின்னர் வாளுக்கு அஞ்சியேனும் இத்தகைய விஷமத்தனங்களிலிருந்து) ஒதுங்கியிருக்கக்கூடும் (எனும் 9:12ஆவது இறைவசனம்)
4658. ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நாங்கள் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள், “இந்த இறைவசனத்தில் (9:12) குறிப்பிடப்பட்டுள்ள (இறைமறுப்பாளர்களின் தலை)வர்களில் மூன்று பேரைத் தவிர வேறெவரும் (இப்போது) எஞ்சியிருக்கவில்லை. நயவஞ்சகர்களிலும் நான்கு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை” என்று கூறினார்கள்.5

அப்போது கிராமவாசி ஒருவர், “முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே! நீங்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்: எங்கள் வீடுகளைத் துளையிட்டு, எங்களின் உயர்தரமான பொருள்களைத் திருடிச் செல்கின்ற இவர்களின் நிலை என்ன என்று எங்களுக்குத் தெரியவில்லையே” என்று கேட்டார்.

அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், “அவர்கள் பாவிகளே! (இறை மறுப்பாளர்களோ நயவஞ்சகர்களோ அல்லர்.) ஆம்! அவர்களில் நால்வர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளார்கள். அவர்களில் ஒருவர் வயது முதிர்ந்த கிழவர். (எந்த அளவுக்கு முதியவரென்றால்,) குளிர்ந்த நீரைப் பருகினால்கூட அதன் குளிர்ச்சி அவருக்குத் தெரியாது” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 65
4659. حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ الأَعْرَجَ، حَدَّثَهُ أَنَّهُ، قَالَ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " يَكُونُ كَنْزُ أَحَدِكُمْ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ ".
பாடம் : 6 “எவர் தங்கத்தையும் வெள்ளியை யும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின் றார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனை இருக்கிறது எனும் “நற்செய்தி'யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக” எனும் (9:34ஆவது) வசனத்தொடர்
4659. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களது கருவூலம் மறுமை நாளில் கொடிய நஞ்சுடைய பாம்பாக மாறிவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6


அத்தியாயம் : 65
4660. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ مَرَرْتُ عَلَى أَبِي ذَرٍّ بِالرَّبَذَةِ فَقُلْتُ مَا أَنْزَلَكَ بِهَذِهِ الأَرْضِ قَالَ كُنَّا بِالشَّأْمِ فَقَرَأْتُ {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ} قَالَ مُعَاوِيَةُ مَا هَذِهِ فِينَا، مَا هَذِهِ إِلاَّ فِي أَهْلِ الْكِتَابِ. قَالَ قُلْتُ إِنَّهَا لَفِينَا وَفِيهِمْ.
பாடம் : 6 “எவர் தங்கத்தையும் வெள்ளியை யும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின் றார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனை இருக்கிறது எனும் “நற்செய்தி'யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக” எனும் (9:34ஆவது) வசனத்தொடர்
4660. ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (மதீனாவிற்கு அருகிலுள்ள) “ரபதா' எனுமிடத்தில் அபூதர் (ரலி) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது நான், “இந்த இடத்தில் நீங்கள் தங்கியிருக்கக் காரணமென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டில் இருந்தோம். அப்போது நான், “எவர் தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனை இருக்கிறது எனும் “நற்செய்தி'யினை (நபியே!) நீர் அறிவிப்பீராக” எனும் (9:34ஆவது) இறைவசனத்தை ஓதினேன்.

அதற்கு (ஷாமின் ஆட்சியாளர்) முஆவியா (ரலி) அவர்கள், “இந்த வசனம் (முஸ்லிம்களாகிய) நம் விஷயத்தில் (நம்மை எச்சரிப்பதற்காக) அருளப்படவில்லை; வேதக்காரர்கள் விஷயத்தில் (அவர்களை எச்சரிப்பதற்காகத்தான்) அருளப்பட்டது” என்று சொன்னார்கள். நான், “இது நம் விஷயத்திலும் அவர்கள் விஷயத்திலுமே (இருவரையும் சேர்த்து எச்சரிக்கை விடுக்கவே) அருளப்பட்டது என்று சொன்னேன்” எனப் பதிலளித்தார்கள்.7

அத்தியாயம் : 65
4661. وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ، قَالَ خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَقَالَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ، الزَّكَاةُ، فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلأَمْوَالِ.
பாடம் : 7 “(நபியே! ஒரு நாளை அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக!) அந்நாளில் (தங்கம், வெள்ளி ஆகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டுப் பிறகு அவற்றால் அவர்களின் நெற்றிகளிலும் விலாப் புறங்களிலும் முதுகுகளிலும் சூடு போடப்படும். இவைதான் நீங்கள் உங்களுக்காகச் சேகரித்து வைத்திருந்த கருவூலங்கள்! எனவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றைச் சுவையுங்கள் (என்று சொல்லப்படும்)” எனும் (9:35ஆவது) இறைவசனம்
4661. காலித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றோம். அப்(பயணத்தின்)போது அவர்கள் (9:35ஆவது இறைவசனத்தைப் பற்றி), “இது ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப்பெறுவதற்கு முந்தையதாகும். ஸகாத் (தொடர்பான வசனம்) அருளப் பெற்றபோது செல்வங்களைத் தூய்மைப் படுத்தக்கூடியதாய் ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என்று கூறினார்கள்.8

அத்தியாயம் : 65
4662. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا، أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثٌ مُتَوَالِيَاتٌ، ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ ".
பாடம் : 8 “உண்மையாக, அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். வானங்களையும் பூமியையும் அவன் படைத்த நாள்முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் இவ்வாறே உள்ளது. அவற்றில் நான்கு மாதங்கள் சங்கைக்குரியனவாகும். இதுதான் சரியான நெறிமுறையாகும்” எனும் (9:36ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்கய்யிம்' எனும் சொல்லுக்கு “நிலையானது' என்பது பொருள்.
4662. (“விடைபெறும் ஹஜ்'ஜில் உரை யாற்றியபோது) நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போர் புரிவது விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்ற வையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹிஜ்ஜா, முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ் ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து “ரஜப்' மாதம் ஆகும்.9

இதை அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 65
4663. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا ثَابِتٌ، حَدَّثَنَا أَنَسٌ، قَالَ حَدَّثَنِي أَبُو بَكْرٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْغَارِ، فَرَأَيْتُ آثَارَ الْمُشْرِكِينَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَنَّ أَحَدَهُمْ رَفَعَ قَدَمَهُ رَآنَا. قَالَ " مَا ظَنُّكَ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا ".
பாடம் : 9 “அவர்கள் இருவரும் குகையில் இருந்தபோது இருவரில் இரண்டாம வராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கி, “கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை அருளினான்” எனும் (9:40ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சகீனா' (மனஅமைதி) எனும் சொல் “சுகூன்' எனும் வேர்ச்சொல்லிலிருந்து “ஃபஈலா' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.
4663. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நான் (ஹிஜ்ரத் பயணத்தின்போது) நபி (ஸல்) அவர்களுடன் (“ஸவ்ர்' எனும்) அந்தக் குகையில் (ஒளிந்துகொண்டு) இருந்தேன். அப்போது நான் இணைவைப்பாளர்களின் (கால்) சுவடுகளைக் கண்டேன். நான், “அல்லாஹ்வின் தூதரே! (நம்மைத் தேடி வந்துள்ள) இவர்களில் ஒருவர் தமது காலைத் தூக்கி(க் குனிந்து நோக்கி)னால் நம்மைப் பார்த்துவிடுவாரே!” என்று (அச்சத்துடன்) சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், “எந்த இருவருடன் அல்லாஹ் மூன்றாமவனாக இருக்கின்றானோ அவர்களைப் பற்றி என்ன கருதுகின்றீர்?” என்று கேட்டார்கள்.10


அத்தியாயம் : 65
4664. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ حِينَ وَقَعَ بَيْنَهُ وَبَيْنَ ابْنِ الزُّبَيْرِ قُلْتُ أَبُوهُ الزُّبَيْرُ، وَأُمُّهُ أَسْمَاءُ، وَخَالَتُهُ عَائِشَةُ، وَجَدُّهُ أَبُو بَكْرٍ، وَجَدَّتُهُ صَفِيَّةُ. فَقُلْتُ لِسُفْيَانَ إِسْنَادُهُ. فَقَالَ حَدَّثَنَا، فَشَغَلَهُ إِنْسَانٌ وَلَمْ يَقُلِ ابْنُ جُرَيْجٍ.
பாடம் : 9 “அவர்கள் இருவரும் குகையில் இருந்தபோது இருவரில் இரண்டாம வராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கி, “கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை அருளினான்” எனும் (9:40ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சகீனா' (மனஅமைதி) எனும் சொல் “சுகூன்' எனும் வேர்ச்சொல்லிலிருந்து “ஃபஈலா' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.
4664. இப்னு அபீமுளைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இப்னுஸ் ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது நான் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,) “இப்னு ஸுபைருடைய தந்தை ஸுபைர் (ரலி) அவர்களும், அவர்களுடைய தாயார் அஸ்மா (ரலி) அவர்களும், அவர்களுடைய சிறிய தாயார் ஆயிஷா (ரலி) அவர்களும், அவர்களுடைய பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களும், அவர்களுடைய பாட்டி ஸஃபிய்யா (ரலி) அவர்களும் ஆயிற்றே! (இத்தகைய சிறப்புகள் மிக்க இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக்கு நீங்கள் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து, ஏன் கலீஃபாவாக ஏற்கக் கூடாது?)” என்று கேட்டேன்.11

(இதன் அறிவிப்பாளரும் புகாரீ (ரஹ்) அவர்களின் ஆசிரியருமான) அப்துல்லாஹ் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், “இதன் அறிவிப்பாளர் தொடர் எத்தகையது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “எமக்கு அறிவித்தார்' (ஹத்தஸனா) என்று சொல்லத் தொடங்கினார். அதற்குள் ஒருவர் அவரது கவனத்தை (வேறொரு கேள்வியால்) திசை திருப்பவே (இன்னார் அறிவித்தார் என்று) இப்னு ஜ‚ரைஜின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்துவிட்டார்.

(இதனால், இப்னு ஜ‚ரைஜிடமே அவர் நேரடியாகக் கேட்டிருக்கலாம்; அல்லது வேறொருவர் வாயிலாக இப்னு ஜ‚ரைஜிடமிருந்து அறிவித்திருக்கலாம்.)


அத்தியாயம் : 65
4665. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ ابْنُ جُرَيْجٍ قَالَ ابْنُ أَبِي مُلَيْكَةَ وَكَانَ بَيْنَهُمَا شَىْءٌ فَغَدَوْتُ عَلَى ابْنِ عَبَّاسٍ فَقُلْتُ أَتُرِيدُ أَنْ تُقَاتِلَ ابْنَ الزُّبَيْرِ، فَتُحِلُّ حَرَمَ اللَّهِ. فَقَالَ مَعَاذَ اللَّهِ، إِنَّ اللَّهَ كَتَبَ ابْنَ الزُّبَيْرِ وَبَنِي أُمَيَّةَ مُحِلِّينَ، وَإِنِّي وَاللَّهِ لاَ أُحِلُّهُ أَبَدًا. قَالَ قَالَ النَّاسُ بَايِعْ لاِبْنِ الزُّبَيْرِ. فَقُلْتُ وَأَيْنَ بِهَذَا الأَمْرِ عَنْهُ أَمَّا أَبُوهُ فَحَوَارِيُّ النَّبِيِّ صلى الله عليه وسلم، يُرِيدُ الزُّبَيْرَ، وَأَمَّا جَدُّهُ فَصَاحِبُ الْغَارِ، يُرِيدُ أَبَا بَكْرٍ، وَأُمُّهُ فَذَاتُ النِّطَاقِ، يُرِيدُ أَسْمَاءَ، وَأَمَّا خَالَتُهُ فَأُمُّ الْمُؤْمِنِينَ، يُرِيدُ عَائِشَةَ، وَأَمَّا عَمَّتُهُ فَزَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم، يُرِيدُ خَدِيجَةَ، وَأَمَّا عَمَّةُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَجَدَّتُهُ، يُرِيدُ صَفِيَّةَ، ثُمَّ عَفِيفٌ فِي الإِسْلاَمِ، قَارِئٌ لِلْقُرْآنِ. وَاللَّهِ إِنْ وَصَلُونِي وَصَلُونِي مِنْ قَرِيبٍ، وَإِنْ رَبُّونِي رَبَّنِي أَكْفَاءٌ كِرَامٌ، فَآثَرَ التُّوَيْتَاتِ وَالأُسَامَاتِ وَالْحُمَيْدَاتِ، يُرِيدُ أَبْطُنًا مِنْ بَنِي أَسَدٍ بَنِي تُوَيْتٍ وَبَنِي أُسَامَةَ وَبَنِي أَسَدٍ، إِنَّ ابْنَ أَبِي الْعَاصِ بَرَزَ يَمْشِي الْقُدَمِيَّةَ، يَعْنِي عَبْدَ الْمَلِكِ بْنَ مَرْوَانَ، وَإِنَّهُ لَوَّى ذَنَبَهُ، يَعْنِي ابْنَ الزُّبَيْرِ.
பாடம் : 9 “அவர்கள் இருவரும் குகையில் இருந்தபோது இருவரில் இரண்டாம வராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கி, “கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை அருளினான்” எனும் (9:40ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சகீனா' (மனஅமைதி) எனும் சொல் “சுகூன்' எனும் வேர்ச்சொல்லிலிருந்து “ஃபஈலா' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.
4665. இப்னு அபீமுளைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக் கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் இடையே சிறிது (மனத்தாங்கல்) ஏற்பட்டிருந்தது. அப்போது நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் காலையில் சென்று, “நீங்கள் இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் போரிட்டு அல்லாஹ்வின் (புனிதத் தலமான) ஹரமை (இரத்தம் சிந்த) அனுமதிக்கப்பட்ட இடமாக (ஹலாலானதாக) ஆக்க விரும்புகிறீர்களா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “இறைவன் காப்பாற்றட்டும். இப்னு ஸுபைரையும் பனூ உமய்யாக்களையும்தான் ஹரமில் போர் புரிவதை அனுமதிக்கின்றவர்களாக அல்லாஹ் எழுதிவைத்துள்ளான். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: மக்கள் (என்னிடம்) “இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்' என்று சொன்னார்கள். நான், “இந்த ஆட்சியதிகாரம் அவரைவிட்டு எங்கே போய்விடும்? அவருடைய தந்தையோ -அதாவது ஸ‚பைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களோ- நபி (ஸல்) அவர்களின் பிரத்யேக உதவியாளராவார். அவருடைய பாட்டனாரோ -அதாவது அபூபக்ர் (ரலி) அவர்களோ- (நபி (ஸல்) அவர்களின்) குகைத்தோழர் ஆவார். அவருடைய தாயாரோ -அதாவது அஸ்மா (ரலி) அவர்களோ- “கச்சுடையாள்' (என்று நபி (ஸல்) அவர்களால் சிறப்புப் பெயர் சூட்டப்பெற்றவர்) ஆவார்.

அவர்களுடைய சிறிய தாயாரோ -அதாவது ஆயிஷா (ரலி) அவர்களோ- இறைநம்பிக்கையாளர்களின் அன்னை யாவார். அவர்களுடைய அத்தையோ -அதாவது ஹதீஜா (ரலி) அவர்களோ- நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆவார். நபி (ஸல்) அவர்களின் அத்தையோ -அதாவது ஸஃபிய்யா (ரலி) அவர்களோ- அவருடைய பாட்டியாவார். மேலும் அவர், இஸ்லாத்தில் நெறி பிறழாதவர்; குர்ஆனை நன்கறிந்தவர். அல்லாஹ்வின் மீதாணையாக! உமய்யாக்கள் என்னுடன் உறவாடுகிறார்கள் என்றால் சொந்தத்தின் காரணத்தால் உறவாடுகிறார்கள்.12

எனக்கு அவர்கள் ஆட்சியாளர் களானால் அதற்குத் தகுதியுடையோராயும் சிறந்த பாரம்பரியமுடையோராயுமே ஆட்சியாளர்களாகின்றனர். (அப்படியிருந்தும் நான் அவர்களைக் கைவிட்டு, இப்னு ஸுபைருக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய உறுதிபூண்டேன். ஆனால்) அவரோ “துவைத்'களுக்கும், “உசாமா'க்களுக்கும், “ஹுமைத்'களுக்கும் (என்னைவிட) முன்னுரிமை அளித்துவிட்டார். (இப்னு ஸுபைருடைய குலத்தாரான) “பனூ அசத்' குலத்தைச் சேர்ந்த பனூ துவைத், பனூ உசாமா, பனூ ஹுமைத் ஆகிய குடும்பங்களையே குறிப்பிடுகின்றார்கள்.13

இப்னு அபில்ஆஸ் -அப்துல் மலிக் பின் மர்வான்- அவர்கள் (தம் சகாக்களிடையே பல சிறப்புகள் பெற்று) முன்னேறிச் செல்கிறார். இவரோ -இப்னுஸ் ஸுபைரோ- பின்னடைவுக்கு ஆளாகிவிட்டார்.


அத்தியாயம் : 65
4666. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، دَخَلْنَا عَلَى ابْنِ عَبَّاسٍ فَقَالَ أَلاَ تَعْجَبُونَ لاِبْنِ الزُّبَيْرِ قَامَ فِي أَمْرِهِ هَذَا فَقُلْتُ لأُحَاسِبَنَّ نَفْسِي لَهُ مَا حَاسَبْتُهَا لأَبِي بَكْرٍ وَلاَ لِعُمَرَ، وَلَهُمَا كَانَا أَوْلَى بِكُلِّ خَيْرٍ مِنْهُ، وَقُلْتُ ابْنُ عَمَّةِ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَابْنُ الزُّبَيْرِ، وَابْنُ أَبِي بَكْرٍ، وَابْنُ أَخِي خَدِيجَةَ، وَابْنُ أُخْتِ عَائِشَةَ فَإِذَا هُوَ يَتَعَلَّى عَنِّي وَلاَ يُرِيدُ ذَلِكَ فَقُلْتُ مَا كُنْتُ أَظُنُّ أَنِّي أَعْرِضُ هَذَا مِنْ نَفْسِي، فَيَدَعُهُ، وَمَا أُرَاهُ يُرِيدُ خَيْرًا، وَإِنْ كَانَ لاَ بُدَّ لأَنْ يَرُبَّنِي بَنُو عَمِّي أَحَبُّ إِلَىَّ مِنْ أَنْ يَرُبَّنِي غَيْرُهُمْ.
பாடம் : 9 “அவர்கள் இருவரும் குகையில் இருந்தபோது இருவரில் இரண்டாம வராய் இருந்த அவர் தம் தோழரை நோக்கி, “கவலை கொள்ளாதீர்; நிச்சயமாக, அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அல்லாஹ் அவருக்குத் தன்னிடமிருந்து மனஅமைதியை அருளினான்” எனும் (9:40ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “சகீனா' (மனஅமைதி) எனும் சொல் “சுகூன்' எனும் வேர்ச்சொல்லிலிருந்து “ஃபஈலா' எனும் வாய்பாட்டில் அமைந்ததாகும்.
4666. இப்னு அபீமுளைக்கா அப்துல்லாஹ் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்: இந்த (ஆட்சியதிகாரத்தின்) விஷயத்தில் (அது தனக்கே சேர வேண்டு மென்று) இப்னு ஸுபைர் அவர்கள் உறுதியாக நிற்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? “நான் இப்னு ஸுபைருக்காக (அவருக்கு ஆதரவு கொடுப்பதா, வேண்டாமா என்பதில்) என் மனசாட்சியுடன் விவாதித்து வருகிறேன். (இந்த அளவுக்கு) நான் அபூபக்ர் (ரலி) அவர்களுக்காகவோ உமர் (ரலி) அவர்களுக்காகவோ வாதாடிய தில்லை. அவர்கள் இருவருமோ இப்னு ஸுபைரைவிட அனைத்து நன்மைகளுக் கும் தகுதி வாய்ந்தோராய் இருந்தனர்” என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன்.

“இப்னு ஸுபைர் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் அத்தை (ஸஃபிய்யா) உடைய (புதல்வரின்) புதல்வரும், ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களின் புதல்வரும் ஆவார். மேலும், அவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் (புதல்வி அஸ்மாவின்) புதல்வரும், கதீஜா (ரலி) அவர்களின் சகோதரர் (அவ்வாம்) உடைய (புதல்வர் ஸுபைரின்) புதல்வருமாவார். இன்னும் அவர் ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி (அஸ்மா) உடைய புதல்வரும் ஆவார்” என்று (மக்களிடம்) கூறினேன்.

ஆனால், இப்னு ஸுபைரோ, தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டு என்னைவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார். நான் அவருக்கு நெருக்கமாக இருப்பதை அவர் விரும்பவில்லை.

“மேலும், நானாக முன்வந்து இதற்கு ஆதரவு தெரிவித்தால் அதை அவர் ஏற்கவே செய்வார் என்றே நான் கருதியிருந்தேன். (இனியும் எனக்கு) அவர் நன்மை ஏதேனும் செய்வார் என்று நான் கருதவில்லை. (அப்படி) அவர் (தமது நிலையில்) உறுதியாக இருப்பாரென்றால், என்னுடைய தந்தை உடன்பிறந்தவரின் மக்கள் (பனூ உமய்யா) என்மீது ஆட்சி செலுத்துவதே மற்றவர்கள் (பனூ அசத்) என்மீது ஆட்சி செலுத்துவதைவிட எனக்கு மிகவும் விருப்பமானதாகும்” என்று நான் எண்ணிக்கொண்டேன்.

அத்தியாயம் : 65
4667. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي سَعِيد ٍ ـ رضى الله عنه ـ قَالَ بُعِثَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِشَىْءٍ، فَقَسَمَهُ بَيْنَ أَرْبَعَةٍ وَقَالَ " أَتَأَلَّفُهُمْ ". فَقَالَ رَجُلٌ مَا عَدَلْتَ. فَقَالَ " يَخْرُجُ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمٌ يَمْرُقُونَ مِنَ الدِّينِ ".
பாடம் : 10 “உள்ளங்கள் இணக்கமாக்கப்பட வேண்டிய (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர்களுக்கும் (“ஸகாத்' எனும் தானம் உரியதாகும்)” எனும் (9:60ஆவது) வசனத்தொடர் “நன்கொடை மூலம் மக்களின் உள்ளங்களை இணக்கமாக்குபவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள்” என முஜாஹித் (ரஹ்) அவர்கள் (விளக்கம்) கூறினார்கள்.
4667. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பிவைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும், “இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்” என்று சொன்னார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒரு மனிதர், “நீங்கள் நீதியாக நடந்துகொள்ளவில்லை” என்று சொன்னார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவருடைய பரம்பரையில் ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். (வேட்டைக்காரனின் அம்பு வேட்டைப் பிராணியைத் துளைத்துவிட்டு வெகுவிரைவில் வெளியேறுவதைப் போன்று) அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள்” என்று கூறினார்கள்.14

அத்தியாயம் : 65
4668. حَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ أَبُو مُحَمَّدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ لَمَّا أُمِرْنَا بِالصَّدَقَةِ كُنَّا نَتَحَامَلُ فَجَاءَ أَبُو عَقِيلٍ بِنِصْفِ صَاعٍ، وَجَاءَ إِنْسَانٌ بِأَكْثَرَ مِنْهُ، فَقَالَ الْمُنَافِقُونَ إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ صَدَقَةِ هَذَا، وَمَا فَعَلَ هَذَا الآخَرُ إِلاَّ رِئَاءً. فَنَزَلَتْ {الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لاَ يَجِدُونَ إِلاَّ جُهْدَهُمْ} الآيَةَ.
பாடம் : 11 “(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையோரென்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரிவழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காகச்) சிரமப்பட்டுச் சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதாவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அவர் களை அல்லாஹ் நகைக்கின்றான். மேலும், அவர்களுக்கு வதைக்கும் வேதனையும் உண்டு” எனும் (9:79ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “யல்மிஸூன' எனும் சொல்லுக்கு “குறை பேசுகிறார்கள்' என்பது பொருள். “ஜுஹ்தஹும்' என்பதற்கு “அவர்களால் முடிந்ததை-சக்திக்குட்பட்டதை' என்பது பொருள்.
4668. அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

தானதர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது நாங்கள் கூலிக்குச் சுமை சுமக்கும் வேலை செய்யலானோம். அபூஅகீல் (ஹப்ஹாப்-ரலி) அவர்கள் (கூலி வேலை செய்து) ஒரு “ஸாஉ' (பேரீச்சம்பழம்) கொண்டுவந்தார். மற்றொரு மனிதர் அதைவிட அதிகமாகக் கொண்டுவந்தார். இதைக் கண்ட நயவஞ்சகர்கள், “(அரை “ஸாஉ' கொண்டுவந்த) இவருடைய தர்மமெல்லாம் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை; (அதிகமாகக் கொண்டுவந்த) இந்த மற்றொரு மனிதர் பிறர் பாராட்ட வேண்டுமென்பதற்காகவே இதைக் கொண்டுவந்திருக்கிறார்” என்று (குறை) சொன்னார்கள்.

அப்போதுதான், “(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையவர்களென்றால், இறைநம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரிவழங்குவோரின் தானதர்மங் களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காகச்) சிரமப்பட்டுச் சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அவர்களை அல்லாஹ் நகைக்கின்றான். மேலும், அவர்களுக்கு வதைக்கும் வேதனையும் உண்டு” எனும் (9:79ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.15


அத்தியாயம் : 65
4669. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ قُلْتُ لأَبِي أُسَامَةَ أَحَدَّثَكُمْ زَائِدَةُ عَنْ سُلَيْمَانَ عَنْ شَقِيقٍ عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُ بِالصَّدَقَةِ، فَيَحْتَالُ أَحَدُنَا حَتَّى يَجِيءَ بِالْمُدِّ، وَإِنَّ لأَحَدِهِمِ الْيَوْمَ مِائَةَ أَلْفٍ. كَأَنَّهُ يُعَرِّضُ بِنَفْسِهِ.
பாடம் : 11 “(நயவஞ்சகர்களான) அவர்கள் எத்தகையோரென்றால், இறை நம்பிக்கையாளர்களில் மனமுவந்து வாரிவழங்குவோரின் தானதர்மங்களைப் பற்றியும் குறை பேசுகிறார்கள். (இறைவழியில் செலவழிப்பதற்காகச்) சிரமப்பட்டுச் சம்பாதித்ததைத் தவிர வேறெதுவும் இல்லாதாவர்களைப் பற்றியும் அவர்கள் நகைக்கிறார்கள். அவர் களை அல்லாஹ் நகைக்கின்றான். மேலும், அவர்களுக்கு வதைக்கும் வேதனையும் உண்டு” எனும் (9:79ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “யல்மிஸூன' எனும் சொல்லுக்கு “குறை பேசுகிறார்கள்' என்பது பொருள். “ஜுஹ்தஹும்' என்பதற்கு “அவர்களால் முடிந்ததை-சக்திக்குட்பட்டதை' என்பது பொருள்.
4669. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள், “தர்மம் செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அப்போது நாங்கள் இரு கையளவு (தானியம் தர்ம மாகக்) கொண்டுவருவதற்குக்கூடக் கடுமையாக உழைப்போம். (ஆனால்,) எங்களில் சிலருக்கு இன்று ஒரு லட்சம் (தீனார்/திர்ஹம்) உள்ளது” என்று - தம்மைப் பற்றியே குறிப்பிடுவதைப் போன்று - கூறினார்கள்.16

அத்தியாயம் : 65
4670. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ جَاءَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ أَنْ يُعْطِيَهُ قَمِيصَهُ يُكَفِّنُ فِيهِ أَبَاهُ فَأَعْطَاهُ، ثُمَّ سَأَلَهُ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيُصَلِّيَ فَقَامَ عُمَرُ فَأَخَذَ بِثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تُصَلِّي عَلَيْهِ وَقَدْ نَهَاكَ رَبُّكَ أَنْ تُصَلِّيَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّمَا خَيَّرَنِي اللَّهُ فَقَالَ {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً} وَسَأَزِيدُهُ عَلَى السَّبْعِينَ ". قَالَ إِنَّهُ مُنَافِقٌ. قَالَ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ}.
பாடம் : 12 “(நபியே!) இந்த நயவஞ்சகர் களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது பாவமன்னிப் புக் கோராமல் இருப்பீராக!. (இரண் டும் ஒன்றுதான். ஏனெனில்,) எழு பது தடவை இவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். ஏனென்றால் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்கள் மறுத்துவிட்டார்கள். பாவம் புரியும் மக்களை அல்லாஹ் நல்வழியில் செலுத்துவதில்லை” எனும் (9:80ஆவது) இறைவசனம்
4670. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டபோது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தம் தந்தைக்கு கஃபனிடுவதற்காக நபி (ஸல்) அவர்களின் மேலங்கியைக் கேட்டார்கள்.17

அவரிடம் நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்தும்படி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக எழுந்தார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென்று (அதாவது நயவஞ்சகருக்கு பாவமன்னிப்புக் கோர வேண்டாமென்று) உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்!” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பாவன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் விருப்ப உரிமையளித்துள்ளான்” என்று கூறிவிட்டு, “(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது கோராமல் இருப்பீராக! (இரண்டும் சமம்தான். ஏனெனில்,) அவர்களுக்காக நீர் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் சரி அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்” என்று கூறுகிறான். நான் எழுபது முறையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்” என்று சொன்னார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள், “இவர் நயவஞ்சகராயிற்றே!” என்று சொன்னார்கள். இருந்தும் நபி (ஸல்) அவர்கள் அவருக்கு ஜனாஸா தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நீர் நிற்க வேண்டாம்” எனும் (9:84ஆவது) வசனத்தை அருளினான்.18


அத்தியாயம் : 65